தமிழ் இங்குப் பெயரளவில் தேசிய மொழிதான்
அக்டோபர் மாத நேர்காணலின் தொடர்ச்சி...
ம.நவீன் : மலேசியாவில் எப்போதும் அடையாளம் காட்டும்படி சிறுகதைபோக்கு இருந்துவருகிறது எனலாம். நாவல் அவ்வாறில்லை. அதேபோல கவிதையிலும் ஒரு தேக்கநிலை இருந்து இப்போது மீண்டு வர முயல்கிறது. இலங்கையில் எப்போதுமே ஓர் உச்ச நிலையில் இருக்கும் இலக்கிய வகைமையாக எதைச் சொல்லலாம்.
றியாஸ் குரானா : சிலகாலங்களில் கவிதையும் சிலகாலங்களில் சிறுகதையும் மாறி மாறி உச்சச் செயற்பாடாக இருந்து வந்திருக்கிறது. 80பதுகளுக்குப் பிறகு அளவில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட இலக்கிய வடிவமாக கவிதையே இருந்திருக்கிறது. கலைசார்ந்த ஈழத்து உற்பத்திகளை ஒரு புறப்பார்வையில் நோக்கும்போது, கவிதைகளின் பெருக்கமே நம்மை மூச்சுமுட்ட வைக்கின்றன. ஓவியம், சினிமா, சிற்பம், இசை, நாடகம் போன்ற வகைமைகள் இன்னும் தொடரப்படாமலும் ஆரம்ப நிலையிலுமே இருக்கின்றன. கலை உற்பத்தி சார்ந்த வரண்ட பொது வெளியைக் கொண்டதாகவே ஈழத்துச் சூழல் பரிதாபமாக காட்சி தருகிறது. புலம்பெயர்விலிருந்து சில நம்பிக்கைதரும் குறுந்திரைப் படங்கள் வந்திருக்கின்றன. கலை மனமும் உற்பத்தித் திறனும் இங்கு மிகக் குறைவு என்பதுபோல் ஒரு நிலையை வெளிப்படுத்தியபடி இந்த போதாமைகள் முன்னிலைக்கு வருகின்றன. சிங்களத்தைப் பொறுத்தமட்டில் அப்படியல்ல. கலைசார்ந்த வகைமைகள் ஒரு சமாந்தரமான வளர்ச்சியைப் பேணிவருவதை காணலாம். அவர்களின் சினிமா மற்றும் சிறுகதைகள் உலகளவிலான கவனத்தைப் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழ்க் கலை உற்பத்தி என்ற புலத்திருந்து நோக்கும்போது கவிதைகள்தான் எல்லாக் காலத்திலும் முன்னிலையிலிருந்து வருகின்றன. அதுமட்டுமல்ல கவிதைகள்தான் அதிகம் தொகுக்கப்பட்டும் பேசப்பட்டும் வந்திருக்கின்றது. ஈழத்து அரசியல் முரண்களையும் அதன் சர்ச்சைகளையும் ஏற்றி வாசிக்க அதிகவாய்ப்புக்களைத் தரும் கவிதைப் பிரதிகள்கூட “மரணத்துள் வாழ்வோம்” மற்றும் “மீஸான் கட்டைகளின் மீள எழும்பாடல்” என்று தொகுக்கப்பட்டிருக்கின்றன.
வேறொரு புலத்திலிருந்து அணுகும்போது அதாவது, எந்த இலக்கிய வடிவம் மிக ஆற்றலோடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என பார்க்கும்போது சிறுகதைகள் என்றுதான் சொல்ல முடியும். தமிழின் விரிந்தபரப்பிற்குள்ளாகவே மிக முக்கிய பிரதிகள் எனச் சொல்லத்தக்க விதத்தில் பெரும் ஆற்றலோடு மிக அதிகமான சிறுகதைகள் ஈழத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அது பற்றிய முறையான கவனமான வாசிப்புக்கள் இங்கு மேற்கொள்ளப்படவில்லை. கதைகள் தொகுக்கப்படவுமில்லை. ஈழத்துச் சிறுகதைகள் தொடர்பான அணுகல் முறைகளும் வாசிப்புக்களும் நடைபெறாமலிருந்ததற்கு என்ன காரணமென்று யோசிக்க வேண்டிய நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஈழத்துத் தமிழின் அனைத்துக்கால சமூகவெளியையும் தேசிய மற்றும் போராட்டச் சர்ச்சைகளையும் அதிகம் அணுகியதும் அதுபற்றிய பற்றிய பேச்சுக்களை விரிவுபடுத்தியதும் சிறுகதைகள்தான். அவைபற்றிய சிறுகுறிப்புக்களையும் புத்தக விமர்சனங்களையும் மாத்திரமே புழக்கத்திலிருந்த விமர்சன ஜாம்பவான்கள் செய்திருந்தனர். அது விவாதிக்கப்படவில்லை. சிறுகதைகள் எனும்போது உடனடியாக நினைவுக்கு வருகின்ற பெயர்களும் பிரதிகளும் ஏராளம். போராளிகளின் சிறு பத்திரிகையொன்றில் வெளியான தொடர்..(அது கதைகளாக பார்க்கக்கூடியது) “வில்லுக் குளத்துப் பறவைகள்” இன்றும் நினைவுக்கு வருகின்றன. டானியல்,நந்தினி சேவியர்,100 கதைகளுக்கு மேல் எழுதியதாக நம்பப்படும் முருகானந்தம், இப்படி ஒரு நீண்ட பட்டியலே நம்முன் விரிகிறது. சமகாலத்தவர்களான ஷோபா சக்தி, சக்கரவர்த்தி, ராகவன், யோ.கர்ணன், மிஹாத், அப்துல் ரஸாக், கலாமோகன், மஜீத்,ஓட்டமாவடிஅறபாத், கவியுவன், அம்ரிதா ஏயெம், திசேரா, மலர்ச்செல்வன் இவர்களையும் இங்கு நினைவுகூரவேண்டும் என நினைக்கிறேன். தமிழின் சிறந்த 50 கதைகளுக்குள் அடங்கக்கூடிய கதைகளாக ஷோபா சக்தியின் அதிக கதைகளும் ரஞ்சகுமாரின் கோசலை, உமாவரதராஜனின் வெருட்டி, எலியம், அரசனின் வருகை, வேதாந்தியின் காகம், ராகவனின் தாவர இளவரசன் போன்ற பல கதைகளை இங்கு சுட்டிக்காட்டலாம். ஈழத்து இலக்கியப் பரப்பில் எல்லாக்கால கட்டங்களிலும்(உற்பத்தி குறைவாக இருந்தாலும்) ஆற்றலொடும் தளர்ச்சியற்றும் பயன்படுத்தப்பட்டும் வரும் வடிவமாக சிறுகதைகளையே சொல்லலாம்.
ம.நவீன் : இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துகளில் அ.முத்துலிங்கமும் ஒரு முக்கிய ஆளுமைதானே. உங்கள் பட்டியலில் அவர் இடம்பெறாததற்கு ஏதேனும் காரணம் உண்டா?
