செவ்வாய், ஏப்ரல் 24, 2012

ஆட்டுக் குட்டிகள்


அண்மையில் மறைந்த ஈழத்து நவீன கவிஞர்களில் மிக முக்கியமானவரான சண்முகம் சிவலிங்கம் அவர்களின் சிறுகதை இது. ''கோயில் வெளி'' என்ற தலைப்பில் நூலாக்கம் செய்ய இருந்தார். தொகுப்பு இனி என்ன பெயரில் வருமென்று தெரியாது.கவிதைகளைவிட தனது கதைகளின் மீதே அதிக ஆர்வத்தை நான் பழகிய கடைசிகாலங்களில் பகிர்ந்துகொண்டார். எனது அனுமதியின்றி எவரும் மீள் பதிவிட வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சண்முகம் சிவலிங்கம்

சிறுகதை

        உச்சிவெயில். அவர்கள் ஆயத்தமாகி விட்டார்கள். பொன்மணியும் தம்பானும். தம்பானின் கையில் ஒரு சாப்பாட்டுக் கரியர். பொன்மணியின் கையிலும் ஒரு சாப்பாட்டுக் கரியர். வந்துவிட்டார்கள் கோயில் வெளியின் குறுக்குப்பாதைக்கு.
         தம்பானின் வீட்டுப்படலைக்கு நேர் எதிரேதான் தங்கமணியின் வீட்டுப்படலை. சகல வகையிலும் தம்பானின் வீடும் தங்கமணியின் வீடும் ஒரே மாதிர்pத்தான்.- கோயில் வெளியின் மூலைக்கையில்.
         தம்பானின்  தகப்பனாரும் பொன்மணியின் தகப்பனாரும் ஒரே இடத்தில் தான் வேலை. இருவரும் ஒரே வகையான வேலையைத்தான் செய்கிறார்கள். சாப்பாட்டுக் கரியர் கூட ஒரே வகையானதாகவும் ஒரே அளவினதாகவுந்தான் இருந்தன. இரண்டும் பித்தளைக் கரியர்கள். உள்ளே இரண்டுக்கும் ஒரே மாதிரியான சாம்பல் நிற அலுமினியப்பூச்சு. வெளியில் எலுமிச்சம் பழக்கோதால் உரஞ்சும்போது ஏற்படும் வெங்கலப் பளபளப்பு. அவைகளுக்குள் வைக்கப்படும் சோறும் ஏறக்குறைய ஒரே வகைதான். கறிகள் வித்தியாசமானவையாக இருக்கலாம் ஆனால் இரண்டு தகப்பனார்களும் ஒரே வராந்தக் கட்டிலிருந்து சாப்பிடும் போது கறிகளைப் பரிமாறிக் கொள்வார்கள். ஆகவே அதிலும் வேறுபாடு இல்லை.
         ஆனால் தம்பானின் அப்பாவுக்கும் பொன்மணியின் அப்பாவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. தம்பானின் அப்பா நல்ல சிவப்பு. தும்புக்கட்டு மீசை, கறுப்பாக. பொன்மணியின் அப்பா மாநிறம். நறுக்கிவிடப்பட்ட ஒட்டலான நரை கலந்த மீசை. தம்பானின் அப்பா சிவத்தக் கல் பதித்த தங்கக் கடுக்கன் அணிவார். பொன்மணியின் அப்பாவினது காதுச் சோணைகளில் இரண்டு வெறும் துவாரங்கள் மாத்திரம் இருந்தன. தம்பானின் அப்பாவினது கன்னங்கள் மதாளிப்பாய் பொளு பொளு என்றிருக்கும். பொன்மணியின் அப்பாவினது கன்னம் குழிவிழுந்து பொக்குவாய்காரனுடையவை போலிருக்கும் தம்பானின் அப்பாவுக்கு ஐந்து விரல்களும் விரித்த கையளவு கொண்டை. பொன்மணியின் அப்பாவுக்கு ஒரு பழப்பாக்கை மிஞ்சாத அளவுக்கு சின்னக் குடுமி. தம்பானின் அப்பாவினது கொண்டையில்  வெள்ளியினால் செய்த கொண்டைப்பூண் அணிந்திருப்பார். பொன்மணியின் அப்பாவினது கொண்டையில் மரக்குச்சியில் சீவிய கொண்டைக்குத்தி இருக்கும் தம்பானின் அப்பாவினது கொண்டைக்குத்தியினால் காது குடைய இயலும். பொன்மணியின் அப்பாவினது கொண்டைக்குத்தியினால் காது குடைய இயலாது.
          இன்னுமொரு முக்கிய வித்தியாசம் - தம்பானின் அப்பா வெளுத்த வெள்ளை வெளேர் என்ற அரைக்கை ஷேர்ட் அணிவார். அவர் கமுக்கட்டில் வலைக்கண் வைத்த கையுள்ள வெனியனை சேட்டுக்கு உள்ளேதான் விட்டிருப்பார். பொன்மணியின் அப்பா சேட் போட மாட்டார். கைவைத்த வெனியன் மாத்திரம் அணிவார். மற்றொரு வித்தியாசம், தம்பானின் அப்பா தினமும் கள் குடித்து சிலவேளைகளில் கஞ்சா குடிப்பார்.  பொன்மணியின் அப்பா அதிகமாக கஞ்சா குடித்து சில வேளைகளில்தான் கள் குடிப்பார். தம்பான் இன்னுமொரு வித்தியாசத்தையும் இடைக்கிடை மறந்து விடுகிறான். தம்பானின் அப்பா மத்தாளம் அடிப்பார், சல்லாரி கொட்டுவார், விருத்தம் பாடி இழுப்பார், கூத்து ஆடுவார். கூத்து பழக்குவார். வசந்தன் பொல்லும் பழக்குவார். – அவர் பெரிய அண்ணாவியார். பொன்மணியின் அப்பா வெறும் மத்தாளக்காரர்தான்.
அப்பாக்களைப் பற்றிப் பேசி பொன்மணி தம்பானை எந்தவகையிலும் வெல்ல முடியாது. அம்மாக்களைப் பற்றிப் பேசினாலும் பொன்மணி வெல்ல முடியாது. தம்பானின் அம்மா நல்ல சிவப்பு. பொன்மணியின் அம்மா நல்ல கறுப்பு, பொன்மணியைப் போல. பொன்மணிக்கு அம்மாவின் நிறமும் அப்பாவின் முகமும். கூரான முகம். பொன்மணியை தம்பான் சில வேளைகளில் 'காக்காய் குஞ்சு' என்று கூப்பிடுவான். அவள் அவனைத் துரத்தி துரத்தி அடிப்பாள்.
