சனி, டிசம்பர் 31, 2011

றியாஸ் குரானாவுடன் உரையாடல்: பாகம் 3



தமிழின் நவீன கவிதையைவிட மிகச் சிறப்பாக ஒப்பாரி வைக்க எந்தக் கவிதைகளாலும் முடியாது

நவம்பர் மாத நேர்காணலின் தொடர்ச்சி...
ம.நவீன் : தமிழ் இலக்கியப்போக்கை தொடர்ந்து அவதானிக்கிறீர்கள் என்ற அடிப்படையில், இன்றைய தமிழக இலக்கியப் போக்கை எவ்வாறு கணிக்கிறீர்கள். தமிழக இலக்கியவாதிகளில் நீங்கள் அதிகம் பொருட்படுத்தி வாசிப்பது யாரை? 

றியாஸ் குரானா: இது ஒரு முக்கியமான கேள்வியாக எனக்குப்படுகிறது. தமிழ் இலக்கியம் என்ற ஒன்றும் தமிழக இலக்கியம் என்ற ஒன்றும் ஒரே கேள்வியில் அமைந்திருப்பதால் சில விசயங்களைச் சர்ச்சிப்பதற்கு ஏதுவாக அமைந்திருப்பதாகவே கருதுகிறேன்.

முதலில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இலக்கியம் -  அல் இலக்கியம் போன்ற கருத்துருவாக்கங்கள் எனக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. அது சங்கடப்படுத்துபவையாகவே இருக்கின்றன. இலக்கியமென்றால் எதுவென்றோ அல்லது தரமான இலக்கிமென்றால் எதுவென்றோ விவாதிப்பதற்கு தேவைக்கதிகமான அளவிற்கு இன்னும் அக்கறை எடுத்துக்கொள்வதாகவே தென்படுகிறது. இதையே பல்லாண்டுகளாக செய்து கொண்டிருப்பதற்கும் அதனோடு எல்லா உழைப்புக்களையும் ஆற்றலையும் செலவிட்டு போராடிக்கொண்டிருப்பதற்கான தேவைதான் என்ன? ஏன் பலகால உழைப்பும் பல்லாயிரம் தாள்களும் இதற்குப்பின்னே வீணடிக்கப்பட்டபடி இருக்கிறது? இது எனக்கு மிகவும் சலிப்பைத் தருகின்ற ஒரு செயற்பாடாகத்தான் இருக்கிறது. எந்த வகைப்பிரதிகள் எனினும்,கரிசனைகொள்ள வேண்டியது என நான்; கருதுவதுவதெல்லாம் ஒன்றுதான். ஒரு பிரதி எந்தளவு மற்றமைகளோடு உரையாடுகிறது, அதனோடு கலந்துள்ளது, எந்தளவு மற்றமைகளை ஏற்கும் சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது என்பதுதான். இந்த இடத்தில் நீங்கள் எதிர்வினையாற்ற முற்படலாம். அதற்கான காரணங்கள் நிறையவே உண்டு என்பதை நான் அறிவேன். ஒரு பிரதிக்குள் மற்றவைகளின் இடம் என்ன என்ற அனுகல்களும் இங்கு நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சுட்டிக்காட்டலாம். ஓரங்களில் நிறுத்தப்பட்ட மற்றமைகளின் இன்றைய இலக்கியப் பங்களிப்புக்களாக தலித் இலக்கியம், பெண்களின் எழுத்துச் செயற்பாடுகள் போன்ற பலவற்றை முன்வைக்கலாம். ஆனால் நான் விபரிக்க முற்படும் கருத்தாக்கம் உண்மையில் அதுவல்ல.

இதற்கு மாற்றமானது. மறுக்கப்பட்ட கதைகளை ஓரங்களிலிருந்து பேசிக்கொண்டிருக்கும் பிரதிகளுக்கும், மையங்களில் செயற்படுவதாக சுட்டப்படும் எழுத்துக்களுக்கிடையே ஒரு எதிர்வு பேணப்படுவதை குறியீடாகக் காண்கிறேன். அகம் புறம் தொடங்கி பின்நவீனமாக கருதும் இன்றைய காலகட்டம்வரை இந்த எதிர்நிலை பேணிப்பாதுகாக்கப்படுவதை கவனஈர்ப்புச் செய்கிறேன். எதிரி தேவைப்படும் ஒரு விசயமாகவும், எதிரியை உருவாக்கப் பயன்படும் ஒரு முக்கிய இடமாக இலக்கியம் மாற்றப்பட்டிருப்பதை குறித்துக்காட்டுகிறேன். எதிர் நிலைகள் மற்றமைகள் இணைவுறவும், கலந்துகொள்ளவுமான சாத்தியங்களை தொலைத்துவிடுவதும், நிரந்தரமான ஒரு பகையை வளர்த்துச் செல்வதுமாகவே காண்கிறேன். மற்றமைகள் எந்தளவில் புறக்கணிக்கப்பட்டதோ, வெறுத்தொதுக்கப்பட்டதோ அதைவிட பல்மடங்கு வீச்சோடு மற்றமைகளும் தமது எதிர்முனையை சகிப்புத்தன்மையின்றி துரத்தியடித்தக்கொண்டிருக்கின்றது. பிரதி மற்றமைகளோடு எந்தளவில் கலந்திருக்கிறது என்றும் மற்றமைகளின் இடம் அங்கு ஆழப்படுத்தவும் அனுமதிக்கப்படவுமான பகைமறப்பு வாசிப்புக்களும், அனுகல் முறைகளும் தேவை என்றே கருதுகிறேன்.

அது மட்டுமல்ல, இலக்கியம் அல் இலக்கியம் என்பதுபோல் தரமற்ற இலக்கியம்(வெகுசன), தரமான இலக்கியம் என்று இங்கு தீவிரமாக இருக்கின்றன. ஒன்றையொன்று கடித்துத்தின்னும் வெறியோடு உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிக மக்கள் பங்கேற்கும் கருத்து நிலைகள் ஜனநாயகமானது என்ற பக்கமிருந்து செயற்படும் அறிவுஜீவிகள்கூட இலக்கியமென்று வந்துவிட்டால் கைவிட்டுவிடுவதை இங்கு நினைவுபடுத்தலாம். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இதுதான் இலக்கியம், இப்படித்தான் இலக்கியம் என்ற திட்டமிட்ட மாறாத கற்பனைவாதத்திலிருந்து கட்டமைக்கப் படாமல் மாற்றுக் கருத்தாக்கங்களிலிருந்து உருவாக்கப்பட வேண்டும் என சொல்ல விளைகிறேன். இலக்கியம் என்ற நிலையில் தொடங்கி, இலக்கியம் எவ்விதம் அடக்குமுறை மற்றும் அதிகாரச் சக்தியாக செயற்படுகிறது என்றும் செயற்பட முடியும் என்பதுவரை வாசிக்கவேண்டும் என்பதைச் சொல்லுகிறேன். ஆக, இலக்கியம் அதன் துண்டுகளிலிருந்து அதாவது அனைத்துப் பிரிவுகள், மற்றும் தரம் சார்ந்த பிரிவுகள் போன்ற எல்லாவற்றிலிருந்தும் கட்டப்பட வேண்டும் என்பதே இதன் உட்சரடு. இலக்கியத்தோடு எளிதில் இணையமுடியாத மக்கள்,எளிதில் உறவாட முடியாத பிரிவுகள், ஓரங்களில் வசிக்கும் எழுத்துக்கள், இதுபோல ஈழத்திலுள்ள இலக்கியப் பிரிவுகள், மலேசிய சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர் இலக்கியங்கள், வெகுமக்கள் இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் இணையவும், கலக்கவும், உறவாடவும் கூடிய வழிமுறைகளுடனும், அனுகுமுறைகளுடனும் தமிழ் இலக்கியம் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். துண்டுகளின், பகுதிகளின், பிரிவுகளின், தரப்படுத்தல் பிளவுகளின் பார்வையிலிருந்து, அவற்றுக்கிடையிலான ஒரு சமத்துவ இணைவை முன்வைக்கும் புலத்திலிருந்து தமிழ் இலக்கியம் என்ற கருத்தாக்கம் சரி செய்யப்பட வேண்டும். அதே நேரம் தனித்தனிப் பிரிவுகளுக்குள்ளும் மற்றமைகளுக்கான இடம்,இணைவு. கலப்பு, உரையாடல் போன்றவற்றுக்கான சூழல்களையும் முதன்மைப்படுத்த வேண்டிய அவசியங்களையும் பேசுபொருளாக மாற்ற வேண்டும். தமிழ் இலக்கியம் என்ற கருத்தாக்கம் தனது பிரிவுகளை, பகுதிகளை மூடிமறைக்க முயல்கின்றன. அதுபோல துண்டுகளும் பகுதிகளும் தம்மை நிரந்தரமான எல்லைக்கோடுகளுக்குள் முடக்கி எதிர்நிலையை மாத்திரம் வளர்த்துக்கொள்ள தொடங்குகின்றன.

ஒன்றையொன்று அச்சுறுத்துவதுபோலவும், வேறுபாடுகளை முன்வைத்து பகைமைகளை ஆழப்படுத்தவும் அதற்குத்தக உருவாக்கவும் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. சாத்தியங்களைத் தேடுகின்றன. சிதறிக்கிடக்கும் இந்த தமிழ் இலக்கியத்தின் பகுதிகள் எல்லா வெளிகளுக்குள்ளும் ஊடுருவக்கூடிய வழிகளை உருவாக்கக்கூடிய அனுகல் முறைகளைப்பற்றி யோசிக்க வேண்டும். இசைவுடன்கூடிய இணைந்த நெகிழ்ச்சியான எல்லைக் கோடுகளை உருவாக்கியபடி தமிழ் இலக்கியம் என்ற கருத்தாக்கம் வளர்க்கப்பட வேண்டும். பிரிவுகளில்,பகுதிகளில் செயற்படும் இலக்கியச் செயற்பாட்டாளர்களை தங்களுக்குரிய இடங்களில் கள்ளத்தனமாக நுழைந்தவர்கள் என்பதுபோல் பார்க்கக்கூடாது. தமிழ் இலக்கியம் என்றால் தென்னிந்தியாதான். அதன் அதிகார சக்திகள் அங்குதான் இருக்க வேண்டும் என்பது போன்றவற்றிக்கு ஆதரவான நிலைப்பாடுகள் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும். தமிழ் இலக்கியம் என்பது ஒரு கலப்பினம். ராய் இசை புரிந்து கொள்ளப்படுவதுபோல இதை வாசிக்க முற்பட வேண்டும்.

