செவ்வாய், அக்டோபர் 09, 2012

கணேஷின் மூன்று கவிதைகள்


விபத்து
 
காற்றடித்த வேகத்தில்
காம்பொடிந்து தலை சாய்ந்த மலருக்குள்
தேன் குடித்த களைப்பில்
படுத்திருந்த பூச்சி
தலை குப்புர
தரையில் விழ
அதன் உடலொட்டிய
மகரந்தத் தூள் சிதறி
பக்கத்து செடியில்
பூத்திருந்த பூவுக்குள் சேர்ந்தது.

நூல்
இழுத்துக்கட்டிய
நூல் பொம்மையென
வார்த்தைகள் கட்டி உருவானது கவிதை.
கட்டின் முடிச்சு இறுக்கம் தளர்ந்திருப்பது
பொருட் படுத்தப்படாமல்
புத்தக அலமாரியை அலங்கரித்தது.
சீக்கிரமே
கருத்து கலைந்து
அர்த்தம் அவிழ்ந்து விழ
வண்ண வண்ண நூல்களாய்
வரிகள் மட்டும் மிச்சமிருந்தன.

சாம்பல் நிறம் - (பேராசிரியர் மாலதி மாதுர் எழுதிய ஆங்கில கவிதை – “Grey”- யின் தழுவல்)

யதார்த்தத்தின் நிறம்.
இருட்டு, வெளிச்சம் – இவற்றின்
கலவை.
களைத்துப் போன வானம்
போர்த்திக்கொள்ளும் அமைதி.
ஒளிரும் பகலை
தன் கைகளால் தாழடைக்கும்
இரவின் நிழல்.
இளம் கருநிறச்சாயலில்
மெல்ல கட்டவிழும் பதாகை.
கனிந்த, முதிர்ந்த இசைக்குள் ஐக்கியமாகப் போகும்
இளம் சுருதி.
அதிரப் போகும் இடி மற்றும்
பெய்யப் போகும் மழைக்கான அறிகுறி.
சொற்களின் செயல்களின் நிறம்.
கறுப்புமின்றி வெளுப்புமின்றி
இரண்டுக்கும் நடுவிலான
சாம்பல் நிறம் ; ஒப்புதலின் நிறம்.