வெள்ளி, செப்டம்பர் 16, 2011

நுண் காவியம் - Micro Epic

நுண் காவியம் - பாகம் இரண்டு


ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை 
என்ற எனது நுண்காவியத்திற்கு எழுதப்பட்ட உரை.வெளியீடு: 2003 - இரண்டாவது வெளியீடு: 2006

சிராஜ் மஷ்ஹூர்

நண்பர் றியாஸ் குரானா வெகுநாளைக்கு முன்பே இந்தப் பிரதியை என்னிடம் தந்திருந்தார் 'ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை' என்ற தலைப்புக்குள் இருக்கும் கவித்துவமும் அதன் அரசியலும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நாம் எல்லோரும் அவாவி நிற்கும் தனித்துவத்தின் கவிதை மொழியாக – கலையின் மனச்சாட்சியாக இப் பிரதி உயிர்க்கிறது.

அச்சில் அவரது கவிதை மொழியை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.இதுதான் நூலுருவிலான அவரது முதல் வெளியீடு என்பது; ஒரு வகையில் தாமதம் போலவே படுகிறது. ஆயினும் தாமதங்கள் கவித்துவத்தை அளவீடு செய்வதில்லை. தன் வாழ்வியல் அனுபவங்களை கவிதைமொழிக்குள் தொற்றவைக்கும் செய்நேர்த்தியுடையவனே தேர்ந்த கவிஞன். இந்த அனுபவகக் கடத்தல் எல்லோருக்குக்கும் வந்து வாய்ப்பதில்லை. றியாஸ் தன் அனுபவங்களினடியாகவே பேசுகிறார். அவரது செறிவான கவிதை மொழி இந்த அனுபவக் கடத்தலை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்களது சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார இருப்பு மிகக்கொடூரமான நெருக்குதலுக்கு முகம் கொடுத்திருக்கும் ஒரு காலகட்டத்திலேயே இது வெளிவருகிறது. நெருக்குதல்கள் வலுவடையும் போதே கலை இலக்கியத்தளத்தில் எதிர்க்குரல்களினது அதிர்வுகள் அலை அலையாக மேலெழும். றியாஸினது சூழ்நிலை எதார்த்தம் அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியிருக்கிறது.

இது ஒரு வகையில் கவிதை. இன்னொரு வகையில் வசன கவிதைகள் இடையிட்ட நெடுங்கவிதை. இது ஒரு அரசியல் கவிதை என்பது போலவே ஒரு எதிர்ப்புக் கவிதையும் கூட. இக் கவிதை ஒரு வகையில் சமூக மனவெழுச்சியின் கலைக்குரல். இன்னொரு வகையில் கால நீட்சியின் தொடர் மொழி. இந்த மொழி முடிவுறுவதே இல்லை. ஓயாது அது பேசும். மொழியின் எல்லைக்குள் எல்லா அனுபவங்களையும் கிளர்த்தி விட முடிவதில்லை. ஆயினும், அனுபவமும் அதனடியான கருத்துநிலையும் பரஸ்பரம் மோதுவதும் சமரசம் செய்து கொள்வதுமான இயங்கியலை ஒரு கவிஞன் இங்கே மிக நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறான்.

இது நிகழ்காலத்தில் நின்றுகொண்டு கழிந்து போன காலத்தை பின்நோக்கி விசாரணை செய்கிறது. இந்த நெடுங்கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் கூடாரங்கள் நிறைந்த ஒரு பயணப் பாதையில் பயணிக்கும் முனைப்பை அனுபவிக்க முடிகிறது. இது கிளை பிரிந்த ஒரு நதியின் பயணம். ஆதலால் இதற்கு தனித்துவம் பற்றிய அக்கறை மிக அதிகம்.
இதன் வடிவம் கூட வித்தியாசத்தையும் தனித்துவத்தையும் பேண வேண்டும் என்ற பிரக்ஞைசையோடு செய்யப்பட்டிருக்கிறது. எமக்குப் பழக்கப்பட்டுப்போன கவிதை வடிவிலிருந்து விலகிய ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதானது, உள்ளடக்கத்தின் கனதியை வடிவத்திற்குள்ளும் கொணர வேண்டும் என்ற படைப்பாளியின் அக்கறையை வெளிக்காட்டி நிற்கிறது.

சோனக அடையாளம் எப்போதோ இறந்துவிட்டது.இப்போது மேலெழும் முஸ்லிம் தேசிய அடையாளமும் - அந்த அடையாள அரசியலின் கலை இலக்கியக்குரலும் இதில் மிகுந்த உயிர்ப்போடு வெளிவந்திருக்கிறது. இது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. அவரிடமிருந்து எதிர்பார்க்க இன்னும் அதிகம் இருக்கிறது.