றியாஸ் குரானா: இல்லை அப்படி ஏதும் தனிப்பட்ட காரணங்களில்லை. இந்த நேர்காணலின் முதலாம் பகுதியில் அவரை சொல்லியிருக்கிறேன் அல்லவா? என்னுடையது ஒரு பெட்டிக்கடைப் பட்டியல்தான். அதிகம் இல்லாத பொருட்களைக் கொண்டிருப்பது அது. வேறு இதுவரைகாலமும் புழக்கத்திலுள்ள பட்டியலுக்கு கிட்டயும் போக முடியாதது. ஆம் பட்டியல் எனக்கு விருப்பமானதல்ல. விருப்பமில்லாதவற்றையும் சில நேரங்களில் செய்யவெண்டிய சூழல் உருவாகிறது. அதை தெரிந்தே செய்கிறேன்.
கே.பாலமுருகன்: நீங்கள் சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்களா? உங்கள் சிறுகதைகள் பற்றி சொல்லுங்கள். சமக்காலத்தில் யாருடைய சிறுகதைகளை முக்கியமாகக் கருதுகிறீர்கள்?
றியாஸ் குரானா: இல்லை. எனக்கு சிறுகதை எழுதும் எண்ணம் என்றும் வந்ததில்லை.ஆனால் எனது கவிதைகளுக்கான மாற்றுகள் பல கதைகளைச் சொல்லக்கூடியவை. சமகாலத்து ஈழத்தின் முக்கிய சிறுகதையாளர்கள் என்றால், ஷோபா சக்தி, ராகவன், யோ.கர்ணன் போன்றவர்கள்தான்.
ம.நவீன் : மலேசியத் தமிழ் இலக்கியம் தேசிய இலக்கியமாகக் கருதப்படுவதில்லை. மலாய் மொழியில் இயற்றப்படும் இலக்கியங்கள் மட்டுமே அவ்வாறான தகுதிக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. இலங்கையில் என்ன நிலை?
றியாஸ் குரானா: தமிழ் இங்கு பெயரளவில் தேசிய மொழிதான். அந்த மொழியில் எழுதப்படும் இலக்கியங்களுக்கு தேசிய இலக்கியம் என்ற ஒரு அடையாளத்தை கொடுக்க முடியுமா? தேசிய இலக்கியம் என்பதும் அதன் முக்கியத்துவமும் இனி வருங்காலங்களில் பின்னுக்குத் தள்ளப்படும் பேச்சாக போய்விடலாம். தேசிய இலக்கியம் என்ற பெயரும் அந்தஸ்தும் சில அரசியல் செயற்பாடுகளுக்குள் சுருங்கிப்போவதைத் தவிர வேறென்ன பயன்களை வழங்கியிருக்கிறது? வழங்கப்போகிறது?
ம.நவீன்: மலேசியாவைப் பொருத்தளவில் இருக்கின்றன தோழர். தேசிய இலக்கியவாதியாக அங்கீகாரம் பெரும் ஒருவரின் படைப்புகளை இங்கு அரசாங்கமே பதிப்பித்து பரவலாக்குகிறது. தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் வாசகர்களிடம் சேர்க்கும் பொறுப்பு சிரமமானது. எழுதியப்பின் அதை நூலாக்குவதும் வாசகபரப்பிற்குக் கொண்டு செல்வதும் ஒரு சில நல்ல எழுத்தாளர்களுக்கு நடப்பது நல்லதுதானே. இதோடு மிக முக்கியமாக தமிழர் வாழ்வு மொழிபெயர்ப்புகள் ரீதியாக பிற இனமக்களை அடையவும் வாய்ப்புண்டு. இது போன்ற சலுகைகள் அங்குள்ள தேசிய இலக்கியவாதிகளுக்குண்டா?
றியாஸ் குரானா: இல்லை என்றே நினைக்கின்றேன். அப்படி நடந்தாலும் யாருடைய எழுத்தக்களை இவர்கள் முதன்மைப்படுத்துவார்கள் என்ற யொசித்துப்பாருங்கள். அது கூட ஆபத்தானதாக மாறிவிட வாய்ப்புள்ளது. இலக்கியத்தை அதில் பணிபுரிபவர்கள்தான் கொன்று சேர்க்கவேண்டும். உதவிக்காக அரசை அனுசரிப்பது அல்லது அண்டிப்போவது எப்பொதும் ஆபத்தனதுதான்.
கே.பாலமுருகன்: மலேசியாவில் எழுத்தாளர் இயக்கங்கள் சமக்காலத்திய இலக்கிய வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக்கொள்ளாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு சில இயக்கங்கள் காணாமலும் போய்விட்டன. இது போன்ற எழுத்தாளர் இயக்கங்களும் வாசகர் இயக்கங்களும் நவீன இலக்கியத்தையே புறக்கணித்து அதனைக் கலாச்சார சிதைவுக்கு வித்திடும் ஒரு பிரதியாக மட்டுமே புரிந்து வைத்திருக்கின்றன. இலங்கையில் எழுத்தாளர் இயக்கங்கள் எப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன? அவை நவீன இலக்கியம் சார்ந்து கொண்டிருக்கும் புரிதல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
றியாஸ் குரானா: எல்லாத் துறைகளிலும் இருப்பதைப்போல இலக்கியம் சார்ந்தும் பல இயக்கங்கள் எங்கும் உருவாகியபடியும், மறைந்துகொண்டும்தான் இருக்கின்றன. இயக்கமாக, அமைப்பாக தம்மை உணராமலும் அறிவித்துக் கொள்ளாமலும் இணைந்தும் பிரிந்துமாக செயற்படும் இயக்கமற்ற இயக்கங்கள் இருந்துகொண்டுதானிருக்கின்றன. “வல்லினம்’’ என்ற ஒன்றை இப்படித்தான் பார்க்கிறேன். மலேசிய இலக்கியத்தில் புதிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை ஒரு இயக்கச் செயற்பாடாகவே நான் கருதுகிறேன். இது நவீன இலக்கியம் மற்றும் அதைக் கடந்த பேச்சுக்களின் ஆரம்பங்களையும், முயற்ச்சிகளையும் மேற்கொண்டு செல்வதாகவே பார்க்கிறேன். மலேசிய தமிழ் இலக்கியச் செயற்பாடுகளை தமிழின் அகலப் பரப்பிற்குள் அறிமுகப் படுத்துவதும், பிற தமிழ் நிலங்களோடு தொடர்புகளை உருவாக்குவதினூடாகவும் வல்லினம் ஒரு புதுத் தொடக்கத்தை கதையாடுவதாக இன்றையக் கவனிப்பை முன்வைக்கலாம்.
