வியாழன், ஏப்ரல் 12, 2012

டெச்சரா கூய்ய்ய்..


றியாஸ் குரானா

ஒசூரில் கவிதை நூல்கள் விமர்சன அரங்கொன்றில் அண்மையில் நடந்த விவாதமொன்றினைச் சுருக்கி, தனது முகநூலில் தோழர் திரு ஜி அவர்கள் பதிவிட்டிருந்தார்.அதில் எனது கவிதைகளும் விமர்சனங்களை எதிர்கொண்டன. அந்த விமர்சனங்களுக்கான மறுபேச்சை நான் நிகழ்த்த வேண்டியிரக்கிறது.எனினும், எனது மறுபேச்சிற்கான காரணம் இது மட்டுமல்ல.ஏறக்குறைய 2005ம் ஆண்டிற்குப் பின்னர் வெளிவந்த கவிதைகள், குறித்த இந்தவகை அனுகுமுறைகளுக்குட்பட்டு அமைதியடைந்து விடும் நிலை உருவாகிவிடக்கூடாது என்பதும் ஒன்று.
'நீங்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்வதில்லை' என எனக்கு பல நண்பர்கள் கூறிவந்ததை இந்த இடத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.இதையும் அப்படியே அவர்கள் கருத இடமுண்டு.ஆயினும், இது அவ்வாறான ஒன்று அல்ல.

கவிதை என நம்பப்படுகிற ஒன்று, தன்னிடம் கொண்டிருக்க வேண்டியஅ அம்சம் இன்னதுதான் என வற்புறுத்தப்படுவதற்கு இணையான விமர்சனம் முன்வைக்கப் பட்டிருப்பதால்,கவிதையின் இயங்குவெளி குறித்த உரையாடலுக்கு இது நல்ல சகுனம் என்றவகையில்தான் இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.எனது முகநூலிலும் சிறு சிறு பதிவுகளை எழுதியிருந்த போதிலும், சற்று விரிவாக எழுத வேண்டிய தேவையை தோழர்களான சிபிச்செல்வனும்,வா.மணிகண்டனும் நீள் பதிவுகளை எழுதியதினூடாக ஏற்படுத்திவிட்டனர்.

பா.வெங்கடேசன்(இதற்கு முன் இவரை யாரென்று எனக்குத் தெரியாது. இவரின் பிரதிகளை நான் வாசித்திருக்கவுமில்லை.)மற்றும் ஆதவன் தீட்சண்யா என்ற இருவரும் தாங்கள் இணங்கிப்போகிற ஒரு புள்ளி, அந்த விமர்சனத்தின் பிரதானமான ஒரு முன்வைப்பாக இருக்கிறது. ஆகையினால், அதிலிருந்து தொடங்குவதே சரியானது எனக் கருதுகிறேன்.
புறச் சூழலின் தாக்கமோ,பிரதிபலிப்போ எனது கவிதையில் இல்லை என்பது மிக முக்கியமான பார்வை. அதற்கு அவர் சொல்லும் விபரிப்பு, நான் ஈழத்தைச் சேர்ந்தவன்.அதுவும் தமிழ் மொழியில் செயற்படுபவன்.இதனூடாக, தமிழ் சார்ந்த எனது பிரதிகளில் ஈழத்திலுள்ள அரசியல் நிலவரங்கள் பிரதிபலிக்கவில்லை என்பதையே அவர் சொல்ல முற்படுவதாக நான் புரிந்துகொள்கிறேன். பா.வெங்கடேசனும் சூழலைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதாக ஆதவன் தீட்சண்யாவின் பார்வையை நெருக்கமுறும் நிலையை எடுக்கிறார். அதை முற்றுப்பெறச் செய்ய அவரழைக்கும் துணைக் கருத்து ஆசிரியனின் மரணம் என்பதாகும். அதனூடாக, வாசகனின் வாழ்வைப் பரிந்துரைக்கிறார். ஆக, வாசகனின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி, அவர் கூறிய விமர்சனத்தை உயிருள்ளதாகவும், உண்மையாகவும்,மிகச் சரியானதாகவும் மாற்ற முற்படுகிறார்.