            பொன்மணியும் தம்பானும் ஒரே நாளில்தான் கொன்வெண்டுக்குப் போனார்கள். இரண்டு பேரையும் பொன்மணியின் அப்பாதான் அழைத்துப் போனார். அப்போது அவனை எல்லோரும் ;தம்பி; என்றுதான் கூப்பிடுவார்கள். தம்பி எப்படி தம்பான் ஆனான்? அதுவும் பொன்மணியின் வஞ்சனைதான். அவன் ஒருநாள் அவளுடைய வீட்டிலிருந்து அழுது கொண்டு வெளியேறினான். அவனுடைய அம்மாவும் அங்கே இருந்தா. அம்மா 'தம்பி , தம்பி' என்று கூப்பிட்டா. செல்லாச்சி குஞ்சாத்தையும் 'தம்பி , தம்பி' என்று கூப்பிட்டா. இவன் படலையைக் கடந்தான். பொன்மணி  தம்பி' என்று கூப்பிட்டவள் பிறகு 'தம்பி, டேய் ' 'தம்பி டோய்' தம்பா டோய், தம்பா தீபன், தம்பான் டோய், தம்பா, தம்பா தீபன், தம்பான்... தம்பான் ' என்று பலவாறு கூப்பிடத் தொடங்கினாள். எல்லோரும் சிரித்தார்கள். அவன் திரும்பி ஒடிவந்து பொன்மணியை அடிப்பதற்கு போனான். பொன்மணி துள்ளிப் பாய்ந்து எட்டத்தில் நின்று 'தம்பான்...... தம்பான் ' என்று அதையே பட்ப்பெயராக்கி கூவினாள். அவன் எவ்வளவு ஓடியும் பொன்மணியைப் பிடிக்க முடியவில்லை.அவள் மேலும் மேலும் 'தம்பான்...... தம்பான் ' என்று கத்தியவாறே ஓடிக்கொண்டிருந்தாள். அன்று முதல் தம்பி தம்பான் ஆகிவிட்டான்.
           அது ஒன்றுதான் தம்பானுக்கு குறை. பொன்மணியை ஓடிப்பிடிக்க முடியாது.அவளை முந்தி நடக்கவும் விடமாட்டாள் சாப்பாட்டுக் கரியரைத் தூக்கிக் கொண்டு இரண்டு எட்டு வைத்ததும் இந்தப் போட்டி தொடங்கிவிடும். சாப்பாட்டுக் கரியருக்குள் கறி கொட்டி சாப்பாடு கெட்டு விடுமே என்று தம்பானுக்குப் பயம். பொன்மணிக்கு அந்தப் பயம் இல்லை. இதுவரையில் அவளுடைய சாப்பாட்டுக் கரியரில் கறி சிந்தியதும் கிடையாது. கரியரைப் பிடித்த அவளது வலது கை உசும்பாது. மடங்காத அசையாத வலது கையில் கரியர் அப்படியே தூக்குக் குண்டு போலிருக்கும். இடது கை வேகமாகச் செல்லும் தோணியின் துடுப்பு போல அசையும். அந்தக் கையில் இரண்டு ரப்பர் காப்புகள் மேலும் கீழும் எழுந்து விழுந்து அலறும். மற்றக் கையிலுள்ள ரப்பர் காப்புகள் உறங்கும். பாதங்களுக்கிடையில் மணற்துணிக்கைகள் பிராண்டல் தாங்க முடியாது துடிக்கும் விசுக் விசுக் என்று நடப்பாள். அவள் நடப்பதற்கு என்ன தடை ? அவளுடைய குச்சு கால்களும் குச்சுக் கைகளும் தம்பானுக்கு இருந்தால் அவனும் அவளைப் போல நடப்பான்தான். தம்பாவின் உடம்பு கொஞ்சம் உரம். பொன்மணி எலும்புக்கூடு. சட்டையைப் போட்டால் தெரியாது. அந்தச் சட்டைக்குள் என்னதான் இருக்கு? அதுவும் தம்பானுக்குத் தெரியும். சீனித்தம்பி அண்ணன் பிடித்துக் கொண்டுவரும் கீச்சான் குருவிகளை உரிக்கும் போது வருமே சதை அந்தச் சதையைப் போல்தான் இவளுடைய சதையும்.  தசைக்குள்ளாக எலும்பு பொடுபொடுக்கும் இவளுடைய சட்டைக்குள் ஆமணக்கம் கொட்டைபோல் துருத்துகிற இடம் தவிர மற்ற இடமெல்லாம் அப்படித்தான்.
         முதலில் பொன்மணியும் தம்பானும் சாப்பாட்டுக் கரியர்களுடன் தாங்கள் சாதாரணமாய் நடப்பது போலத்தான் நடந்தார்கள். உச்சி வெயில் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் மெல்ல மெல்ல அவர்களுடைய எட்டுகள் அதிகரித்தன. பொன்மணி கோயில் பக்கம் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டு நடந்தாள். தம்பான் காயான் வெம்புப் பக்கம் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டான். காயான் பற்றைகளிடையே தெரிந்த நீல நிறப் பூக்கள் அவனைக் கவர்ந்தன. ஆனாலும் போட்டி தொடங்கி விட்டது. காயாம்பூ வண்ணத்தை பார்த்துக் கொண்டு நிற்க இப்போது முடியாது. காயாம்பூ வண்ணனின் நினைவும் ஒரு கணம் வந்து போனது.
காயான் பூவை பார்க்க முடியாதது மட்டுமல்ல. இடுப்பிலிருந்து வழுவிய அவனுடைய ரெடிமேட் காற்சட்டையைக் கூட இழுத்துவிட முடியாது. அவனுடைய ரெடிமேற் சேட்டின் சின்னக்கைகள் தோளின் கீழ்  கமுக்கட்டை இறுக்கத் தொடங்கின. அதைக் கூடத் தளர்த்திக் கொள்ள முடியவில்லை. இவைகளைச் செய்தால் அவன் நடையில் பிந்தி விடுவான். அவன் நடத்தலில் எப்படியாவது அன்றாவது பொன்மணியை தோற்கடிக்க வேணும். காற்சட்டை வழுவி விடாமல் வயிற்றை முட்டித்தள்ளிக் கொண்டு நடந்தான். இடது பக்கத் தோளை அசைத்து அசைத்து ஒருபடியாய் அந்தப் பக்கத்து கமுக்கட்டு இறுக்கத்தை தளர்த்திக் கொள்ள முயன்றான். ஆனால் வலது பக்க கமுக்கட்டு இறுக்கத்தை தளர்த்த எதுவும் செய்ய முடியவில்லை. அப்படி ஏதாவது செய்தால் சாப்பாட்டுக் கரியர் தளம்பி கறி சோற்றுக்குள் வழிந்து விடுமே !