தொகுத்துக்கூறுவதாயின், வெகுமக்கள் இலக்கியம், உயர் இலக்கியம், தலித் இலக்கியம், பெண்களின் எழுத்தச் செயற்பாடுகள், ஈழம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம் பெயர் இலக்கியங்கள் அத்தோடு இலக்கியமற்றதாக கருதும் அனைத்து எழுத்து வகையிங்களும் உள்ளடங்கியதாக ஒரு கலப்பினம் பற்றிய பேச்சுக்கள் அவசியம் என்றே கருதுகிறேன். ஒரு பிரதி இலக்கியமா அல்லது அதுவற்றதா என்பதற்குப் பதிலாக அதில் மற்றமைகள் எந்தளவில் கலந்துள்ளன, மற்றமைக்கான இடம் என்ன, அவைகளுக்கிடையிலான உரையாடல் எந்த நிலையிலுள்ளது, மற்றமைகளை அங்கீகரிக்கவும் சகித்துக்கொள்ளக்கூடியதுமான சூழலை எந்தளவில் முயற்ச்சிக்கிறது, திட்டமிட்டே எதிரியை உருவாக்கவும், எதிரியை காலாகாலத்துக்குமாக எதிரியாகவே அடையாளப்படுத்திப் பாதுகாக்கவும் அவாவுகிறது, போன்ற புலங்களிலிருந்து அனுகுவதையே வாசிப்பதையே அவசியமாகனதாக கருதுகிறேன். இந்தக் கலப்பினத்தை பின்னை இலக்கியம் என்று சொல்லலாமா? ஒரு கருத்துருவாக்கத்திற்கான சொல்லாகவே இதை முன்வைக்கிறேன். பின்நவீனம் கடந்த நிலையில் பன்மை நவீனத்துவம் என்ற புலத்திலிருந்து புரிதல்களை உருவாக்க முயற்ச்சிப்பதாக அண்மையில் பிரேம் தீராநதியில் குறிப்பிட்டிருந்தார். அதையும் இங்கு இணைத்து வாசிக்கலாம்.

தமிழக இலக்கியப்போக்கை எப்படிக் கணிக்கிறேன் என்பதற்கு முற்றிலும் பொருந்தாத ஒன்றை நான் விபரித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த விபரிப்புக்களின் உள்ளோட்டமாக மறைமுகமாக அடையாளங்காட்டப்படுவரும் விசயம் தமிழக இலக்கியப்போக்குகளின் தன்மைகளை, தமிழ் இலக்கியம் கட்டமைக்க விரும்பும் நிலைப்பாடுகளுக்கு எதிரான ஒரு பேச்சை முன்வைப்பதை நீங்கள் இப்போது அடையாளங்கண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது மட்டுமல்ல, இது அனைத்தையும் பொருட்படுத்திய ஒரு அனுகலை பரிந்துரைப்பதாகவும் உணருவீர்கள். அப்படி உணர்ந்தால் ஓரளவு பொறுப்போடு பேசியிருப்பதாகவே கருதுகிறேன்.

தமிழக இலக்கிய வெளியில் அதிகம் யாரைப் பொருட்படுத்தி வாசிக்கிறீர்கள் எனக் கேட்கிறீர்கள்...

என்றும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கிற அ.மார்க்ஸ், தமிழவன், ராஜ்கொளதமன், நாகர்ஜூனன், எம்.டி.முத்துக்குமாரசாமி, ஜமாலன், பூரணச்சந்திரன், எஸ்.வி.ராஜதுரை, பிரேம், ராஜன்குறை, வளர்மதி, பேயோன், குட்டி ரேவதி, மாலதி மைத்தரி, ஹெச்.சி.ரசூல், கீரனூர் ஜாகிர்ராஜா, எஸ்.சண்முகம், யுவன் சந்திரசேகர், எம்.ஜி.சுரேஸ், கடற்கரை, ஆதவன் தீட்சண்யா, ஸ்மைல் வித்யா, கோணங்கி, வாமுகோமு, சுகுணாதிவாகர், பிரம்மராஜன், தேவதேவன், தேவதச்சன், ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன், கலாப்பிரியா இவர்களோடு இன்னும் ஈர்த்துக்கொண்டிருக்கும் புதுமைப் பித்தன். இது இன்னும் நீளக்கூடியது. இந்த ஒரு தொகைப் பெயர்கள் பொருட்படுத்ததத்தக்க அதிகம்பேர் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லுகிறதல்லவா..?

ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்ற வேறொரு பட்டியலும் இருக்கிறது. அது போல வெகுமக்கள் பரப்பில் செயற்படும் எழுத்தாளர்கள் தொடங்கி பல போக்குகள் கொண்டவர்களையும் பொருட்படுத்தி வாசிக்கும் பழக்கத்தை இப்போது உருவாக்கியிருக்கிறேன். ஆனால் இலக்கியத்தைப் பயன்படுத்தி, அதை முன்னிறுத்தி மிகமோசமானதும் கேவலமானதுமான வழிகளில் பயன்பெறவும் பொருளீட்டவும் அடம்பிடித்துக் கொண்டிருப்பவர் சாருநிவேதிதா மாத்திரம்தான். இதற்காக அனைத்துக் குறுக்கு வழிகளையும் கள்ளவழிகளையும் பயன்படுத்த தயங்காதவராக
நிற்பவர். இப்படியாக தன்னை ஒரு ஐகனாக மாற்ற படாதபாடு படுபவர் இவர் ஒருத்தர்தான். இவரைத் தவிர மற்ற அனைவரும் பொருட்படுத்தத்தக்கவர்கள்தான். மோசமான ஒரு அரசியல் வாதியைப்போல இலக்கிய வெளியில் செயற்படும் ஒருவர் எனக்குத் தெரிந்தவகையில் இவர் மட்டும்தான்.

ம. நவீன்: தோழர், நீங்கள் கூறும் கருத்தில் பல இடங்களில் எனக்கு மாற்றுக்கருத்துகள் உண்டு. அவை ஒருபுறமிருக்க முதலில் நீங்கள் ஜனரஞ்சகத்தளத்தில் இயங்கும் அனைவரையும் பொருட்படுத்தி வாசிக்கும் நிலையில் இருக்கிறீர்கள். அதாவது துணை எழுத்தாளர்களை வைத்துக்கொண்டு ஆங்கிலத்திலிருந்து கதைகளை தமிழில் மொழிப்பெயர்த்து ஒரு தொழிற்சாலைபோல கதைகளை எழுதிக்குவிக்கும் மர்ம நாவலாசிரியர்கள் முதல், சிந்தனையை எவ்வகையில் உயர்த்தாத மேலோட்டமான எழுத்தைக் கொண்டிருக்கும் ரமணிச்சந்திரன் வகையராக்கள் வரை நீங்கள் பொருட்படுத்த வேண்டும் என்கிறீர்கள். இலக்கியத்தில் வைரமுத்து போன்றவர்கள் செய்யாத அரசியலா? அதில் அவர் பொருளீட்ட முயலவில்லையா? ஆனால் நீங்கள் சாருவை மட்டும் இழிவாகச் சித்தரிப்பது எவ்வகை இலக்கியப்பார்வை? 'அவரைத் தவிர' என நீங்கள் சொல்வது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அவரின் தொடக்ககால இலக்கியப் பிரதிகள் குறித்து உங்கள் மனப்பதிவு எவ்வாறானது? என்னைப் பொருத்தவரையில் புளோக்கில் இன்று அவரின் செயல்பாட்டில் உங்கள் கருத்துகளோடு ஒத்துப்போனாலும் அதற்கு வெளியில் தமிழில் அவரின் புனைவுகள் அ-புனைவுகள் முக்கியமானவை என்பேன். 

றியாஸ் குரானா: ஆம் தோழர். இந்தக் கேள்வி பல உட்கேள்விகளை கொண்டிருப்பதை அறிகிறேன். சீரியசான அல்லது உயர்ந்த உன்னதமான இலக்கியம் பற்றிய இலட்சியங்களோடு செயற்படுபவர்களாக நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படவேண்டிய சந்தேகங்களின் தொகுப்பாக உங்கள் கேள்வி அமைந்திருக்கிறது. அவர்கள் எப்போதும் ஜனரஞ்சக எழுத்துச் செயற்பாட்டை இலக்கியமாக கருதியதேயில்லை. உன்னதமான உயர்தரமான ஒருவகை இலக்கியத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாக அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுக் கொள்கையாக வரித்துக்கொண்டு வரலாறு நெடுகிலும் பாதுகாத்து வருபவர்கள். அதைப் பாதுகாப்பதற்காக எப்போதும் மிக மோசமாக ஜனரஞ்சக எழுத்துக்களோடு போராடிக்கொண்டிருப்பவர்கள். அதை மிக மூர்க்கமாக அழித்தொழிக்க ஒத்தகருத்துக்களை காலத்துக்கு காலம் உருவாக்கிக்கொண்டிருப்பவர்கள். ஜனரஞ்சக எழுத்துக்களின்மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்களை வசைமாரியாக பொழிந்துகொண்டே இருப்பவர்கள். உன்னத இலக்கியங்கள்தான் சமூகத்திற்கு செயற்திறனை வழங்கக்கூடியது என நம்பிக்கொண்டிருப்பவர்கள். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளில் கணிசமானவை உன்னதமான உயர்தரமான இலக்கியங்களாக கருதப்படுபவைகளுக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதை சற்று நின்று யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கிருக்கின்ற மாற்றுக்கருத்துக்களை நீங்கள் விவரிக்கும்போது அங்கிருந்து நமது உரையாடலைத் தொடங்கலாம். அவைகளை நீங்கள் முன்வைக்கவில்லை. ஆம், ஜனரஞ்சக எழுத்தாளர்கள், காமிக்ஸ் எழுத்தாளர்கள், துப்பறியும் கதை எழுத்தாளர்கள் என எல்லோரையும் எழுத்துச் செயற்பாட்டாளர்கள் என்று பொருட்படுத்தியே வருகிறேன். பொருட்படுத்த வேண்டும் எனவும் கருதுகிறேன். அதையே இங்கும் முன்வைக்கிறேன். இந்த முன்வைப்பு இலக்கியம் என்றால் என்ன என்று புரிந்துவைத்திருக்கிறோம் அல்லது பாவிக்கிறோம் என்ற இடம்வரை நம்மை நம்மை கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. ஒரு பிரதியை எது இலக்கியமாக கருதவைக்கிறது என்ற சிக்கலான புள்ளிவரை நம்மை நகர்த்திச் செல்லுவதை இப்போது உணரமுடிகிறதல்லவா..? ஆம், இந்தச் சிக்கலான புள்ளியிலிருந்து நமது புரிதல்கள் மீளவும் கட்டமைக்கப்படவேண்டும். அங்கிருந்து திரும்பவும் நாமது ஆய்வு தொடரவேண்டும். அது இன்றைய நிலையில் முக்கியமானதுதான். இது விவாதிக்கப்பட வேண்டும் என்பதை குறிப்புணர்த்துவதாகவே எனது இந்த முன்வைப்புக்களை நீங்கள் அவதானிக்கலாம்.

எல்லாச் சமூகங்களிலும், மொழிகளிலும், பிரதேசங்களிலும், நாடுகளிலும் ஒத்த தன்மைகளைக் கொண்ட பிரதிகள்தான் இலக்கியமாகப் பாவிக்கப்படுகிறதா? இல்லை. ஒரு பிரதியை இலக்கியம் என பாவிப்பதற்கு பல காரணங்களும், முரண்பட்ட பல வரலாறுகளும் இருக்கத்தான் செய்கிறது என்பதை நாம் மறந்துவிட்டோம். மருத்துவக் குறிப்புகள், சாத்திரங்கள், மந்திரதந்திரங்கள் போன்றவைகள்கூட கவிதைக்கான யாப்பிலக்கணத்திற்குள் எழுதப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். ஒரு காலத்தில் சிந்தனை, பயில்தல், கல்வி என்றவகையில் பயிலப்பட்ட எழுத்துக்கள் பிற்காலத்தில் இலக்கியமாகப் பாவிக்கப்படுவதை நமது தொண்மையிலிருந்தும் அறியலாம். குறித்த சமூகம், குழுக்கள், நிறுவனங்கள், இயக்கங்கள் போன்றவை ஒன்றுக்கொன்று முரணான பிரதிகளை இலக்கியமாகப் பாவிப்பதையும் நீங்கள் அவதானிக்கலாம். வரலாற்றில் திருக்குறள்கூட இலக்கியமாக ஏற்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட தருணங்களையும் நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். அத்தோடு சமண வைணவ இலக்கியப் பிரதிகள்கூட இலக்கிய அந்தஸ்தை அடையமுடியாமல் போன காலங்களையும் நாமறிவோம். கலாச்சாரக் காவலர்கள் எவை இலக்கியம் சார்ந்த பிரதிகள் என கணிக்கிறார்களோ அவையே அந்தந்தக்கால இலக்கியமாக நம்முன் இருப்பதை நாமறிவோம்.இதற்குச் சற்றும் குறையாத வன்முறைகளோடுதான் இருக்கிறது இன்று நம்பப்படும் உயர் இலக்கியம் என்ற கருத்தாக்கச் சாய்வும். உயர் இலக்கியம் என்ற ஒன்றை கட்டமைக்க, மறைவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவிதிகள் இருப்பதாகக் கருதி, ஜனரஞ்சக இலக்கியங்கள் என்ற ஒரு பகுதியை உருவாக்கி அதை கச்சாப்பொருளாக எதிர்கொள்ளும் சூழலையும் இன்று உருவாக்கிவிட்டிருக்கிறது.