புதிய உள்ளடக்கங்களும், பார்வைகளும், போக்குகளும் முன்வைக்கப்படும் போது எதிர்ப்பது எழுத்தாளர் இயக்கங்களின் மரபு ரீதியான பொதுக்குணங்களாக எல்லா நிலங்களிலும் இருக்கின்ற ஒன்றுதான். அதுபோல, அவை பழக்கப்பட்டுவிடும் போது தம்மால் வெறுத்தொதுக்கப்பட்ட இலக்கியங்களை வரிந்துகட்டிக்கொண்டு கொண்டாடுவதும் அந்த இயக்கங்களின் குணமாகவே எங்கும் செயற்படுகின்றது. ஆனால், வெகுமக்கள் பரப்பிற்குள் ஏதோவொரு வகையில் இலக்கியம் குறித்த கதைகளைப் பரப்பிக்கொண்டிருப்பது போன்ற அந்த இயக்கங்களின் பங்களிப்புக்களும் மிக முக்கியமானதென்றே நினைக்கிறேன். ஈழத்திலும் இது விதிவிலக்கல்ல. பொன்னாடைகள், பொற்கிளிகள், பட்டங்கள் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளுடன் தங்களின் மொத்த இலக்கியப் பங்களிப்புக்களும் பூர்த்தியடைந்துவிடுவதாக அந்த இலக்கிய இயக்கங்கள் கருதுகின்றன. தங்களது தொழிலிலிருந்து ஓய்வடைந்துவிட்டது போல் சந்தோசத்தில் திளைக்கின்றன. ஆயினும், ஓய்வூதியம் போல எக்காலத்திலும் இந்தப் பெருமைகள் தங்களைச் சுற்றியே , பின்தொடர்ந்தே அமைய வேண்டும் என பிடிவாதமாக இருப்பதை சகிக்க முடியாமலே போய்விடுகிறது. நவீன இலக்கியச் செயற்பாடுகள் என்றே அந்த அமைப்புக்களும் தமது செயற்பாடுகளைப் பெயரிட்டு பாவிக்கின்றது. ஆனால், அதற்கு முற்றிலும் வேறானதாக இருப்பதை உணருவதில்லை.
ம.நவீன் : சிங்கள இலக்கியத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்குமான தொடர் எப்படி? மலேசியாவில் தமிழ் இலக்கியத்தை பிற மொழி இலக்கியவாதிகள் கவனிப்பதில்லை. அதேபோல தமிழ் எழுத்தாளர்கள் மத்தியிலும் மலாய் இலக்கிய பரிட்சயம் குறைவாக உள்ளது.
றியாஸ் குரானா: சிங்கள இலக்கியத்திற்கும் தமிழிலக்கியத்திற்குமான உறவுகளும் தொடர்புகளும் மகிழ்ச்சியற்ற ஒரு பகிர்தலையே கொண்டிருக்கின்றன. “83 ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து சிங்களப் புத்திஜீவிகள் அரச சாய்வுடைய (சிங்கள) புத்திஜீவிகளாக தங்களை அடையாளப்படுத்தவே ஆர்வங்காட்டியதாக” ரெஜி சிறிவர்த்தனா எங்கோ எழுதி படித்த ஞாபகமிருக்கிறது. இதுதான் பொதுவான நிலை. இது இலக்கியச் செயற்பாட்டாளர்களையும் விட்டுவிட்டதாக தெரியவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடியவர்களைத் தவிர. தமிழ் இலக்கியங்கள் சிங்களத்துக்கும், சிங்கள இலக்கியங்கள் தமிழுக்கும் மொழிபெயர்கப்பட்டது மிகக்குறைவு. இரு மொழிச் செயற்பாட்டாளர்களுக்குமிடையிலான பதிர்தல்கள் உரையாடல்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதும் முக்கியமான விசயம். இது தனியே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசியல் முரண் பற்றிய புரிதல்களும் விரிவுபடுத்தப்படாமல் போனதற்கு இதுவும் முக்கிய காரணம் எனச் சொல்லலாம். தமிழ் அரசியல் தொடர்பான கணிசமான பார்வையாளர்கள் சிங்களத்தில் உருவாக்கப்படவில்லை. இந்தக் குற்றச் சாட்டுக்களையும், விமர்சனங்களையும் விபரித்துக் கொண்டிருக்கும் எனக்குக்கூட சிங்கள இலக்கியத்திலோ அவர்களுடனான பகிர்தலிலோ இன்னும்கூட ஆர்வமோ, பரீட்ச்சயமோ இல்லை என்பதே ஒரு கேவலமான விசயமாகும்.
ம.நவீன் : அதே போல சிங்கள திரைப்படங்கள் அனைத்துலக ரீதியில் கவனிக்கப்படுவதாக அறிகிறேன். அது குறித்து கூறுங்களேன்.
றியாஸ் குரானா: ஆம், சிங்களத்திரைப் படங்கள் அனைத்துலக அளவில் கவனிப்பைப் பெற்றிருக்கின்றன. சினிமா ஒரு தனித்த கலை வடிவம் என்ற வகையிலும், அதன் உலகளாவியத் தன்மை என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாக்கத்திலும் அதிக நேர்த்தியை சிங்கள சினிமா கொண்டிருக்கின்றது என்பது உண்மைதான். எனினும், அது பேசும் பொருள் முற்றிலும் மற்றமைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள விரும்பாத நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது. இலங்கை அரசியல் முரண்களை அது நேர்மையோடு முன்வைக்கவில்லை. சிங்களத்துப் பெரும்பான்மைப் புரிதலையும், பொதுமனத்தையும் மிகச் சரியாக முன்வைப்பவையாக அவர்களின் இசையைக் குறிப்பிடலாம். அவர்கள் விரும்பி உருவாக்கும் சத்தங்கள் சற்று விகாரமானவை. மனதை இறுக்கக்கூடியவை. கட்டளையிடும், அதிகாரத்தைப் பிரயோகிக்கும் ஒருவகை உறுமலைப் போன்று சத்தமிடுபவை.கடிந்த குரலில் ஏற்ற இறக்கங்களின்றி நீண்டு செல்பவை. அச்சுறுத்துபவை.பயங்கரம் நிறைந்த சூழல்களை கற்பனை செய்ய உதவக்கூடியவை. உயிர்களை மதிக்காத புலத்திலிருந்து கிளம்பிவரும் குண்டு வீசும் விமானங்களுக்கு ஒப்பான அச்சத்தை ஏற்ப்படுத்தும் குறியீடுகளைக்கொண்டவை.அல்லது அதற்கு ஒப்பானவை என்று கூறலாம்.திரைப் படங்களின் பின்னணி இசைகொண்டிருக்கும் ஒலிகளும் அதில் உரையாடும் குரல்களும் இப்படியான தோற்றத்திலிருந்து விடுபடாதவை.அவர்களின் மொழிகூட வல்லினம் சார்ந்த ஒலியமைப்பையே அதிகம் கொண்டிருப்பதை நீங்கள் அறியலாம்.காட்சியமைப்பு, ஒளிக்கலவை, அச்சமூட்டும் குறியீடுகளால் நிரம்பியிருப்பவை. இது சிங்களத் திரைப்படம் மற்றும் இசை பற்றிய பொதுப்பார்வை. விதிவிலக்குகளும் உண்டு. இதற்கு மாற்றமான ஒரு வழியில் அனைத்துலக கவனத்தை அது பெற்றிருக்கிறது.
