தமிழின் நவீன கவிதையின் எல்லைகளை மீற முயற்ச்சித்தவராக பிரமராஜனையே நான் காண்கிறேன்.
இனிவரும் காலங்களில் பிரமராஜன் அவர்களின் கவிதைச் செயல் முக்கிய பேசு பொருளாக மாறக்கூடும்.
படிமத்தை தவிர்ப்பது.உருவக மொழியைத் தவறாக பயன்படுத்தாமல் இருப்பது இரண்டை மட்டுமே நான் முதன்மையாக கவனித்தேன். என்று சொல்லும் பிரமராஜன் பரிசோதனை முயற்ச்சி என்பதை பிரக்ஞையுடனே செய்துகொண்டிருந்தவர்.அவரின் சில கவிதைகளை எனது வலைத்தளத்தில் பதிவிடுவதில் மகிழ்வாக இருக்கிறது.
இசையெனும் பேராறு
அது கச்சிதமற்ற உருவகம் என்று சொல்வாய்.
நம் வார்த்தைகள் பிளவுபடுகின்றன எனின்
மரபின் சொல் வழி வந்தததாகுமது
சூடேறிஇ சொல் மீதேறி அழுத்தமானியின் குறியீடுகள்
அதிகம் காட்டுவது உன் குருதியின் கூர்மையை
என்பேன்.
உன் அறிவியல் சொற்கட்டுக்களை வீசாதே
என்மீதென்பாய்.
'தூரமாய் விலகிப் போகிறோம்'–கடிதத்திற்கான வரி.
நிஜத்தை ஓர் ஒளிரும் ஆடையற்ற தூய்மையாய்
உரிக்கத் தெரியாத கையறு நிலை.
தொடுதலும் உணர்தலும் இடைவெளியற்று
நடக்குமாயினும்
மெய்யென்று அறியுமோ தனித்தனி மனதுகள்?
துவக்கத்தின் புல்லரிப்புகள்
சிலிர்த்த கற்பனைகள்
நமக்குப் பின் என்றென்றும் ஓடிக்கொள்ளும்
இசையெனும் பேராறு
யாவும் காவியேறிய புகைப்படங்கள்
கூடிப் பிரிந்து சமரசத்தில் கை குலுக்கினால் நட்பு.
இடைவெளியைத் தூர்த்து
கையை நீட்டினாலும்
இட்டு நிரப்பியதென்று அறிவோம்
நீயும் நானும்.
என்றும் இன்றும் எல்லோரும்
அவனிடம் தந்தேன்
மூன்றாம் பகுதியில் நுழைந்து
கடல் புறங்களில் கரைமறந்த சிரிப்புகளை
கிளிஞ்சல் சுண்ணாம்பின் நிறமென
அறைக்குள் எதிரொளித்தான்.
'ஆனால் பைக்குள் பணம் வைத்திரு'
என்பவன் ரோடரிகோ இயாகோ எவனெனத்
தொடர்பு நாளங்கள்
கால் பிசகிக் கேட்க
என்றும் இன்றும் எல்லோரும் என்றேன்
சிரிப்புகளைப் பண்டமாற்றி
நான்காம் கட்டம் தாண்டினான்
கபாலம் துருத்திய என்னிரு கண்ணாடிக் கோலிகளில்
விழுந்தது
தீச்சுடரும் கண்மணிகளைக்
கொண்டதொரு முகம்.
போல்களின் குரல்கள்
கிராமங்களின் மௌனங்களுடன்
என் அறைச்சுவர் விரிசல்களுக்குத் திரையிட்டன.
அவற்றிலிருந்து எப்பொழுதும்
முரட்டு மனிதர்களின் இயக்க கோஷம்
தலைமேல் பிழம்புக் கோளத்தைச் சுமந்தபடி.
அடிக்குரலில் ஆலாபித்த இசை
மஞ்சள் நிற வயிற்றுப் பறவையாய்
திசைக் கொன்றய்
கருப்பந் தோகைகளைக் கிழித்துவந்து
கூடு பின்னுகிறது.
குஞ்சுகள் பொரிக்கும் நாளில்
இச்சுவர்கள்
எனக்குச் சொந்தமற்றதாகிவிடும்.
அறைமூலையில் நிற்கும் அவன் ஒரு ஜோடி காலணிகள்.
அவற்றில் சிலந்திகள் பின்னும் வலைகளை
பிள்ளையார் எலிகள் விளையாடிக் கலைக்கும்.
அவன் அமர்ந்துபோன
உடுக்கை வடிவ இருக்கை
தலைகீழாய்
அதன் உள்ளே அவன் உடைமைகள்
புத்தகங்கள்இ
புறக்கணித்த கையெழுத்துப் பிரதிகள்இ
கெட்டி மை தீர்ந்த பேன
இரும்புக் கிராதிகளை அரித்துத் தின்றபடி
கடல் உப்புக் காற்றாக
வீசும் மழையில்
பிடறி சிலிர்த்து
அடைத்த கதவை
பிய்த்துக்கொண்டு வெளியேறும்
குதிரையென
எங்கோ
கிராமங்களின் மௌனங்களுடன்
அவன்.
விசாரம் வேண்டும் மனித இறப்புகள்
பரவிக் கிடந்த முட்பரப்பை
அகற்றி
தசைகளில் உலவிய ஜ்வாலையைப் பிழிந்து
குடிசைக் கலயங்களின்
கூழ்நிலையுடன் மாறினாய்.
இருளின்
கவியும் ஆக்ரமிப்புகளைக் கிழித்துச் சென்ற
உன் பாதங்கள்
காலணிகள் காணாதவை.
காய்ந்த அருகம்புல்லில்இ
படரும் நெருஞ்சிக் கொடியில்இ
ஒற்றைத் தடங்கள்இ
கிராமங்களை இணைத்த மனிதனே
நாளை பார்ப்போம் எனக் கூறிச் சென்றாய்.
உன் கடைசிச் சொற்களுக்கு
மொழியைக் கடந்து
அர்த்தம் தருவார்கள் சீருடையாளர்கள்
எனக் கற்பிதம் கொள்ளாத என் பார்வை
உன் கிழிந்த சட்டைக் காலரில்
நிலைத்துப் போனது.
காலங்களின் முதுமையைச் சுமந்தது
அவர்கள் பிரயோகித்த ஆயுதம்.
கற்கள் உன் மூட்டுக்களின்
பாஸ்பேட்டுக்களைத் தேடியிருக்கவேண்டும்.
திரவ ஒலியுடன்
உன் தொடைகளைக் கிழித்திருக்கும்.
ரணங்களை ஆற்றாமல்
ரத்தப்பொலிவுடன் வெளியேற்றியது
அரசு மருத்துவமனை.
இறுதிப் பார்வை கொள்ள வந்த என்னிடம்
கல்லறையிலும் முளைத்துவிடுவாய்
எனப் பயந்த மின்சார இயந்திரம்
உன்னுடலைச் சாம்பலாக்கி
பாலீதீன் பையில் அடைத்துக்
கையில் தந்தது.