             சின்ன சின்ன எட்டுகள் வைத்து படக் படக் என்று வேகத்தை அதிகரித்தான். வலது கையும் விசுக் விசுக் என்று ஆடியது. கரியரில் கறி கொட்டுப்படுமே என்ற கவலையும் வந்தது. கூடவே ஒரு துணிச்சலும் எழுந்தது. கறி கொட்டுப் பட்டாலும் பரவாய் இல்லை. அன்று பொன்மணியை வெல்ல வேணும். அவனுடைய உதடுகள் குவிந்தன.கண்களின் முழி முன்தள்ளின. மார்பும் தலையும் கூட முன் தள்ளின. பாதங்கள் வறு வறு என வறுவின. வண்டுருண்டை என்று சொல்வார்களே அது போல அவன் உருண்டு போனது போல் தான் இருந்தது. நிச்சயமாக தம்பான்தான் அப்போது முன்னுக்கு நடந்தான். இடையிடையே தன்னையும் பொன்மணியையும் கோடு வைத்துப்பார்த்தான். அவனது நெஞ்சுதான் முன்னுக்குத் தள்ளியது. அவனுடைய தோள்கள்தான் முன்னாடிப் போகின்றன. அவனுடைய கை வீச்சுதான் முன்னுக்கு விழுகின்றன. நிச்சயமாக அவன்தான் முன்னுக்கு நிற்கிறான். அவனுடைய தோள் அருகில் கூட பொன்மணியின் தோள்களைக் காணோம்.
            அவர்கள் இன்னும் கோயில் வெளியின் காயான்பற்றைகளுக்கிடையில் நடந்து காயான் வெம்பை கடக்க முடியவில்லை. பாதங்களை சுடு மணல் சுட்டது. பாவட்டைகளை கடந்தார்கள். அருணகிரி கிழவரின் முந்திரித்தோப்பை நெருங்கினார்கள். பொன்மணி பிந்தியே விட்டாள். அவள் இரணடு எட்டுக்கு ஒரு முறை கொஞ்சங் கொஞ்சமாக ஓடுவது தெரிந்தது. ஓட்டமும் நடையும் ஓடுவதைப் போன்ற நடத்தல் நடத்தலைப் போன்ற மெல்லோட்டம். தம்பானாலும் இதற்கு மேல் நடக்கமுடியாது. அவனும் ஓட்டமும் நடையுமாகினான். அவனுக்கு நாசுக்காக நடப்பது போல் ஓடவும் ஒடுதல் போல் நடக்கவும் முடியவில்லை. 'ஓடுறாய், ஓடுறாய் ' என்று சொல்லி பொன்மணி தம்பானை பிடித்து இழுத்தாள். அவனைப் பின்னுக்கு இழத்துவிட்டு அவள் முன்னேறிப் போனாள். அவனும் பதிலுக்கு  அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தான். ஆளை ஆள் தோளில் கை போட்டு ஆளை ஆள் இழுத்தபடி சிரித்துக் கொண்டு அருணகிரி கிழவரின் முந்திரித்தோப்பைக் கடந்து எதிரே வந்த ஒழுங்கையின் வாய்க்குள் நுழைந்தார்கள்.
            ஒழுங்கையில் நல்ல நிழல். மெதுவாக நடந்தார்கள். இரண்டு பக்க வேலிகளிலும் புனைமுருங்கை மரங்கள் பொன்னிறமான பூக்களை மணல் முழுவதும் பரப்பி இருந்தன. மஞ்சள் நிறமான வெல்வெற்றுக் கம்பளம் விரித்தது போன்றிருந்தது. தம்பான் பூக்கள் பரப்பப் படாத இடங்களைப் பார்த்து மெதுவாக கால்களை எட்டி வைத்துக் கொண்டு போனான். பொன்மணி பூக்களை காலால் எற்றியபடி நடந்தாள். தம்பானுக்கு கோபம் வந்தது.
'டியே !'
கோபத்துடன் அவன் அப்படியே நின்றான். அவள் நின்று ஆறுதலாகத் திரும்பி, அவனைப் பார்த்து எரிச்சலுடன் கேட்டாள்.
'என்னடா. ? '
பொன்மணி மீண்டும் பூக்களை மிதித்து உழுதபடி நடந்தாள். அவன் ஒரு வினாடி அதே கோபத்துடன் நின்று விட்டு ஆற்றாமையுடன் பூக்களை மிதிக்காமலே நடந்தான்.
           அந்த ஒழுங்கை முடிவில் இன்னொரு ஒழுங்கை வந்தது. அதன் இடது பக்கம் திரும்பி மீண்டும் வலது பக்கம் திரும்பி அடுத்த ஒழுங்கைக்குள் நுழைந்தார்கள்.
           அடுத்த ஒழுங்கையில் நாய்கள் அதிகம். சிதைந்த வேலிகளின் முள்முருக்கு மரங்களுடாக பெண்கள் சட்டிபானை வனைவது தெரியும். அவர்களுடைய நாய்கள் உறுமியபடி படுத்துக்கிடக்கும். சற்று முன்னால் போன பொன்மணி 'உஸ்' என்று நாயை உசுக்காட்டிவிட்டு ஓடினாள். நாய்கள் உறுமிக்கொண்டு ஓடி வந்தன. நாய்கள் தனக்கு கடித்தாலும் பரவாயில்லை, தம்பான் அலறி துடித்துக் கொண்டு ஓடிவர வேணும், தான் நாயின் கடியை வாங்கிக் கொண்டாவது எதிரில் நின்று தம்பானைப் பார்த்து சிரிக்க வேணும் என்று பொன்மணிக்கு எண்ணமா? ஆனால் தம்பான் அதற்கு இடம் கொடுக்கப் போவதில்லை. நாய் வந்தால் வரட்டும். கடித்தால் கடிக்கட்டும், என்று ரோமம் சிலிர்க்க துணிவோடு மெதுவாக நடந்து வந்தான். உறுமிக் கொண்டு வந்த நாய்கள் தம்பானின் பக்கலில் வந்ததும் ஒன்றும் செய்யாமல் போயின. பொன்மணி தம்பானை அதிசயத்துடன் பார்த்தாள்.
'பார்த்தியாகா, எனக்கு நாய் கடிக்கல்லியே ! '
            தம்பான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னான். அதுதான் தம்பானின் உண்மையான முதல் வெற்றி. தம்பான் பொன்மணியைக் கடக்கிறபோதும் பொன்மணி இன்னும் அவனை அதிசயத்தடன் பார்த்துக் கொண்டு நின்றாள். பின்னர் அவனுக்குச் சமமாக நடந்தபடி அவனுடைய கொழுமையான கால்களைப் பார்த்தாள். காற்சட்டை வழுவும் இடுப்பைப் பார்த்தாள் ரெடிமேற் சேட் இறுக்கும் தோளை பார்த்தாள் அவனுடைய வாளிப்பான கன்னங்களைப் பார்த்தாள். அவனோ கம்பீரமாக நடந்து கொண்டிருந்தான். பொன்மணி ஒன்றும் பேசாமல் தொடர்ந்து மற்றொரு ஒழுங்கையில் சிறிது தூரம் அவன் பின்னால் நடந்தாள்.
