புதன், செப்டம்பர் 12, 2012

காகம் கொத்தித் தின்ற எழுத்து

ஹெச்.ஜி.ரசூல்
ஒருவித பயத்தின் தவிப்போடு
அக்கம்பக்கம் பார்த்து
உதிர்ந்து மண்ணில் கிடந்த மாம்பழத்தை
தன் கூரிய அலகால் கொத்தித் தின்னுகிறது
ஒரு காகம்.
மாமரத்தின் கிளைகளின் அசைவில் தொற்றிய
பயத்தால்
பறந்தோடிய காகம்
மீண்டும் வந்து மாம்பழத்தைக் கொத்துகிறது.
வாசித்துக் கொண்டிருந்த குரானாவின்
நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு
கவிதை எழுத்துக்கள் ஜாலம் செய்தன.
பிரதியை மூடிவைத்து
சிறகைப் பொருத்திக் கொண்டு
மேகத்தில் சற்றுநேரம் பறந்து திரிந்தேன்.
ஆவல் பொங்க திரும்பவும் கீழிறங்கி
மூடிய பிரதியை திறந்தபோது
வெற்றுத்தாள்களே மிஞ்சி இருந்தன.
அப்பக்கங்களில் அச்சிடப்பட்டிருந்த
கவிதைகளைக் காணவில்லை.
மாம்பழத்தை கொத்தித் தின்ற காகம்
ஒருவேளை
குரானாவின் எழுத்துக்களையும்
கொத்தி தின்றிருக்கக் கூடும்…

நன்றி: புதுஎழுத்து மனோன்மணி