இவர்களின் விமர்சனத்தின்படி, எனது பிரதிகள் புறச்சூழலை அதுவும் ஈழத்து அரசியல் புறச்சூழலை மிகக்குறைந்த இடங்களைத் தவிர பிரதிபலிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே செய்கிறேன்.அதே நேரம் பிரதிகளுடன் வினையாற்றும் வாசகனின் முக்கியத்துவத்தினையும் ஏற்றுக்கொள்கிறேன். கவிதை புறச்சூழலை பிரதிபலிக்க வேண்டுமா எனக் கேட்டால் உடனடியாக ஆம் என்பதைத் தவிர என்னிடம் வேறு பதில்கள் இல்லை.(இதை ஏற்றுக்கொண்ட நிலையிலே அதிகம்பேர் இருக்கிறார்களே.அது பெரும்பான்மை அல்லவா) ஆனால், புறச்சூலைப் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம் கவிதைக்கு இருக்கிறதா எனக் கேட்டால், இல்லை என்பேன். ஆம், கவிதைச் செயல் குறித்த எதிரெதிரான இரண்டு விசயங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆகையினால், வேறொரு தளத்தில் விபரிப்பதும், எனது பேச்சைந நகர்த்துவதுமே சரியெனப்படுகிறது.
இதுவரையான பிரதிவாசிப்புக்களில்(விமர்சன அனுகுதலில்) கவிதையை மூன்றே வழிகளில்தான் அனுகிப்பார்த்திருக்கிறார்கள். அந்த அனுகுமுறைகள் கிளைத்துச் செல்கின்றபோதும், இந்த மூன்று அனுகுமுறைகளுக்குள்ளுமே அடங்கிவிடுவதாக இன்றுவரை பேசப்படுகிறது.அந்த வாசிப்பு முறைகளே கவிதையை அனுகும் (மதிப்பிடும்) பல்வேறுபட்ட முறைமைகளின் பரஸ்பர முக்கியத்துவத்தை விவாதிக்க உதவுகிறது.

கவிதை மொழியாலான ஒரு நிகழ்வு (பிரதி) என்றும், கவிதை, மொழிக்கிருக்கின்ற அர்தங்களின் புதிய கூட்டுறவால் உருவாகும் சம்பவங்களும், சம்பவங்களாலான தனித்த செயல் என்றும், கவிதை என்பது யதார்த்த உலகத்தை (புறச்சூழலை) புனைவுகளால் 'போலச்செய்யும்' ஒரு மொழிச் செயல் என்றும் மூன்றாக இதுவரை அனுகிவந்திருக்கின்றனர். இம்முறைமைகள் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபட்டது என்பது மாத்திரமின்றி, மிக மோசமாக முரண்படக்கூடியதுமாகும். இந்த மூன்றுவகை அம்சங்களைக் கொண்ட பிரதிகளும் கவிதையாகவே இன்றுவரை பாவிக்கப்படுகிறது. இன்றும் புழக்கத்திலுள்ளது. இதில், புறச்சூழலை புனைவுகளால் அல்லது புனைவுகளாய்ப் போலச்செய்தல் என்ற கவிதை பற்றிய அனுகுமுறை மாத்திரமே மிகப்புராதனமானது.மிக நீண்டகாலமாக கதாநாயக அந்தஸத்தில் இருந்தது. இன்றும் அதன் தாக்கம் வீர்யம் குன்றாமலே இருக்கிறது என்பது உண்மை.ஆனால், உலகளவில் இந்தவகை அனுகுமுறை புறக்கணிக்கப்பட்ட படி இருக்கிறது. பல விமர்சனங்களை எதிர்நோக்கியபடி இருக்கிறது.