            அந்த நடைகளில்தான் தம்பி தம்பானாக உருவானான். பூக்கள் உதிர்ந்தன. பிஞ்சுகள் தோன்றின. அவன் கருமுறுவென்று வண்டுருண்டையாக நடப்பான். பூக்களை ஆசையோடு பார்ப்பான். நாய்களுக்கு பயப்பட மாட்டான். அவனுக்குள் ஒரு அவன் தெரிந்தான். அவன் தம்பியல்ல, தம்பான், தம்பாதீபன்.
            அடுத்த ஒழுங்கையில் பண்டாரம் இருந்தார். பண்டாரத்துக்கு பெரிய பொக்கணி. பொக்கணிக்கு கீழ் வேட்டித்துண்டைக் கட்டிக் கொள்வார். ரப்பர் பந்து அளவு பெரிய பொக்கணி. சில வேளை துண்டு வழுவிக் கிடக்கவும் இருப்பார். அப்போது பொக்கணிக்கு கீழ் நரைத்த ரோமங்களும் தெரியும். அநேகமாக தலையை தொங்கப் போட்டு தூக்கமாக இருப்பார். அபின் போட்ட தூக்கம் கடையில் யாரும் பனாட்டுத்துண்டை எடுத்துக் கொண்டுபோனாலும் அவருக்குத் தெரியாது. அவருடைய பொக்கிணியை பார்ப்பதிலேயே பொன்மணிக்கு விருப்பம். தம்பானுக்கும் விருப்பம். பொக்கணிக்கு கீழே வேட்டித்துண்டு வழுவிக் கிடப்பதை பொன்மணிதான் கவனித்து தம்பானுக்கு காட்டுவாள். அதைப்பார்க்க தம்பானுக்கு பயமாக இருக்கும். கீழே அப்படியொன்றும் அதிகமாகத் தெரியாது. ஆனாலும் தம்பானுக்கு பயம் . அவனுடய அப்பாவின் கமுக்கட்டு மயிர் ஞாபகத்துக்கு வரும். அப்பா கையை உயர்த்த நாவிதன் வேலன் சவரக் கத்தியை தோல்பட்டி மீது மாற்றி மாற்றி தீட்டுவான். நாவிதன் வேலன் நல்ல நெடுவல். அவன் சவரக்கத்தியை தீட்டி முடியும் வரை  அப்பா கையை உயர்த்திய படியே நிற்பார். அப்பாவின் கமுக்கட்டு மயிரை வழிக்கும் போது, பண்டாரத்தாரின் பொக்கணிக்கு கீழே பார்க்க நேரும் போது குனிந்து கொள்வதைப் போலவே குனிந்து கொள்வான். இப்போது போல அப்போதும் அவனுக்கு கூச்சமாக இருக்கும்.
                 பண்டாரத்தாரின் கடையை கடந்துவரும் ஒழுங்கையில் பூவரசு மரங்கள் அடர்த்தியாக நின்றன. ஒழுங்கை ஒடுக்கமாகவும் இருந்தது. பொன்மணி முன்னும் பின்னும் பார்த்தபடி ஒழுங்கையை மறித்து நிற்பாள்.
'டேய், தம்பான், உன்ர பொக்கணியைக் காட்டு '
தம்பான் இல்லை என்பது போல தலையை அசைத்து மறுப்பான்.
'உன்ர பொக்கணியும் பெரிசுதாண்டா. அதுதான் நீ காட்டுறாய் இல்ல '
'இல்ல. என்ர பொக்கணி சின்னது '
;அப்போ காட்டு '
                 தம்பான் அந்த நேரத்தில் தம்பியாவதா ? தம்பி காட்டினால் பொன்மணியும் காட்டுவாள்தானே. தம்பியான தம்பான் உடனே தம்பானாகி விடுவான்தானே. தைரியமாக சேட்டை உயர்த்தி காற்சட்டையின் இடுப்பு ஓரத்தை பணிக்கப் போனால், காற்சட்டை ஏற்கனவே வழுவிக் கிடக்கிறது. தம்பானும் தன்னுடைய பொக்கணியைக் குனிந்து பார்த்தான்.அவனுக்கு சின்ன பொக்கணிதான். பொன்மணி திருப்தி  அடைந்தது போல தலையை அசைத்தாள். தம்பான் பொன்மணியின் ஒட்டிய வயிற்றை சட்டையின் ஊடு பார்த்தான். அவளும் தன் ஒட்டிய வயிற்றை சட்டையின் மேல் பார்த்துவிட்டு, பேசாமல் நடந்தாள். அவன் அவளை ஒன்றும் கேட்கவில்லை.
                 அவர்களுடைய பாதையில் அடுத்து வந்ததெல்லாம் பாழ் வளவுகள். ; பாழ் வளவுகளுடு ஒற்றையடிப் பாதைகள் உருவாகி இருந்தன. ஒரு பாழ் வளவின் முந்திரி நிழலைக் கடந்தால் அடுத்த வளவின் நறுவிலி மர நிழல் வந்தது. பிறகு ஒரு மணற்பாலை. திரும்பவும் சூடு பிடித்தது. இந்தமுறை விடப்போவதில்லை. இடையில் கடற்கரைக்குப் போகும் கிறவல் பாதை குறுக்கிட்டது. அதைக் கடந்தால் தென்னந் தோட்டம். தென்னந் தோட்டம் வரையிலும் பொன்மணிதான் முந்திக் கொண்டிருந்தாள். தென்னந் தோட்டத்தை அடுத்து பரந்த புதர்.
                 அந்தப் பெரிய புதர் அடர்ந்து நீண்டு அகன்றிருந்தது. மேற்கே கண்ணாக்காட்டன் சீனியரின் ஒற்றை வீடு ஒன்றுதான் இடையில். மற்றும்படி பெரிய தார்றோட்டோரம் மர்ணாசின் கம்மாலை வரை இந்தப் புதர்தான். மாமரங்களும் நாவல் மரங்களும் நிறைந்திருந்தன. நறுவிலி மரங்களும் நாயுருவிக் காடுகளும் எக்கசக்கமாக இருந்தன. கிழக்கேயும் கடற்கரைத் தென்னந் தோட்டம் வரை பரந்து போனது. இடையில் வடக்கு மேற்காக தம்பானும் பொன்மணியும் போய் கொண்டிருந்த பொட்டல் காட்டின் வழியே கடற்கரை வீதிக்கும் ஆஸ்பத்திரி ஒழுங்கைக்கும் இடையில் நாலைந்து கிட்டிப்புள் பாட்டம் பாடி ஓடும் தூரத்தை கொண்டிருந்தது.
