திங்கள், ஏப்ரல் 09, 2012

இலக்கியத்தின் தலையில் ஓங்கிக்குத்துதல்


மறுபேச்சை பேசினால், விமர்சனத்தை ஏற்காதவனாகிவிடுவேனோ என்ற அச்சத்தில் ...சில வரிகள்.

எழுத்து வகைகளில் கவிதை என்ற ஒரு மொழிதல் செயற்பாட்டிற்கு,முதன்மை ஒன்றை வழங்கும் இடத்தில் தமிழ்ச் சூழல் இன்னுமிருக்கிறது.அது இலகுவாக எழுதக்கூடியது என்ற ஒரு புலமும்;,மிகக் கடினமான உழைப்பைக் கோருவன என்ற ஒரு புலமும் கொண்ட புரிதல்கள் பரந்து விரிந்து விரவிக்கிடக்கின்றன.மொழிதல் குறித்த தனித்தன்மையை முன்வைத்து வாசித்தல்,கவிஞனின் தனி உலகம் குறித்து வாசித்தல் என பல்வகை வாசிப்புக்களுக்கு உட்பட்டு,பல வித்தியாசமான வாசிப்புக்களால் கவிதை என்ற அம்சம்தமிழ் நினைவுப் பரப்பில் புதிப்பிக்கப்பட்டும், பெருகியும் வசித்துக் கொண்டிருக்கிறது.கவிதை என்று நம்பப்படுகிற ஒரு தன்மையை அடையாளங் கண்டிருப்பதாகவும்,அதுதொடர்பான பொதுவான ஒரு புரிதல்எல்லோரிடமும் இருப்பதாகவும்,ஊகிக்கப்படுகிறது.அந்த ஊகம்கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த எடுகோளின் அடிப்படையில் கவிதை பற்றிய வாசிப்புக்களையும்,எழுதுகைகளையும் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சூழல்.

கவிதைத் தன்மை என்ற ஒன்று இதுதான் என நம்பப்பட்ட இடத்திலிருந்து,குறிப்புக்களை உருவாக்கி கவிதைப் பிரதிகள் எனச் சொல்லப்படுபவைகள் கடுமையான வாசிப்புக்குட்பட்டிருக்கின்றன.அந்தப் புரிதல் கவிதையற்றவை என்ற பெரும் பகுதி எழுத்துக்களையும் இலக்கிய வரலாற்றிலிருந்து இரக்கமின்றி அழித்தொழித்திருக்கின்றன.கவிதையென நம்பப்படும் பிரதிகளுக்கு அரத்தங்களை கண்டடையும் முயற்ச்சியில் பலர் தமது வாழ்நாட்களை செலவளித்திருப்பதும் நாமறிந்ததே. அத்தோடு சிந்தனைகளின் ரகசியக் காரணங்களின் வழியே பயணித்து கவிதைகளைத் தரப்படுத்ததியிருப்பதாக அறிவிக்கும் நகைச்சுவைகளும்தமிழில் இன்னும் நடந்தேறும் சுவாரஸ்யங்களே.கவிதையின் தன்மை என்று நம்பப்படும் ஒன்றை அடைந்து விடுவதற்குஒரு பிரதி எந்தவகையான உழைப்புக்களையும்,செயற்பாடுகளையும் செய்துகாட்ட வேண்டுமென்ற கட்டளைகளும் உருவாக்கப்பட்டிருப்பதுஒரு கொடுமைதான்.ஒரு பிரதியின் எந்தவகையான செயற்பாடும்,அதற்கு பயன்படும் மொழியலகும் கவிதையாக தன்னை மாற்றிக்கொள்ள என்ன செய்கிறது போன்ற வாசிப்புக்கள் குறைவாகவே நடந்திருக்கின்றன.கவிதை என நம்பப்படும் தன்மைகளுக்கும் அல்லாதவை என நம்பப்படும் தன்மைகளுக்குமிடையில் வரையறுக்கத்தக்க தெளிவான எல்லைகள் இருக்கிறதா என்ற வாசிப்புக்களும் தமிழில் இல்லை.இலக்கியம் அல்இலக்கியம் போன்ற புரிதல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற நிலை கடந்து பேசுபொருளாக்கப்படவில்லை.அவை இரண்டுகளுக்கிடையேயும் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கும் காரணங்களை மீள் வாசிப்புக்குட்படுத்தவில்லை.இந்தவகை பிளவுகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியங்களில் இருக்கும் அரசியலும்,அது எழுத்துச் சூழலில் ஏற்படுத்தியிருக்கும் வன்முறையின் வெளிப்பாடுகளையும் பேசமுற்படவில்லை.இது நீடிக்குமானால் பிரதிகளால் கொல்லப்பட்ட பிரதிகளின் வரலாற்றை எழுதவேண்டியிருக்கும்.இலக்கியத்தால் ஈவிரக்கமின்றி கூட்டாகவும் தனித்தனியாகவும் கொல்லப்பட்ட பிரதிகளுக்காக தமிழ் மொழியே தலை குனியவேண்டியிருக்கும்.

இலக்கியம் எனும் கடவுளை வழிபடும் மன அமைப்பை கலைத்துப்போடும் வாசிப்புக்களே.எழுத்தின் வன்முறையிலிருந்து விடுபட்ட ஒரு சிந்தனை வெளியை நோக்கி பிரதிகளை நகரச்செய்யும்.இலக்கியம் என்ற மூடப்பட்ட அமைப்பிலிருந்து வெளியில் கடந்துவரக்கூடிய பிரதிகளின் பக்கம் கவனத்தை செலுத்தவேண்டியிருக்கிறது.

இலக்கியம் எனும் தனிப் பெரும் கடவுளைக் கொல்லுவதினூடாகவோ அல்லது எதிர்ப்பதினூடாகவோதான் அடுத்தகட்ட எழுத்துக்களுக்குச் செல்லமுடியும். உடைக்கப்பட முடியாத வலிய சுவர்களுக்குள் பூட்டி காப்பாற்றிவைத்திருக்கும் இலக்கியத்தின் தலையில் ஓங்கிக்குத்தி வெறுப்பேற்றும் எழுத்துக்களை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் அவசரமாக இறங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.