ஒரு குடும்பம் பிரிந்த கதை
மண்ணெண்ணை வெள்ளத்தில் மூழ்கி
நெருப்பு
மூச்சுத் திணறி
குப்பி விளக்கு மயங்கி தரையில் விழுந்துவிட்டது
விளக்கும் உடைந்து
நெருப்பும் உடைந்துவிட்டது
யாரும் பகடி பண்ணிச் சிரிப்பதற்குள்
நெருப்பு எழுந்து மந்திரம் ஒன்றைக் கூறி
மறைந்து விட்டது
வெள்ளம் பரவி
நெருப்பின் காதலை மறக்கமுடியாமல்
தரையிலே முகத்தைப் புதைக்கிறது
இந்தக் குடும்பம் பிரிந்த செய்தி
காற்றில் பரவுகிறது
சிலர் அங்கு வந்து
தரையைச் சுத்தம் செய்கிறார்கள்
சிறு தொலைவில் இருந்துகொண்டு
மண்ணெண்ணைக்கு வாழ்வு கொடுப்பது பற்றி
காற்றுடன் உரையாடுகிறது நெருப்பு.
69வது பக்கத்தில் இருக்கும் கவிதை
அந்த தெருக்கடையில் இருக்கின்ற
பொம்மைகள் ஆங்கிலத்தில் சிரிக்கின்றன
அதன் சிரிப்பை
ஆங்கிலத்தில் எழுதுகிறான் கடைக்காரன்
அவன் சிரிப்பை எழுதிய விதம்
அங்கு வந்த சிறுவர்களுக்கு
விளங்கிவிட்டது
பிடித்துவிட்டது
ஒரு தமிழ் பேசும் சிறுவன்
ஆங்கிலத்தில் சிரிக்கின்றான்
இதைக் கண்ட நான்
வயிறு குலுங்கச் சிரித்து
பூமிக்கடியில் போய்வருகிறேன்
அழகிய கார்கள்
விபத்துக்குள்ளாகாமல் ஓடுகின்றன
பாம்புகள் யாரையும் கடிக்காமல் நெளிகின்றன
பறவைகள் யாருடைய தோளிலும்
எச்சத்தை பீச்சாமல் பறக்கின்றன
இதைச் சிந்திக்கத் தொடங்கினால்
பைத்தியம் என்பார்கள்
நான் போகிறேன்.