றியாஸ் குரானா
கவிதையைப் பொறுத்தமட்டில் நாம் காலத்தில் மிகப் பின்தங்கிவிட்டோம். கவிதையின் அமைப்பு, வெளிப்பாட்டு முறை மற்றும் வடிவரீதியில் அதிக வகைமைகள் நம்மிடமில்லை.கவிதைச் செயலின் அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் முயற்ச்சிகளும் நம்மிடமில்லை. புதுவகையான கவிதைச் செயல் தொடர்பிலான அக்கறைகளும் நம்மிடையே இல்லாதுபோய்விட்டன.நமது மரபில் நவீன கவிதை எனப் பயன்படுத்தப்படும் ஒரு வகையினம் - சொற்சிக்கனத்தோடு கூடிய மிக அதிகமாகச் செப்பனிட்டதும், ஒரு இடத்தில் தொடங்கி இறுதியை நோக்கி மிகத்தெளிவாக நகரவேண்டியிருப்பதும், கடைசியில் ஒரு அதிர்ச்சியை உண்டுபண்னும் மாற்றுப்புரிதலை உருவாக்குவதுமாக சுருங்கிவிட்டிருக்கிறது.
முன்பொரு காலத்தில் நவீன கவிதை என உயர்த்திப் பிடித்த வகைமைகளை இன்று மிகச்சாதாரணமாக ஆரம்ப நிலைக் கவிஞர்கள்கூட எழுதிவருவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
என்னுடைய கவிதைச் செயல் அப்படியான ஒன்று அல்ல.நவீன கவிதையை அனுகும் தரவுகளோடும், விமர்சனச் செயல்முறைகளோடும், நவீனகவிதைகளால் அதிகம் தாக்கமுற்றிருக்கும் மனச் சூழல்களோடும் நெருங்கிவிட இடந்தராதவை.நவீன கவிதையாக நாம் பாவித்த இன்னும் பாவிக்கின்ற பிரதிகள் எல்லாம், பிரதிக்கு வெளியேதான் தனது அர்த்தத்தளத்தை உருவாக்கிவைத்திருக்கிறது.புறச் சூழல்களின் கதைகளாலும், செயல்கள் மற்றும் அனுகல்களாலும் உருவாக்கப்படும் புரிதல்கள் பிரதிக்குள் அர்த்தங்களாக படிந்து நிறைவடைகிற வழிகளைத் திறந்துவிடுவதும் - பரிந்துரைப்பதுமே நவீன கவிதையின் செயலாக உருவாகிவந்திருக்கிறது.புறச் சூழலின் பொருள் (அர்த்த) உற்பத்தியை மிக ஆற்றலோடு ஒருங்கிணைக்கும் ஒரு இடமாகவும், தொழிற்ச்சாலையாகவுமே நவீன கவிதை செயற்பட்டுவந்திருக்கிறது. இந்த இடத்திலிருந்து முரண்படுவதுதான் எனது கவிதைச் செயலின் அடிப்படையான விசையமாக அமைந்திருப்பதாகும். முதல்கட்டமாக முற்றிலும் பிரதிக்குள் மாத்திரமே செயற்படக்கூடிய அர்த்தத்தள உற்பத்தியைச் செய்யும் அகச் சூழலை உற்பத்திசெய்கிறது.தனக்கான தர்க்கத்தை, சர்ச்சைகளை,பேச்சுக்களை, தங்களுக்காகவே உரையாடும் ஒரு உருவக வெளியை தயாரிப்பதும், பொருள்(அர்த்த)உற்பத்தியை பிரதியின் எல்லைக்குள்ளாகவே பெருக்கி முரண்பட்டும் இணைந்தும் சர்ச்சிப்பதாகச் செயற்படுவதை தனது பணியாகக்கொள்கிறது. அடுத்த கட்டமாக அதிலிருந்து தாவி, விரிவுகொண்டு ஊடிழைப்பிரதியாக அதாவது துணைப்பிரதியாக அமையும் புறச்சூழலை அக்கறைகொள்வதாகும்.