திங்கள், பிப்ரவரி 13, 2012

என் ஒன்பதாவது அழகி


 பைசால்

மனைவி கருவுற்றிருக்கின்றாள்
பிள்ளை பிறப்பதற்கான மாதம் நெருங்கிவிட்டது

அவளின் வயிற்றைப் பார்க்கின்றேன்
எனது கன்னத்தை படுத்துகின்றேன்
வயிற்றுக்குள் மகள்
தனியான ஒரு அறையில்
அவளின் முழு உருவத்தையும்
மிச்சமில்லாமல் காட்டும் கண்ணாடியில்
முகம் பார்க்கின்றாள்

நனைந்திருக்கும் தலை முடியை
தும்புத் தடியால் தட்டி உணத்துகின்றாள்
உடலில் இருக்கும் இரத்தத்தை துடைத்து
சிவப்பாகின்றாள்

இவள் பிறந்தால்
எனக்கு ஒன்பது பிள்ளைகள்
என்ற கணக்கு வைப்பேன்

என் மனைவியின் வயிற்றுக்குள்
என்ன அழகாக, அமைதியாக உறங்குகிறாள்
அவளது தூக்கத்தைக் கலைக்க
யாரும் நினைத்தால்
அவர்கள் தோற்றுவிடுவார்கள்