வியாழன், ஜனவரி 20, 2011

கதைசொல்லிகள் ஓய்வெடுக்கும் காலம்


 றியாஸ் குரானா

கதைகளுக்குள் வசிக்கிறோம். கதைகளால் வசிக்கிறோம் என்றாகிறபோது கதைகள் சொல்லவும் கேட்கவுமான செயலில் ஆர்வம் மிகுந்தபடியேயுள்ளது. பலவகையான கதைகளும், கதைசொல்லுதலும் ஊடாடும் மொழிவெளியில், உருவாகிவந்த பல புலங்கள் நம் நினைவுக்கு உடனே வருகின்றன. வரலாறு, பாலியல், அதிகாரம், சமூகம், பண்பாடு இப்படி பல பரப்புக்களில் கதைகள் உருவாகியும், மறைந்தும் பெருகியபடியே இருக்கின்றன.
மொழியின் பண்டையச் செயலில், தனித்த ஒரு பகுதியாக இலக்கியம் என்ற பெருங்கதையொன்று உண்டு என நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், அங்கும் கதைகளின் இடம் முக்கியமாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது.
இலக்கியத்தின் மிக அண்மைக்கால கண்டுபிடிப்பாக நாவல் இருப்பினும், சினமா என்ற வடிவம் இதன் முக்கியத்துவத்தை பின் தள்ளிவிட்டிருப்பது உலகளவில் நிகழந்த ஒன்று. கதை சொல்லலின் வகைமைகள் மிக குறைவாக இருந்ததும், பல வகை கதைசொல்லல் வகைமைகள் உருவாக்கப்படாமலிருந்ததும் சினமா மேலுக்குவரக் காரணமானவற்றில் முக்கியமானது. இதை உணர்ந்த இலக்கியச் செயற்பாட்டாளர்களும், ஏலவே பேணப்பட்ட கதைசொல்லலின் மாதிரிகளால் சலிப்படைந்தவர்களும் கதைசொல்லலின் வகைமைகளை பெருக்கும் சோதனை எழுத்துக்களை உருவாக்கத் தொடங்கினர். அதனடியாக பல வகைமைகள் பெருகத்தொடங்கின.                             

தமிழில் இதைச் செயற்பாடுத்தத் முற்பட்டவர்களில் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் ரமேஷ்:பிரேம், எம்.ஜி.சுரேஷ்,  தமிழவன், கோணங்கி போன்றவர்களே. கதைசொல்லலின் அசாத்தியங்களை முயற்சித்தனர். கதைக்குள் கதை, தொடர்ச்சியின்மை, பல நிலக்காட்சிகளின் கலப்பு என இவைகள் நிகழ்த்தப்பட்டன. இன்று இவை ஒரு போக்காகவே நிலைநிறுத்தப்பட்டும்விட்டன. கதைகளுக்குள், மரபாக உருவாக்கப்பட்டு வந்த கதைச்சூழலும், கதை மனிதர்களும் முற்றிலும் வேறான கதைச் சூழலையும், கதை மனிதர்களையும் உருவாக்கத் தொடங்கின. வரலாறு கண்டுகொள்ள மறுக்கப்பட்டவைகள், முக்கியமற்றவை எனக் கருதி மற்றமைகளாக வைக்கப்பட்டவைகள் கதைக்குள் பிரதானப்படுத்தப்பட்டதை அறியலாம். தான் சொல்லும் கதைகளுக்கு எப்போதும் நம்பிக்யுடையவராகவே கதைசொல்லி உருவாக்கப்பட்டார். (இன்னும் கதைசொல்லியை பிரதியின் ஆசிரியராக வாசிப்பதும் நடக்கிறது.) ஆசிரியரின் இடத்தை கதைசொல்லி எடுத்துக்கொண்ட இடம்மாற்றமே இந்த வகைக்கதைகளிலும் மேல் நிலைக்கு வந்தது. இதை கதை வரைதல் என்ற பேச்சுக்களாகவும் மாற்றும் வாசிப்புக்கள் தமிழ் சூழலில் மேலெழுந்தன.

