ஞாயிறு, மே 20, 2012

தன்னமதிப்பு


றியாஸ் குரானா

என்னைப் பழியுங்கள்


இடி விழுந்து சாக
தட்டித் துறாவித் திரிய
சதி மகுத்து வந்து
சந்தியிலே சரிந்து கிடக்க

திட்டுங்கள்

முடிந்தால், அறம்பாடி
என்னைக் கொல்லுங்கள்

அது கொலையாகவே இருக்காது
நிச்சயம்.

இரவாக இருந்த சந்தர்ப்பத்தில்
மிகச் சந்தோசமாக
கற்பனைக்குள் வசித்த
ஒரு கூட்டத்தாரை
அழித்தொழிக்க,
சதித் திட்டம் தீட்டினேன்

வெளியேறி,
அவர்கள் வேறெங்கும்
வசிக்க முடியாமல் செய்ய
எதையும் எழுதாமல் தவிர்த்தேன்

தவறுதலாக பேசும்
சொற்களில் அமர்ந்தபடி
தப்பிக்க முயற்சித்தவர்களையும்
பிடித்து,
பலவந்தமாக மீண்டும்
கற்பனைக்குள் அடைத்தேன்

ஒரு சில வருடங்களுக்குள்
அந்தக் கற்பனையையும்
மிகக் கொடூரமாக அழித்தேன்

இனி எப்போதும்
நினைவில் தட்டுப்படாமல்
மறந்து விடுவதற்கென்று
வேறு வேறு கற்பனைகளை
உருவாக்கினேன்

அவைகளைப் பெருக்கி
மிகச் சௌகரியமாக
உள்ளே மறைந்து கொண்டேன்

அந்தக் கற்பனையிலிருந்து
ஒரு சிறு கவிதையைக்கூட
எழுத முடியாமல்போன
என்னைப் பழியுங்கள்
மிகக் கேவலமாக
முகத்தில் காறித் துப்புங்கள்
இப்படித்தான்
ஒரு காலத்தில் நாங்கள்
அவர்களுக்கும் செய்தோம்