ஞாயிறு, ஜனவரி 16, 2011

நான் அதிகாரம் செலுத்தாதவன்


அசரீரி – என்ற ஒருவரின் உரிமைகோரலுடன் 3 இமெயில்கள் எனக்கு வந்தன.அதில், இரண்டு என்னைத் திட்டித் தீர்க்கவும், வசை பாடவும் பயன்பட்டிருக்கிறது. ஒரு மெயில் மட்டும், ஒரு கேள்வியை முன்வைத்தி ருந்தது. 5 அல்லது 4 வருடங்களுக்கு முன் முரண்வெளி வலைத் தளத்தில் என்னைத் தாக்க அசரீரி என்ற பெயர் பயன்பட்டிருந்தது. அதோடு தொடர்புள்ள பலருக்கு தெரிந்திருக்கலாம்.
அசரீரி என்ற பெயரில் காத்தான்குடியைச் சேர்ந்த பாதீக் அசரீரி என்ற நண்பர் ஒருவரும் வெளிப்படையாக எழுத்துச் செயற்பாட்டில் உள்ளார்.நீங்கள்தானா மெயில் அனுப்பியது என்று முகநூலிநூடாக செய்தி ஒன்றை அனுப்பியிருந்தேன்
அதற்கு அவர் அனுப்பிய பதில் இது.-

 இல்லை என்னிடமிருந்து வருவதென்றால் fatheek@gmail.com/asareeri@gmail.com என்ற ஈமெயில்களிலிருந்து வந்திருக்கும்.
நான் நினைக்கிறேன் யாரும் சும்மா சீண்டுவதற்காக இதைச் செய்திருக்கலாம்..
நான் உங்களுடைய சில நிலைப்பாடுகளை சிலரிடம் ஆதரித்துப் பேசினேன்.
ஆதன் விளைவாகக்கூட இருக்கலாம்'

அசரீரி என்ற மர்ம மனிதர் (ஆணோ பெண்ணோ தெரியவில்லை.) ஏன் எனக்கு மெயில் அனுப்பியுள்ளார். இந்த மர்ம மனிதரின் பின யாருள்ளார் போன்றவற்றை ஆராயும் நிலையில் இப்போது நானில்லை. எழுத்து வெளிக்குள் மர்ம மனிதராக உலவவேண்டிய தேவை என்ன இருக்கிறது போன்றவற்றை ஒரு புறத்தில் வைத்துவிட்டு அவரின் கேள்வியை எதிர்கொள்ளவே வீரும்பகிறேன்.(ஆசிரியன் செத்துவிட்டான் என்பதற்கல்ல)

கேள்வி – உமா வரதராஜன் எழுதிய 'மூன்றாம் சிலுவை' என்ற நாவலை முன்வைத்து, பெருவெளியில் மிஹாத் எழுதிய விமர்சனம் பற்றி உங்கள் கருத்து என்ன? (என்னிடம் கருத்து அறியவேண்டிய அவசியம் இவருக்கு ஏன் ஏற்ப்பட்டிருக்கிறது என்பது புதிரானவிசயம். ஆயினும் தான் கேட்டிருப்பது மிக முக்கியமான கேள்வி என்றே அவர் நினைத்திருக்கக் கூடும்.)

பதில் - தனது சொத்துக்களை உருவிக்கொண்டு தனது ஆசைக்கு இடம்கொடாது தப்பித்துச் சென்ற ஒரு பெண்ணுடலை பழிவாங்கும் நோக்கமுடையது உமாவின் மூன்றாம் சிலுவை என்கிற நாவல். இப்படியான கதைகள் மேலோங்கும்படி, மிஹாத் உருவாக்கும் பிரதிவாசிப்பாளன் செயற்படுகிறான். தனது கதையை ஆரம்பிக்கும்போதே வாசிப்புப் பிரதிகளில் (விமர்சனம் செய்வதில்) ஆர்வமற்றவனாக தன்னைக் காட்டிக்கொள்ளத் தயங்கவில்லை.

பாதிக்கப்பட்டதாக கருதும் பெண்ணுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும், உமாவின் நாவல் சொல்லுவதுபோல அப்படி ஏதும் நடந்துவிடவில்லை என்ற உறதிப்பாட்டிலும், மூன்றாம் சிலுவை என்ற புனைபிரதியின் சம்பவங்களுக்குள் நுழைந்து துப்பறிந்து உண்மைகாண மிஹாத்தின் பிரதிவாசிப்பாளன் தயங்கவில்லை. பிரதி கொண்டிருக்கின்ற சம்பவங்களை அதை எழுதிய ஆசிரியனின் மீது ஏற்றி துப்புத் துலக்கவும் முடிவ செய்கிறான். அதன் கடைசி செயற்பாடாக (மிக இழிவாககருதத்தக்கது) உமாவின் புனைபிரதியில் வரும் இருவருக்கிடையில் உடலுறவு நடந்திருக்க முடியாது என நிறுவிக்காட்ட, அந்த புனை பிரதியின் ஆசிரியர் உ.வா அவர்களின் ஆண்குறி தொழிற்படுகிறதா இல்லையா என்ற ஆராய்ச்சியில் இறங்கி தொழிற்படவில்லை என முடிவுக்கு வருகிறான். தனது ஆண்குறி தொழிற்படுகிறதா இல்லையா என்பதைப் பரிசோதிக்க உமா வேறு வழிகளைப் பரிந்துரைக்கவும், மிஹாத்தின் பிரதி வாசிப்பாளன் இடம்கொடுத்து செல்லுவது ஆச்சரியமான விசயமாகவே பார்க்கலாம்.

