ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

சுல்பிகா - கவிதைகள்உயில்களல்ல உயிர்கள்

எனக்கும் உனக்கும்
உள்ள உறவு
கடதாசியில் எழுதப்பட்டுள்ளதாக
நீ நினைக்கலாம்
உண்மை எதுவாக இருப்பினும்
கடதாசிகள்
பலமானவை உனக்கு
எனது ஓராயிரம்
உணர்வுகளைவிட

கந்தல்களை கட்டிக்கொண்டே
அருவருப்பில்
அல்லாடும்
என் உணர்வுகள்
சாக்கடைக்குள் புரளும்
பூச்சிகள் தாபம் உனக்கும் புரியாதவை

உனக்கு உள்ளது போல
உரிமைகள் எனக்கும் உண்டு
ஏனெனில்
நான்
மானிடப் பெண்ணாகப்
பிறந்திருக்கிறேன்
எனக்கும் உனக்குமிடையிலுள்ளது
ஓர் ஒப்பந்தம் மட்டுமே
என் உயிருக்கான
உயிலல்ல

கற்பும் கதவும்

கதவுக்கும் 'கற்புக்கும்' உறவுண்டு.
கருகிப் போன புல்வெளிக்கும்
இறவாதிருக்கும் உன் தாய்க்கும்
இருப்பது போல

கேள்வி கேட்பதற்கு
உனக்குள்ள உந்தலுக்கும்
பதில் கூறமுடியாதிருக்கும்
உன் மனைவியின் மௌனத்திற்கும்
அதே உறவுண்டு

பின்னிப் பிணைந்துள்ள
இந்த உறவுகளின் பின்னால்
அடங்குதலும் அடக்குதலும்
அமைதியாக உண்டு
அவ்வாறே உயிர்களும்
அதன் உணர்வுகளும் உண்டு.