புறச்சூழலைப் பிரதிபலிப்பதற்கு அல்லது அதை போலச் செய்வதற்கு இன்றைய நிலையில், பத்திரிகைச் செய்திகள், சுவரோவியங்கள், சுவர்ப்பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள், காட்சி ஊடகங்கள், அமைப்புக்களின் அறிக்கைகள், நீதிமன்ற அறிக்கைகள், அரசுகள், கட்சிகள் போன்றவற்றின் பிரதி உருவாக்கங்கள் எனப் பல்வேறுபட்ட சாத்தியங்கள் உருவாகியிருப்பதால்( அவை புறச்சூழலை பிரதிபலிப்பதாக வெளிப்படையாகவே அறிவிக்கின்றன) , கவிதையிடமிருந்து, புறச் சூழலைப் பிரதிபலிக்கின்ற பணி கைநழுவிப்போயிருக்கிறது. அல்லது பறிபோய்விட்டிருக்கிறது.பங்கிடப்பட்டிருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் புறச்சூழலைப் பிரதிபலிக்கும் முறைகள் உருவானபின், ஒரு மாயமான, சிக்கலான (பொருள்விளக்கத்திற்கு) முறையில் புறச்சூழலைப் பிரதிபலிக்கத் தேவையில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இதனூடாக, பொருள்விளக்கத்திற்காக புறச்சூழலை நம்பியே ஆகவேண்டும் என்ற கட்டாயச் சிக்கலில் இருந்து கவிதைவிடுபட்டிருக்கிறது. அதேநேரம், புறச்சூழலைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற நிலையில் செயற்படும்போது, வன்முறைகளை ஏற்றும் மறுத்தும் செயற்படவேண்டியிருப்பதை சுட்டிக்காட்டப்படுகிறது. குறித்த ஒரு வன்முறையை நியாயப்படுத்த , புறச்சூழலை அதன் யதார்த்தத்தை எழுதியிருக்கிறேன். அல்லது பிரதிபலித்திருக்கிறேன் என ஒருவர் இலகுவாகத் தப்பிக்கொள்ள முடிவதையும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கவிதை ஒரு சிறு உரையாடலைப்போல, பரந்துபட்ட பறச்சூழலின் உதவியுடனேயே பொருள் விளக்க முடிகிற ஒரு நிலையை அடைகிறது. ஆகையினால், கவிதை பொருள் விள்கத்திற்கு, சிறிய பங்களிப்பை வழங்குகிற ஒரு துணுக்கு என்பதாகச் சிறுத்துவிடுகிறது. ஆக, கவிதையை அனுக முற்படுகிறவர்கள் பிரதிக்குள் தேடும் ஏதோ ஒன்றை கவிதையைவிட முக்கியமான விசயமாகப் பாவிக்கத்தொடங்குகிறார்கள். இந்த அபாயமும் புறச் சூழலை கவிதை பிரதிபலிக்க வேண்டும் என்ற அனுகுதலினால் உருவாகுவதாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கவிதை என்பது பறச்சூழலின் தகவல்களையும், செய்திகளையும், தரவுகளையும் எடுத்துவந்து பாதுகாப்பாக பதிந்துவைக்கும் சிக்கலான மொழியமைப்பைக் கொண்ட ஒரு இடமாக மாறுவதற்கு இந்த அனுகுமுறை அதிகம் உதவியிருக்கிறது.

