ரஞ்சகுமார்
சிறுகதை - மோகவாசல் தொகுப்பிலிருந்து.
சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஓர் அரசமரம். நடந்து போகிறவர்களின் தலைகளை வருடிக்கொடுப்பதைப்போல, கிளைகளைத் தாழ்ந்து தொங்கவிட்டபடி.
கீழே அழகிய தூய பீடமொன்றில் கண்மூடி ஏதோ அதிசய உலகத்தை நிஷ்டையில் தா¢சிக்கும் புத்தனின் சிலை.
ஒரு பள்ளிக்கூடம், ஏதோவொரு 'பாலிக மஹா வித்தியாலய' என்று பெயர். பையன்களும்கூடப் போனார்கள்!
சிறு பஸ் நிலையத்திலிருந்து கடைத்தெரு தொடங்குகிறது. அங்கிருந்து 'சறுக்கீஸ்' விட்டால் அந்தத்திலிருக்கிற கருவாட்டுக் கடையில் முடிவடைகிறமாதிரி லாவகம் கொண்டு வளைந்து போகிற தெரு. பளபள வென்றிருந்தது. இருபுறமும் புகையிலையும், வெற்றிலையும், அரிசி, பருப்பு, கருவாடு விற்கிற கடைகள். சங்கக்கடை. 'சாளி'யின் சாப்பாட்டுக் கடை, ரெக்கோடிங் பார் ஒன்றுமிருந்தது. எனக்கு சுருட்டுக்கடையில் மூச்சு வாங்குகிறபடிக்கு வேலை; நிமிர்ந்து பார்க்க நேரமில்லாத வேலை!
ஓட்டு வீடுகள் வலு குறைவு. களிமண்ணும் நெறியற்றுப் போன காட்டுக் கம்புகளும் கொண்டு சுவரெழுப்பி, தென்னங்கீற்றுகளால் வேய்ந்த வீடுகள், விசாலமாகவே இருந்தன.
பொலிஸ் கிடையாது. உப தபாற்கந்தோருண்டு. வெள்ளியும் புதனும் முறை வைத்துக் கூடுகிற சந்தை. அரசமரத்துக்குப் பின்னால் கூடாரங்களிட்டு கூறி விப்பார்கள். வாயகன்ற மண்பானைகளில் காய்ச்சிய தேங்காயெண்ணெய்யும், எருமைத்தயிரும் காற்றில் சுகந்தத் தாதுகளைப் பரப்பும்.
அடிக்கடி நினைத்துக் கொண்டு மழை ஒரு பிடி பிடிக்கும், போகிற போக்கில் குசாலாக கண்ணடித்துவிட்டுப் போகிற விளையாட்டுக்காரப் பெண்ணைப்போல, சில நிமிட நேரங்களில் ஓய்ந்து மறுபடி வானம் வெளிக்கும்; துடைத்து ஏற்றிவைத்த சிம்னிவிளக்கு மாதிரி.
எல்லோரும் ஆற்றுக்குத்தான் குளிக்கப்போவார்கள். நானும் அருளும் பாதி விடியுமுன்னே போவோம். அருள் சுருட்டுப்புகைத்தபடி 'சாளி' கடைக்கு பக்கத்திலிருக்கிற முடுக்கில் நுழைந்து விடவிடென்று நடந்து போவான். தென்னந் தோப்புகள் தெரியும். அழகியருத்தி ஒருக்களித்துச் சயனித்துக் கிடப்பதென நிலத்தைச் செதுக்கியிருந்தது. தோப்புகளுக்கிடையே பெயர் தெரியாத பற்றைகள். நம்மூரின் பாவட்டைப் புதர்களை ஞாபகம் காட்டின. அந்த நெடி கிடையாது. தொட்டால் ஒடிந்துபோகிற தன்மையும் இல்லை. கம்புகள் வலு மிகுந்திருந்தன. இலைகளும் தோற்றமும் பாவட்டை மாதிரி. எறும்பூர்ந்த தடங்களென ஒற்றைச் சுவட்டுப் பாதைகள் வகிடெடுத்துத் தெரியும்.