                 பகலில் அண்டங்காகங்கள் விட்டு விட்ட கத்திக் கொண்டிருக்கும். சிவத்தக் கண்ணும் காவி நிற மார்பும் நீண்ட கறுத்த தோகையும் உள்ள செம்பகங்கள் முக்கு முக்கென முக்கிக் கொண்டிருக்கும். இவைகளெல்லாம் முன்பு தம்பானுக்கு பெரும் பயத்தை உண்டாக்கின. அடர்ந்த மிலாறு புதர்களுககு நடுவில் வானுயர எழுந்து நின்ற காட்டுத் தேங்காய் மரத்தைப் பார்க்க தம்பானுக்கு இன்னும் பயமாக இருக்கும். தேங்காய் அளவான காய்கள் அதில் தொங்கின. சில வேளை கறுப்பும் காவி நிறமுமான பெரிய குரங்கு வெளவால்களும் அதில் தொங்கின. காட்டுத் தேங்காய் மரத்துக்கு பக்கத்தில் மலையளவான செங்காவி கறையான் புற்றுகள் இருந்தன. கறையான் புற்றுகளின் பொந்துகள் தோறும் கருநாகங்கள் படமெடுத்திருப்பதாக  பொன்மணி சொன்ன போது தம்பான் பயந்தான். காட்டுத் தேங்காய் மரமும் கறையான் புற்றும் அவனுடைய பயங்களில் கலந்தே இருந்தன.
              ஆனாலும், நாயுண்ணிப் பழங்களில் அவனுக்கு பெரிய மோகம். சின்ன நீலமணியான நாயுண்ணி பழங்களை கொன்னை கொன்னையாக அப்படியே வாய்க்குள் புகுத்த வேணும் போல தம்பானுக்கு தோன்றும். பழங்களை வாய்க்குள் உப்பிய பின் விதைகளை வாய்க்குள்ளிலிருந்து ஊதி விடுவதும் அவனுக்கு மிகவும் ரஸமான காரியம். நாயுண்ணிப் பற்றைகள் பழுத்து பழுத்து சொலிக்காத போது கூட தம்பான் நாயுருவிப் பற்றைகளை மணிக்கணக்காக பார்த்துக் கொண்டு நிற்பான். நாயுண்ணி மரங்களினது பூக்களின் விசேசந்தான் அது. கன்னி விரிய முதலே அவை மென் மஞ்சள் கல் பதித்த மின்னி போல் தோன்றும் அம்மா போடும் பெரிய வைரக்கல் தோடுகள் போல இருக்கும். பற்றை முழுவதும் இந்த பல வர்ண வைரக்கல் தோடுகளால் நிரம்பி இருக்கும் போது, தம்பான் அவைகளையே பார்த்து இருக்காமல் எப்படி வருவான்? ஒரு பற்றை அல்ல ஓராயிரம் பற்றைகள் அந்தப் புதர் முழுவதும் பூத்து பொலியும்போது அவன் புதரினதும் காட்டுத் தேங்காய் மரத்தினதும் கருநாகப் பாம்பினதும் பயத்தையே மறந்து விடுவான். அல்லாவிட்டால் கூடாரம் போல் சுற்றிவர அடர்ந்து நெருங்கி வெளியில் அரிதாக போவோர் வருவோருக்கு எதுவும் தெரியமுடியாத அந்த நாயுண்ணிப் பத்தைகளின் குகைக்குள் அவன் அவ்வளவு ஆழமாக பூந்து அந்தக் கருநீலப்பழங்களை கைநிறையப் பறிக்க முடியுமா?
              ஆமாம் தம்பான் இந்தமுறை பொன்மணியை முந்த விடப் போவதில்லை. தென்னந்தோட்டத்தை அடுத்து பனை மரங்களுக்கு இடையில் போய்க்கொண்டிருந்தார்கள். பத்தாவது பனையை தம்பான் நெருங்கும் போதே தம்பான் முந்தத் தொடங்கினான். இருபதாவது பனையை கடக்கையில் தம்பான் முந்துவது நிச்சயமாகி விட்டது. தம்பான் முந்திக் கொண்டிருந்த ஒற்றையடிப் பாதை புற்களும் மற்றும் காய்ந்த பனை ஓலை, பாளை, தும்பு, நார், வெட்டிய நொங்கு கீறல்கள், பழசுபட்ட பனங்கொட்டைகள் முதலியவற்றுக்குமிடையே நெளிந்து வளைந்து நீண்டு சென்றது. சிறிது நேரத்தில் நாயுண்ணிப் பற்றைகள் தொட்டந் தொட்டமாக இரண்டு பக்கமும் சூழத் தொடங்கின. நாயுண்ணிப் பற்றைகளின் பக்கம் ஓடிய அவனுடைய கண்களை திரும்ப விடாது அவன் நேரே பார்த்து படக் படக் என்று   காலடிகளை உதிர்த்துதிர்த்து நடந்து கொண்டிருந்தான். இடையில் பொன்மணி எவ்வளவு தூரம் பிந்தி வருகிறாள் என அறியும் ஆவலில் திரும்பினான். என்ன ஆச்சரியம், பொன்மணியைக் காணவில்லை. தம்பானுக்கு திக்கென்றது. காட்டுத் தேங்காய் மரத்தின் நினைவும் கருநாகப் பாம்புகளின் படமெடுத்த தோற்றங்களும் நினைவுக்கு வந்தன. சற்றுத் தூரத்தில் அப்பாலாக உள்ள காட்டுத் தேங்காய் மரத்தின் பக்கம் திரும்பினான். இடையில் மாடுகள் புகும் பற்றை ஓடைகளுக்கிடையே பொன்மணி ஓடிப்போய்க் கொண்டிருந்தாள். கள்ளி ! குறுக்கு வழியாக பற்றைக்குள் புகுந்து ஓடிக் கொண்டல்லவா இருக்கிறாள். அவனும் கத்திக்கொண்டு ஓடிப்போவதற்கிடையில் பொன்மணி ஆஸ்பத்திரியின் கம்பி வேலிக்கிடையில் உள்ளே புகுந்து விட்டாள்.
              தம்பான் அப்பாவிடம் சாப்பாட்டுக் கரியரைக் கொடுத்து விட்டு ஆஸ்பத்திரியின் பின்னால் சவக்காம்பறாவின் கரையிலுள்ள புளிய மரத்தின் கீழே போனான். இரண்டொரு புளியம் பழங்களைப் பொறுக்கினான். பொன்மணி சிரித்துக் கொண்டு ஆஸ்பத்திரி குசினியின் பின்பக்கத்து ஓரமாய் வருவது தெரிந்தது. தம்பான் முகத்தை திருப்பிக்கொண்டு சவக்காம்பறாவின் அடுத்த கரையில் உள்ள மாமரங்களின் கீழே போனான். அணில் கடித்த கொழுத்த செங்களனி மாம்பழங்கள் பல சிதறிக் கிடந்தன. அணில் கடியாத சிவந்த பழங்களும் விழுந்து கிடந்தன. எனினும் அவைகளைப் பொறுக்கி எடுக்கவோ, இரண்டொன்றை வழமைபோல் அவனுடைய காற்சட்டைப் பைக்குள் திணிக்கவோ அவனுக்கு மனம் வரவில்லை. பொன்மணிமீது கோபம் கோபமாய் வந்தது. அவள் இப்படி கள்ளத்தனமாக அவனுடைய வெற்றியை குழப்பலாமா? அவன் கொஞ்சம் கவனியாமல் நடந்து கொண்டிருந்தால் அவள் தான் முந்தியதாகவல்லவா தம்பட்டம் அடித்துக கொண்டிருப்பாள். அவனும் அதை ஒப்புக் கொண்டிருக்க வேணும். அவள் இப்போதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இப்போது அதை தம்பான் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
                பொன்மணி மாமரங்களின் கீழ் வந்தாள். தம்பான் விசுக்கென்று எல்லா மாமரங்களையும் கடந்து மூன்றாவது டொக்டரின் குவாட்டஸ் பக்கமாக நடந்தான். அவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மூன்றாவது டொக்டரின் குவாட்டஸ் பின் கேற்றோடு ஒட்டியவாறு நேர்ஸ் குவாட்டஸ் பக்கமாக நடந்தான். நேர்ஸ்மாரின் குவாட்டேஸ்க்கு முன்னால் இருந்த பெண்களின் 9வது வார்ட் ஓரமாய் நடந்தான். வராந்தாவில் ஏறி ஆண்களின் 6ம் வார்ட் பக்கமாக நடந்தான் அப்பா சாப்பிட்டு முடித்து கரியரைக் கழுவி வைத்தார்.