இந்தவகையான காரணங்களை விவாதிப்பதினூடாக, புறச்சூழலைப் பிரதிபலிக்கும் ஒரு களஞ்சியமாக (STORE) கவிதை இருப்பதிலிருந்து மாறுபட்ட ஒரு நிலைக்கு கவிதையை நகர்த்த வேண்டிய (கவிதை குறித்த) அனுகுமுறைகள் முன்வைக்கப்படுகின்றன.
அது மாத்திரமன்றி, புறச்சூழலைப் 'போலச் செய்யும்' புனைவாக்கமாக கவிதை அனுகப்படுவதால், புது உருவாக்கம் (புத்தாக்கம்) என்ற மனிதச் செயல் பின்தள்ளப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது. கற்பனை என்பது அறிவு உருவாக்கத்தில் முக்கிய பகுதியாக, செயலாக (இன்று) கருதப்படுவதால், கண்ணாடிபோல ஒன்றைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியத்தை, கவிதையிலிருந்து தூரப்படுத்த வேண்டுமென்ற குரல்களும் கவனிக்கப்பட வேண்டியதே. அது முக்கியமான கவிதை விளைவுகளுக்கு உதவுகின்றன. ஆகையினால், புறச்சூழலை பிரதிபலிப்பதை கவிதைச் செயலின் முக்கிய பணியாக பாவிப்பதிலிருந்து தவிர்த்து வருகிறார்கள்.

மாறாக, கவிதை மொழியாலான ஒரு நிகழ்வு (பிரதி) என்ற வகையிலும், கவிதைச் சம்பவங்களாலான தனித்த செயல்பாடு என்று என்ற வகையிலும், அதனடியாக கவிதையை அனுகவுமே இன்று அதிக ஆர்வங்காட்டுகிறார்கள்.
தமிழில் அப்படியில்லை என்று நீங்கள் முன்வைத்தால், நான் பேசுவதை நிறுத்தவதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இல்லை.
இன்றையக் கவிதைகள் தனது எல்லைக்கள்ளாகவே அர்த்தங்களை உருவாக்கவும், பெருக்கவும் செய்கின்றன. தான் கொண்டிருக்கின்ற கவிதைச் சம்பவங்களிலிருந்தே பறச் சூழலை அனுக முற்படுகிறது. புறச்சூழலின் தரவுகளால் கவிதையை அனுகுவதில்லை.அனுக முண்டியடிப்பதில்லை. எவை எவைகளைக் கொண்டிருந்தால் இது கவிதை என்றோ, எவைகளைக் கட்டாயம் கவிதை உடசெரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றோ இங்கு அவை பேசுவதில்லை. மாறாக, கவிதை தனக்குள் கொண்டிருக்கின்ற புனைவுகள், கவிதைச் சம்பவங்கள், மொழிச்செயல், கருத்துருவாக்கம், உரையாடல் அவைகளின் சந்திப்பிலும் ஊடாட்டத்திலும் கிளம்பும் போன்றவற்றினூடாக என்ன செய்ய முற்படுகின்றன. குறித்த 'அதைச்' செய்வதற்காக கவிதைக்குள் உள்ள இந்த அம்சங்களை எப்படிப் பாவிக்கின்றன என்பதை அனுகுவதற்கு வாய்ப்பான வளங்களையே அது வழங்குகிறது.