ஒரு பெண்ணின் மார்புகளைப் போன்று இலயிப்புடன் வளைந்தபடி ஏறி இறங்கும் ரோட்டு பளபளவென்று திடுமென முன்னேவிரியும். இது கடைத்தெருவிலிருந்து குறுக்கே பிரிந்துவருகிற பாதை, மார்பின் நுனிக்காம்பில் வலதுகைப் பக்கமாக சுநீதா முதலாளியின் பேக்கரி. இன்னும் போக ரோட்டுக்குக் கீழால் கள்ளத்தனமாக வருகிற மாதிரி 'சளசள' சத்தத்துடன் ஆறு எதிர்ப்படும். பெயர் தெரியாத ஆறு. தண்ணீரில் களிமண் நிறம் நிமிர்ந்து பார்த்தால் எதிரே தொடத்தொட விலகிப் போகிறதென மலைச் சிகரமென்று ஆசைகாட்டும்.
மாங்கொட்டை போட்டுத் தத்தி தத்தி ஓடலாம் என பாறைகள் ஒழுங்கற்று தெற்றுப் பற்களைப் போன்று தண்ணீருக்குள் துருத்திக்கொண்டு நின்றன. கொஞ்சதூரம் இறங்கினால் ஆளுயரத்துக்கு 'ஜல்' என்று நீர் சரிந்து விழுகின்றது. ஒரு யுகம் கழியட்டும் என்று விச்ராந்தியாக தலையை இதமாகத் திருப்பித் திருப்பிக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கலாம். உச்சியில் முத்தமிட்டுக் களைத்துப் பிரிந்து போவதென 'ஓ'வென்று அழுதவாறு தண்ணீர் பாயும்.
மற்றபடி எங்கும் போலவே இவ்வூரிலும் சனங்கள். சனங்கள்! ஒருசாண் வயிற்றுக்கும் ஒருமுழத் துணிக்கும் ஆலாய்ப் பறக்கிற சனங்கள்!
திண்ணிய மார்புகளை இறுக்கிக் காட்டும் ரவிக்கைகளைப் பூட்டி, ஒற்றைச் சீத்தைத் துணிகளில் கம்பாயம் கட்டிய பெண்கள்.
காய்ச்சிய தேங்காயெண்ணெய்யைப் பூசி தலைமயிரை வழித்தெடுத்து, பின்னுச்சியில் சிறு பாக்களவு குடுமி வைத்திருக்கிற ஆண்கள், கடைசியில் 'களுசுருட்டு' கேட்பார்கள்.
ஏழு மணிக்கெல்லாம் கீழேயிருந்து மெதுவாக மேலேறிவரும் ரோட்டில் வெள்ளைப் புறாக்கள் மாதிரி பள்ளிக்கூடம் போகின்ற குழந்தைகள். 'கொப்பிபொத்' உம் 'பன்சில்' உம் வேண்டுமென்றே சற்றுநேரம் வீணடித்துவிட்டு வாங்கிப் போகின்ற குமா¢கள்.
இந்தக் கபரக்கொய்யாக்கள் மட்டும்....?
எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று சொல்லமுடியாது. பெயர் தெரியாத அந்தப் பற்றைக்குள் சரசர வென்று அரக்கிக்கொண்டு போகும்.
தலைக்கு மேலே சளசளவென்று தண்ணீர் விழச் 'சுகம் சுகம்...' என முனகிக்கொண்டே குளிக்கிறபோது வாயைப் பிளந்து கொண்டு, துருத்தித் தெரிகின்ற மூஞ்சியில் மூக்குகள் விரிந்து, துவாரங்கள் பெரும் பொந்துகள் என்று தெரியக் கள்ளத்தனமாகக் கிட்டவே வந்துவிடும்.
நேரம் காலமற்று சோடி சேர்ந்தபடியே தண்ணீருக்குள் ஊறி வெடித்துவிடும் என்று அச்சங்கொள்ள வைக்கும்படி இறுகிப் பிணைந்து புணர்ந்தபடியே புரண்டு புரண்டு ஆற்றுக்குள் நெறிவன.
அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எரிச்சல்மிகக் கொள்ளும்படி முன் கதவில் 'படீர்' என்று ஓசைஎழ வாலைத் தூக்கிச் சுழற்றி ஒரு சாத்துச் சாத்தும். வால் பட்டால் சதையைப் பிய்த்து எடுத்துக் காகங்களுக்கு விருந்து போடுகிறமாதிரி என்ன ஒரு வலிமையான சொடுக்கல்! கத்தி முனைகள் மாதிரி. செதில்கள் குத்திக்கொண்டு நிற்கும்.
இன்னுமொன்று இருந்தது, அசாதாரணமாக நெஞ்சில் துருத்திக்கொண்டு....!
கடைக்குப் பின்னே தோட்டத்து லயன்கள்மாதிரி வா¢சையாகக் காம்பராக்கள் இருந்தன. நேரே அடுத்தது காமினி...மீன் வியாபாரிக்கு. அடுத்தது சோமரத்னவுக்கு. அவனுக்குக் காய்கறி வியாபாரம்...பிறகு லியனமாத்தய அப்புஹாமிக்கு...அதற்கும் அடுத்தது ஆரியவதி ஆமினேக்கு...மணக்க மணக்க அப்பம் சுட்டுத்தருவாள்...இப்படி...ஏழோ எட்டுக் கழிய கடைசிக் கோடியில் எங்களுக்கு ஸ்ரோர்! புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப் பெட்டிகளும் வழியவழிய அடுக்கிக்கிடக்க, ஒரு சோடிக்குப் படுக்க இடம் வசதிப்பட்டது போல் பொ¢ய மேசை...சுறுட்டுக்குக் கோடா தடவுவதற்கு. மூன்றுபேருக்குப் படுக்கப் பாய் விரிக்க இடம் மீந்திருந்தது தரையில். பின்னால் ஒரு சாய்ப்பு இறக்கி காட்டுக் கம்புகளாலும் பச்சை மண்ணாலும் 'அறுக்கை' பண்ணித் தந்திருந்தார்கள். ஏறக்குறைய இதேமாதிரி பக்கத்து அறைக்குப் பின்னாலும் ஒரு சாய்ப்பு இறங்கியிருந்தது. தூய்மையான ஆற்றுமணல் சொரசொரவென்று பரப்பியிருந்தது. அதில் கோலமிழைத்தது போல ஒரு அழகிய பாதங்கள் நெடுகிலும் படர்ந்து இருந்தன. தொட்டுக் கண்களில் ஒற்றி ஒருகணம் மூடி அனுபவிக்கச் சொல்லும்படியாக.
சுற்றிலும் அரைவட்டமாக புல்லுச் செதுக்கியிருந்தது. தென்னைக்கும் சாய்ப்பு உச்சிக்குமாக ஒரு 'வயர்' ஓடியது, இளைய பெண்ணொருத்தியின் ஆடைகள் பெரும்பாலும் அதில் வெயில் குளித்தன.
இரவுகள் முற்றத் தொடங்கும்போது சுருட்டுக்கு கோடாதடவ வேண்டும். "முணுக் முணுக்..." என்று மண்ணெண்ணெய்ப் புகையினைக் கக்கிக்கொண்டு விளக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அருள் சுருட்டுப் புகையுடன் சேர்த்து பொய்புழுகுகளையும் அநாயாசமாக ஊதித் தள்ளிக்கொண்டிருக்க...கைகள் பரபரவென்று சுருட்டுக் கட்டுகளைப் பிரித்துப் பிரித்து-...கோடாச் சட்டிக்குள் தோய்த்துத்...தோய்த்து....
இருந்தாற் போல இரவின் நிசப்தத்தைத் தொலைத்து விட்டு ஒரு பாடல் வரும். "ஹ¤ம்" என்று கூடவே சுருதி சேர்க்கிற ஆர்மோனியம் இழையும். மண்ணெண்ய்ப்புகை மயங்கி மயங்கிச் சுழலும், சுவர்களும் செவிகளுக்குப் பின்னே கைகளைக் குவிப்பதெனத் தோன்றும் புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப் பெட்டிகளும் மரத்துப்போய் பெரும் கரு நிழல்களைச் சுவா¢லே படியவிடும்.
நெலா கண்ன பா(?)
மகே அத்த திகெ நா(?)
அனே !ஐ தவ மல் பிப்பிங்!