மிகச் சாதாரண மக்கள் அல்லது அப்பாவி மக்கள் என புத்திசீவிகளாக என தம்மை நம்பிக்கொண்டிருக்கிறவர்கள், தரப்படுத்துகிற, வரையறுக்கிற, கீழாய் நம்புகிற பெரும் சனக்கூட்டத்தின் மத்தியில் புழங்குகிற அவர்கள் விரும்புகிற இலக்கியப் பிரதிகளை மிக எளிதாக எந்தக்குற்ற உணர்வுமற்று தூக்கி குப்பையில் வீச முயற்சிப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் செயற்பாடு, காட்டுமிராண்டிகள், அறிவற்றவர்கள், திருத்தப்பட வேண்டியவர்கள், என மேலைத்தேயம் கீழ்திசைச் சமூகங்களை நோக்கி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சற்றும் குறையாத ஒன்று. ஜனரஞ்சக இலக்கியத்தை தேர்வுசெய்பவர்கள், அதை சுகிப்பவர்கள் என்ற மக்கள் பரப்பு - இலக்கிய ஞானமற்றவர்கள், ரசனையற்றவர்கள், இலக்கிய உன்னத இடத்தையும், அதன் உயர்தரத்தையும் நோக்கி வளர்த்தெடுக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தோடு இணைத்து வாசிக்கத்தக்கதாக இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். மேற்கு - கீழ்திசையின் மீது செலுத்தும் அதிகாரத்திற்கும், வன்முறைக்கும் ஈடானது இது. ஜனரஞ்சக இலக்கியத்தை அக்கரைகொள்கிற அதே மக்கள், ஜனநாயகம்,மனித உரிமை போன்ற அரசியல் பேச்சுக்களுக்கு முக்கியமானவர்களாக பாவிக்கப்படும் அதேநேரம், இலக்கியச் செயற்பாட்டிலும், அதன் நுகர்விலும் கீழ்நிலையில் வைத்து நோக்கப்படுவது ஏற்க்கமுடியாத ஒன்று. இது மிக மோசமான வன்முறையைக் கொண்டிருப்பது. ஒரு சமூகம் அறிவுசீவிகளால் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். அதுவல்லாத சனக்கூட்டம் துடைத்தழிக்கப்பட வேண்டும் என்பது போன்ற நமக்கு வழங்கக்கூடியது.

வாழ்வின் மீதான ஒரு சலிப்புநிலை, வறுமை, ஒழுக்க உணர்வுகளின் இறுக்கமான கட்டமைப்புக்கள் ஒரு சமூகத்தை மூச்சுத்திணறடிக்கின்ற நிலையில், தமக்கு மறுக்கப்படுவனவற்றை கற்பனையிலாவது பதிலீடு செய்ய உதவும் ஊடகம் அல்லது பதிலி என்ற வகையிலாவது ஜனரஞ்சக இலக்கியங்களுக்கு இடம் கொடுத்தே ஆகவேண்டும். அவைகூட இலக்கியமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அறிவுசீவிகளுடைய இலக்கியம் என்ற எழுத்துவகையினம், பெரும்பான்மையான பார்வையாளர்களைச் சென்றடையாமல் இருப்பது ஏன் என்ற புலத்திலிருந்து ஆய்வுகள் மிகமிக அவசியம். அப்படியான ஆய்வுகள் நிச்சயமாக அறிவுசீவிகளின் இலக்கியத்தில் உருவாக்கப்படும் கதை மாந்தர்களையும், கவிதைச் சம்பவங்களையும் குற்றம் சொல்லுபவையாகவே இருக்கும் என்பது என் கணிப்பு. உதாரணமாக ஜே.ஜே. சில குறிப்புக்கள் என்ற நாவலில் வரும் ஜே.ஜே. சாதாரணமான மக்களின் தேர்வுகளையும், செயற்பாடுகளையும் கிண்டலடிப்பதாகவும், அந்த மக்களின் ஈடுபாடுகளை பிழையென என குறைகூறுவதை நீங்கள் வாசித்திருப்பீர்கள். இது அவர்களை நெருக்கம் கொள்ள முடியாத ஒரு நிலையை உருவாக்கியிருக்குமல்லவா...? ஜனரஞ்சக இலக்கியத்தைக் காட்டிலும், புத்திசீவிகளின் உயர்தரமான இலக்கியம் எந்த வகையில் ஒசத்தியானது என்றுகூட நீங்கள் விவாதிக்க முற்படலாம். அப்படி முயற்சித்தால், நீங்கள் தோல்வியடைவதைத்தவிர வேறு நிலையில்லை என்றே தோண்றுகிறது. (பெருவெளி -01 இல் என்னால் எழுதப்பட்ட - சுராவின் சிந்தனையும் எழுத்தும் என்ற கட்டுரையை இதோடு இணைத்து வாசிக்கலாம்) கற்பனையில் ஒரு உலகைப் படைப்பது அதுவும், இங்குள்ள வாழ்வை ஓரங்கட்டிவிட்டு அதீத உலகொன்றை உருவாக்கித்தருவது ஜனரஞ்சக இலக்கியமென்றால், பல்வகைப் புரிதல்களும் செயற்பாடுகளும் கலந்திருக்கின்ற இந்த வாழ்வைப் புறக்கணித்து, நல்லவை எனக் கருதத்தக்கவைகளும், உன்னதங்களும் மாத்திரமே இருக்கின்ற ஒரு உலகை உருவாக்கித் தருவதுதானே புத்திசீவிகளின் இலக்கியத்தின் பணியாக இருக்கிறது. இரண்டு இலக்கிய நிலைப்பாடுகளும் ஏதோ தமக்குரிய தனிவழிகளில் பல்வகைத் தன்மைகள் கலந்து ஊடாடுகிற வாழ்வைவிட்டுவிட்டு அதற்கு வெளியே எங்கோ அழைத்துக்கொண்டிருப்பவைதானே...! பல்வகைத் தன்மை ஊடுபாவுகின்ற கலந்திருக்கின்ற வாழ்வை இந்த இரண்டு இலக்கிய நிலைகளினூடகவும் முன்வைக்க முடியாது என்பதுதான் எனது நிலைப்பாடாகும், அதனால்தான் சகலதும் கலந்திருக்கின்ற ஒரு 'கலப்பினம்' என்பதாக இலக்கியம் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என முன்வைக்கிறேன்.

ஆம், நான் ஒரு நல்ல வாசகன் என்ற வகையில், வாசிப்பதற்கேற்ற இலக்கியம் உருவாக்கப்படவில்லை என்று முறையீடு செய்கின்றேன். அப்படி இனி உருவாக்கப்படவேண்டிய அல்லது அக்கறை கொள்ளப்பட வேண்டிய எழுத்துச் செயற்பாடுகளுக்கு பின்னை இலக்கியம் என்ற ஒரு தொடக்கத்தை கொடுக்கலாமா என்றும் எல்லோர் முன்னிலையிலும் வினவுகிறேன். இந்தப் புரிதல்களை முன்னெச்சரிக்கையாகக் கொண்டுதான், சிறந்த கவிதைகள் எனக் கருதப்படுவனவற்றோடு போட்டியிடத்தக்கதாகவும், அதே நேரம் ஜனரஞ்சக பார்வையாளர்கள் என கருதப்படுபவர்கள்கூட அக்கரையும் ஆர்வமும் கொள்ளக்கூடிய பிரதிகளை எனது கவிதைச் செயற்பாடாக முயற்சிக்கிறேன்.

ஜனரஞ்சக எழுத்தாளர்களைப் பொருட்படுத்த வேண்டும் என மட்டிறுத்தி இதைப் புரிந்துகொள்ள முடியாது.

வைரமுத்து அல்ல எவராக இருந்தாலும் எழுத்தை முன்னிறுத்தி மோசமான அரசியலை செயற்படுத்தினால் அது எதிர்க்கத்தக்கதே... ஆனால் சாருநிவேதிதாவை நான் பொருட்படுத்தக்கூடாது என்பதற்கு வேறு பல காரணங்கள் உண்டு. எனக்குத் தெரிந்தவரையில் அவர் எழுத்தாளர் என்பதற்கு என்னிடம் எந்த ஆதாரங்களுமில்லை. தமிழுலகமே அவரைப் பின் தொடருவதாக இருந்தாலும் என்னிடம் அவருக்கென்று சிறு இடமும் இல்லை. உங்களுக்கு அவர் முக்கியமாகத் தெரிவதற்கு நிறையக்காரணங்கள் இருக்கலாம். அதுபோலதான் அவரை நிராகரிக்க நிறையக்காரணங்களுண்டு. கடந்தகால இலக்கியப் பரீட்சயம் அதிகம் இருப்பவர்கள் எனது கூற்றை ஒருபோதும் மறுக்கமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். இன்று அவரே தன்னைச் சுற்றி உருவாக்கியிருக்கும் ஒளிவட்டத்திற்குள் நீங்களும் சிக்குண்டிருக்கலாம். அதனால்தான் எனது அறிவிப்பினால் நீங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறீர்கள். சிறுபத்திரிகைகளோடு அதிகம் தொடர்பிருப்பவர்களுக்கு தெரிந்த விசயங்களைத்தான் நான் திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறது. உங்கள் கேள்வி பழைய 'எக்ஸை' திரும்பவும் கிண்டிக்கிளற வைத்திருக்கிறது. ஒரு வகையில் அது கூட நல்லதுதான். இன்று இணையத்தில் செயற்படும் அனேகம்பேர் அறியாத சங்கதிதான். தெரிந்தவர்களும் பேச விரும்பாமல் விட்டுவிட்டனர். நான் ஏன் இதைப்போய் இப்போது பேசுகிறேன். யார் எக்கேடுகெட்டால்தான் என்ன... இதைப் பேசாமல் விட்டிருக்கலாமே என தோழர்கள் நினைக்கக் கூடும். இருந்தும் எனக்கு வேறு வழி எதுவும் தென்படவில்லை.

'தமிழில் அவரின் புனைவுகள் - அல் புனைவுகள் முக்கியமானவை என்பேன்' என்று உங்கள் நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிறீர்கள். நானும் அந்தக் கூற்றோடு உடன்படுகிறேன். ஆனால், அதிலொரு சின்னத் திருத்தம் இருக்கிறது. 'சாருநிவேதிதாவின் பெயர்தாங்கி வெளியிடப்பட்டுள்ள பிரதிகளும் முக்கியமானவை' எனச் சொல்லியிருந்தால் சரியாக இருக்கும் என்பதே என் தரப்பாகும். இந்தவகையில் வேண்டுமானால் இவரை முக்கியமானவராகச் சொல்லலாம். அவருடைய பெயரைத் தாங்கி வந்திருக்கும் பிரதிகள் எல்லாம் அவரால் எழுதப்பட்டதுதானா..?

