வியாழன், டிசம்பர் 20, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 12


111
நாட்களின் மீது இரவு சரிந்து வீழ்ந்தது.
வழக்கம்போல பாட்டி தன் சத்தியத்தைக் காப்பாற்றினாள்.
ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாவாம்
ஆரம்பித்தது கதை
அந்தப் பாட்டி இன்னும் சாகவில்லை என்றார் தாத்தா.

112
எனது நிழலுக்கு பெயர் இருக்கிறது
பெயர் சொல்லி அழைக்காமல்
எதற்கும் அது ஒத்துழைப்பதில்லை.
இப்படிச் சொல்லவும் அதை ஏற்கவுமான
நிலையில் மனிதன் மாறும்வரை
போராடுவோம்.

113
நேரகாலத்தோட இன்று இரவு வந்துவிட்டது.
நான்தான் சற்று தாமதமாகவே அதற்குள் நுழைந்தேன்.

114
குளத்தின் அமைதி ஆழமானதாகும். அலைகளை முடிவற்று விழுங்கிக்கொண்டிருக்கிறது.குளத்திலிருந்து கடலின் அலைபோல ஒன்றை உருவாக்க இதுவரை யாராலும் முடிந்ததில்லை. இப்படி நம்பிக் கொண்டிருப்பவர்கள் அவளை இமைக்கச் சொல்லிப் பாருங்கள். இமை மடல்களுக்கள்ளிருந்து அலையலையாக பெருகும் கண்ணீரை. பெண்களின் கண்களுக்கு மிக அருகில் கண்ணீர் குடியிருக்கிறது.

115
கதவைத் திறக்கிறேன்
காற்றை உள்ளே அழையுங்கள்
நான் அழைத்தால் வராது
உள்ளே நான் இருப்பதைக்கூட
சொல்லக்கூடாது
கண்டபடி மரங்களை அசைக்க
நான் சம்மதிப்பதில்லை
அந்தக்கோபம்தான் வேறொன்றுமில்லை.

116
படுக்கையறையில் மறைத்து வைப்பதற்கு, எக்காலத்திலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு ரகசியம் தேவை.

117
மரங்களற்று விரிந்த வெற்றிடமாக வானத்தை பார்த்தபோது,
தனிமை நினைவுக்கு வந்தது.
உறக்கம் தனிமையில் சாத்தியமாகிறது
உறங்கிய பின் தனிமை சாத்தியமில்லை
அங்கே யாராவது வந்துவிடுகிறார்கள்
இப்போதெல்லாம்,
ஆப்பிளும் பாம்பும் தொடர்ந்து வருகிறது
ஏவாளை மாத்திரம் காணவில்லை
ஆதம் வேண்டாம் அதற்குப் பதிலாக நான்.

118
வழமைக்கு மாறாக என்றாவது ஒரு நாள், தலையணை தலையின் கீழ் விடியும் வரை இருக்கும் என நம்பித்தான் இன்றும் உறங்குவேன்.

119
பின், குறுகிய வழிகளினூடாக நீண்ட நேரம் நடந்து என் வீட்டுக்கு வந்தது ஆறு.


120
வானத்தை புதுப்பிக்க வேண்டும்.