திங்கள், செப்டம்பர் 19, 2011

நுண் காவியம் - Micro Epic - பாகம் இரண்டு

நுண் காவியம் - பாகம் ஒன்று


றியாஸ் குரானா

சிறுவனாக இருந்த போது
அந்த நதிபற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
வெற்றுக் கோட்டையின் படிகளில்
கால்பட்டு எழுப்பும் கலவரமான ஓசையுடன்
ஆதி நாளிலிருந்தே அது நகர்கிறது.

தொடக்கம் குறித்த பல பழங்கதைகளில்
வெருளச் செய்யும்,
பதற்றங்கொண்ட ஒலிகளின் பதிவே, பொதுவானது.

காடுகளை வளர்த்தது
பழங்களையும் கூடுகளையும் தரும்
சில மரங்களுடன்
ரகசிய தொடர்பிருந்தது.

அறியவேண்டி வெளிப்பட்ட நாளில்
கரைகள் விழுந்து
சிறு காயங்களுடன் சிதைந்திருக்கிறது.
மூர்க்கமாய் எதிர்த்து மலைகளை நோக்கித் தாவிற்று.

வற்றவைக்க முடியாதவன் வரைந்த சித்திரம் பற்றி
கவனிக்கப்பட வேண்டிய ஒரு குறிப்புண்டு.

'குருதியிலிருந்து மீண்டு
எதிரே உயர்ந்து நிற்கும் மரணத்தின் வலிய சுவர்களில்
மீண்டும் மீண்டும் மோதி வீழ்கிறது
அந்த நதியின் பறவைகள்'

சர்வ திசைகளும் ஊடுருவி
மண்ணின் நிரந்தரத்தோடு இறுகிய நதியின் வேர்களை
கூலிச் சிப்பாய்களின் வாள்கள்
அறுத்தெறிந்து விடுதல் சுலுபமல்ல.

ஒரு இனத்தின் பல வருஷாந்திரக் கண்ணீரிலிருந்து
நீண்டு வளரும் வேர்கள் அது.

காற்றின் மர்ம வெளிபோல
இதயங்கள் மீது பசுமை படர்ந்திருப்பவர்கள் மட்டுமே
காணக்கூடிய வேர்கள் அது.

நரம்புகளை விட
மிக நெருக்கமாய் பரவியிருக்கும் அதை
வெட்டிவிடுதல் சுலபமல்ல.                                                                  

நான் ஒரு ஓவியனாய் வளர நினைத்த ஆரம்ப நாட்களிலே பழங்குடியினரில் சிக்குண்ட எனது கோடுகள் முடிவற்று நிறுத்தப்பட்டது. மெல்லிய ஓசைகளையும் வரையத்துடித்து வசப்பட்டு வருகிற நேரம் கறுப்பு வெள்ளையிலிருந்து எனது சித்திரம் குருதிச் சிகப்பாகியது.
மேலும், சுருக்கமாகவேனும் தெற்கின் ஓவியங்கள் பற்றிச் சொல்லியாக வேண்டும். 'பாலை வெளியில் ஆடுகள் மேய்கின்றன' இது அவர்களின் ஆதி மனக்குறியீடு. மிக அழகாகவும், எல்லோரையும் இழுத்து திரும்பச் செய்யும் படியாகவும், தன்வசம் அழைக்கும் வர்ணக் கோடுகளின் காந்தமாகவும் அமைந்தது அவர்களின் ஓவியம்.
புற்களற்ற மணல் வெளியில் ஆடுகள் மேய்வதென்பது இல்லாத ஒன்றை கற்பனித்து ஆட்கொள்ளும் ஆதிக்க குணவியல்பை வெளிப்படுத்தும் சமிக்ஞை அது!. மிக வருந்தத்தக்கது. மேலும், அந்த ஓவியமே பல வருடங்களாய் கீறப்பட்டும் வரவேற்கப்பட்டும் வருகிறது. உணவுகளற்ற ஆடுகள் மெலிந்து செத்தது பற்றிய சித்திரங்கள் வரையப்படவில்லை.
தெற்கின் பிறிதொரு ஓவியமான 'நிர்வாணக் கடலிசை' நிமிர்ந்த முலைகளைக் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றியது. அந்த ஓவியத்தில் வரும் பெண்; தொய்வாகக்கிடக்கும் தனது மார்பகங்களைப் பார்த்து கீறப்பட்ட சித்திரத்தில் எப்படி நிமிர்ந்த முலைகள் தோண்றின. அது தவறு. தனது அழகை அசிங்கப்படுத்தியிருப்பதாய் போராடிய சரிதமும் தெற்கின் ஓவியங்களில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

உண்மையை ஏற்றுக் கொள்வது சுலபமல்ல.


தொடரும்....