புறச்சூழலில் ஒரு செயல் அல்லது சம்பவத்திற்கான அர்த்த உருவாக்கம் எப்படி நிகழ்கிறது. அதில் எதனெதன் தாக்கங்களும், விடுபடல்களும், மறுப்புக்களும் இருக்கின்றன என்றும் - அதுபோல, கவிதையில் அவைகளின் நடவடிக்கைகள் எந்த வகையானது என்பதையும் இணைந்தும் முரண்பட்டும் ஆய்வு செய்யும் அனுகு முறைகளை பரிந்துரைக்கின்றன.
ஆக, கவிதை என்பது இன்று புறச்சூழலை 'போலச்செய்யும்' ஒரு இடம் என்பதற்கு மாற்றாக, புறச்சூழலுக்கு பதிலியான ஒரு உலகை புனைந்துகொள்ளும் வழிமுறைகளை முயற்சிக்கிறது.
புறச்சூழலை கவிதை பிரதிபலிக்கக்கூடாது என்கிறீர்களா ? என இப்போது கேட்டால், பிரதிபலிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அது அவர்களின் தேர்வு. அதற்கான வாசகப்பரப்பு இருப்பதை இன்னும் அவதானிக்கிறேன். பிரதிபலிப்பதற்கான தேவை இருப்பதாக கருதும் யாரும் பிரதிபலித்துத் தானாகவேண்டும். ஆனால், முற்றிலும் வேறுபட்ட பார்வையாளர்களை அவாவி எழுதுபவர்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். புறச்சூழலைப் பிரதிபலிக்காத கவிதைகளைத் தயாரிப்பவர்களையோ அத்தயாரிப்புக்களையோ அதன் காரணமாக வைத்து (புறச்சூழலை பிரதிபலிக்கவில்லை) விமர்சிப்பதை ஏற்கமுடியாது.
நான் இந்தப் புளிச்சுப்போன பாலாணமாக காட்சிதரும் புறச்சூழலைப் பிரதிபலிக்கும் நடைமுறையை மீண்டும் மீண்டும் சுடவைத்து (சூடுகாட்டி) உணவாகப் பரிமாற கொடுப்பதற்குத் தயாரில்லை என்றே சொல்வேன். மற்றபப்படி நானும் எனது பிரதிகளும் அதற்கெதிரியல்ல.
அடுத்ததாக பா.வெங்கடேசன் ஆசிரியரின் சாவை வைத்து முத்தாய்ப்பாக வைத்துச் செய்திருக்கும் நகைச்சுவையை அதிகம் விபரிக்க விரும்பவில்லை. அது தொடர்பில் தமிழ்ச் சூழலில் அதிகம் விவாதிக்கப் பட்டிருக்கிறது.எனினும், ஒரு சொல்.

அன்புக்குரிய பா.வெங்கடேசன் அவர்களே ! ஆசிரியரின் சாவு என்ற அறிவிப்பும் கருத்துருவாக்கமும் எல்லாவாசகர்களுக்குமான (பொதுவான) இடத்தை வழங்குவதல்ல. எல்லா வகையான வாசிப்புக்களுக்கும் வாய்ப்பளிக்கும் நிலையைப் பரிந்துரைக்கும் ஒரு நெகிழ்ச்சியல்ல. குறித்த பிரதியை, (வாசகன் அனுகும்) வாசிக்கும் கதைகளை பேசமுற்படுவதற்கான ஒரு வழி. எப்படி வாசித்தோம் என்ற என்பதன் விபரிப்புக்களைக் கதைப்பதற்கான கதையாடல்.அதை விபரிப்பதற்கான ஒரு தருணம். பிரதிக்குள் அது இல்லை.இது இல்லை. என நாட்டாமை செய்வதற்கான இடத்தையும் வாய்ப்பையும், ஆசிரியனின் சாவு வழங்கவியிருக்கவில்லை. அல்லது அதற்குத் தோதான பரிந்துரைகளைக் கொண்டிருப்பதுமல்ல. பிரதிகளின் அர்தத்தைக் கண்டடையும் பயணத்தில், பங்காற்றக்கூடிய வழிமுறைகளுக்கான சாத்தியங்களை உருவாக்க உதவி செய்யும் ஒரு நிலைப்பாடு அது. இன்னது இருந்தால்தான் அது அர்த்தப்படும்(கவிதையாக நிறைவடையக்கூடிய) என்ற வகையான திணிப்புக்களுக்கு ஏதுவாக ஆசிசியரின் சாவு உதவுவதில்லை.

பிரதி(கவிதை) தனக்குள் கொண்டிருக்கும் அம்சங்களை மாத்திரம் வைத்தே, அதன் பொருள் உற்பத்தியைத் முயற்சிப்பதற்கு வாசகர்களைத் தூண்டுவது.இருப்பதை வைத்தே, அது என்ன செய்ய முற்படுகின்றது என நோக்குவதாகும். இடைவெளிகளை வாசிப்பது, சொற்களுக்கிடையிலான மௌனங்களில் கவிதை வசிப்பதான கதைகளெல்லாம் இங்கில்லை. இல்லாத ஒன்றை துணைக்கழைத்தல், மற்றும் சாத்திரம் பார்த்தெல்லாம் இங்கு செல்லுபடியாவதில்லை.

