ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

கவிதை - கிண்ணியா எஸ்.பாயிஸா அலி


முற்றுப்புள்ளியின் திசை

முற்றுப்புள்ளியின் வடிவையும்
தொடருகையின் வாசகத்தையும்
ஒருசேரப் பரவவிட்டபடி பெருமுரணாய்
எரிந்து கொண்டே இருக்கிறது
பச்சைவிளக்கு உன் வாசல் கதவினில்.
என்னைப்போலவே நீயும்......
வரிகளை செப்பனிட்டபடியோ
செப்பங்களை இணைத்தபடியோ
இல்லையேல்........எவரோ உனக்காய்
கோர்த்தவைகளைப் பிரித்தலசிய படியாகவோ
ஒன்றா இமைகளோடு உட்கார்ந்திருக்கலாம்.
சுட்டுவிரல் பதிக்க வரிசை வரிசையாய்
வந்தசையலாம் வந்தடைதலின்
நீள்சதுரப் படிகள்.
ஆனாலும் முயலப் போவதேயில்லை
இனியொருபோதிலுமே.........
உணர்பரப்பெங்கிலும் சதாவும்
செறிவன்னமில மொன்றையே
பெய்தபடி தொடர்கிற உன் நெடு மௌனமொன்றே
போதுமெனக்கு நீ எப்போதுமே விரும்பிய
அம்முற்றுப்புள்ளியின் திசையுணர.