செவ்வாய், டிசம்பர் 25, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் -14


131
எழுதி முடித்துவிட்டு எழும்புகையில்
கவிதையிலிருந்த சிறுவன்
உங்கள் பெயர் என்ன என்று கேட்டான்
பொறுப்பேற்காமல் சொல்ல
பதிலின்றி நிற்கையில்,
துணைக்கு ஒருவர் வேண்டும் என்றான்
என்னோடு விளையாடிச் சலித்த நிலையில்..

132
சத்தமில்லாமல் ஜன்னல் திறக்கிறது
திறக்கமாட்டேன் என்ற நம்பிக்கையில்
கதவினருகே
யாரும் பாடிக்கொண்டிருக்கவில்லை
ரகசியமாக ஜன்னலை மூடிவிட்டேன்

133
நிழல்கள் ஒவ்வொன்றாக இறந்துகொண்டிருந்த
மாலையில்தான்,
திரும்பிச் செல்வதற்காக
காற்று காத்திருக்கிறது
அந்த நேரம் பார்த்து பறவைகள் குறுக்கிடவில்லை.
அவ்வளவு நேரமாக யாருக்கா காத்திருந்தது?

134
திருட்டுத் தனமாக அறைக்குள் நுழைகிறது குளிர்.
இன்றுபோய் நாளை வா
வேறு எப்படி எனது தனிமையை விளங்கப்படுத்துவேன்.

135
இரவின் வாசல் கதவுகளை மிக எளிதாகத் திறந்து உள்ளே நுழைகிறது நினைவுகள்.கடலில் நடனமிடும் தேவதைகளைப்போல, நம்ப முடியாத துயரங்களை உருவாக்கி அதனூடாக தப்பிச் சென்றுவிடுகிறது.பின், இரவுமில்லை நினைவுமில்லை.ஏதாவதொன்று இருப்பதுபோல ...

136
வள் வள் என கர்ச்சித்தது சிங்கம்.
அதுதவிர வேறுவழியேதும்
அப்போது தென்படவில்லை
சமயம் வரும்போது
சிலிப்பிக்காட்டும்.
அது வரை நாயைப்போல நடிக்கிறது.

137
இரண்டாம் உலகப் போர்
உச்சத்தை அடைந்து கொண்டிருந்தது
பதட்டம்
பயம்
பரபரப்பு
செய்வதறியாமல் எல்லோரும்
திகைத்து நின்றனர்.
நான் தூங்குவதற்கு தயாரானேன்
கதையைச் சுருக்கமாக சொல்வதற்கு
ஒரு நாவலை எழுதியிருக்கிறான்.
தூங்கி விழித்ததும்
போர் தொடரும்...
அதுவரை பல மரணங்கள் ஒத்திப்போடப்படுகின்றன.

138
ஒரு சொல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அருகில் இருவர்
யாருடையது என
அந்தச் சொல்லை வைத்து
அடையாளம் காண முடியவில்லை.
குறியீடுகளோ
சமிஞ்ஞைகளோ சொல்லிடம் இல்லை
எனக்குரிய சொல் அல்லாது போயினும்
அதை வெறுக்கிறேன்
அவர்கள் மறைந்தனர் என்னிடம் விட்டுவிட்டு.

139
சிறியதொரு மூலையில் எழுந்து நிற்கிறது அந்த மாடிக் கட்டிடம். இமை வெட்டாமல் பார்த்து நிற்கிறேன். தெருவால் வந்த ஒருவர் அதன் அருகில் நிற்கும் ஒருவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
பின், அந்தக் கட்டிடத்தை கசக்கிச் சுருட்டி கையிலெடுத்துக் கொண்டு என் கண் முன்னே நடந்து செல்கிறார்.

140
மரங்களில் படிந்திருந்த மெழுகை எடுத்த போது அது நிலவாக மாறியிருந்தது. இரவுதான் உருகி வழிந்திருக்க வேண்டும்.ஆதியில் வழிந்தபோது கடலாக மாறியிருந்தது.அப்போது, நிலா உருகித் துள்ளும் இளம் பருவம்.