ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

மனோ.மோகன் கவிதைகள்


தூண்டில் காரன் கதை
  
ஏதும் சொல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு
இணைமீனை வசியம் செய்யும்
வார்த்தைகளைச் சேகரித்தபடியே
மௌனமாய் நீந்துகிறது ஆண்மீன்

எதிர்வரும் பெண்மீன்
தான் ஆற்றை விழுங்குவது பற்றியும்
தன் வயிற்றில் பேராறு வளர்வது பற்றியும்
சொல்லியபடியே விழுங்கிவிடுகிறது ஆண்மீனை
குழந்தைமையின் குறும்புடன்
உள்வயிற்றின் பெருவெளியில்
நீந்தத் தொடங்குகிறது ஆண்மீன்

தன் துணையை விழுங்கும்
ஒவ்வொரு பெண்மீனுக்கும்
உதட்டில் ஊசி வடிவக் குழலும்
அடிவயிற்றில் ஆறு கால்களும் முளைக்க
வாடிக்கையாகி விடுகிறது
நதியின் எல்லை கடந்து பறப்பது

தக்கை ஆடும் தருணத்தை
எதிர்நோக்கும் தூண்டில்காரனுக்கு
ஆற்று நீரில் மிச்சமிருப்பது
நீர்வெளியில் துள்ளும் பெண்மீன்
பட்டாம்பூச்சியாவது பற்றிய கதைகள் மட்டுமேதீர்க்கதரிசனம்

யாருமற்ற  இதுபோன்றதொரு இரவின் தனிமையில்
பத்து செண்டிமீட்டர் உயரமேயுள்ள
பூனைக் குட்டியொன்றைப் பரிசளித்தாய்
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்
வார்த்தைகள் ஏதுமில்லை அன்று
புகை படிந்த சாம்பல் நிறம் கொண்ட
அந்தப் பூனையின் 'மியாவ்வைத் தவிர

நான் குடிக்கும் பால் அதற்கென்றானது
என் தலையணை அது உறங்குவதற்கென்றானது
கட்டிலில் அவிழ்த்துப் போட்ட என் உடைகள்
அது மூத்திரமிடுவதற்கென்றானது
வாரத்தைகள் அற்ற என்
அறையின் தனிமையை நிறைத்த படியே
பெரும் பசியை அறிவித்துக் கொண்டிருந்தது 'மியாவ்'

பகல் பொழுதில்
கபாலத்திற்குள் ஓடி விளையாடுவதும்
படிக்கும் புத்தகத்தில் தாவிக் குதிப்பதுமென
என் காலத்தைப் புசித்துக் கொண்டிருந்தது பூனை

இன்றைய அந்தியில்
ஓரிரு முறை உன் போர்விமானம் கடந்தபின்
புகை படிந்து சாம்பல் நிறம் கொண்ட
என் தெருவின் சிதிலங்களூடே
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்
வார்த்தைகள் ஏதுமில்லை
'மியாவ்வும் கூட இல்லை


தயவு செய்து என்னைப் போகவிடு
கட்டி முடிக்கப் படாத எனது குடியிருப்பில்
உனக்கென்று ஒரு தனியறையும்
கொஞ்சம் கனவுமிருக்கிறது
தயவு செய்து என்னைப் போகவிடு

மௌனமாய் நகரும் உனது நிமிடங்களைக் கடத்துவது
எனது வார்த்தைகளுக்கு இன்னும் கைகூடவில்லை
என் கனவின் நிறம் பச்சை
உனது கனவின் நிறம் எனக்குத் தெரியாது
ஒவ்வொரு கணமும் பொய்த்துக் கொண்டிருக்கிறது புரிதல்
தயவு செய்து என்னைப் போகவிடு

இரவினைத் தின்னும் கனவொன்றில்
நீயொரு மாமிசப் பட்சியாகியிருந்தாய்
கூரையில்லாத உனதறையின் வழியே
புதர் மண்டிய ஒற்றையடிப் பாதையில் போகும்
எனது முதுகை வெறித்துக் கொண்டிருந்தாய்
உன் யோசனை விபரீதமானது
தயவு செய்து என்னைப் போகவிடு