சீறும் நாகப் படத்தின் கவர்ச்சியென ஒரு குரல் அழகாகக் கொலைசெய்யும். 'சொள சொள' எனத் தலையை முத்தமிட்டுக் கழிந்து போகும் நீரென சுவர்களைத் தழுவி இதமாகத்துளைத்துக் கொண்டு நாதம் பிரம்மமெனப் பெருகும்.
அழகிய மலர்கள் மலர்ந்து கொண்டேயுள்ளன!
எனது கைகள் பறிக்கவென நீளும்போது
அவை கூழங் கைகளாய்ப் போவதென்ன?
ஓ!.... அழகிய மலர்கள்,
இன்னும் மலர்ந்துகொண்டே இருக்கின்றன.
கல்லா மேசைமீது அரைத் தொடைகளில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, நீலக்கல்லு மோதிரம் சிமிட்ட சுநீதாமுதலாளி தொடைகளில் தாளம் போடும்போது கேட்டேன்.
"ஆர் அந்தப் பெட்டை? பக்கத்துக் காம்பராவிலை பாட்டுப் பாடிக்கொண்டு..."
"அவளரு மாதிரியான...பெட்டை!..."
'தனியவோ இருக்கிறவள்!.."
"சாய்...கனபேர் வந்து போவினமே..."
கனபேர் வந்துபோனார்கள்.
கண்ணாடி போட்ட கொக்கென தொங்கலுடன் விசுக்கென நடந்துபோகும் ஒரு பெண்..., ஒரு டீச்சரம்மா என எனக்குள் கணக்குப் போட்டேன்.
கட்டைக் காற்சட்டை போட்ட ஒரு பையன், 'அம்மா மடியில் உட்கார்ந்து நிலாப்பார்த்து சோறு தின்னு...ராசா!" என்று சொல்லவேண்டும் போல இருக்கும்.
பிறகு,
தடித்த கண்ணாடிக்கு பின்னால் ஆழப்புதைந்திருந்த விழிகளுக்குள் இருந்து பார்வை குத்தும்படி, தாடிவைத்த ஒருவன்...' காமா சோமாவென்று உடுத்துவான்.
சாறனைத் தூக்கிக் கட்டியபடி...தொடைகளில் 'பிலு பிலு' என்று உரோமம் மண்டித் தெரியும் ஒருவன்..., தலைமயிர் நீக்ரோமாதிரி சுருண்டிருக்கும்.
மைம்மலாக இருள் மெதுவாகச் சூழும்போது வருவார்கள். இராப்பொழுதுகள் அவளுக்குக் குறுகிப் போயின. சமையல் அன்றையப் போதுகளில் மணக்கும். தீய்ந்துபோகிற மீனின் வாசனை வரும்.
மெதுவான உறுதியான குரலில் ஒரு பிரசங்கமென ஒருவன் பேசிக்கொண்டே போவான்.
சனங்கள் பெரும் மர்மத்தைக் காண்பதைப் போலப் பார்த்தார்கள்.
பெருங்கோட்டையன்றைப் பிடிக்கும் திட்டமொன்றுக்காக, அவர்கள் உத்வேகத்துடன் இருக்கிற மாதிரி தென்பட்டனர்.
கோட்டைகள் பிடிபட்டன!
றேடியோக்கள் கறுப்புக்குரலில் கத்தத் தொடங்கின. ஊர்களை அடங்கிப்போகுமாறு உத்தரவுகளைப் பிறப்பித்தன. சந்தைகளை வைத்து போயிற்று. ஆறு தனியே ஏக்கத்துடன் போனது கடைகள் கதவிடுக்குகளால் பீதியுடன் ரகசியம் பார்த்தனபோல தோற்றம்காட்டின.
றோட்டில் குறுக்கும் நெடுக்குமாக பச்சை நிறத்தில் ட்ரக்குகளும், ஜீப்புகளும் தென்பட்டன.
பின் கதவைத் திறந்து போட்டபடி ஸ்ரோருக்குள்ளேயே கிடந்தோம். கால் வைத்தால் தொடைகளில் கூச்சம் காட்டும் படி உயரே வளர்ந்த புல் கதவுக்கு வெளியே தெரிந்தது. வளைந்தபடி சூரியனை நோக்கிக் கையசைத்தபடி, ஆற்றாமையுடன் தலைவிரித்து காற்றைச் சாடும் தென்னைகள் அரற்றின.