கே.பாலமுருகன்: மலேசியாவில் ஆரம்பக்காலத்திலிருந்து உலக இலக்கியப் பிரக்ஞையோடு எழுதுபவர்கள் இருந்து வந்திருக்கின்றனர். ஆனால் அது போன்று எழுதியவர்கள் மிக சொற்பமானவர்களே. சீ.முத்துசாமி, அரு.சு.ஜீவானந்தம், எம்.ஏ.இளஞ்செல்வன், மா.சண்முகசிவா போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் யாவரும் ஆங்காங்கே தனித்தனியாக இயங்கிக் கொண்டிருந்தனர். அவர்களையெல்லாம் ஒரு மையமாக இணைக்கும் பணியை மலேசியாவில் உருவான காதல், வல்லினம் போன்ற இலக்கிய சிற்றிதழ்கள் செய்தன. நீங்கள் ஏற்கனவே இலங்கையின் சிற்றிதழ் சூழலை மிக விரிவாக விளக்கியிருந்தீர்கள். ஆனால் இலங்கை இலக்கிய சூழலில் உலக இலக்கியப் பிரக்ஞையோடு தனித்தனியா எழுதிக்கொண்டிருந்தவர்கள் இருந்திருக்கின்றனரா? அவர்கள் யாரென்ற பரிட்சயம் உள்ளனவா? அவர்கள் ஏதேனும் சிற்றிதழ்களின் வழி இணைக்கப்பட்டனரவா?
றியாஸ் குரானா: ஆமாம், மாறுபட்ட உலகப்பார்வைகளோடும், இலக்கியப் பரீட்சயங்களோடும் பலர் இங்கு இயங்கியிருக்கிறார்கள். இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். 2000மாம் ஆண்டுக்குப் பிறகு அனேகமாக எல்லோரும் தனித்தனியேதான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களை இணைக்கவோ, அவர்களுக்கிடையில் உரையாடல்களை உருவாக்கவோ முயற்சிக்கும் அல்லது நம்பிக்கை தரும் சிற்றிதழ்கள் சமகாலத்தில் இங்கு இல்லை. இணையத்தின் வருகை சிற்றிதழ்களை நம்பியே இலக்கியச் செயற்பாடுகள் இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடுகளை உதறித்தள்ளிவிட்டிருக்கின்றது. தனியாக இயங்கியவர்கள் என்று கருதத்தக்க பலர் எனக்கு நினைவுக்கு வருகின்றனர் .இதைப் பேசிக்கொண்டிருக்கும் போது நினைவில் தட்டுப்படாதவர்கள் என்னால் கைவிடப்பட்டவர்களாக ஆகாது. வேதாந்தி, கல்லுரன், எச்.எம்.பாறூக், தீரன், எம்.ஐ.எம்.றஊப், ஹரி, ரிஷான் சரீப், சுல்பிகா, ஏபிஎம்.இத்ரீஸ், போன்றவர்களை ஓரளவு சொல்லலாம். நான் மற்றும் நண்பர் மஜீத் உட்பட.
ம.நவீன் : கலை இலக்கிய வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது. இங்கு டேவான் பாஹாசா எனும் அமைப்பின் மூலம் மலாய் இலக்கியங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. சில பிரதிகள் ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்க்கப்படுகின்றன.
றியாஸ் குரானா: அரசாங்கத்தின் ஒத்துழைப்புகள் இருக்கின்றன. அவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தெரிந்த சில வற்றில் சாஹித்திய விழா நடத்துதல், சிறியளவிலான நூல்கொள்வனவு, கலை விழாக்களை நடத்துதல்,பட்டப் பெயர்களை வழங்குதல் என்பன அடங்கும். இது இலக்கியவாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ளவும் அதன் அடியாக ஒரு புகழை பெற்றுத் திளைக்கவும் ஆசைப்படும் பலருக்கு உதவியாக இருக்கும் சமாச்சாரம். ஆம் இப்படித்தான் இன்றுவரைத் தெரிகிறது.
ம.நவீன் : இத்தனை காலம் இருந்த நிலையிலிருந்து உங்கள் கவிதைகள் என்ன மாற்றம் செய்ய முற்படுகின்றன?
றியாஸ் குரானா: இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்ல முற்பட்டால், அது சுய பிரச்சாரம் என சுருக்கிப் புரிந்து கொள்ளக்கூடிய இடத்தில் வந்து சேர்ந்துவிடும். இதுவரை பதில் சொல்ல மிகக் கடினமான ஒரு கேள்வியை இப்போதுதான் சந்திக்கிறேன். எனினும் மேலோட்டமாக சில விசயங்களை பேசிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மிகத் தயக்கத்தோடுதான் இதற்குப் பதில் சொல்ல முயற்ச்சிக்கப்படுகிறது. தமிழின் சொந்த வடிவம் கவிதைதான். அது மிகப் பழையது என்பதும் நாமறிந்த ஒன்று. பாரதியின் வசன கவிதையிலிருந்து நவீனகவிதை தமிழில் தொடங்குகிறது என எடுத்துக்கொண்டால், ஒரு நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டிருக்கிறோம். அன்றிலிருந்து இன்றுவரை மிகக் குறைவான கவிதை(உற்பத்தி) வகைமைகளே முயற்சிக்கப்பட்டு வந்திருக்கிறது.அனைத்து வகைமைகளுக்கிடையிலும் சில பொதுத்தன்மைகள் எப்போதும் மாறாமல் அல்லது மீறப்படாமல் தொடர்ந்து வருவதை நாம் அவதானிக்கலாம்.(கவிதையியல் தொடர்ச்சி வேறு அது இருக்கும்.) துண்டு துண்டான வரியமைப்பு, இறுக்கமான அல்லது விரிவான(வானம்பாடிகள் உருவாக்கிய) சொல் தேர்வு, கவிதைக்குள் உருவாக்க முடியாத படர்க்கை நிலை, அகம் புறம் என்பதுபோல நான்-நீ என்ற மாறாத எதிர்நிலை உருவாக்கம், கடைசி வரியிலோ அல்லது அதற்கு சற்று முந்தியோ ஒரு கிளைமாக்ஸ் வரி அல்லது அதிர்ச்சிதரக்கூடிய திருப்பம் போன்றவற்றோடு சில சொற்கள் கவிதையில் பயன்படுத்தத் தக்கவை அல்ல என்றளவிலான புரிதல் உதாரணத்திற்கு “கீழுள்ளவாறு” என்ற குறிப்பீடுகளைக் சொல்லலாம். அத்தோடு நவீன கவிதை என்றால் இப்படித்தான் இந்த இந்த பண்புகளைக் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத ஒரு விதியை எல்லோரும் ஏற்றுக்கொண்டதுபோல ஒரு தோற்றம். இவை எல்லாவற்றையும் கடந்து மிக முக்கியமானதும் மோசமானதுமான பொதுத்தன்மை என்னவென்றால், கவிதை அனுபவங்களைப் பிரதிபலிப்பது என்ற கதைகளை உருவாக்கும் சூழல்களையும்,கவிதைச் சம்பவங்களையும் அவை