இப்படியொரு சந்தேகம் என்னைப்போல் பலருக்கு உருவாகியபடியே இருக்கும். இந்தச் சந்தேகம் உருவாவதற்கு பெரிதும் உதவியது அவரேதான். சாருநிவேதிதா ஒரு நம்பர் ஒன் இலக்கியத்திருடன். ஆரம்பகாலங்களில் தம்மை அண்டியிருந்தவர்களைத் திருடினார். இப்போதுதானே... இணைத்தளம் பல்லாயிரம் எழுத்தாளர்களை அருகில் கொண்டுவந்து தருகிறது. ஆகவே அவரின் பெயர்தாங்கி வரும் பிரதிகளுக்குரிய சொந்தக்காரர்கள் எந்தெந்த நாட்டில், எந்தெந்த மொழியில் இருக்கிறார்களோ என்று தெரியாமலிருக்கிறது. அண்மையில் அவருக்கு பிரெஞ்சும் கொஞ்சம் தெரியுமென்று தனது வலைத்தளத்தில் வேறு சொல்லியிருக்கிறார். உண்மையில் அவர்தான் எழுதியிருந்தால்கூட சந்தேகிக்க முடியுமாக இருப்பதால் எப்படி அவரை அங்கீகரிக்கச் சொல்லுகிறீர்கள். உங்களால் முடிந்தாலும் என்னால் முடியவில்லை. நாளை அவர் என்னை யாரும் அங்கிகரிக்கத் தேவையில்லை என்று ஒரு பதிவைக்கூட எழுதிடுவார். அதனால்தான் 'அவரைத் தவிர' என்று கூறவேண்டிவந்தது. அவரையும் இணைத்து இலக்கியப் பேச்சை முன்வைப்பது பார்வையாளர்களுக்கு நான் செய்யும் துரோகம் என்றே கருதுகிறேன். ஆம் தோழர் நீங்கள் அடுத்ததாக கேட்க தயார்படுத்தும் கேள்வி என்னவென்று நான் யூகித்துவிட்டேன். அல்லது நான் சொல்ல விரும்புவதை முன்வைக்க இப்படிச் சொல்லுகிறேன் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். சாருநிவேதிதா திருடன் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா...? என்றுதானே கேட்க நினைக்கிறீர்கள்.

அவருடைய திருட்டை நிரூபிக்க நானும் ஒரு திருட்டை செய்ய வேண்டியிருக்கிறது. (சூனியம் - ஒன்றுமில்லை என்ற வலைத்தளத்திலிருந்து கட்டுரையொன்றை காப்பி பேஸ்ட் செய்கிறேன் எழுதியவரின் அனுமதியின்றியே...) இது ஒரு வகையில் எனக்கு வசதியாக இருக்கும் நான் கொஞ்சம் கொஞ்சமாக தொகுத்துப்பேசவும், நினைவிலிருந்து தூசிதட்டித்தரும்போது பல விசயங்கள் மறந்துவிடவும் சாத்தியமிருக்கிறது. அது மட்டுமன்றி இவரின் திருட்டை அக்குவேறு ஆணிவேறாக இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது.

அன்பின் நவீன் இப்படியொரு கேள்வியை நீங்கள் கேட்டிராவிட்டால், இந்த அழுக்குச் சீலையை உண்மையில் நான் துவைத்திருக்க வேண்டி வந்திருக்காது. அன்பின் தோழர் சாருநிவேதிதா தயவு செய்து என்னை மன்னித்துவிடாதீர்கள். மன்னிப்பதினூடாக நீங்கள் ஒரு எழுத்தாள மகானாக ஆகிவிடலாம் எனக் கருதினால் அதுவே நீங்கள் விழுந்த படுகுழியாக மாறிவிடலாம்.

இதை வாசித்த பின் உங்கள் கருத்துக்களை அறிய ஆவல் உள்ளது. இது தொடர்பாக மேலும் கேட்டுவிடாதீர்கள். எனக்கு சொல்ல ஏதுமில்லை.

சூனியம் தளத்தில் உள்ள அக்கட்டுரையின் ஒரு பகுதி:
'சஃபர்' என்னும் அந்தச் சிறுகதை ‘இந்தியா டுடே‘வில் வெளியாகி அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இரா. முருகனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1995ம் ஆண்டு வெளியான இலக்கிய சிந்தனைகள் தொகுதியிலும் இடம்பெற்றது. பரவலாக சிலாகிக்கப்பட்ட அந்த சிறுகதையை சாரு இந்த ‘முழு‘ தொகுப்பில் சேர்க்கவில்லை. ஏன்? அதேபோல் ‘குமுதம்‘ இதழில் ‘தஸ்தகீர் - நெய்தல் நிலக் குறிப்புகள்‘. இதற்கு பின்னால் ‘குசு‘ (நன்றி: சாரு) விட்டு சிரிக்கும் அளவுக்கு சில விஷயங்கள் இருக்கின்றன. ‘குமுதம்‘ இதழில் முதலில் சாரு நிவேதிதா எழுதிய ‘கொடிக் கப்பல்‘ குறுநாவல் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், பிரசுரமானபோது ‘தஸ்தகீர் – நெய்தல் நிலக் குறிப்புகள்‘ வந்தது! இதற்கும் பலத்த பாராட்டு. வரவேற்பு. ஆனால், அந்தோ பரிதாபம். இதுவும் சாருவின் முழு தொகுப்பில் இடம் பெறவில்லை. என்ன காரணம்? மறந்துவிட்டாரா? அல்லது பிரசுரமான இதழ்கள் தொலைந்து போயிற்றா? அப்படியே ‘காணாமல்‘ போனாலும் சம்மந்தப்பட்ட இதழ்களை தொடர்பு கொண்டு குறைந்தபட்சம் அந்த குறிப்பிட்ட இதழ்களின் நகல்களையாவது வாங்கியிருக்கலாமே? 15 ஆண்டுகளுக்குள் பிரசுரமானவைதானே அவைகள்?

ஆனால், அப்படி எதுவும் சாரு செய்திருக்கமாட்டார். தன் பெயரில் பிரசுரமான அவை இரண்டையும் ஒரு போதும் இனி அது, தான் எழுதியதுதான் என சொல்லவேமாட்டார். காரணம், அந்த இரண்டு கதைகளும் எழுத்தாளர் ஆபிதீனால் எழுதப்பட்டவை. அந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்ததும் சம்மந்தப்பட்டவர்களின் கை கால்களில் விழுந்து தன் ‘புகழை‘ காப்பாற்றிக் கொண்டார். அப்படியானால் மற்றவை எல்லாம் சாரு எழுதியதுதானே… என அவசரப்படாதீர்கள். ஆபிதீன் துணிந்து முறையிட்டதால் அவை இரண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. மற்றவர்கள் மவுனமாக இருப்பதால், இன்று வரை அவை சாரு ‘எழுதியதாகவே‘ கருதப்பட்டு வருகின்றன.
சாருவின் முழு எழுத்துத்திருட்டை அறிய விரும்புபவர்கள் http://suuniyam.wordpress.com என்ற தளத்தில் 'எழுத்துலக திருட்டு' பகுதியில் வாசிக்கலாம்.

ம. நவீன்: தோழர், வாசிப்பு, ஜனரஞ்சக எழுத்து தொடர்பான உங்கள் கருத்துகளை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. மிக அண்மையில் நடந்த ஜெயமோகன் மற்றும் எம்.டி.எம்.வுடனான விவாதங்களும், எழுத்தாளர் தமிழவனுடனான உரையாடல்களும் அதற்கு உதவியது எனலாம். சரி, அவ்வாறு அனைத்து வகையான எழுத்துகளையும் கவனிக்கும் உங்கள் வாசிப்பில் நீங்கள் கண்டடைந்தது என்ன? அல்லது என் கேள்வியை இன்னும் தெளிவாகக் கேட்க வேண்டுமானால், ஜனரஞ்சக எழுத்து என ஒதுக்கிவைக்கப்பட்ட ஒன்றை மீள் வாசிப்பின் மூலம் நீங்கள் அவற்றை ஒரு வாசகன் எவ்வாறு அணுகலாம் என்கிறீர்கள். அவ்வாறு உங்கள் வாசிப்பில் ஜனரஞ்சகம் என ஒதுக்கிவைக்கப்பட்ட ஒன்று மிக முக்கியமானதாக கருதும் படி ஏதும் தட்டுப்பட்டதா? 

றியாஸ் குரானா: ஆம், அனைத்துவகையான எழுத்துக்களோடும் பணியாற்ற முற்படுபவன் என்றவகையில் எனது வாசிப்பில் கண்டடைந்தவைகள் நிறைய உண்டு. இலக்கியம் எனப் பாவிக்கப்பட்ட எழுத்துக்கள், கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் பல்வேறு வகையினங்களையும் உள்ளெடுத்த அனுகலாக மாறியிருக்கிறது. அதற்கு முன் இலக்கியமென கவிதைகளை மாத்திரம்தான் பாவித்து வந்திருக்கிறோம். கவிதைகளைப் பற்றிப் பேசுவதே இலக்கியம் பற்றிய பேச்சு என்பதுதான் அன்றைய நிலை. அல்லது நமது இலக்கியத்தின் பெரு மரபு. இலக்கிய வரலாறு என்பது இலக்கிய இயல் அதாவது இலக்கியத்தின் தன்மைகளைப் பற்றிப் பேசுவதாகவே நான் இதை எடுத்துக்கொண்டு இதற்குப் பதில் சொல்ல விரும்புகிறேன். காலகட்டங்களாக பகுத்துப் பேசுவதும் ஒரு முறைமையாக இலக்கிய வரலாற்று எழுத்தில் இங்கு புளக்கத்திலுள்ளது. அதைவிட அதன் தன்மைகள், மாற்றங்கள் குறித்து அவதானிப்பதினூடாக நாம் வேறொரு திசையில் புரிந்துகொள்ள உதவக்கூடும் என்பதே இதன் காரணம். காலங்காலமாக புலமையாளர்களின் வழியாக மாத்திரமே இலக்கியம் கைமாற்றப்பட்டு வந்திருக்கிறது. இலக்கியம் இன்பம் தருவது என நம்பப்பட்டாலும், அது ஒரு குறித்த சமூகத்தின் சிலராக இருக்கும் புலமையாளர்களை இன்பப்படுத்துவது என்ற நோக்கிலே புரிந்துகொள்ளப்பட்டிருந்தது.