புல்லுக்குள் கால்வைக்க அடிவயிற்றுக்குள் பிசைகிற பீதி! தொடையளவு அகன்ற கா¢ய பெரும் நாகங்கள் படர்ந்திருப்பன போல..., கபரக்கொய்யாக்கள் எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று உணராது தவிப்பதைப் போல...,
இராப்பொழுதுகள் நிசப்தமாய் நீண்டுகொண்டே போயின. பக்கத்து அறை பெரும்பாலும் மூடியே கிடந்தது. பின் சாய்ப்புக்குள் மட்டும் கால்கள் கோலமிழைத்துத் தெரிந்தன.
ஒரு முழுநிலவு நெருங்கி வந்தது. கடைக்குள் போய் சில சாடின் ரின்களைத் தூக்கிக்கொண்டு வந்திடும் அவசரம் எனக்குத் தொற்றியது.
பக்கத்து அறையின் முன்கதவு ஒருபாதி திறந்துகிடந்தது. சுவா¢லே இறுக்கிய சிறு மரப் பீடத்தில் புத்தன் உலகை மறந்த மோனத்தில் மூழ்கிப் போய்க் கிடந்தான். ஒற்றைத் தீபம் ஒன்று அரையிருளில் சோபை இழந்து துடித்துக் கொண்டிருந்தது.
மண்டியிட்டு ஒருக்களித்தவாறு ஒரு கையைத் தரையில் ஊன்றிய படி அவள்... முகத்தில் ஒருகோடி சூரியர்கள் உதயமாகிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டில், வெள்ளை விரிப்பு, ஒரு மேசை, குவிந்து கிடந்த புத்தகங்கள். 'கூஜா ஒன்றை மூடிக் கவிழ்ந்தபடி ஒரு தடித்த 'கிளாஸ்'. சுவரோடு ஒட்டிப் பதிக்க அலுமாரி ஒன்று.
மற்றபடி எங்கும் தூய்மை.
மெதுவாகத் தயங்கித் தயங்கி உதயமாகும் நிலவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் போல...,
நண்பர்களை எண்ணித் துக்கித்திருந்தாள் போல...,
இரவு பிசாசுபோலத் துரத்திக்கொண்டு வந்தது. நிலவு தனித்துப்போய் இராப்பாராக்காரனாக ஒளியிழந்து ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது.
குழம்பிக் குழம்பி உழன்றபடி சொப்பனாவஸ்தை கொடுக்கின்ற நித்திரை. கபரக்கொய்யாக்கள் வாலைச் சுழற்றி காற்றில் விசுக்குகிற சத்தங்கள் கேட்டன.
சிறு தொலைவில் ஏதோ உறுமியது. பதில் சொல்வதுபோல இன்னுமொன்று. உறுமி உறுமி நெருங்கி வருவனபோல்...,
வெளியே சப்பாத்துக் கால்களில் சந்தடிகள் 'திமுதிமு' என்று கேட்டன. கதவை உதைத்துத் திறந்தார்கள்!
அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எரிச்சல் மிகக் கொள்ளும்படி கதவில் 'படீர்' என வாலைத் தூக்கிச் சுழற்றி ஒரு சாத்துச் சாத்தும் கபரக்கொய்யாக்கள் போல...,
'மொடமொட' வென்று எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்தனரென..., கட்டிலை கொரகொரென இழுத்துத் தள்ளுவதென..ஏதோ ஒரு இனிய வஸ்து நிலத்தில் படீரென வீசப்பட்டு சிதறுண்டு போனது போல...,
காட்டுக் கூச்சல்களாக கேள்விகள் உறுக்கின.
தலைக்குமேலே சளசளவென்று தண்ணீர்விழத் திளைத்து களிக்கினபோது, கள்ளத்தனமாக அசிங்கத்தை வீசிக்கொண்டு கிட்டவே கபரக்கொய்யாக்கள் வருவதென......
....ஏதோ ஒன்று....