கொண்டிருப்பதுதான். சமகாலத்தில் அனுபவத்தை பிரதிபலிப்பது என்ற கதைகளிலிருந்து விடுபட்டு புதியதொரு அனுபவத்தை பிறப்பிக்கக்கூடிய கவிதைகளும் உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஆயினும் கவிதை உருவாக்கம்,மொழிதல், கவிதையாக தன்னைக் கட்டமைப்பதிலும் பிரதிசார்ந்தோ கருத்துருவாக்க உட்சிக்கல் சார்ந்தோ மாற்றங்கள் எதுவுமில்லாமல் இருக்கிறது என்பதே முக்கியம். இதிலிருந்து எனது கவிதை இலக்கிய வெளியில் எப்படிப் பணிபுரிகிறதென்று விவரிக்க முயற்ச்சிக்கலாம் என்று தோண்றுகிறது. வடிவம் பற்றிய அக்கரை எனது கவிதைகளுக்கில்லை. அனுபவங்களைப் பிறப்பித்தல் என்பதற்கும் அப்பால் அனுபவங்களை உருவாக்கக்கூடிய, அவை செழித்து வளரக்கூடிய சூழலையும் கருத்து நிலைகளின் தொடர்ச்சியற்ற கலப்பையும் கவிதைக்குள் உற்பத்தி செய்து கொண்டிருப்பதே சொற்களின் வேலையாக மாற்றமடைந்திருக்கிறது. காவியக் காலங்களில் இருந்து கதையைக் கவிதையில் சொல்லுதல் என்ற தன்மையிலிருக்கும் கதை சொல்லலை எடுத்து புதிப்பித்திருக்கிறேன். அதே நேரம் நாட்டாரியலிலுள்ள பேச்சு உருவாக்கத்தையும் ஒழுங்குபடுத்தப்படாத நிலையில் எடுத்திருக்கிறேன். இரண்டும் மாறுபட்ட அளவுகளில் எனது பிரதியில் பணியாற்றும்படி சொற்களை அமைத்துக்காட்ட மற்பட்டிருக்கிறேன். நாவலில் இருக்கும் பல்குரல் தன்மை, உரை நடையில் இருக்கும் தெளிவும் எளிமையும் போன்றவறறையும் துண்டு துணக்காக பிரதிகளின் பல இடங்களில் செரிகிவைத்திருக்கிறேன். இலக்கியமற்றது என இதுவரைகாலமும் பாவிக்கப்படும் செய்திகள், விளம்பரங்கள், துணுக்குச் செய்திகள் போன்ற பலவற்றை கவிதையாக மாற்றும் ஒரு பணியை சொற்களைக் கொண்டு முயற்ச்சித்திருக்கிறேன். இதுவரை காலங்களில் தமிழ் தனக்குள் உட்செரித்துக்கொண்ட பல தத்துவப் புறநிலைகள் மற்றும் ஆழ்நிலைகள் தங்குதடையின்றி உலவக்கூடிய ஒருவகை எளிய மொழிதலை கவிதைப்போக்குவழி அமைத்திருக்கிறேன். அதேநேரம் வெகுமக்கள் பரப்பையும் இலகுவில் சென்றடையவும் ஈர்க்கவுமான மாயாஜலங்கள், மனதைக் கிளர்த்தும் வித்தைகள், மந்திர விளையாட்டுக்களையும் அவர்களோடு அருகிருந்து பேசுவதைப்போன்ற ஒரு உரையாடல் பதிலீடாக இணைத்திருக்கிறேன். இவை எல்லாம் ஒரு புறப்ப பார்வையை உருவாக்க என்னால் சொல்லப்படுபவைதான். இப்படியான ஒரு பிரதியை, கவிதைக்கான ஒரு மாற்றை உருவாக்க முயற்சிக்கும் விருப்பத்திலிருந்து உருவாகி சொல்லப்படுபவைதான். இவைகளை எவ்வளவு வெற்றிகரமாக எனது பிரதிகள் செய்து முடித்திருக்கின்றன என்பதை மற்றவர்கள் (இலக்கியச் செயற்பாட்டாளர்கள்)தான் பேசவேண்டியுள்ளது. தமிழ்ச் சூழல் எந்தளவு இதை ஏற்றுக்கொள்ளப் போகிறது, இதில் அக்கரைகொள்ளப்போகிறது என்பது வேறு விசயம். உண்மையில், எனது ஒவ்வொரு கவிதைப் பிரதியையும் உருவாக்க சிந்தித்தும் செப்பனிட்டதுமான காலங்கள் மிக அதிகமானது. பெரும் உழைப்பை ஒவ்வொரு பிரதியும் எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒரு பிரதிக்காக மூன்று நான்கு மாதங்கள் ஒரு நாளைக்கு 5 மணி நேரங்களுக்கு மேலாக உழைத்திருக்கிறேன் என்பதுதான் இன்று நினைத்துப் பார்க்கும் போது விசித்திரமாகத் தோன்றுகிறது.
கே.பாலமுருகன்: மலேசியாவில் புதுக்கவிதை உருவாக்கம் என்பது அப்போது இயங்கிக்கொண்டிருந்த இலக்கிய வட்டங்களைப் புதுப்பிக்க செய்தது என்றே சொல்லலாம். இலக்கிய செயல்பாடுகள் சார்ந்து ஒரு முன்னேற்றமும் தீவிரமும் ஏற்பட்டது. ஆங்காங்கே புதுக்கவிதை கூட்டங்கள், கருத்தரங்குகள் என புதுக்கவிதை இயக்கமே உருவானது. ஆனால் அத்தனை புதுக்கவிதை செயல்பாடுகளும் இலக்கியத்தின் புதிய வடிவத்தைக் கொண்டாடுவதில் ஒரு தீவிரத்தைக் காட்டியதே தவிர கலை ஆழமிக்க கவிதைகளைப் படைக்கக் களம் அமைத்துக்கொடுத்ததா எனக் கேட்டால் இல்லை எனத்தான் சொல்ல வேண்டும். புதுக்கவிதையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனக்கான ஒரு கவிதை மொழியுடன் கவிதை படைக்கத் துவங்கிய நவீன எழுத்தாளர்கள் ஒரு காலக்கட்டத்தில் உருவானார்கள். இலங்கையில் கவிதையில் இது போன்ற மாற்றங்கள் உருவாகினவா? அங்கு இலக்கிய வடிவத்தின் மாற்றங்களையும் அல்லது புது வரவுகளையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எப்படி எதிர்க்கொண்டார்கள்?
றியாஸ் குரானா: சூழலை நீங்கள் விளக்கும் முறையோடு நான் நெருக்கம் கொள்கிறேன். இலங்கையில் அப்படியான மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. தமிழக சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் சிலகாலம் பிந்தி ஈழத்திலும் பரவியது. ( தமிழுக்கு புதிய அனுபவத்தை கொண்டு வந்தவை என போராளிகளுடைய எழுத்துக்களையும், புலம் பெயர் எழுத்தனுபவங்களையும் சொல்லலாம்) சர்ச்சைகளும், விவாதங்களும், கடும் பொராட்டங்களும் நடந்து, தமிழகச் சூழலில் தன்னை நிலை நிறுத்தியதுதான் நவீன கவிதை. அங்கு ஆரம்பித்து நிலை நிறுத்தப்பட்ட பின் ஈழத்துப் பரப்பிற்குள் நுழைந்தது. இலக்கியம் சார்ந்த அனைத்துச் செயற்பாடுகளும் இப்படித்தான் இங்கு நடந்தேறின. இது இன்றுவரையான வரலாறு. இது எதிர்காலங்களில் மாறவும்கூடும்.
