சனி, டிசம்பர் 22, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 13


121
எனது கண்களுக்குள்ளிருந்து அவளை வெளியேற்ற வேண்டும். எவ்வளவு அழுத போதும் அந்தக் கண்ணீரில் கூட அவள் மூழ்குவதில்லை.

122
ஒரு ஊரில் ஒரு இரவு இருந்தது.
அங்கு உறக்கமே இல்லை
நினைவுகளுக்கிடையே
அங்கு இலவச விமான சேவை இருக்கிறது
ஒரு நினைவிலிருந்த புறப்பட்டு
மறு நினைவில் இறங்கும்போது
பேரின்பத்தின் கோபம் நம்மை
அனைத்திடங்களிலும் வரவேற்கும்.
தெரியாதவர்களுக்காக அதன் பெயர் காதல்.

123
அந்தச் சித்திரத்தினுள் பனி சிக்கிக் கொண்டது.காப்பாற்ற வேண்டும்.முதலில் என்ன செய்யலாம்..?

124
தான் கூட்டி வந்த பொய் மானை
எனது காடெங்கும் அலையவிட்டாள்
உண்ட களைப்பில்
நீரருந்தி மரத்தடியில் உறங்கியது
அருகில் சப்தமிடும் மலையருவி
மானைத் தொந்தரவு செய்யவில்லை
எழும்பியதும் கையோடு கூட்டிச் சென்றாள்.

125
நாளை எனக்கு ஆறு வயதாக இருக்கும்.
முதன்முதலாக பாடசாலைக்குச் செல்வேன்
என நினைத்துக்கொண்டு உறங்கப்போகிறேன்
என்ன நடக்கிறதென்று நாளை பார்க்கலாம்.
இன்று உறங்க துணைக்கு ஏதாவது நினைவு தேவை.

126
எனக்கென்று சொந்தமாக
ஒரு நதியிருந்தால்,
எனது காலடிகளைப் பின்தொடர்ந்து வராது
உனது தெருவில் மட்டுமே ஓடும்
அங்கிருந்து என்னை அழைக்கும்
ஆம், இதற்காகத்தான்
சொந்தமாக நதி வைத்திருக்க
வசதியான கற்பனையை தரவில்லை என்று
நீ சொன்னாய்.

127
ஒலி புகைந்து கொண்டிருக்கிறது.
பெயர் மாறியதே காரணம்
தற்போது ஒலி எங்கிருந்து வந்தது
என்பதைவிட,
புகையை வெளியேற்றுவதே முக்கியம்
அனைவரும் அது பற்றி சிந்தித்துக்
கொண்டிருக்கின்றனர்
தனது எதிரொலியை
அது இழந்திருக்கிறது என்பதே என் கவலை.

128
இப்படித்தான் முயல் நித்திரை விட்டு எழும்பியது
கனவுமற்று நினைவுமற்று

129
வெளியேறும் ஒவ்வொரு தருணமும்
அன்னா இன்னா மழை வரும் என்பதுபோல
வானம் இருண்டு விடுகிறது.
வானிலையை பின்பற்றுபவன்
என்று குறிப்பெழுதிவிட்டு
அன்று வீட்டிலே தங்கிவிட்டேன்.
வானிலை அறிக்கை
பொய்த்துவிடவும் கூடியது
எனவே, தப்பிக்கலாம்.

130
ஆமாம் என்று
ஒவ்வொரு சொல்லாக
கடந்து சென்றுகொண்டிருக்கிறேன்
தாண்டிச் செல்லும் சொற்கள்
வேகமாக காற்றில்
ஒழித்துக்கொண்டிருக்கின்றன.
வழமைக்கு மாற்றமாக
தொண்டையிலிருந்து குறுக்கு வழியால்
புறப்பட்டு வருமா என
நான் காத்திருக்கிறேன்.
காதலுக்கும் முத்தத்திற்கும்
இடையில் உள்ளது என்பது மட்டும்தான் தெரியும்.
சொல் எதுவென்று தெரியாது.