                அவன் தனியாக வீட்டுக்கு போவதா, அல்லது பொன்மணிக்காக எங்கேயேனும் காத்திருந்து அவள் கூட நடப்பதா? தம்பான் ஆறாம் வார்ட் படிக்கட்டுகளில் இறங்கி கொண்டே யோசித்தான். இல்லை. அவன் இனி பொன்மணியுடன் சேர்ந்து நடப்பதில்லை. பொன்மணிக்கு பதிலாக சாப்பாடு கொண்டு போகும் போது அகிலேஸ்வரியுடன் சேர்ந்து கொண்டு நடப்பான் பொன்மணியடன் இனி கூட்டு இல்லை.
                தம்பான் 6ம் வார்ட்டின் படிக்கட்டுகளின் கீழ் இறங்கி நின்று பனிச்சை மரத்தின் பழங்களை அண்ணாந்து பாத்துக் கொண்டு நின்றான் பனிச்சை மரத்தின் நிழல் கிழக்கு பக்கமாக சற்று சரிந்து அவன் மீது கவிந்திருந்தது. மேச்சல் முடிந்த ஆடுகள் படுத்தக் கிடந்தன.சின்ன ஆட்டுக் குட்டிகள் வெயிலையும் பாராது துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.
                அகிலேஸ்வரி தம்பானின் தோளுக்கு இருப்பாள். அவள் கொஞ்சம் சிவப்பு. அவள் சிரிக்கும் போது இடது பக்கம் சின்ன தெத்துப் பல் தெரியும். கன்னங்களில் குழிவிழும் அவளும் ஒரு கீச்சான்தான். பொன்னிறமான கீச்சான். பொன்மணி கரிக்குருவி. 'கரிக்குருவி, கரிக்குருவி, கரிக்குருவி' என்று நாலைந்து முறை பொன்மணியைத் திட்டித் தீர்த்துக் கொண்டான்.
                அகிலேஸ்வரியும் தம்பானும் நல்ல கூட்டு. அகிலேஸ்வரி நல்ல நிறம். சிரிச்ச முகம்.  வெளிச்சமான கண். கண்களில் எப்போதும் ஒரு விளையாட்டுத்தனம். எப்போது கூப்பிட்டாலும் எங்கே போவதன்றாலும் வருவாள். பார்த்தீபனுடன் என்று சொன்னால் அவளுடைய அம்மாவும் தடை சொல்ல மாட்டா. அகிலேஸ்வரி பார்த்தீபனுடைய வாயில் முதலில் அகிலேஸ் ஆனாள். பின் அகிலாவாக மாறிவிட்டாள்.
                விளையாடுவதற்கு எல்லாரும் பொம்மியின் வளவில் அல்லது அகிலாவின் கோயில் வீட்டு வளவில்தான் கூடுவார்கள். இரண்டு இடமும் சீக்கோ மாக்கோ விளையாட நல்ல இடம்.
                பொம்மியின் பக்கம் வீடுகளும் வேலிகளும் ஒரு பத்தைக் காடுந்தான். அகிலாவின் கோயில்வெளி முழுதும் காயான் காடுவரை பரந்து கிடக்கும். கந்தண்ணாவியருடைய பின் வளவு கோயில் வீடு, கவடா வீடு, கருங்காலி மூலை பற்றைகள், வேலியரின் பாழ்வளவு, கராஐ;  வளவு இப்படி பல உண்டு.
                அப்போது அகிலாவின் அப்பனிடம் வண்டில் மாடு இருந்தது. கோயில் வீட்டு வளவின் முந்திரி மரத்துக்குக் கீழேதான் மாட்டுக்கொட்டிலும் வைக்கோல் போரும் இருந்தன.
                 அகிலாவின் மாட்டுக் கொட்டிலின் வளைகளில் மாங்குகம்பு அடுக்கியிருக்கும் நெருக்கமாகப் பரப்பப்பட்டிருக்கும் மாங்குகம்புகளுக்கு மேல் கொள்ளையாக வைக்கோல் கிடக்கும் அங்கேதான் சிலவேளை கோழி முட்டைபோடும். கொட்டிலை வளைத்தும் பெரிய வைக்கோல் போர்கள் தான். மாடுகள் சப்பிக் கிடக்கும். வாசல் பக்கம் தொங்கும் படங்கை அவிழ்த்து விட்டால் உள்ளே இருப்பது ஒன்றும் வெளியில் தெரியாது.
'Pகீக்கொ மாக்கோ..... வரவா ?'
                ஆஸ்பத்திரியின் 6ம் வார்ட்டின் படிக்கட்டுகளுக்கு உள்ள இந்தப் பனிச்சைக் கிளைகளுக்கூடாகவும் இப்போதும் அந்தக் குரல்கள் தம்பிக்கு கேட்கின்றன. அவர்கள் ஒளித்து விளையாடுவார்கள். தம்பானும் பொன்மணியும் எதிர் எதிர் பக்கத்து தண்டிகளாய் ஆள் எடுப்பார்கள். எப்போதும் பொன்மணிதான் முதலில் ஆள் எடுப்பாள். அவள் முதலில் கோவிந்தனையே எடுப்பாள். கோவிந்தனுக்கு தடிப்பான உதடு. ஓளிப்பதற்கு புதுப் புது இடங்கள் காட்டுவான் . ஒளிக்கிறவர்களை சொல்லி வைத்தாற் போல் கண்டு பிடிப்பான். அவன் ஒருமுறை மூக்கை உறிஞ்சி விட்டுக்கொண்டு உச்சந்தலையில் கையை வைத்தான் என்றால் அவனுக்கு யார் யார் எங்கே ஒளித்திருக்கிறார்கள் என்பது சாத்திரம் போல் தெரிந்து விடும். அவனுக்கு மூக்குறிஞ்சி என்றும் நாயுறிஞ்சி என்றும் பட்டப் பெயர்கள்.