கே.பாலமுருகன்: சமீபத்திய இலக்கியத்தின் போதாமையாக எதைக் கருதுகிறீர்கள்? உங்களின் வலைத்தலத்தில் 'இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்' எனும் வாசகத்தை நீங்கள் முதன்மைப்படுத்துகிறீர்கள். இதன் மூலம் தமிழ் சூழலில் நீங்கள் முன்வைக்கும் கருத்தாக்கம் என்ன? அல்லது எதிர்வினைகள் என்ன?
றியாஸ் குரானா: எண்பதுகளுக்குப்பிறகு அதிகமான கருத்து நிலைகளை இலக்கியம் சந்தித்தது. அதன் நீட்சியாக உடைபட்ட புனிதங்களும், மீள் வாசிப்புக்குட்பட்ட இலக்கிய அரசியல் சமூகக் கட்டுமானங்களும் ஏராளம். இவை எல்லாம் நடந்தேறியது இலக்கியத்தில்தான். அங்கிருந்துதான் ஏனைய சமூக வெளிகளுக்கு அது பரவியது. புனிதம் தொடங்கி அதிகாரம் வரை கேள்விக்குட்படுத்தப்பட்டது. விளிம்பு நிலையிலுள்ளவர்களின் பக்கம் நின்று தீராக் கரிசனங்களோடு வினைகள் புரியப்பட்டது. ஆனால் இலக்கியத்தை மய்யப்படுத்தி நிலவிய இலக்கியமற்றவை, ஜனரஞ்சக எழுத்துக்கள், கச்சாப்பொருட்களாகவும், உதவாத அசிங்கங்களாகவும், இலக்கிய உற்பத்தியின் கழிவுகளாகவும் பார்கப்பட்ட ஒரு பகுதி இன்றுவரை இருக்கத்தான் செய்கிறது. அப்பிரதிகளை உள்ளெடுத்துப் பேசக்கூடிய, அவைகளுக்கும் ஓரிடம் வழங்கக்கூடிய நிலையில் சிற்றிலக்கிய வெளி ஆர்வங்காட்டவில்லை. விளிம்புகளின் பக்கம் சாய்வுகொண்டு பெரும் போராட்டங்களை எழுத்தில் நிகழ்த்தியவர்கள் - வெகுமக்கள் இலக்கியமாக கருதப்பட்ட ஒரு பகுதியை புறத்தே ஒதுக்கிவைத்தபடிதான் செயற்பட்டனர். சமூக வெளியில் விளிம்பு நிலைக் கதையாடல் ஒரு துறையில் ஏற்கப்பட்டு ஒரு துறையில் மறுக்கப்பட்டு வந்திருப்பதை அவதானிக்கலாம். அதற்கு பலகாரணங்களை முன்வைக்க முடியுமெனினும், முக்கியமான காரணமாக கருத்தக்கது என்னவெனில், இலக்கியத்தை ஒருவகை நிலைத்த புனிதம் எனக்கருதியதே!அதுவும் தரமான இலக்கியம் என்பது தேவை என்ற அதிகார மனநிலையே! குறித்த வகை எழுத்துக்கள்தான் இலக்கியம் என்ற பலரின் நம்பிக்கை, அதாவது முக்கியமாகக் கருதப்பட்ட எல்லோரும் தமக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாக அதைக் கருதியதே! இது, இலக்கியம் என்றால் இதுதான் என பலகாலகட்டங்களில் பல கருத்து நிலைகளால் தொகுக்கப்பட்ட (புனிதமாக மாற்றப்பட்ட) பிரதிகளுக்கு ஒப்பானதுதான். அரசுகள், அரசர்கள், நிறுவனங்கள் போன்றவை தமது நலன் நோக்கில் இலக்கியங்களை வரையறுத்து தமது நலனுக்கு ஒவ்வாதவைகளை அழித்தொழித்ததைப்போல ஒன்றுதான். இந்த அழித்தொழிப்பு, அதிகாரங்கள் நிறுவனப்பட்டுவிடாத பலரின் மறைமுக மன ஒப்புதல்களால் இன்று நிறைவேற்றப் படுகிறது. வித்தியாசம் இவ்வளவுதான். இதையே நான் குறியீட்டு ரீதியில் இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம் என்று பேச முற்படுகிறேன். இன்று இலக்கியம் பற்றிய நீதியான புரிதல்கள் உருவாக வேண்டும் என்றால், அது ஒரு கலப்பினம் என்தில் தெளிவு வரவேண்டும். கலப்பினமா இருப்பதில் மற்றமைகளுடனான உறவைப் பொறுட்படுத்துவதே இன்றைய அனுகு முறையாக மாறவேண்டும். அதையே நான் பின்னை இலக்கியம் என்றும் அதில் பணியாற்றுவதை பி;ன்னை இலக்கியச் செயற்பாடு என்றும் பேச முற்படுகிறேன். தீர்மானகரமான,தெளிவான எல்லைக் கோடுகளால் இலக்கியம் - அல் இலக்கியம் பிரித்து, அவற்றுக்கிடையில் தடைச் சுவரெழுப்பி ஒன்றில் ஒன்று கலந்துவிடாமல் கண்காணிக்க முடியாது எனச் சொல்கிறேன். பாதுகாக்கவும் முடியாது. இதன் அர்த்தம் ஒன்றுக்குள் மற்றயது களவில் நுழைந்துவிடும் என்பதல்ல. எப்படி இறுக்கமாக வரையறுத்த போதும், கலந்துவிடாமல் தடுத்தபோதும் - ஒன்றுக்குள் மற்றயது ஏலவே இருந்து கொண்டுதானிருக்கிறதென்று இவர்கள் அறிவதில்லை. ஏனெனில் அவை இரண்டு பகுதிகளும் மொழியைத்தான் பயன்படுத்துகின்றன.மொழி தாம் கொண்டிருக்கும் சொற்களுக்குள் அவைகளைக் கொண்டு உருவாக்கும் அர்த்தங்களுக்குள் எப்போதும் ஒரு உறவை பேணியபடிதான் இருக்கிறது. எனவே எல்லைகள் வகுத்து தனித்த அடையாளங்களை அவற்றின் மீது சுமத்த முடியாது. அவை கலப்பு அடையாளங்களினூடாகவே தமது இருப்பைக் கொண்டிருக்கிறது. ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதினூடாகவே தம்மை அடையாளப்படுத்துவதாக புரிந்துகொள்வதினூடாக இந்த நிலை உருவாகியிருக்கலாம்.ஆனால் ஒன்றில்லாமல் மற்றது இல்லை. ஒன்றில்லாமல் மற்றது என்ற வேறுபாடு அல்லது வித்தியாசம் சாத்தியமில்லை என்ற அதன் பிரிக்க முடியாத தன்மையை நாம் மறந்துவிடுகிறோம். அந்த பிரிக்க முடியாத தன்மையை ஒன்றை ஒன்று அவாவி நிற்கின்ற உறவு நிலையாக, ஒரு கலப்பாக வாசிக்க முற்படுவதே இலக்கியத்தை கொல்பவனின் சாட்சியமாக முன்வைக்கிறேன். ஒரே நேரத்தில் இரண்டுமாக மற்றம் பலதுமாக இருக்க முடிகிற கலப்பு நகரங்களையும், ராய்போன்ற இசைளையும் இதனோடு இணைத்துப் பார்க்கலாம். தனித்த அடையாளங்கள் சாத்தியமில்லை. அது ஒரு வீணான கற்பனை. வன்முறையைத்தவிர வேறு விளைவுகள் அதற்கு இல்லை. எல்லாமே பல்வகையான அடையாளங்களின் கலப்பில்தான் தம்மை நிலைப்படுத்தியிருக்கிறது. இலக்கியத்தின் போதாமை என்பதும் - இலக்கியம் ஒரு கலப்பினம் என ஏற்றுக்கொள்ள மறுத்துக்கொண்டு வருவதுதான்.