வெகுமக்களின் இலக்கியப் பங்கேற்பு தடைசெய்யப்பட்ட ஒரு நிலையை விரும்பியே இது உருவாக்கியிருந்தது. பெரும்பாலும் புலமையாளர்கள் உயர்ஆதிக்க சாதியினர் என்ற வகையில் அவர்களின் மத்தியிலே இலக்கிய இன்பம் பங்கிடப்படிருந்ததாக அறியப்பட்டாலும், நான் பேச முற்படும் விசயத்திற்கு அனுக்கமாக முன்னிறுத்த முற்படுகிறேன். அனைத்து வகை உற்பத்திகளும் மக்களுக்கானதே. மக்களில்லாமல் இந்த உற்பத்திகள் அவசியமற்றவை என எடுத்துக்கொண்டால், இலக்கிய மரபு புலமையாளர்களின் சொத்தாக மாற்றப்பட்டு நுகரப்பட்டு வந்த வரலாற்றை நாம் அவதானிக்கலாம். பக்தி இலக்கிய காலகட்டங்களில்தான் முதன் முதலாக முழு வீச்சோடு இலக்கியத்தின் மீது மக்களின் பங்கேற்பும் தொடங்குகிறது. கோயில்களில் கூட்டாக படலிசைத்தல், தெருக்கூத்து என பலவற்றைச் சொல்லலாம். இது தவிர வெகுமக்கள் பரப்பில் பரவலாக பயன்பாட்டிலுள்ள கலையிலக்கியப் பங்கேற்புக்களாக வில்லுப் பாட்டு, கூத்து, மேடை நாடகம் போன்ற பல செயற்பாடுகள் நமது மரபில் தொடர்ச்சியாகவும் அளவு வித்தியாசத்திலும் தொடர்ந்து வருவதை நாமறிவோம். இதற்கு எதிர் முகாமில், புலமையாளர்களான சிறுதொகையினர் உயர்ந்த இலக்கியத்தை கட்டிக்காத்து வருவதாகச் சொல்லிக்கொண்டு செயற்பட்டுவருவதையும், இன்றுவரை செயற்படுவதையும் நாமறிவோம். இந்த இலக்கிய வரலாற்றுப் போக்குகளின் முக்கிய சந்தியாக, கிளை பிரிந்து இலக்கியம் செழித்துவளரும் மையமாக பாரதி நிற்கிறான்.

உலகளவில் கவிதையில் ஏற்பட்ட மாற்றத்தின் தமிழ்ப் பிரதிநிதியாக ஒரு புறம்,உயர்தர இலக்கியத்தின் தமிழ் மரபை,தமிழ் உணர்வை உட்செரித்துக்கொண்டு இயங்குவதாக மறுபுறமும், அதே நேரம், அன்றைய அரசியல் நிலவரமாக சுதந்திரப் போராட்டம் முகிழ்ந்திருந்த வேளையில், அதில் பங்கேற்ற வெகுமக்களையும் கவனத்தில் கொண்ட இலக்கியப் போக்கு இன்னொரு புறம் என சமூக மாற்றத்தின் முக்கிய திசைகளை சந்திக்கச் செய்யும் ஒரு இலக்கியச் சந்தியாக பாரதி நிற்கிறான். இதுவே அவனை இன்னும் மகாகவி என்று சொல்லவேண்டிய கட்டாயத்தை நமது இலக்கியப்பரப்பில் உருவாக்கியபடி இருக்கின்றது. பாரதி நின்ற புள்ளியிலிருந்து ந.பிச்சமூர்த்தி வழியாக எழுத்து, கசடதபற ஊடாக வளரும் ஒரு புலமைத்துவ மரபை நாமறிவோம். அதுபோல, நா.காமராசன் வழியாக நீளும் ஒரு ஜனரஞ்சக இலக்கிய மரபையும் நாமறிவோம். இந்த இரு பிரதான போக்குகளும் ஒன்றையொன்று எதிர் நிலையில் வைத்தே நகர்ந்தது. தொடர்ச்சியாக ஒரு மோசமான பகை பேணப்பட்டதை நாமறிவோம்.

60களில் கோவையில் உருவாகி மக்களை அணிதிரட்டிய நக்சல்பாரி இயக்கத்தின் தாக்கமும், பஞ்சாலைகள், இயந்திர தொழிலுற்பத்திச் சாலைகள் நிலைபெற்ற போது கோவை நகரத்தில் தொழிற்சங்கங்களை நிலைநிறுத்த பலபோராட்டங்கள் தொடங்கப்பட்டன. அந்த மக்களோடு மார்க்சியச் சாய்வானவர்களும் அக்கறைகொண்டனர். அந்த மக்களுக்கான இலக்கியப் பங்கேற்பாக புலமைத்துவ மரபை மறுத்து தமிழ் உணர்வை முன்னிறுத்தியதாக வானம்பாடிகள் வெளிப்பட்டனர். 1971ம் ஆண்டு அக்டோபரில் முதலாவது வெளியிடப்பட்டது. அதுவே இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக பெரும்பான்மை மக்களை இலக்கியத்தோடு இணைத்த பேரியக்கமாக மாறியது. கவிதை, இலக்கியம் போன்றவை பற்றிய பேச்சுக்களை மக்கள் மயப்படுத்திய ஒரு பெரும் இயக்கம் அதுதான். இதுவே அவர்களின் மிகமுக்கிய சாதனை என்றும் கூறலாம்.

வானம்பாடிகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் புவியரசு, சிற்பி, கனல்மைந்தன், ஞானி, சிற்பி, மேத்தா, இளமுருகு போன்றவர்களின் பங்கு முக்கியமானது. இதைத் தொடர்ந்து பெருந்திரளான மக்கள் இலக்கியம் என்ற வெளியில் பங்கேற்றுக்கொண்டார்கள். அதில், அப்துல் ரகுமான், தமிழன்பன், சக்திக்கனல் என மிக நீளமான பட்டியலே உண்டு. புலமைசார் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் இந்த இயக்கத்தை புறக்கணித்தனர். அவை இலக்கியமல்ல என்று மூர்க்கமாக எதிர்த்தனர். வெறும் கோசங்கள் என்றும், பிரச்சாரநெடி தூக்கலாக இருக்கிறது என்றும், அவை இலக்கியத்தின் உபவிளைவு என்றும் விமர்சனங்களை முன்வைத்தனர். அதுபோல, மக்களுக்குப்புரியாத, இருண்ட புலமையாளர்களாக கருதும் சிலருக்கு மாத்திரமேயுரிய அவர்களுக்கிடையிலான மக்களைக் கணக்கில் கொள்ளாத வீண்பேச்சுக்கள் என்று வானம்பாடிகளும் விமர்சிக்கத் தவறவில்லை. வானம்பாடிகள் யாரும் பார்ப்பனர்களில்லை என்று ஒரு முறை ஞானி சொன்னது இந்த இடத்தில் நினைக்கத்தக்கது. வெகுமக்கள் பங்கேற்க முடியாமல் மூடியிருந்தாலும் இலக்கியம், கவிதை பற்றிய புரிதல்களோடு புலமைசார் புலத்தில், பிரமிள், வைதீஸ்வரன், ஞானக்கூத்தன், சுரா எனப்பலர் முக்கியமானவர்களாக இயங்கிக்கொண்டேயிருந்தனர். கவிதையை, இலக்கியத்தைக் கற்றுக்கொள்ளும் நிலையிலிருந்த வானம்பாடிகள் வெகுமக்கள் பரப்பில் பெரும்தாக்கத்தை நிகழ்த்திக்கொண்டேயிருந்தனர். ஆக, பாரதியிடம் இணைந்திருந்த புள்ளி, இரண்டு கிளைகளாக பிரிந்து ஒன்றோடொன்று சிறிதும் உறவே அற்ற பிரிவுகளாக வளரத்தொடங்கியது. இப்படி வளரத்தொடங்கியதை ஒரு நல்ல வாசகன் உணராமல் இருக்க முடியாது.

உலகளவில் அனைத்துச் செயற்பாடுகளிலும், புலங்களிலும், வெகுமக்கள் பங்கேற்கும் இன்றைய நிலையில், இலக்கியமும் அதற்கு இடங்கொடுக்க வேண்டுமென்பது ஒரு தற்காலிக முன்வைப்புத்தான். ஆனால் பெரும் அக்கறையோடுகூடிய முன்வைப்பாகும். அரசியல், போராட்டம் என முக்கிய கடினமான செயற்பாடுகளிலும் இன்று வெகுமக்களின் பங்களிப்பிருக்கிறது. கூடங்குள அணுஉலை எதிர்ப்பு, ஹிண்டுராப் எழுச்சி, தூக்குத் தண்டனைக்கான எதிர்ப் போராட்டம், ஈழத்து அரசியல் போராட்டம், மற்றும் தலித்துகளுக்கான மற்றும் பெண்களுக்கான சமஇடம்கோரல், அரசுகளுக்கெதிரான வலிமையான போராட்டம் என எதை எடுத்தாலும் வெகுமக்களின் பங்கேற்பு அங்கே மிகப் பாரியளவில் இருக்கிறதென்பதை நாமறியாதவர்களல்ல. எனவே அவர்கள் பங்கேற்கும் வகையில் இலக்கியங்களை மாற்றியமைப்பது தொடர்பிலான விவாதங்கள் அவசியமானதுதான். அதற்கான வாசிப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தலித்துகளின் பக்கம் செயற்படவதாக அறிவித்துக்கொண்ட இலக்கியங்கள் அந்த மக்களில் எத்தனை வீதமானவர்களை பங்கேற்க வைத்திருக்கிறது? பெண் எழுத்துக்களுக்கும் இந்தக் கேள்வி பொருந்தக்கூடியது. யாரை முன்வைக்கிறதோ அவர்கள் அந்த இலக்கியத்தை அந்த மக்களாலேயே கொண்டாடப்படுகிறதா என யோசித்துப் பாருங்கள். அவை ஒரு கூட்டு நுகர்வை சாத்தியப்படுத்துகிறதா?

உற்பத்திகள் யாவும் ஏதோ ஒரு வகையில் பிரச்சாரம்தான் என அறிந்த பிறகும், விளிம்பு நிலை மக்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கெதிரான இயக்கங்களும் சிந்தனைகளும் கவனிப்பைப் பெறும் காலமாக இது இருந்தபோதும், ஜனரஞ்சக இலக்கியம் என்ற வெகுமக்கள் விளிம்புநிலையினர் பங்கேற்கும் ஒரு பகுதியை தள்ளிவைப்பது சாத்தியம்தானா...? புலமை சார்ந்த இலக்கியச் செயற்பாட்டாளர்களாக தம்மைக் கருதிவரும், நம்பிக்கொண்டிருக்கும் பலர் (உதாரணமாக புதுமைப்பித்தன் தொடங்கி ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் வரை) வெகுமக்கள் கலை மற்றும் வியாபாரத்துறை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் சினிமாவுக்குள் நுழைந்துகொண்டு தம்மை ஒரு ஜனரஞ்சக பிம்பமாக உருவாக்கவும் முயற்சித்துக்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஜனரஞ்சக எழுத்தாளர்களாக முத்திரைகுத்தப்பட்ட பல கவிஞர்கள் சினமாவில் செயற்படுவதைக்கூட விரும்பியிருக்கவில்லை. உதாரணமாக அப்துல் ரகுமான் சினிமாவுக்கு பாட்டெழுதுவது தொடர்பில், குத்துவிளக்கில் சிகரெட் பற்றவைக்கக்கூடாது என்று பொருள்கொள்ளக்கூடிய அறிவிப்புக்களை வெளியிட்டதை அறிவீர்கள்.