எந்நேரமும் சதா துள்ளலுடன், கூரிய கொம்புகளால் பூமியை உழுது கொண்டு, பீரிடும் வீரியத்தை ஒடுக்க இயலாது தவித்தபடி பிணையல்களை அறுத்துவிட உன்னிடும் ஒரு காளை...பிணையல்களை அறுத்துவிட....!
பூமியில் விழுத்திப் புரட்டினார்களென...மூஞ்சியில் ஒருவன் பாரமாகக் குந்தியிருக்க கால்களை அகலவே பிரித்து அமுக்க... தொடைகளின் நடுவே...தொடைகளின் நடுவே... வலிய கம்புகளால் விதைப்பைகளை நசித்து காயடிப்பதேயென.... பொறுக்க முடியாத வலியுடன் பீதியும் சேர்ந்து இயலாமையுடன் அவலமும் சேர அடிவயிற்றிலிருந்து நாதியற்ற அபயக் குரல் எழுந்தது. சுவர்கள் அதிர்ந்தன.
கால்களைப் படபடவென்று தரையில் போட்டு அடித்தான் போலும். குரல் தேய்ந்து தேய்ந்து போக...இறுதிக்கணங்களில் சில முனகல்களே மிஞ்ச, அதுவும் போய்...
பிறகு,
வேகமாக மூச்சு வாங்கும் சப்தம் மட்டும்.
நிலவு மிகவும் பயந்து போய் முகம் வெளிறி மேற்கே ஓடிச் சென்றது. சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்துவந்தான்.
முரட்டு பூட்ஸ¤கள் தாம் தூமென பூமியில் தடமுழுது சென்றன. கூந்தலைப் பற்றி வலிந்து இழுத்தபடி சென்றனர்.
புயலில் உருக்குலைந்த ஒரு கொடி போனது, தொடைகளில் நடுவிலிருந்து குருதி பெய்தபடி...
சனங்கள் கந்தையை மறந்துபோய் இதைப் பார்த்தபடி நின்றனர். கையினால் ஒரு சொடக்குப் போடும் நேரத்தில் ஒன்று...பத்து...நூறு...கோடியென கபரக்கொய்யாக்கள் பெருகின.
காலம் நேரமற்று முழுநாளும் புணர்ந்தவாறு தண்ணீருக்குள் நெடுநேரம் புரள்கின்ற...,
தனைமறந்து அருவிப்பெயலில் தலைமுழுகிச் சிலாகிக்கும்போது நீட்டிய மூஞ்சியில் மூக்குத் துவாரங்கள் பெரும் பொந்துகளெனத் தெரிய...,
பற்றைகளுக்குள் சரசரவென அரக்கிக்கோண்டு ஏதோஒரு இரையைக் குறிவைத்துக் கவ்வவென வாயை 'ஆ'வெனப் பிளந்தபடி கள்ளத்தனமாக....,
எங்கணும் கபரக்கொய்யாக்கள் பெருகின, குட்டியும் முற்றலுமாக...
சனங்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
வாலைச் சுழற்றி ஒரு வலிந்த சொடுக்கலில் சதையைப் பிய்த்தெடுத்துக் காகங்களை கபரக்கொய்யாக்கள் விருந்துக்கழைத்தன!
சனங்கள்.
காமினி, அப்புஹாமி, ஆரியவதி ஆமினே....,
சுநீதா முதலாளி....அருள்..., சாளி,
சனங்கள்!
ஒருசாண் வயிற்றுக்கு ஆலாய்ப் பறக்கிற சனங்கள்!
சனங்கள் சும்மா பார்த்துக்கொண்டே இருந்தார்கள்!!
{கபரக்கொய்யா:-
இது முதலைக்குத் தம்பி, உடும்புக்கு அண்ணன், முதலையைப் போல அவ்வளவாகத் தீங்கற்றது. ஆனால் உடும்பைப் போல சாதுவும் அல்ல. நீரிலும் நிலத்திலும் உயிர் வாழும். மலைப்பாங்கான ஆற்றோரக் காடுகளில் மிகவும் பெருவாரியாகக் காணப்படும். அசிங்கங்களை உண்டு உயிர்வாழும். சிங்களப் பகுதிகளில் இதை அதிகமாகக் காணலாம்.]