கே.பாலமுருகன்: மலேசியாவில் சமக்காலத்து அரசியல் சுரண்டலையும் அதிகார ஒடுக்குமுறைகளையும் இலக்கியத்தில் கொண்டு வருவது மிகவும் தட்டையாக மேலோட்டமாக மட்டுமே நடந்து வருகிறது. போர்ச்சூழலையும் அதன் உக்கிரங்களையும் போருக்குப் பின்னணியிலுள்ள அரசியலையும் தன் இலக்கிய மையமாக மாற்றுவதில் யோஇகர்ணன், ஷோபா சக்தி, தீபச்செல்வன் போன்றவர்கள் திவீரமாக இயங்கி வருகிறார்கள். இலங்கையின் விடுதலை போராட்டம் துவங்கிய பிறகு அங்கு நிகழ்ந்த இலக்கிய மாற்றங்கள் என்னென்ன? குறிப்பிட்ட அவர்களின் இலக்கியங்களின் மீதான உங்கள் விமர்சனம் என்ன?
றியாஸ் குரானா: மலேசிய தமிழ் இலக்கியப் பிரதிகள் தங்களின் மீது அரசியல் கருத்தாக்கங்களை ஏற்றி வாசிப்பதற்கு இடம் கொடுக்கும் நிலையிலேயே இன்று இருக்கின்றன. இதுவரை காலமும் முன்னிலைக்கு வந்த மனோரதிய போக்குகள் அதாவது கலை ரசனை என்ற புலத்திலிருந்து உருவாகும் பிரதிகளை இன்று மலேசிய எழுத்துக்கள் அதிகம் உற்பத்தி செய்வதாய் தெரியவில்லை.அங்கு பெண்கள் தம்மை முன்வைக்க எத்தனிக்கும் பிரதிகளை ஆர்வம் கொள்ளுவதை உணரமுடிகிறது. தமிழின் வேறொரு நிலவியலையும் (மலேசியா சார்ந்த தனித்தன்மைகள்),நகரத்தின் வெறுமை,விரக்தி,போலித்தனங்களின் அதீத விளையாட்டு, மற்றும் இவற்றினூடாக உள்ளோடும் எதிர்தன்மை போன்ற உள்ளடக்கங்களையும் மலேசியத் தமிழ்ப் பரப்பு முன்வைப்பதாய் இருக்கின்றன.இதுகாறும் அரசுக்கு நல்லபிள்ளையாக இருந்த தமிழர்கள் தங்களை பிறிதொரு தனி அரசியல் சமூகமாக உணரமுற்பட்டிருப்பதை முக்கிய திசைமாற்றமாய் கருதலாம். தங்களைத் தாங்களே பேச வேண்டும். எமக்கான கதையாடல்களை எமக்கு வெளியிலுள்ள அதிகார சக்திகள் உருவாக்குவதை ஏற்க்கமுடியாது. எங்களின் வாழ்விலிருந்தும் மைய அதிகாரம் எங்களை எப்படி புரிந்துகொள்ள முனைகிறது என்ற பக்கத்திலிருந்து அவை முகிழவேண்டும். எங்களுக்காக அவர்கள் எல்லாவற்றையும் சரியாக செய்துவிடுகிறார்கள்,செய்வார்கள் என நம்பிக்கொண்டிருக்க மறுக்கும் பொதுமனதைக் கொண்ட ஒரு சமூகமாக இன்று திரண்டிருக்கிறார்கள்.(2007களில் நடந்த ஹின்டுராப் தமிழர் எழுச்சிக்குப் பிறகு) இது இலக்கியத்திலும் பெரும் தாக்கத்தை எதிர்காலத்தில் உருவாக்கும். அதற்கான ஆரம்ப எழுத்து முயற்ச்சிகள்தான் உங்கள் பார்வையில் தட்டையாகத் தெரிகிறது என நினைக்கிறேன்.
ஈழத்து அரசியல் முரண்பாடுகள் ஆயுதப் போராட்டமாக முகிழ்ந்த போது பல முற்போக்கு சக்திகள் தமது குரலை தாழ்த்தத்தொடங்கினர். “அலை” முன்னோட்டமாக புரட்சிகர நிலைகளின் பக்கம் சாய்வுகொண்டது.அதில் போரட்டச் சூழலுக்கான இலக்கியச் செயற்பாடுகளை அவதானிக்கலாம். 1975 – 85 வரையான காலகட்டத்தை ஒரு வசதிக்காக போராட்டங்களை கூர்மையடையச் செய்த காலமாகக் கருதலாம்.அதுவரை தமிழைப் பேசுபவர்களுக்கான விடுதலை, அதன் பக்கம் சாய்வான தமிழ் இலக்கியச் செயற்பாடுகள் என இருந்த நிலை 85 களைத் தொடர்ந்து வௌ;வேறு திசைகளை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. தமிழைப் பேசுபவர்களுக்கான போராட்டம் என்ற கட்டுக்கதைகளை அம் மொழியைப் பேசும் ஒரு சமூகமான முஸ்லிம்கள் மறுக்கத் தொடங்கினார்கள். அத்தோடு மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழர்களும் தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்த போராட்டம் என்பதை பிரச்சினைக்குட்படுத்தினர்.இப்படி ஒரு சூழல் உருவாக என்ன காரணமென்று விவாதிக்கத் தொடங்கினர். மேலோட்டமாக போரட்ட அமைப்புக்களின் மீது அதன் வேர்களைக் கண்டு பிடித்து வெளிப்படுதினர். அது வரை தமிழ் - சிங்களம் என மொழிரீதியாக உருவாகியிருந்த அரசியல் எதிர் நிலைகள் கிளைக்கத் தொடங்கின.மேலும் வௌ;வேறு எதிர் நிலைகளால் தம்மை வரையறுக்கவும், புரிந்து கொள்ளவுமான சூழலை உடனடியாக உருவாக்கியிருந்தது. தமிழ் - முஸ்லிம் மற்றும் அதிகாரங்களை தம்மிடம் பறித்துவைத்திருந்த போராட்ட இயக்கங்கள் அதோடு இன்னோரன்ன அமைப்புக்கள் - அதை விமர்சித்து மேலெழுந்த மாற்றுக் கருத்தாளர்கள் என கருத்தியல் சமூக மாற்றங்கள் அதனதன் பக்கம் சாய்வுடைய பிரதிகளை முதன்மைப்படுத்தியது. இந்த வகையில் பல எழுத்தாளர்களையும் ஒரு தொகைப் பிரதிகளையும் அடையாளங்காட்ட முடியும். உங்கள் கேள்வியில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஷோபா சக்தி, யோ.