                தம்பான் எப்போதும் முதலில் அகிலாவைத்தான் எடுப்பான் அகிலாவின் வளவுக்குள் உள்ள முடுக்குகள் அவளுக்குத்தான் நல்லாத் தெரியும். ஒளிப்பதற்கென்று புதுப்புது முடுக்குகளையும் அவள் மற்ற நேரங்களில் உண்டாக்கி வைப்பாள். ஓளிக்க ஓடும்போதுதம்பானும் அகிலாவும் ஒருமித்து ஓடுவார்கள்.அவர்களுடைய மாட்டுக் கொட்டிலை அந்தச் சம்பவம் நடக்கும் வரையில் யாரும் கண்டு பிடிக்கவில்லை. மாட்டுக்  கொட்டிலின் முன் படங்கை அவிழ்த்து விட்டு தம்பானும் அகிலாவும் பரணில் ஏறிப் படுத்தக் கொள்வார்கள். மாட்டுக் கொட்டிலுக்குள் யாராவது வந்தாலும் தம்பானும் அகிலாவும் பரணில் வைக்கோலுக்குள் கிடப்பதை காணமாட்டார்கள். கொஞ்ச நேரத்தில் தம்பானும் அகிலாவும் கீக்கொ மாக்கோ விளையாட்டை மறந்து விடுவார்கள்.
               அன்றொரு நாள் மாலையும் அவர்கள் விளையாடத் தொடங்கினார்கள். தம்பானும் அகிலாவும் எங்கெங்கோ ஒளிப்பதாக போக்குக் காட்டி விட்டு வேலி ஓரமாய் பதுங்கிப் பதுங்கி மாட்டுக் கொட்டிலுக்குள் வந்தார்கள். படங்கை அவிழ்த்து விட்டு பார்க்கையில், வளைகளில் அமைக்கப்பட்டிருந்த பரணைக் காணவில்லை. அகிலாவின் அப்பா வேளாண்மைக்கு வேலி அடைக்க பரண் கம்புகளை எடுத்துச் சென்றது அவளுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. வைக்கோல் போர்களில் ஏறினார்கள். அங்கு வசதியாக ஒளித்துக் கொள்ள முடியவில்லை.
'பரவால்ல. இந்த இடுக்குக்குள்ள ஒளிப்பம் '
'லேசா கண்டிருவாங்க'
' இந்தப் பக்கம் வர மாட்டாங்க '
                மங்கலுக்குள் நான்கு கண்கள் எல்லாப் பக்கமும் சுழன்றன. பொன்மணியின சத்தம் தூரத்தில் கேட்டது. கோவிந்தனின் மோக்கான் தவளைக் குரலும் கேட்டது. அகிலா ஏதோ ஒரு பொத்தலுக்கூடாக இடைக்கிடை பார்த்துக் கொண்டாள். ஓடுகிற காலடி ஓசைகளும் கதவுகளும் தகரங்களும் தடதடக்கிற சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.
'செல்லாச்சி குஞ்சாத்தையிர ஊட்டுப்பக்கம் ஓடுறாங்க. '
' சீதேவிப்பிள்ளர காட்டுக்குள்ள தேடுறாங்க '
'அவங்க இன்னமும் இந்த மாட்டுக் காலய நெனச்சுப் பாக்க மாட்டாங்க'
வெளியில் வண்டில் மாடுகள் வைக்கோல் கற்றையை இழுத்து இழுத்து சப்புவது கேட்கிறது. விட்டு விட்டு மாடுகளின் மணி ஓசை உயர்கிறது.
'கிணிங்... கிணிங் '
பழுத்த வேப்ப மரத்தில் காகத்தின் சிறகடிப்பு.
'கா...கா...கா... கா..'
படீர் என ஒரு வெளிச்சம். படங்கு கிளம்பியது. அவர்களுக்கு எதிரே அவள்-பொன்மணி.
               தம்பானும் அகிலாவும் விறைத்துப் போய் நின்றார்கள். கழன்று கிடந்த காற்சட்டையை குனிந்து எடுக்க தம்பானுக்கு ஒரு வினாடி எடுத்தது. உயர்த்திய சட்டையை கீழே விட அகிலாவுக்கு இன்னும் நேரம் எடுத்தது.
               ஆஸ்பத்திரியின் 6ம் வார்ட் பனிச்சையின் கீழ் ஆட்டுக்குட்டிகள் இப்போது ஒன்றின் மீது மற்றது மறி ஏறத்தொடங்கின. தம்பான் பார்த்துச் சிரித்தான்.
               பொன்மணியின் இளைய அக்கா கலியாணம் நடந்த அன்று. அவர்கள் பொழுது பட்ட பின்னும் நெடுநேரம் விளையாடினார்கள். தம்பான், தம்பானின் அம்மா, அப்பா எல்லோரும் அன்று இரவும் பொன்மணியின் வீட்டில் தான் சாப்பாடு. அகிலா. அகிலாவின் தங்கச்சி அம்மா, அப்பா எல்லோருக்கும் அங்கேதான் சாப்பாடு. சாப்பிட்ட பிறகு பிள்ளைகள் எல்லோரையும் மூத்தக்காவின் வீட்டில் போய் படுத்துக் கொள்ளச் சொன்னார்கள். தம்பான் அம்மாவிடம் தங்கள் வீட்டுக்கு போக வேணும் என்று சிணுங்கினான்.
தம்பானின் அம்மா பொன்மணியிடம் சொன்னா.
'புள்ள தம்பானையும் கூட்டித்து போங்கம்மா. அவன் ஊட்டபோய் தனிய படுக்க மாட்டான்'
'வா. தம்பான்'
              பொன்மணி அன்பாக அவனுடைய கையை பிடித்து கூப்பிட்டாள். அவன் அவளுடைய கையை உதறிவிட்டு காலை நிலத்தில் அடித்து சிணுங்கிக் கொண்டே இருட்டின் ஒளிக்கீற்றுகளிடையே ஊஞ்சலையும் மாட்டுக் கொட்டிலையும் கடந்து அவளுக்கு பக்கத்தில் நடந்தான்.
              மூத்தக்காவின் மண்டபத்தில் குப்பி லாம்பு குருடு பற்றி மங்கியது. அது எப்போது சாகப்போகிறது என்ற கவலை இல்லாமல் அவர்கள் பாயைப் போட்டுக் கொண்டு படுத்தார்கள். ஒரு பத்துப்பேர் இருக்கும்.அவர்களுள் கோவிந்தன் இல்லாதது தம்பானுக்கு நிம்மதி.