ஈழத்தைப் பொறுத்த மட்டில் இந்தவகை முயற்ச்சிகளை செய்தவர்களாக எனக்கு நினைவுக்கு வருவது, ஷோபசக்தி, மஜீத், ராகவன், திசேரா போன்றவர்கள். இதில் ஷோபாசக்தியின் 'ம்' – கொரில்லா போன்ற நாவல் வகைப் புனைவுகளும், மஜீதின் - கதையாண்டி – மறுத்தோடியின் துன்பியல் நாடகீயம் போன்ற நாவல் வகைப் புனைவுகளும், ராகவனின் சிறுகதைகள் குறிப்பாக –தாவர இளவரசன் -என்ற நெடுங்கதையும் மிக முக்கியமானவை. மஜீத் தனது கதைகளில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கதைசொல்லிகளை உருவாக்கி கதை பரப்புவதை முயற்ச்சித்திருப்பார். இதன் தொடர்சியாகவும் இதிலிருந்து துண்டிக்கப்பட்டதுமான ஒரு கதையோடு ரபியூஸ் வெளிப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது என்பதாலே இதை எழுதுகிறேன்.
ஈழத்தில் மரபான கதை சொல்லல் முடிவுக்கு வந்து பல காலங்களுக்கு பின்பே ரபியூஸ் கதைசொல்ல வந்திருப்பினும், இது இவரின் முதலாவது கதை எனினும் கவனிக்கப்படவேண்டியது என்பதை சொல்ல வேண்டியுள்ளது.
காலத்தை நுகரும் விலங்குகளின் மோப்ப சக்தியினூடாகச் சென்று வரலாற்று மாந்தர்களை துப்பறிதல் என்ற நாவலின் குறிப்புகள். என்ற நெடுங்கதையை பெருவெளி இதழ் 07 இல் ரபியூஸ் சொல்லியிருக்கிறார். கதை சொல்லியுடன் கூடவே ஒரு செய்தி தொகுப்பாளர் மற்றும் ஒரு செய்தி வாசிப்பாளர் என பலரின் முயற்ச்சியால் சொல்லப்படும் கதை என்ற விபரீதமான தோற்றத்தை உருவாக்குகிறது. பல நிலக்காட்சிகள், கண்டங்களைக் கடந்து பின் மீண்டு வரும் அறிவியல் வெளி, வரலாறு, செய்தி, இப்படி பல தளங்களை உட்செருகலாக கொள்வதினூடாக கதையாக மாறி நமது வாசிப்பின் சவால்களைக் கோரியபடி நிற்கின்றது. மொழியைத் தொலைத்த இனம், கூலித்தொழில் செய்யும் மலையகப் பெண்கள் போன்ற வற்றின்மீதான விசாரிப்புக்களும், அறிக்கை விடுதலுமான செயல்களும் கதைகளினூடே சமாந்தரமாகப் பயணிக்கின்றன. நகரும் கதை எதிர்பாராமல் வேறொரு இடத்திற்கு மாறுவதும் அங்கு முற்றிலும் வேறுபட்ட அனுபவ வெளியில் சஞ்சரிப்பதும் என ஒரு வினோதத் தன்மை கதை நெடுகிலும் பரவுகின்றன. முடிவுறாமல் கைவிடப்பட்ட பல கதைகளின் உரையாடலாகவும் உருப்பெற்று கிளைத்துச் செல்லும் வாசிப்பின் அவசியத்தை பரிந்துரைக்கின்றன. அதேவேளை இவைகளைக் கடந்த ஒரு கதை வெளியையும் புனைந்து செல்கின்றன. கதைச் சம்பவங்கள், புனைவிற்கும் நிஜத்திற்குமிடையில் உருவாகி நின்ற சுவர்களை வலிமையாக சிதைத்டதபடியே இருக்கின்றன.

இந்தவகைப் புனைவுவெளி கோணங்கி மற்றும் ரமேஷ்:பிரேம் போன்றவர்களின் பிரதிகளில் அதீத ஆற்றலோடு வெளிப்பட்டு நிற்பதை விரிந்த வாசிப்பு பரிட்ச்சயமுள்ளவர்கள் கவனிக்கலாம். இது ரபியூஸின் முதலாவது கதை என்றவகையில் மிகவும் முக்கியமானது என்பது யாரும் மறுக்க முடியாதவொன்று. இன்னும் இவர் எழுதும்போதுதான் தனியாக இவரின் கதைகள் பற்றி வாசிப்புக்களை முன்வைக்கலாம். இவரின் கதைக்குள் பயணிக்கும்போது பல கதைச் சம்பவங்களின் பாவனை செய்யப்பட்ட நாடகங்கள் நினைவில் படிந்து அது எற்படுத்தும் பதிய வாசிப்புச் சூழலே ரபியூசின் கதைகள் செய்ய முற்படுகின்றன. இதுவே இவரின் கதை சொல்லும் ஆற்றலாகவும் விரிகிறது.
கதை சொல்லிகள் இனி ஓய்வெடுக்கட்டும். கதை வரைபவர்கள் தங்கள் தொகுப்பாளர்களையும் கொண்ட பிரதிகள் பெருகட்டும். என மட்டும் சொல்ல முடியாது எனினும், பல வகைக் கதை சொல்லல்களையும், அதன் வாசிப்புக்களையும் கதைவெளியில் அனுமதிக்கும் பிரதிகளை இனித் தூரப்படுத்திவைக்க முடியாது என்பது சந்தேகமற்ற ஒன்று