திங்கள், மே 28, 2012

நீரின் முலை


 பைசால்
;
மழைநீர் வியாபாரி
வானத்தைச் சுற்றி அமர்ந்திருக்கின்றான்
கடல் பரப்பில் ஹுர்லீன்கள்
வேதமோதி நடக்கவும்
நீர் ஆவியாகின
மேகங்கள்
நீர் குடித்து வயிறு முட்டிய பறவைகளாகின
இடித்து முழங்கி பெரும் குசியைவிட்டு
குலுங்குகிறது வானம்

அந்த ஈரநீர் இறகுவளர்த்து
அறைகளின் சுவர்களனைத்திலும்
குழுமை பூசி
ஹுர்லீன்களோடு வரும்

அறைக்குள்ளிருப்பவர்கள் வெப்பத்தைக் கட்டித் தழுவுவர்
பனிக்காயங்களோடு படுத்திருப்பர்
உரத்துப் பெய்யும் மழை

ஹுர்லீன்கள் அறைக்குள் வருவர்
பாதி நனைந்ததும் பாதி நனையாததுமான ஆடையுடன்
அங்கே ஒரு கிழவர்
உடல் நனையாமல் குடை பிடித்துச் செல்கிறார்

இந்தச் சிறு மழையின் கற்களால் எறிந்தால்
என் குடை உடையுமோ
என்று ஒரு கிண்டல் சிரிப்பு
பொக்கை வாய்க்குள் ஒரு பூகம்பம்

நிலமெங்கிலும் தேங்கி நிற்கும்
நீர்
மழை துளிகளாக விழுகின்றன
நீர் முழுவதும்
முலைகள் தோன்றக்கண்டன குழந்தைகள்
 
மழைநீர் வியாபாரி
நீரை அள்ளிக் கட்டிக்கொண்டு
வேறொரு இடத்திற்குச் செல்கிறார்
இடித்து, முழங்கி, மின்னி பெரும் குசியைவிட்டு
குலுங்குகிறது வானம்
மீண்டும் வானத்தைச் சுற்றி அமர்கிறார்

நல்ல மழை இருட்டிக் கிடக்கிறது
நேரத்தோடு வீட்டுக்குப் போவோம் வாருங்கள்