புலமைசார் இலக்கியங்களில்கூட எப்படி அதிகாரங்களும், வன்முறைகளும் கொண்டாடப்பட்டது என்பதற்கு பல உதாரணங்களை இங்கு சுட்டிக்காட்டலாம். அ. மார்க்ஸ், ராஜ்கௌதமன் போன்றவர்கள் புதுமைப்பித்தன் பிரதிகளில் தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் எந்த நிலையில் என்று கட்டுடைத்ததைக்காட்டிய சங்கதிகளையும் நாமறிவோம். அதுபோல, சு.ரா. மற்றும் அண்மையில் பாரதி மகாகவியா இல்லையா என்ற ஒரு விவாதத்தில் எம்.டி.எம்மிடம் குட்டுப்பட்டு தப்பித்தோடியும் மீசையில் மண்படவில்லை என அறிவித்த ஜெயமோகன் போன்றவர்களின் எழுத்துக்களெல்லாம் பார்ப்பனர்களின் கறைபடிந்த பிரதிநிதியாகவே பேசுவதை பலர் பலமுறை கட்டவிழ்த்து காட்டியிருப்பதையும் நாமறிவோம். அது மட்டுமல்லாமல் மிக மோசமான பிடிவாதத்தோடு இலக்கியப் பிரதிகளை அனுகுபவர்தான் ஜெயமோகன். ஒரு பிரதியை பலதிசைகளிலிருந்து அணுக முடியும். அதில் ஒரு திசைதான் ரசனையின் பக்கம் நின்று பிரதியை வாசிப்பது. இதை ஜெ.மோ. வேறுவகையாக புரிந்துவைத்திருப்பார். இலக்கியப் பிரதியை அணுகுவதற்கு ரசனை முறை விமர்சனம் மாத்திரம்தான் சரியானது என்று. இது எவ்வளவு பின்தங்கிய இலக்கியப் பயிற்சி அல்லது வன்முறை.

இவ்வளவு அக்கறை எடுத்து ஏன் இதை விபரிக்கிறேன் என்றால், புலமை சார் இலக்கியமும் ஜனரஞ்சக இலக்கியமும் தமக்கிடையிலான பகைமையை மீளாய்வு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இந்தப் பகையை கைவிட்டுதல் சாத்தியமா எனக் கேட்பவர்களுக்கு தமிழில் உதாரணங்களாக ஜெயகாந்தனும், பிரபஞ்சனும் இருக்கவே இருக்கிறார்கள். அத்தோடு சாருநிவேதிதாவையும் இணைத்துக்கொள்ளலாம் (நான் அவரை எழுத்தாளராக கருதுவதில்லை) இவ்விருவரையும் புலமைசார் இலக்கியத்தைவிட்டு அகற்றவும் முடியாது. அதேபோல், முற்று முழுக்க ஜனரஞ்சக இலக்கியத்திற்குள் வைத்து அனுகவும் முடியாது என்பதை இங்கு சுட்டிக்காட்டலாம். இந்த நிலையை நமது விமர்சகர்கள் அவர்கள் கலைஞர்கள் எனச் சொல்லி தப்பிவந்திருக்கிறார்கள். இதிலிருந்து நான் கண்டடைவதும் இலக்கியப் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதும் ஒன்றுதான். ஒரு பிரதி இலக்கியமா அது அற்றதா? அல்லது உயர் இலக்கியமா, ஜனரஞ்சக இலக்கியமா என்ற நீண்ட சண்டை சச்சரவுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, பிரதி மற்றமைகளோடு உரையாடும் சமிஞ்சைகளை வெளிப்படுத்துகிறதா? மற்றமைகளையும் சம அந்தஸ்தோடு எப்படி ஒரு பிரதிக்குள் கொண்டுவர முடியும், மற்றும் இலக்கியம் உருவாக்கும் வன்முறை போன்ற புலங்களிலிருந்து அனுகவேண்டும் என்பதையே முன்வைக்கிறேன். அதேநேரம் புலமையாளர்களும் வெகுமக்களும் பங்கேற்கக்கூடிய, கூட்டு நுகர்வை சாத்தியப்படுத்தும் பிரதிகளை முயற்ச்சிக்க வேண்டும். அதனூடாக வெகுமக்கள் பரப்பிலும் மற்றமைகள், அதிகாரம், வன்முறை போன்றவற்றின் இயங்குதளங்களையும் அது தொடர்பான புரிதல்கள், விவாதங்கள் போன்றவற்றையும் விரிவுபடுத்த வேண்டும். அதற்கான இலக்கிய முயற்சிகளின் காலமாக இது உருவாகவேண்டும்.

ஆரம்பத்தில் சொன்ன மாதிரி, இலக்கிய வரலாறு அதன் தன்மைகளாலே எழுதப்படவேண்டும். அதற்கான மீள் வாசிப்புக்கள் அவசியம். ஜனரஞ்சக இலக்கியங்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைப்போல புலமைசார் இலக்கியங்களின் மீதும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இன்னும் அதிகமாக முன்வைக்கவும் முடியும். தேவை குற்றச்சாட்டுக்கள் அல்ல. பல சமூக, இன, பிராந்திய, தரம்சார்ந்த அனைத்து இலக்கியத் துண்டங்களிலிருந்தும், பிரிவுகளிலிருந்தும் தமிழ் இலக்கியம் மீளுருவாக்கம் செய்யப்படவேண்டும் என்பதே இன்றையத் தேவை.

ம.நவீன்: தோழர், உங்கள் கருத்தில் நான் முழுக்க ஒத்துப்போகவில்லை என்பதை பதிவு செய்துவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்கின்றேன். முதலில் சமூக, இன, பிராந்திய, தரம்சார்ந்த அனைத்து இலக்கியத் துண்டங்களிலிருந்தும், பிரிவுகளிலிருந்தும் தமிழ் இலக்கியம் மீளுருவாக்கம் செய்யப்படவேண்டும் என்ற கருத்தில் எனக்கு எள்ளலவும் முரண் இல்லை. ஆனால் நீங்கள் கொடுக்கும் வரைபடம் விசாலமானது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மர்ம நாவல்களை தமிழில் சுருக்கி எழுதி மாதம் ஒன்றென வெளியிடுபவர்களையும், மேலான உணர்ச்சியைத் தூண்டும் சீரியல் வகையாராக்களையும் நீங்கள் கறுதி வாசிக்க வேண்டும் என்பது போலவே அக்கூற்று தோன்றுகிறது. அப்படிதானெனில் நீங்கள் அது குறித்து விளக்க வேண்டாம். அல்லது உங்கள் கருத்தை நான் தவறாக அர்த்தப்படுத்தியிருந்தால் நீங்கள் விளக்கம் தரலாம். 'ஆமாம்' எனில் இந்தக்கூற்றை நான் எல்லா வடிவங்களிலும் வைத்துப்பார்க்கிறேன். உதாரணத்துக்குத் திரைப்படத்தையும் அவ்வாறே ஒப்பிடுவோம். 'சினிமா பெரடைசோவை' நல்ல கலை வடிவம் எனும் நாம் விஜயின் சுறாவையும் அவ்வாறு இணைத்துப்பார்ப்போமா? அல்லது இன்னும் இறங்கி ராதிகாவின் சீரியல் எதையாவது ஒன்றை அவற்றோடு இணைப்போமா? பிக்காசோவின் ஒரு ஓவியத்தை கலை வடிவமாக காணும் நான் காலண்டரில் உள்ள சாமி பட ஓவியத்தை பிரேம் போட்டு மாட்டிக்கொள்வோமா? ஆம் அவற்றையும் கருதி ஆராய்ந்து கலை வடிவில் ஏற்க வேண்டும் என்றால் என்னால் அது இயலாது. ஒரு வேளை அதுவும் சிலரில் ரசனைக்கு உட்பட்டதே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பொழுது போக்கிற்காக ஒன்றை அணுகிச்செல்பவர்களுக்கும் தேடலுடன் ஒரு கலைவடிவை நெருங்குபவனுக்கும் வித்தியாசம் உண்டு அல்லவா? இது குறித்து இன்னும் நிறைய பேசலாம். ஆனால் சுருக்கமாகச் சொல்வதென்றால் ஜனரஞ்சக இலக்கியம் என்பதை நான் இவ்வாறு புரிந்துவைத்துள்ளேன். அது வாசகனை மேற்கொண்டு செல்ல உதவாது. நல்ல இலக்கியக்கியங்கள் அங்கிருந்து ஒரு தேடலை உருவாக்கும். இது என் வாசிப்பில் நான் அடைந்தது. இன்று இக்கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒருவேளை இக்கருத்தை பின்தங்கியது என நீங்கள் கருதினாலும். 

றியாஸ் குரானா: நீங்கள் உடன்படாத கருத்தை நான் பேசிக்கொண்டிருக்கிறேன் தோழர் நவீன். உங்களைப்போல பலர் உடன்படாமல் போய்விடவும் கூடும். ஆயினும், பல்வேறுபட்ட வகையினங்களினால் வரையறுக்கப்பட்டிருக்கும் தமிழின், நில மற்றும் புரிதல் தளங்களிலிருந்து, அந்த துண்டங்களிலிருந்து தமிழ் இலக்கியம் என்ற பேச்சுக்கள் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என நீங்கள் உடன்படுவது ஒன்றே எனது இந்த விவாதத்தில் நான் அடைந்த முதலாவது முன்னேற்றம் எனக்கருதுகிறேன். நமது எல்லா வகை உற்பத்திகளும் ஏதோவொரு வகையில் வேறு வேறு அளவுகளில் வேறுபட்ட நபர்களுக்கும், குழுக்களுக்கும், சமூகத்துக்கும் ஏதோ ஒரு வகையில் பங்காற்றுகின்றன. அந்தப் பங்களிப்புக்களின் வழியே கடந்து வருவதுதான் எழுத்துச் செயல். இதில் ஏதாவதொன்று மாத்திரம் முக்கியமானது என்பதோடு மாத்திரமே உடன்பட முடியாதுள்ளது. ஒன்றை முதன்மைப்படுத்தி மற்றவைகளின் மீதான புறக்கணிப்புக்கள் வன்முறையைத்தவிர வேறொன்றையும் உற்பத்தி செய்துவிடாது. வெகுஜனத் தன்மையை, வெகுஜன யதார்த்தங்களை உள்வாங்கிக்கொண்டு மொழிச்சூழலை, எழுத்துச் செயற்பாட்டை விளையாட்டுத்தன்மை மிக்கதாக மாற்றியமைத்திருக்கிறது பின்நவீனப் புரிதல் நிலை. சரியான, உண்மையான, நல்ல இலக்கியம் என்ற ஒன்று இருக்கிறதா என்ன? அப்படி மாற்றமற்ற எதுவிதமான கலப்புமற்ற ஒன்று இருப்பதாக நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஒன்றில் ஒன்று தாக்கமுறாமல் பாதுகாக்கக்கூடிய சூழல் பரிசோதனைக் கூடங்களில் மாத்திரம்தான் சாத்தியம் என நினைக்கிறேன். சமூகப் புரிதல் வெளியிலோ அல்லது எழுத்துச் செயற்பாடுகளிலோ இவையெல்லாம் பழைய நம்பிக்கைகள் மாத்திரமே. அவை சாத்தியமற்றவை. எல்லாவிதமான உற்பத்திகளின் பங்களிப்புக்களையும் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக முக்கியம். அதுவே பன்முக அனுகலுக்குரிய வழிகளைத் திறந்துவிடக்கூடியது. பின்பற்றத்தக்கவையாக, முன்மாதிரியாக கருதத்தக்கவையாக ஜனரஞ்சக இலக்கியம் இருப்பதில்லை என்பதை நான் மறுக்கவில்லை. அதேநேரம் சற்று ஆழமாகப் பார்த்தால், எந்த இலக்கியங்களும் முன்மாதிரியாக கருதத்தக்க தகுதிகளை சரிவர நிறைவேற்றுவதில்லை என்பது புரியவரும். வாசகனிடம் ஒரு தேடலை உருவாக்கும் என நீங்கள் புரிந்து வைத்திருக்கும் நல்ல இலக்கியம் என்பதன் இன்றைய நிலை என்ன? வெகுமக்களிடமிருந்து இலக்கியத்தைப் பிரித்து உற்பத்திச் செயலிலும், நுகர்வுச் செயலிலும் அதை புத்திசாலிகளுக்கான ஒன்றாக மாற்றியமைத்திருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். அல்லது அந்த வகை இலக்கியங்களோடு தொடர்பு உள்ளவர்கள் ஒருவகை புத்திசாலிகள் என்ற அந்தஸ்தை அடைவதாக நம்பப்படுவதை நீங்கள் அவதானிக்கலாம். இந்த விபரிப்புக்கள் நல்ல இலக்கியம் என நீங்கள் கருதுகின்ற ஒன்றை தடம் தெரியாமல் ஆக்கிவிடுவது என்பதல்ல எனது விவாதத்தின் சார்பு, இலக்கியத்தை வெகுமக்களின் வாழ்க்கையிலும் ஓரங்கமாக மாற்றுவதுதான். அதற்கான அழுத்தமாகவே எனது விவாதத்தை கருதவேண்டும். வெகுமக்கள் சமூக வெளியில் உலவக்கூடிய ஒன்றாக நல்ல இலக்கியம் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே. பின்நவீன கலை இலக்கியவடிவங்கள் தோற்றம் பெற்ற 1960களுக்குப்பின் உயர்கலை இலக்கியங்களுக்கும் வெகுசனக் கலை இலக்கியங்களுக்குமிடையிலான எல்லைக்கோடுகளை பின்நவீனத்துவம் அழித்தேவிட்டது. இந்த எல்லைக்கோடழிப்பு நிலையிலிருந்தே எனது விவாதங்களை புரிந்துகொள்வது சரியானது என நினைக்கிறேன். இதற்கு அப்பால் நல்ல இலக்கியம் என்று எவ்வளவுதான் கூக்குரலிட்டாலும் பயனொன்றும் ஆகப்போவதில்லை.

