பேய்களால் தின்னப்படுபவள்
பெருக்கெடுத்து வரும்
இருளில் நனைந்தவாறு
கற்பனைகளில் வாழ்ந்திருந்த உனை
வழியனுப்பி வைக்கிறேன்
அன்பு வழிந்தோடிய இனிய உலகத்தைச்
சுற்றியெடுத்து
எரியும் தீயிடம் தின்னக் கொடுக்கிறேன்
எல்லாம் முடிந்து போன பின்
மனதின் கருணையையும் அன்பையும்
காற்றிலே கிழித்தெறிகிறேன்
குருவிச் சொண்டுகளில் காவிச் சென்றவை
கூடுகளைக் கதகதப்பாக்கிக் கொள்ளட்டும்
யாருக்கு வேண்டுமினி
நிராகரிப்பின் வேதனைகள் ?
எப்பொழுதும் ஆறுதலையும்
அலைததும்பும் காதலையும் எடுத்துக் கொண்டு
இல்லம் மீள்வாய்
பற்றியிருக்கும் கரங்களுக்குள்
அன்பினைப் பத்திரப் படுத்தி
என் பிரார்த்தனைகளுடனும்
செல்ல மொழிகளுடனும்
புறப் பட்டுச் செல்வாய்
சமையல்காரியாகவோ
சலவைக்காரியாகவோ அன்றி
உனதுயிராகவோ அதனிலும் உயர்வாகவோ
எனைக் காத்திருந்தாய்
நேயமுடன் அரவணைத்துக் கொண்ட
நிலாப் பொழுதுகளில்
எம்மிடையே கீதமிசைத்துப் பாய்ந்தோடிய
வெள்ளியோடையின் சங்கீதத்தில்
நண்பர்கள் இலயித்திருந்தனர்
எனது முகஞ்சுழிப்பும் சிடுசிடுப்பும் மோலோங்கும்
காலமொன்றைக் கொண்டு வருவாய் என்பதை
எவருமே ஏற்காதிருந்தனர்
நினைக்கும் பொழுதெலாம்
துயர்மிகைத்திடுமோர் வலி தரும் விதி
ஏன் வாய்த்தது பேரன்பே?
சாட்சிகளை முன்னிருத்தி
வேதவசனங்களை ஒப்புவித்து
கணவனாக மாறினாய்
நீ அழைத்து வந்த பேய்களிடம்
உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்
இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத
கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்
கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த
காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு
வெளியேறிப் போய்விட்டது
எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று.....