எனது வளவுக்குள் சில மூட்டைகளை நான் வைத்திருக்கிறேன். அவைகளைத் துப்பறிந்துதான் உங்கள் பேச்சுக்களை, அர்த்தங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. அதற்குள் இல்லாதவைகளை நான் தவிர்த்திருக்கிறேன் என்பதுதான் சரியான அனுகுமுறை. நீங்கள் விரும்புகிறவைகள் இருந்தால்தான் இது மூட்டையாக மாறும் என்பது எல்லாம் கேலிக்குரியது. இதன் மறுபுறம் மிகமோசமானது, உதாரணமாக, எனது வளவுக்குள் (நீங்கள் விரும்புகிற) கஞ்சாமூட்டைகளைப் போட்டுவிட்டு பொலீசில் பிடித்துக்கொடுப்பதற்குச் சமமானது.

பிரதிக்குள் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்களையோ அல்லது நீங்கள் உருவாக்கும் அர்த்தங்களுக்கான காரணங்களைக் கேட்டு ஆசிரியரை விசாரிக்கவோ குற்றம் சுமத்தவோ ஆசிரியனின் சாவு உதவி செய்யாது.அதை எதிர்பார்கும் அல்லது கட்டாயப்படுத்தும் வாசகனின் எதிரில், ஆசிரியன் கேட்டிக்கம்போடு (பிரம்போடு) உட்கார்ந்திருக்கிறான்.

இது ஒரு புறமிருக்க, இந்த மறு பேச்சுக்கு என்ன தலைப்பிடலாம் என்று யோசிக்கும்போது, வேளாண்மைதான் நினைவுக்கு வருகிறது. ஆம், இதுவரை ஒரு முறைதான் வேளாண்மை செய்திருக்கிறேன். அதில் பலத்த நஷ்டத்தையும் அடைந்திருக்கிறேன்.எனினும், சுவாரஸ்யங்கள் அதில் நிறைய உண்டு. வேளாண்மை விளைந்து அறுவடைக்கு சில நாட்கள் இருக்கும் தறுவாயில்,நெற்கதிர்களைப் பார்க்கும்போது மிக ஆனந்தமாக இருக்கும். இருந்தது. அந்தக் காலகட்டங்களில், பறவைகளும், குருவிகளும் பாட்டம் பாட்டமாக வந்து நெல்மணிகளை உதிர்த்துவதும் உண்பதும் வழக்கம்.அதைத் துரத்துவதற்கு நான் விரும்புவதில்லை. சும்மா பார்த்துக்கொண்டே நிற்ப்பேன். ஒரு நாள் எனது நண்பர் ஒருவருடன் இப்படிப் பார்த்துக்கொண்டு நிற்கும்போது, குருவிகளும் பறவைகளும் பாட்டமாக வந்து வேளாண்மையில் உட்கார்ந்தன. அருகில் நின்ற நண்பன் 'டெச்சரா கூய்ய்ய்..' என பலமாகச் சத்தமிட்டான்.நான் பயந்து திடுக்கிட்டு என்னடா செய்கிறாய் என்றேன். குருவிகளை விரட்டுவதாகச் சொன்னான். அப்போதுதான் நெல்மணிகளைப் பாதுகாக்கலாம் என்றான். அப்போதும் குருவிகளை விரட்ட எனக்கு மனமில்லை. இந்த மறு பேச்சுக்கு அதைத் தலைப்பாக வைத்தால் நன்றாக இருக்கும் என தோண்றியது. நண்பன் நினைத்துச் செய்த காரணங்களுக்காக அல்ல என நான் சொன்னாலும். அது பொய் என ஒரு வாசகனாவது வாசிக்கக்கூடும்.