கர்ணன், தீபச்செல்வன் போன்றவர்கள் அந்தப் பெருந்தொகையில் சிலரே. இதில் தீபச்செல்வன் தமிழ்மக்கள் பரப்பு சார்புடையவர் என்று கூட கருத்துக்களை அண்மைக்காலங்களில் உதிர்த்துக்கொண்டிருப்பவர். அவருடைய பார்வைகளும் எழுத்துக்களும் விடுதலைப் புலிகளை கதாநாயக அந்தஸ்தில் வைத்து அனுகப்படுபவையாகவே தென்படுகிறது. தமிழ் மக்கள் பரப்பு என்பதிலும் சுருங்கிய, குறித்த ஒரு நிறுவனத்தை மாத்திரம் முதன்மைப் படுத்தும் போக்கை சமிக்ஞை செய்பவை. அவரின் பிரதிகள் குறித்த ஒரு அரசியல் நிலைப்பாட்டை ஏற்றி வாசிக்காதுபோனால், எந்த அசைவுகளையும் தர மறுப்புத் தெரிவிப்பகைவள் இவரின் பிரதிகள். குறித்த ஒரு பிரதேசத்தின்,பிராந்தியத்தின், சனக்கூட்டத்தின் உணர்வு சார்ந்த பக்தியின் சொற்களாலும், நிறங்களாலும், கருத்துக்களினாலும் மூச்சுமுட்ட நிறைந்திருப்பவை. மற்றவைகளின் இடம் மறதியின் அடிப்படையிலோ அல்லது வேறு ஏதும் காரணங்களினாலோ பிடிவாதமாக புறக்கணிப்பவை. போர் நிகழ்ந்த நிலப்பரப்பின் துயரங்களில் சிலவற்றுக்கு மட்டுமே சொந்தமானவை அவருடைய பிரதிகள். யோ.கர்ணனின் பிரதிகள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவை. அதிகாரத்தை பலவந்தமாக தம்மிடம் வைத்திருந்த நிறுவனத்தின் உட்கதைகளை, ரகசியங்களை வெளிப்படுத்தி நிற்பவை. யாருடைய விடுதலைக்காக போராடியதோ அந்த மக்களை எப்படி பயன்படுத்தியது என்ற கதைகளைச் சொல்லுபவை. அவர்களுக்கள் கீழ் வாழ்ந்த மக்களை எப்படி அனுகியது என்பதை பேச முற்படுபவை. அந்த மக்களின் மொழியில் புனைவுத்திகளின் விரிந்த தளங்களில் கதைகளாக முன்னிலைக்கு வருபவை. ஷோபா சக்தி இந்த இரண்டு அனுகல்கலிலிருந்து வேறு பட்ட கண்னோட்டத்தை கொண்டவர். ஈழத்தின் தமிழ்ப் பரப்பு முழுக்க துண்டு துண்டாக கிடக்கும் சமூகங்களுக்கிடையிலான உரையாடலை முதன்மைப்படுத்துபவர். அதிகாரங்களுக் கெதிராக செயற்பட்ட நிறுவனங்கள் தங்களிடம் கிடைத்த சிறு அளவிலான அதிகாரங்களைக்கூட எப்படிப் பாவித்தனர் என்ற கதையாடல்களைக் கொண்டிருப்பவை. விளிம்பு நிலையில் வைக்கப்பட்டவர்கள், ஓரநீதிகளால் துன்புறுத்தப்பட்டவர்கள் போன்றவர்களின் கண்ணோட்டத்திலான அனுகு முறைகளை முதன்மைப் படுத்துபவர். தமிழின் அகலப் பரப்பிற்குள் இலக்கிய உத்திகளை கதைகளுக்குள் சர்ச்சிக்க முயல்பவர். இவர்களின் இலக்கியங்களின் மீது ஏற்ப்புக்களும் மறுப்புக்களும் என்னிடமுண்டு.போருக்குப் பிந்திய சூழல் என்ற வகையில் பேசப்படும் இன்றையக் கதைகள் அனேகம் மிகச் சிறுத்த அனுகலைக் கொண்டவையாகவே இருக்கின்றது. செழிப்பற்றதாக இல்லை. அது தமிழைப் பேசும் அனைத்து சமூகங்களின் மீதும் அக்கறை கொண்டதாக அமைந்திருக்கவில்லை.வல்லினம் கேள்விபதில் பகுதியல் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது அசிரத்தையாக பொறுப்பற்ற முறையில் ஷோபா பதிலளித்திருப்பதை காணமுடிகிறது. ஈழத்து அரசியல் முரணுக்கு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை பரிந்துரைப்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தே போனேன். அது தொடர்பான எனது எதிர்வினையையும் அவருக்கு இமெயிலினூடாக அனுப்பியிருந்தேன். ஒரு உரையாடலை அவரோடு நிகழ்த்தும் எத்தனங்களை அது கொண்டிருப்பதை அவர் அறிந்துகொண்டிருப்பார் எனவும் கருதுகிறேன். இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம் மற்றும் மலையக தமிழச் சமூகங்களை பொருட்படுத்தாத ஒன்று என்பதை அவரே முன்பு ஏற்றுக்கொண்டிருப்பதை இங்கு சுட்டிக்காட் விரும்புகிறேன். விளிம்பு நிலை மக்களின் பக்கம் அவர் கொண்டிருந்த அக்கரையை இப்போது சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு இன்னொரு சம்பவத்தையும் இங்கு சுட்டிக்காட் விரும்புகிறேன். முன்பு அதை நான் பொருட்படுத்தவில்லை. அகில உலக தமிழ் எழுத்தாளர் மாநாடு இலங்கையில் நடத்தப்படவிருந்த நேரத்தில் அதற்கு கிழம்பிய எதிர்ப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் பலர் கையெழுத்திட்ட ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில் மிகத் தெளிவாக சிறு கதையாடல் சமூகங்களான முஸ்லிம் மற்றும் மலையக இலக்கியங்கள் முதன்மைப் படுத்தப்பட வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்த மாநாடு அதைப் கவனத்தில் கொள்ளவில்லை. இதை ஷோபா மௌனித்தே எதிர்கொண்டார். அது தொடர்பான கண்டனங்களையோ விமர்சனங்களையோ அவர் முன்வைக்கவில்லை. (மனசுக்குள் எதிர்த்திருக்கலாம்) இதை அப்போது பெரிதுபடுத்தவில்லை.
இன்று அவ்வாறு இருக்கமுடியாது. விடுதலைப் புலிகளின் தோல்வியோடு அதிகாரமும் அழிந்துவிட்டது எனக் கருதி ஓரநிலைச் சமூகங்களின்பால் தனக்கிருந்த அக்கரைகளை வாபஸ் வாங்கிவிட்டாரோ என்னவோ? அல்லது விடுதலைப் புலிகள் இல்லாதுபோனால் எல்லாம் சரியாகிவிடும் எனப் புரிந்து கொண்டாரோ..? இது கொஞ்சம் எளிமைப்படுத்தி விமர்சிக்கும் இரு வாக்கியங்கள்தான். கிண்டல் சுவாரஸ்யமானது என நினைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி : வல்லினம் தொடரும்....