               தம்பானிடம் சொல்வதற்கு பொன்மணிக்கு எத்தனையோ கதைகள் இருந்தன. காகம் போட்ட முந்திரிகை கொட்டை பொறுக்கியது, தேத்தா கொட்டைகள் பொறுக்கியது. காஞ்சிரை மரத்து மடுவுக்குள் அவளும் கோவிந்தனும் தூண்டில் போட்டு மீன் பிடித்தது என்று எத்தனையோ கதைகள் சொன்னாள். கோவிந்தன் சொன்ன புதுப் பேய்கதைகள் பற்றியும் சொன்னாள். தம்பானுக்கு பயமாக இருந்தது. உள் வீட்டுக் கட்டிலில் பயமில்லாமல் படுக்கலாம் என்று ரகசியமாகச் சொல்லி அவனைக் கூட்டிப்போனாள். அவர்களைத் தொடர்ந்து வேறு இரண்டொரு பிள்ளைகளும் உள்ளே வந்தார்கள். அவர்கள் தரையில் சிரித்துப் பேசிக் கொண்டு கிடந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் சத்தமடங்கி நித்திரையாய் போக, தம்பானும் கொட்டாவியோடு புரண்டு படுக்க பொன்மணி போர்வையை தம்பான் மீது போர்த்துவதாய் பட்டது. ஓரே போர்வைக்குள் தன்னையும் தம்பானையும் பொன்மணி போர்த்தி இருப்பது தம்பானுக்குத் தெரிந்தது. எனினும் அவள் தன்னுடைய கதைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். இடையில் அவள் அவனுடைய கையை இழுத்து தன்னுடைய கவட்டுக்குள் வைத்தாள். தம்பான் உதறிக் கொண்டு எழுந்தான்.
'வம்பு'
அவள் அவனுடைய தோளை அமர்த்திக் கொண்டு சொன்னாள்.
' பொறு, பொறு, நீ அகிலாவுடன் பழக்கம் செய்ததை நான் எல்லாரிடமும் சொல்றன் '
               தம்பான் இருட்டுக்குள் அடங்கினான். பொன்மணியின் கைகள் அவன் மீது எங்கெல்லாமோ படர்ந்தது. அவள் அவனுடைய கையை எடுத்து அவளுடைய அதில் வைத்தாள். அவனுக்கு அது அப்போதும் அருவருப்பாகவே இருந்தது.
               ஆஸ்பத்திரியின் 6ம் வார்ட் பனிச்சையின் கீழ் ஆட்டுக்குட்டிகள் இன்னும் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. விளையாட்டுகளில் ஒரு விளையாட்டாகத்தான் அவை இடைக்கிடை மறி ஏறிக் கொண்டுமிருந்தன.
               பொன்மணி பொறுக்கிய மாம்பழங்களுடன் சவக்காம்பறா பக்கமிருந்து குசினிக்கு நேரே வந்துகொண்டிருந்தாள். தம்பான் 6ம் வார்ட்டின் வராந்தாக் கட்டின் தூண் ஓரமாக மறுகினான். கொஞ்ச நேரத்தில் அவள் இரண்டு கரியர்களுடன் வந்தாள். தம்பானுக்கு விலகிக் கொள்ள முடியவில்லை. கரியரை பொன்மணியிடமிருந்து பெறப்போனான். கரியர் பாரமாய் இருந்தது. கரியர் மாறிப்போய் விட்டது. பொன்மணியின் கரியரை திருப்பிக் கொடுத்து தன்னுடையதை பெற்றுக் கொண்டான். பொன்மணி கரியருக்குள் பொறுக்கிய மாம்பழங்களை வைத்திருக்க வேணும்.
பொன்மணி படி இறங்கினாள். தம்பான் அசையாமல் கட்டின் தூண் ஓரமாகவே நின்றான்.
'வாவெண்டா போக'
'நீ போ. நான் தனிய வருவன் '
'நொட்டியென்டா அகிலாட விசயத்தை எல்லாரிட்டயும் சொல்லிருவன்'
                தம்;பான் இறங்கி அவளுக்கு முன்னால் நடந்தான். அவள் அவனை நெருங்கி அவனுக்கு நேராக நடந்தாள்.
                ஆஸ்பத்திரி கம்பி வேலிக்கிடையில் முதுகை பணித்து நெளித்து வெளியேறியதும் நாயுண்ணிப் பற்றைக் கூடாரம் வந்தது. பூக்கள் சிவப்பும் வெள்ளையும் ஊதாவும் மஞ்சளுமாய் சொலித்திருந்தன. தம்பான் அதில் சொக்கிப் போய் மயங்கி நின்றான்.
                பொன்மணி பற்றையின் கூடாரத்தள் புகுந்தாள். உள்ளே அவள் ஓடி ஓடி எல்லாவற்றையும் பிய்த்தெறிவது போல் தோன்றியது. தம்பான் கூடாரத்தின் வாயிலுக்கு போய் நின்று பார்த்தான். பின்பு கத்தினான்.
'டியேய் !'
'என்னடா?'
'பூக்கள பிய்க்காதடி '
'பிய்ப்பன், பிய்ப்பன். பிச்சாத்தான் பழங்கள் இருக்கிறது தெரியும் '
தம்பான் நாயுருவிக் கூடாரத்துக்குள் பாய்ந்து போனான்.
' இந்தாருக்கென்ன பழங்கள் ....'
               தம்பான் கொள்ளை கொள்ளையாய் கருநீல சிறுமணிப் பழங்களை ஆய்ந்து பொன்மணிக்கு நீட்டினான். அவள் அதை எடுத்துக் கொள்ளாமலே கொடுப்புககுள் சிரித்தபடி மேலும் பூக்களை பிய்த்து எறிந்து கொண்டே கூடாரத்துக்குள் ஆழமாக பூந்து போனாள். தம்பானும் பற்றைக்குள் ஆழமாக புகுந்து அவளுக்கு முன்னால் போய் பழங்களை அவளுடைய முகத்துக்கு முன் கண்ணெதிரே நீட்டினான். அவள் வாயைத் திறந்து எட்டி அவ்வளவு பழங்களையும் ஒரே கொதுப்பில் கொதுப்பினாள். தம்பான் மேலும் பழங்களை நீட்ட அவள் அவனுடைய கையைப் பிடித்து தனது வாயருகே கொண்டுவந்து மேலும் கொதுப்பினாள். தம்பானுக்கு சிரிப்பு வர, அதுவே ஒரு விளையாட்டாக இருவரும் ஒருவருடைய கையை மற்றவர் பிடித்தவாறு இன்னும் இன்னும் கூடாரத்தின் ஆழத்துக்குப் போனார்கள். வெளியுலகம் அவர்களுக்கு மூடப்பட்டு விட்டது.
              அண்டங்காகங்கள் இரைந்தன. குயில்கள் கொள கொளவென கத்துவதும் கூக் கூக்வென கூவுவதுமாக இருந்தன. அணில்கள் தொடர்ச்சியாக கீச்சிட்டன. செம்பகம் முக்கு முக்கென்று முக்கியது. வெளியில் யாரோ சருகுகள் சரசரக்க நடந்து போவது கேட்டது. வெளியாருக்கு உள்ளே நடப்பது எதுவும் தெரியாது.பற்றையின் மறைவாக இரண்டு சாப்பாட்டுக் கரியர்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருந்தன.