புதன், மே 16, 2012

நீருக்கு கரையத் தெரியாது


 பைசால்-கவிதை

தண்ணீரைக் கரைப்பதற்காக
அது இருக்கும் இடத்திற்குச் செல்கிறேன்
செல்லும் போது சும்மா செல்லவில்லை
ஒரு போத்தலில்
தண்ணீரும் எடுத்துக்கொண்டு செல்கிறேன்
எனக்கு தாகம் ஏற்படுமாயின் கொஞ்சம் நீரை அருந்துவேன்

இன்னாதான் சென்றடைந்தேன்
நீர் பற்றிப்பிடித்துக் கொண்டிருந்த ஓர் இடத்தை
போத்தலில் கொண்டுவந்த நீரை
அங்கு ஊற்றி
தரையில் கிடந்த கம்பொன்றை எடுத்து
நீருக்குள் இறக்கி அசைக்கிறேன்
கம்பு அசைகிற பக்கமெல்லாம் நீரும் அசைகிறது

கையிரண்டிலும் உப்புக் கல்லை எடுத்துக் கொண்டு
நீருக்குள் குதித்து
ஒரு ஊருக்குள் நுழைகிறேன்

அழகான அமைதியான ஊர்
தேனீர்க் கடை
சிலர் தேனீர் அருந்திக் கொண்டு
பேப்பர்க் கடை
சிலர் தினப்பேப்பர் வாங்கிக் கொண்டு
நிழல் தரும் மரங்கள்
சிலர் நிழலில் அமர்ந்து கொண்டு
தொட்டடுத்தாற்போல் பாடசாலை செல்லும் மாணவர்கள்
ஒருவன்
கீழே விழுந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டிருக்கிறான்
நானும் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுக்கிறேன்

பலரும் வேகமாக நீந்திச் செல்கிறார்கள்
ஒருவரை ஒருவர் சந்தித்து பேசுகிறார்கள்
மனைவி, குழந்தையுடன் சுற்றுலா செல்கிறார்கள்
இவர்களின் வாழ்க்கை முறைகளை எடுத்துச் சொல்லும் ஆவலுடன்
நானும் நீந்திச் சென்று
நீருக்குள் இருக்கும் அழகிய ஊரை விட்டு வெளியேறுகிறேன்
கையிரண்டிலும் இருந்த உப்புக் கல் கரைந்துபோய்விட்டது

அங்கு நான் கண்டுகொண்ட அனைவரும்
மீன் தலையுடனும்
இறால் வாலுடனும் இருந்தார்கள்

சரி
முடிவாக ஒன்று சொல்கிறேன்
நீருக்கு கரையத் தெரியாது
கரைக்கத் தெரியும்