அவர்கள் இருவருக்குமிடையிலான (பிரதி உருவாக்கும் இருவருக்கிடையிலல்ல) உறவைப்பற்றி பேச முற்படுவதாக மூன்றாம் சிலுவை என்ற புனைபிரதியை நம்பும் மிஹாத்தின் பிரதிவாசிப்பாளன், ஒரு முனையிலிருந்து கிடைக்கும் சிறிய அளவிலான உரையாடலுடன் அக்கதைகளை நம்பிக்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் இந்த வாசிப்புப் பிரதியின் மிகவும் பரிதாபகரமான இடங்களாகும்.

மிஹாத்தின் பிரதி வாசிப்பாளன் பாதிக்கப்பட்டதாக கருதும் பெண்ணின் சினெகிதனாக தன்னை அறிவிப்பதும். தனது சினேகிதியின் வாக்குமூலத்தை ஆராயாமல் இலகுவில் அதன்பக்கம் சரணாகதி அடைவதும் கேவலமான இடங்களாக கருதத்தக்கவை.

மிஹாத்தின் பிரதிவாசிப்பாளனை அப்படியே இன்னும் வளரத்துச் சென்றால், சிற்றிதழ்களில் இடம்பிடிக்கத் தக்க கிசுகிசுக்களையும், சரசக் கதைகளையும் உற்பத்திக்கலாம். அது தவிரவும், முற்றிலும் பொறுப்பற்ற முறையில் எழுதப்பட்டிருக்கும் வாசிப்புப் பிரதி. தேவையற்ற முறையில் சிலர் உள்ளிளுக்கப்பட்டிருப்பது உடனடியாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. (பொறுப்பற்றமறையில் என்பதை கவனமற்ற,சுயாதீனமற்ற போன்ற அர்த்தத்தில் வாசிக்க வேண்டாம்.)

நாம் ஏன் அதிகாரம் செலுத்துபவர்களாக இருக்கிறோம் என்ற சுய கலைப்பிலிருந்தே பிரதிகளை வாசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். வேட்க்கை, பாலியல் தேர்வு, அதன் மன அமைப்பு போன்றவைகள் எல்லாம் பண்பாட்டு உருவாக்கம்தான். உடல்கள்(உடல்கள் பற்றிய புரிதல்கள்) என்பதுகூட கலாச்சாரப் புனைவுகள்தான். அமைப்பாக்கமும், அதனூடே செயற்படும் அதிகாரமும் இன்னுமின்னும் புழக்கத்தில் விடும் புனைவுகள்தான் இவை. இலக்கியச் செயல் என்பது சம்பவங்களின் (சமூக, கலாச்சார.பண்பாட்டு) நேரடிப் பதிவுகள் எனக்கருதுவது எழத்துச் செயலின் இயங்குதலைப் பற்றி புரியாதவர்களின் ஆரவாரங்கள் மட்டும்தான். பண்பாட்டு உள்ளீடுகளை தமக்குள் தடையங்களாக கொண்டிருப்பவை என்பதற்க்கப்பால் எழுத்துச் செயல் நேரடிப்பதிவுகள் அல்ல.

நேரடிப்பதிவுகளுக்கு மொழி இடம்கொடுப்பதுமில்லலை. மவுனமாக்கல், அதீதப்படுத்தல், இணைத்தல்.கலைத்தல், போன்ற பல புனைவுத்திகளோடு , மொழியின் இயங்கு முறைக்கும் இடம்கொடுத்து பெருகுவதே எழுத்துச் செயல்.
சமூக இயங்குதளங்களின் பல புலப்பங்களிப்பு (வரலாறு உட்பட) இந்த அறிவியல்சார் புனைவுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. பாலியல் செயற்பாடும், அதன் களச் செயல் ஆற்றுகையும் ஒரு தனித்த உணர்நிலை அல்லது மன அமைப்பின் பாற்பட்ட உருவாக்கமல்ல. பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, போன்றவற்றின் அதிகாரத்துக்குட்பட்ட சாய்வுகளால் புனையப்படும் ஒன்று. அதை தனிமனித உளவியலாக முன்வைப்பது போதாமையின் வெளிப்பாடு.

 பாலியல் பிறழ்வுகள், வன்முறைகள் போன்றவற்றை பாலியல் சார்ந்த உளவியலோடு மட்டிறுத்தி –குறுக்கி – தனித்த ஒருவரின்மீது இடப்படுத்தி புரிந்து கொண்டும், பேசியும் திரியும் எழுத்துச் செயற்பாடுகளில் உமா குறித்த இந்த வாசிப்புப் பிரதியும் ஒன்று.

மற்றமைகளின் மீதான அதிகார அவாவுகையாக அதன் அடியாக வாசிக்கப்படவேண்டிய ஒன்று. அதை குறித்த ஒரு நபரின் பாலியல் செயலாக குறுக்கி வாசிப்பது – பாலியல் வேட்க்கை மற்றும் செயலை புனைவாக புரிந்துகொள்ள மறுப்பதன் தொனிகொண்டது. அதிகாரத்தின் உள்ளீடாக வரலாறு முழுவதும் பரவிக்கிடக்கும் பெரும்புனைவகளை கொண்டமைந்த ஒன்றுதான் பாலியல் தொடர்பான அறிவியல். அது தனிநபருக்குள் மாத்திரம் திடீரென உருவாகி வெளிப்படுவதல்ல.

இந்தவகை வாசிப்புக்களுக்கும், புரிதல்களுக்கும் தந்திரங்களோடுகூடிய பிரதானமான ஒரு உப விளைவு இருக்கிறது. அல்லது அதை எதிர்பார்க்கிறது. (இது மதத்தன்மையிலானது) இப்படியான வாசிப்பு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும் கூடியது.
'நான் அதிகாரம் செலுத்தாதவன்' என்பதுதான் அது.