கே. பாலமுருகன்: கவிதைச் சொல்லிக்கும் கவிஞனுக்குமான நிலைபாடு என்ன? இருவரும் எப்படி வேறுபடுகின்றனர்?

றியாஸ் குரானா: நமது மிகப்புராதன இலக்கியப் பிரதி என்பது கதைகளை கவிதையாக மாற்றிக்கொண்டிருந்தவைதான். ஆம் கதைகளை கவிதையால் சொல்லிக்கொண்டிருந்தது தொடக்கம். மருத்துவம், சாஸ்திரம், அறிவியல் என எதுவாக இருந்தாலும் அதைக்கவிதையாக மாற்றி நினைவில் பாதுகாத்த ஒரு தொடர்ச்சியை அவதானிக்கலாம். அந்த நெடும்பயணத்தில் பாரதியைக் கவிதை சந்தித்தபோது முக்கிய திசைமாற்றமொன்று நிகழ்ந்தது. அதுதான் புதுக்கவிதை. அல்லது நவீன கவிதை. கதைகளைக் கவிதையாகச் செய்யும் தொடர்ச்சியறா மரபு, பிச்சமூர்த்தி மற்றும் ஞானக்கூத்தன் போன்றவர்களிடையே சற்று வெளிப்படையாக தெரிவதை அவதானிக்கலாம். இதற்கு முற்றிலும் வேறான ஒரு திசையைத் திறந்துவிட்டவராகப் பிரமிளைச் சொல்ல வேண்டும். அவரை படிமக் கவிஞர் என்பது ஒருவகை மதிப்பீடு. ஆனால் அதற்கு வெளியே கவிதையை கவிதையாகவே சொல்லவும் செய்துகாட்டவுமான நவீன மரபை உருவாக்கியவர். அதற்கு படிமம் மிகவும் உதவியது.

தனித்த சுதந்திரமான மொழியழகுகளைக் கோர்த்தே, அதன் உள்ளீடாக உருவாகும் அர்த்தங்களின் வழியாக கிளைத்துச் செல்லும் புரிதலையும், அதன் நிமித்தம் கதைகளைக் கவிதையாகச் செய்வதிலிருந்து விடுபடுட்டு நிற்பவர். கவிதைச் சம்பவங்களாலேயே கவிதை தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதுபோல கவிதைச் செயலில் இயங்கியவர். கதைகளைக் கவிதையாகச் சொல்லுவதிலும், அவ்வகையான கவிதைகளைச் செய்வதிலிருந்தும் விடுபட்ட நிலையில் புளக்கத்துக்கு வந்த கவிதைகள், உற்பத்தி செய்யப்பட்ட கவிதைகள் நவீன கவிதைகளின் உச்சங்களாக இன்னும் இருக்கின்றன. அந்தவகைக் கவிதைகள் மற்றவர்கள் நினைத்ததை சொல்லுபவைகளாக பார்க்கப்பட்டது. மற்றவர்கள் நினைத்ததை, அவர்களின் மனதில் என்றோ இருந்ததை கண்டுபிடித்துச் சொல்பவராக கவிஞர்கள் வாசிக்கப்பட்டது நவீன கவிதைக்காலங்களின் உச்ச விளைவு எனலாம்.

எப்போதோ ஒரு முறை நான் இதை உணர்ந்திருக்கிறேன். அதையே இவர் எழுதியிருக்கிறார் என்பதால் அந்த 'இவர்' கவிஞராக நீடிப்பதும், பலர் உணர்வதாலேயே குறித்த பிரதி கவிதையாக மாறிவிடுவதும், இவை எல்லாமாகச் சேர்ந்து சமூகத்தின் சுகதுக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவராக கவிஞர் மாற்றப்பட்டிருப்பதும் நவீன கவிதைக்காலங்களின் முக்கிய பங்களிப்புக்களாகும். 90களில் இது மெல்ல மாறத்தொடங்கியது. பின்நவீனக் கருத்தாக்கங்களை தமிழ் சந்தித்த தருணங்கள், மற்றும் பிறமொழிகளின் சமகால இலக்கியப் பரீட்ச்சயம் கொண்டவர்களின் வருகை போன்றவற்றால் தாக்கமுற்று கவிதை மாற்றமடைந்தது. இதுவே,கவிதை எழுதுவது அதாவது கவிதையை அது கொண்டிருக்கும் மொழி மற்றும் கவிதைச் சம்பவங்களின் உள்அலகுகளால் கவிதையாக நிறைவடைதல் என்ற என்ற நிலையிலிருந்து ஒரு கதையாக அதுவும் விபரீதங்கள் நிறைந்த கதையாக இன்று மாறி நிற்கிறது. பிரம்மராஜன்தான் கவிதையைக் கவிதையாகச் சொல்லுவதை ஆரம்பித்து வைத்தவர் என்பது எனது கணிப்பீடு. ஆயினும்.அவருடைய கவிதையின் பெரும்பகுதி எழுதப்படும் கவிதையின் தோற்றத்தையே அதிகம் கொண்டிருக்கின்றன. கவிதையின் உள்ளடுக்குகளில் ஆங்காங்கே கதைசொல்லலின் இழைகளைக்கொண்டிருக்கின்றன. அது பேசவும் முற்படுகின்றன. ஆனால், கிரணம் நீள்கவிதைகளில் தொடங்கி இருவரும் பிரியும் வரை ரமேஷ்:பிரேம் போன்றவர்கள் நவீன கவிதையை வெகுவாக மாற்றி அதைக்கடக்க பல எட்டுக்களை முன்வைத்தவர்கள். இவர்கள் தொடங்கிவைத்த இந்த கவிதைமாற்றம் இன்று மிகவும் விரிவடைந்திருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் அநேக கவிதைகள் நவீன கவிதையைக் கடந்துவிட்டவைதான். கவிதையைக் கதையாகச் சொல்லிக்கொண்டிருப்பவைதான். ஆயினும், அவர்கள் பயன்படுத்தும் மொழியமைப்பு கவிதையைக் கதையாகச் சொல்லுவதற்கு அதிகம் இடம் கொடுக்காமலே இருக்கின்றன.

'சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராப்பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது'

இது கவிஞனால் உற்பத்திக்கப்பட்டது. கதைசொல்லல் அல்ல. இதைக் கதையாகச் சொல்ல முடியாது. வாசிப்பதினூடாக நம்மில் தொற்றும் ஒரு அனுபவம், அதன் மொழி அமைவினூடாக மேற்கிளம்பும் ஆற்றல் இங்கு கவிதைக்கான வேலையைச் செய்கிறது. இது கவிதையாக நிறைவடைய சொல்லத் தேர்வு அவசியப்பட்டுவிடுகிறது. அது இல்லாமல் வேறு சொற்கள் மற்றும் ஒரே கருத்தைத் தருகின்ற பிற சொற்களினால் இங்கு கவிதையைத் தடங்காட்டிவிட முடியாது என்ற நிலையால், இதன் கவிதைச் சம்பவம் உருவாகியிருக்கிறது. ஆனால் கவிதை சொல்லி வேறொரு வேலையைச் செய்கிறார்.

'அவனுடைய கதைக்குள் நுழைந்தேன். மலையொன்று இருக்கிறது. அருகில், காற்றில் சலசலத்தபடி ஒரு மரம் நிற்கிறது. மரத்தில் மட்டும் மழை தூறிக்கொண்டிருக்கிறது. அந்த தூறல் பட்டு மரம் கரைந்து விடுகிறது. கதைப்படி, மரத்தில் அமரவென்று பறந்துவரும் பறவைகள் மரத்தைக் காணாமல் சிறகு வலிக்க வானில் சுற்றித் திரிகின்றன. நான் மரமாகிறேன். பறவைகள் வந்தமர்கின்றன. எனது காதலி என்னைத் தேடித்திரிகிறாள். பொய்யென்றால் அவனுடைய கதையைப் புரட்டிப்பாருங்கள்'

இது கவிஞனின் வேலையல்ல. அவனுக்கு முற்றிலும் மாறுபட்ட வேலை இது. கவிதையை முழுக்க முழுக்க கதையாகச் சொல்லியிருப்பது இது. கவிதையை இப்படி உற்பத்தி செய்பவர்களைத்தான் நான் கவிதை சொல்லி என்று அழைக்கிறேன். கவிதை சொல்லிக்கு சொல் தேர்வு என்பது முக்கியமே அல்ல. எந்தச் சொற்களையும் பயன்படுத்தி கவிதையைச் சொல்லிவிட கவிதை சொல்லியால் முடியும். அப்படி கவிதையாக மாற்ற கவிதை சொல்லி கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. கவிதை சொல்லி இரண்டு முக்கிய பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. கவிதையை தடங்காட்டுவது, உற்பத்திப்பது ஒன்று. அதைக் கதையாக சொல்ல அதன் கவிதையாற்றல் சற்றும் குறையாமல் கட்டமைப்பது. ஒரே நேரத்தில் கவிதை சொல்லி மற்றும் கவிஞன் போன்ற இருவரின் வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. ஆம், கவிதை சொல்லிகளே நவீன கவிதையைக் கடந்து வெளியில் வரமுடியும்.

கே. பாலமுருகன்: சமூகப் பிரச்சனைகளைக் கவிதையாக்குவது வாழ்வின் துயரங்களை நோக்கி புலம்புதல் நியாயமற்ற விசயங்கள் மீது புகார்களை முன்வைத்தல் என இப்படிக் கவிதை மட்டும் ஏன் இத்தனை விசயங்களுக்கும் ஆளாகின்றன? கவிதை தமிழின் தொன்மையான பாரம்பரியத்தைச் சேர்ந்தவை என்பதாலா?