இந்தப் புறச்சூழல் தாக்கம் - த்துவம்,கலாச்சாரம்,வரலாறு என பலதுறைகளையும் பல மன அமைப்புகளையும் சீண்டுவதற்காக என்றே பிரத்தியேகமாக பிரதி தனக்குள் மாயாஜாலம் நிறைந்த ஒரு உலகத்தை உருவாக்கிவைத்திருக்கிறது. புறச்சூழலில் எதார்த்தம் எனக் கருதப்படும் புனைவுகளுக்கும், பிரதியின் எல்லைக்குள்ளாக உருவாகும் உலகங்களுக்குமிடையிலான சீண்டல்களும், உரையாடல்களும் பரஸ்பர ஒப்பீடுகளுமே இரண்டாங்கட்ட பொருள் உற்பத்தியை முயற்சிக்க உதவுகின்றன.ஆகவே, நவீன கவிதைக்கான விபரங்களோடும் அனுகல்முறைகளோடும் எனது கவிதைக்குள் நுழையும்போது, அங்கு ஒரு மேஜிக் உலகம் அல்லது வித்தைகள் நிறைந்த உலகம் மாத்திரம்தான் காட்சியளிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
ஆயினும், ஆங்கில சினிமாக்களை நினைவூட்டுகிறது என ஒரு விமர்சனம்முன்வைக்கப்படுவதாக நண்பர் ஒருவர் அறியத்தந்தார்.அந்த விமர்சனத்தை சிறிய திருத்தத்தோடு ஏற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். எந்த மொழியினதும் எழுத்து சார்ந்த இலக்கிய வகைமையினை நினைவூட்டவில்லை என்பதே அதன் காரணம். மிஞ்சிமிஞ்சிப்போனால் நவீன கவிதைகள், மொழிசார்ந்த எல்லைகளைக் கடந்து ஓவியங்களை மாத்திரமே நினைவூட்டியிருக்கின்றன.அசையாப்படங்களான ஓவியங்களை மாத்திரமே நவீனகவிதைகள் பாவனை செய்துகாட்டியிருக்கின்றன. அதைக் கடந்து செல்லமுடியாமல் போனதுதான் நவீன கவிதையின் எல்லை எனக் கருதுகிறேன். திரைப்படம் பலரின் உழைப்பைக்கொண்டது.நடிப்பு,இசை,வர்ணங்கள்,மொழி என முற்றிலும் வேறுபட்ட பலதளங்களை ஒருங்கே கொண்டிருப்பவை.அப்படியான ஒன்றை எனது கவிதைகள் நினைவூட்டுவதாகச் சொல்லும் விமர்சனத்தை எனது கவிதைகளுக்குக் கிடைத்த மிகப்பெரும் பாராட்டாகவே கருதுகிறேன். திரைப்படத்தின் வேலையைக்கூட கவிதைகளால் நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதை எனது கவிதைகள் உருவாக்கியுள்ளன.அசையாப்படங்களை பிரதிபலித்த நவீனகவிதைகளிலிருந்து எனது பிரதிகள் வேறுபட்டவை என்பதற்கு இது ஒரு முக்கிய விமர்சனம் என்றே நினைக்கிறேன். அதற்காக அவருக்கு எனது நன்றிகள்.இது ஒரு சிறு பேச்சுத்தான். முழுவதுமான விமர்சனம் வெளியிடப்படும்போது அது தொடர்பான எனது மறுபேச்சு நிச்சயம் இருக்கும்.
நான் எதைச் செய்ய விரும்பினேனோ, அதையே மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என பரிந்துரைப்பது எழுத்துச் செயலில் வன்முறையானது என புரிந்துவைத்திருப்பவன் நான். எனினும், எனது பிரதிகள் தொடர்பில், பொதுக்களத்தில் உருவாக்கப்படும் பிறரின் அர்த்தங்கள் பற்றிய எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் உரிமையும் எனக்குண்டு எனவும் கருதுகிறேன். அதுவே இதை எழுதத்தூண்டியது.