புதன், அக்டோபர் 10, 2012

ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்


இஸ்ராயிலின் முகம் பார்த்தேன்

இஸ்ராயிலின் கைப்பிடித்து நடந்த
என் நெஞ்சமெங்கும் பிரளயம்
பறத்தலின் நீட்சி
மேகக் கூட்டங்களைத் தாண்டிச் சென்றது.
அழைத்த குரல்களுக்கு
பதில் சொல்லின மேகங்கள்
முன்னூற்று அறுபத்தைந்து வருடங்கள்
உயிர்வாழ்தலைப் பற்றிய பிரம்மைகள்
பொய்த்துப்போன துயரத்தில் மூழ்கி எழுகிறேன்.
மரணத்தோடு கைபிடித்து
அன்றாடம் வாழ்வதெப்படி சாத்தியம்..
என்னை சிறகுகளில் சுமந்து செல்ல முயன்ற
இஸ்ராயிலின் முகம் பார்த்தேன்.
கருணையும் பரிவும் நிரம்பி இருந்தது.
உயிர் வாங்கும் ஒரு பயங்கரவாதியிடம்
இப்படியொரு சாது தோற்றமா..
உயிர்வாங்கும் மலக்குக்கு
குடும்பம் இல்லை
குழந்தைகள் இல்லை.
இழப்பின் துயரங்களுக்கு
எதுவுமில்லை ஈடாக..
நரகம் பற்றியோ சுவனம் பற்றியோ
தீர்ப்பு எழுதும் கலம்களை முறித்துப் போடச் சொல்லி
அல்லாவிடம் வற்புறுத்துகிறேன்..


ஏமாற்றிய கடல்

என்னை தரதரவென இழுத்துச் சென்று
கடலுக்குள் மூழ்கடித்த இஸ்ராயீல்
கரைதிரும்புவதற்குள்
ஒரு கெண்டைமீன்குஞ்சாய்
நீந்திக் கொண்டிருந்தேன்.
கடலுக்குள் 
ஏதுமறியா உலகம் விரிந்திருந்தது.
செய்வதறியாது திகைப்புற்ற இஸ்ராயீல்
திமிங்கலத்தின் மீதேறி துரத்தினார்.
எனது துரித நீந்துதலை
கண்டறியமுடியாத துக்கம் அவருக்கிருந்தது.
கடலை வற்றச் செய்வதற்கு
துஆ கேட்டபடி இருந்தார்.
ஆயிரமாயிரம்
அதிசயங்களைக் கொண்டதொருகடல்
நிலை கொள்ளாமல் தவித்தது போக
திரும்பத் திரும்ப பொங்கியவாறு
என்னை அணைத்தபடி இருந்தது.
துரத்திவந்த இஸ்ராயீல்
சுழியில் சிக்கியபின் திரும்பி வரவே இல்லை.