றியாஸ் குரானா: ஆமாம் தோழர். நவீன கவிதை நீங்கள் சொல்லுவதைப்போல வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தனது தலையில் தூக்கிப் போட்டுக்கொண்டு திண்டாடியது என்பது உண்மைதான். இன்னும் அப்படியே கவிதைபற்றியும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இன்று எல்லா விசயங்களையும் கவிதை மட்டுமே பேசவில்லை. செய்திகள்கூட மூலைமுடுக்கை எல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன. வாழ்வின் எல்லா விசயங்களையும் பிரதிபலிப்பதுதான் கவிதை என்ற நிலை கடந்துபோய்விட்டது. கவிதை தன்னளவில் ஒரு அனுபவமாகவும், அதுவே ஒரு அனுபவத்தை உருவாக்குவதுமான நிலைவரை அது கடந்து வந்துவிட்டது. இதைச் செய்வதுதான் கவிதை எனச் சுட்டிக்காட்டும் அதேகணம் அதிலிருந்து கவிதை நழுவிவிடுவதைப் புரிந்துகொண்டால், கவிதைக் கென்று குறித்த வேலையிருக்கிறதென்றோ, குறித்த பயன்பாடு இருக்கிறதென்றோ,குறித்த அர்த்தம் இருக்கிறதென்றோ நம்மால் சொல்ல முடியாமல் போய்விடும். வாழ்வின் அனைத்து அம்சங்களுக்குள்ளும் கவிதையை சும்மா கொண்டுபோய் நுழைக்கிறார்கள்.

கே. பாலமுருகன்: தற்சமயம் எழுதப்படும் நவீன கவிதைகள் தமிழ் இலக்கியச் சூழலில் என்ன மாதிரியான கலை சாத்தியங்களை உருவாக்கியிருப்பதாக நினைக்கிறீர்கள்? நவீன கவிதையைக் கடந்து வேறொரு தளத்திற்கு நகர்வதற்கு இச்சமூகமும் படைப்பாளர்களும் தயாராக இருப்பதாகக் கருதுகிறீர்களா?

றியாஸ் குரானா: ஆமாம், நவீன கவிதையைக் கடந்து வந்துவிட்டது கவிதை. கடந்த பத்தாண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட கவிதைகளில் அநேகம் பிரதிகள் நவீன கவிதை எனக் கருதப்பட்ட எல்லைகளுக்குள் இல்லை. மிகச் சாதாரணமாக வெளியேறிவிட்டன. 'அந்நியத் தன்மையின், ஒட்டாமையின் நகல்களைப் பெருக்கும் நவீன வாழ்வை இன்றையக் கவிதைகள் நுட்பமாகக் கவனிப்பதாகத் தெரியவில்லை' என்று சுகுமாரன்கூட சொல்வார். இப்படி பலர் இன்றையக் கவிதைகளைக் கண்டு சலித்துப்போவதை அவதானிக்கலாம். நவீன வாழ்வை கவிதைகள் ஏன் நுட்பமாகக் கவனிக்க வேண்டும்? அப்படிக் கவனிக்குமானால் அதுவே நவீன கவிதையின் வரையறைகளுக்குள் சென்று வீழ்ந்துவிடும். இன்றைய கவிதைகள் பல்வேறுபட்ட வாழ்வை உருவாக்குகின்றன. அதற்கு வாழ்வைக் கவனிக்க நேரமில்லை. அது புதிய புதிய வாழ்வை உருவாக்கும் கொண்டாட்டங்களில் இருக்கிறது. இன்பங்களையும், துன்பங்களையும் காலாகாலமாகச் சுமந்து திரிந்து சலித்துப்போன கவிதை, அதை ஒரு விளையாட்டாக இப்போது மாற்றியிருக்கிறது. வாசிப்பவர்களின் முன்தோண்றி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க இன்றைய கவிதை தயாராக இல்லை. அதற்குத்தானே இருக்கவே இருக்கிறது நவீன கவிதை. தமிழின் நவீன கவிதையைவிட மிகச் சிறப்பாக ஒப்பாரி வைக்க எந்தக் கவிதைகளாலும் முடியாது. இன்றையக் கவிதைகள் சொல்லும் கதைகளைக் கேட்டு பலர் முகம் சுழிக்கக்கூடும். வாழ்வின் மீது அக்கறையற்றது என குற்றம் சுமத்தவும்கூடும். இவை எதையும் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை இன்றையக் கவிதை. ஏனென்றால் அது நவீன கவிதையில்லை. அந்த நிலையைக் கடந்துவிட்ட கவிதை. என்.டி.ராஜ்குமார், ரமேஷ்:பிரேம்,பிரான்சிஸ் கிருபா, கடற்கரய், யவனிகாஸ்ரீராம், பாலை நிலவன், பூமா ஈஸ்வரமூர்த்தி, சிபிச் செல்வன், போன்றவர்களை வாசிக்கும்போது அவை நவீன கவிதை அல்ல என்றே சொல்லக்கூடும். நவீன கவிதையைக் கடந்துவிட்டிருப்பதே ஒரு மிகப்பெரும் கலைச் சாத்தியம்தான்.

கே. பாலமுருகன்: 10 வருடத்திற்கு முன்பான கவிதை சொல்லலுக்கும் இப்பொழுதுள்ள கவிதை சொல்லலுக்கும் மத்தியில் நிகழ்ந்துள்ள மாற்றங்களாக எதைக் கருதுகிறீர்கள்? ஒவ்வொரு பிரதேசத்திலும் அதன் அரசியல் தாக்கங்கள் சார்ந்தே கவிஞனின் மனம் மாற்றம் கொள்வதாக நினைக்கிறேன்.

றியாஸ் குரானா: சிறியளவிலான மாற்றம்தான். ஆனால் மிக முக்கிய புரிதல் மாற்றம். தலைகீழான ஒரு மாற்றம் என்றுகூட சொல்லிவிடலாம். பத்து வருடங்களுக்கு முன் எல்லாவற்றையுமே கவிதை சீரியசாக எடுத்துக்கொண்டது. யதார்த்தம், உண்மை, நீதி என பலவற்றைப் பேச முற்பட்டது.அவை நிரந்தரமாக கவிதைக்குள் உருவாக்கப்பட வேண்டியதாக தன்னை வடிவமைத்துக்கொண்டது. இன்று அப்படியல்ல. எல்லாமே புனைவு என மாற்றிக்கொண்டது. புனைவுக்குள் புனைவு, துணைப்பிரதியாக்கம், அதனூடாக உருவாகும் மொழி, புனைவின் வழியே அலையும் யதார்த்தங்கள் என அரசியல் தொடங்கி வரலாறுவரை தனக்குள் உள்வாங்கத் தொடங்கிட்டது கவிதை. அரசியல் மற்றும் எதிர்அரசியல் என பல முரண்பாடுகளை ஒரு பிரதிக்குள் கொண்டுவரத் தொடங்கிவிட்டது. எல்லாச் செயற்பாடுகளுமே அரசியலை உருவாக்கவும் செய்கின்றன. அதை எதிர்நிலையில் வைப்பதும் அரசிலாகவே மாறிவிட்டன. புனைவு என்ற புலத்திலிருந்து புரிதல்கள் சாத்தியப்பட்டிருக்கிறது இன்று.

கே. பாலமுருகன்: நவீன கவிதை இனி மரபு சார்ந்த ஒன்றல்ல, அது நவீன தமிழ் அரசியல் சார்ந்தவையாக அடையாளப்படுத்தப்படும் என மனுஷ்ய புத்திரன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். இதைப் பற்றிய உங்கள் பார்வை? மனுஷ்ய புத்திரன் தமிழில் கவனிக்கத்தக்கக் கவிதைகளை எழுதி வருவதாகக் கருதுகிறேன்.

றியாஸ் குரானா: அப்படி மனுஷ்ய புத்திரன் சொல்லியிருந்தால் அதன் மீது ஒரு புன்னகையை வீசிவிட்டு கடந்து செல்லவே விரும்புகிறேன். எனக்கு அவர் சொல்லுவது விளங்கவே இல்லை. அல்லது நான் புரிந்துகொள்ளும்படி அவருடைய இந்த அறிவிப்பு இல்லை. மரபு என்பது ஒரு தொடர்ச்சி என்றே நான் பொருள்படுத்த விரும்புகிறேன். ஏதொன்றும் ஒன்றாக அடையாளப் படுத்தும்வரைதான் அது புதிதாகவோ சவால் மிக்கதாகவோ தோன்றுகிறது. ஆடையாளப் படுத்தப்பட்டுவிட்டால் அது மரபாகிவிடுகிறது. ஆடையாளப்படுத்துவதின் உள்ளீடே, அதை ஒன்றோடென்று இணைக்கும் கண்ணியே மரபின் முக்கிய பணி எனக்கருதுகிறேன். அதுமட்டுமல்ல, அரசில் சார்ந்தவையாக கவிதை மாறிவிடுவது ஒரு புறமிருக்க, கவிதைக்கென்றே ஒரு அரசில் இருக்கிறதே. அதுதானே அதன் மரபு, அதன் தொடர்ச்சி... மனுஷ்ய புத்திரன் கவனிக்கத்தக்க கவிதைகளை எழுதியிருக்கிறார் என்பது எனக்கு உண்மையான ஒன்றாகத் தெரியவில்லை. 1983ல் மணிமேகலைப் பிரசுரத்தின் மனுஷ்ய புத்திரன் கவிதைகள் என்ற தொகுப்பு தொடங்கி இன்றுவரை வாசித்து வருகிறேன். சுமாரான கவிதைகளே அவரிடமிருந்து
வெளிப்பட்டிருக்கிறது. சாரு மற்றும் ஜெயமோகன் போன்றவர்களுக்கு மனுஷ்ய புத்திரனை மாபெரும் கவிஞராகச் சொல்ல வேண்டிய தேவை ஒரு காலத்தில் இருந்திருக்கிறது என்பதை பலரும் அறியக் கூடும். அதுபோல இன்று பல இளம் எழுத்தாளர்களுக்கு அப்படியான ஒரு நிலை இருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில், கவிஞராக அவர் எனக்கு முக்கியமாகப்படவில்லை.

கே.பாலமுருகன்: கவிதை எழுதுவதற்கான தொழில்நுட்பத்தை முறையாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அதைப் பயிற்சிப்படுத்தி கவிதை புனைவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது கவிதைக்குள் மன உணர்வைச் செலுத்துவதைவிட கவிதைக்கான உடலைத் தயார்ப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாக நினைக்கிறேன்? அப்படியென்றால் கவிதை அரை பிரக்ஞையோடு எழுதப்பட வேண்டுமா?

றியாஸ் குரானா: கவிதை தன்னோடு தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. எழுத்தை கவிதையாக மாற்றுவதுகூட ஒரு தொழில்நுட்பம்தானே. ஒரு பிரதி கவிதையாக பயிலப்படுகிறதென்றால், மாறிவிட்டதென்றால் அது எல்லாமும் கொண்டிருப்பதாகவே புரியப்படுகிறது. இதைச் சாத்தியப்படுத்துவது தொழில்நுட்பம்தானே. தொழில்நுட்பம், பிரக்ஞை இதுபோல இன்னோரன்ன எதுவும் இங்கு முக்கியமல்ல. ஒரு பிரதியைக் கவிதையாக மாற்றிவிட்டால் போதும். பின்னர் மீதி வேலையை அந்தப் பிரதியே செய்யத்தொடங்கிவிடும். ஒரு பிரதியைக் கவிதையாக மாற்றுவது எப்படி எனக் கேட்டுவிடாதீர்கள். கேட்டால் அநேகம் பொய்களைச் சொல்ல வேண்டிவரும்.

நன்றி : வல்லினம்