வெள்ளி, டிசம்பர் 28, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 15



141
காதலினுள் நுழைவதற்கு எளிய வழிகள் இருக்கலாம்,
அதை யாராலும் கண்டு பிடிக்க முடிவதில்லை. வெளியேறுவதற்கு எந்த வழிகளுமில்லை. ஆனால், அதைக் கண்டுபிடித்து விடுகிறோம்.

142
ஒரே ஒரு இரவுதான்
அதில் பல நாட்கள் இருந்தன
உறங்கவே முடியாத படி.

143
பாதைகள் இவசமாகக் கிடைக்கின்றன.
பெயரிடப்படாத வரை 
அது ஒன்றே சுதந்திரமானது
எங்கள் தெரு என சொல்லும்போது
கால்கள் கட்டப்படுகின்றன
பாதைகள்கூட இலவசம் இல்லை.

144
ஒரு கல் கீழே விழுவதற்கு ஏதாவதொரு அடிப்படை இருக்கிறது.
மணலில் விழுகிறது.
மலையிலிருந்து தவறி என்ற அர்த்தத்தில்
கல்லை விழச் செய்கிறேன்.
உங்கள் கைகளில் தருகிறேன்
நீங்கள் பலமாக எறிவதினுாடாக
மீண்டும் என்னிடம் வருகிறது
கல் விழுவதற்கான அடிப்படையை
நீக்கிவிடுகிறேன்.
கல் அனைவரின் கைகளில் இருந்தும்
அது பாரி்கவில்லை.

145
இறுதியில் தெளிவான காலைப் பொழுது வந்துவிடும்.
அது வரை தொடருங்கள்...
உங்களைப் பின்தொடர நாங்கள் யார்..?

146
கவுட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டது
அழகாக ஆடிக்கொண்டிருந்தது
மீண்டும் சுருண்டு கொண்டது
ஒவ்வொரு நிலையிலும் 
தனித்தனி அர்தங்களையும்
வித்தியாசமான கதைகளையும் சொல்ல
அந்த வாலுக்கு முடிகிறது.
அனைவரும் வாலைப் பின்பற்றுகின்றனர்.

147
சப்தத்திற்கும் அமைதிக்கும் இடையில்
ஒரு இடம் இருக்கிறது.
அது ஒரு மறைவான பள்ளத்தாக்கு
எந்தப் பக்கம் போவது என்பதை
அங்கிருந்துதான் தீர்மானிக்க வேண்டும்
பயணத்தை தீர்மானிப்பதற்கு முன்பே
விபத்தில் சிக்கினேன்.
சப்தமும் இல்லை
அமைதியுமில்லை.
யாருக்கும் இப்படி ஒரு மனம் வாய்த்திருக்குமா?

148
நாம் அருகருகே உட்கார்ந்திருக்கிறோம்
எதிரே குளமிருப்பதால்
அது நம்மைப் பிரதிபலிக்கிறது
எதற்காக நாம் சந்தித்திருக்கிறோம்
என்பதைவிடவும்,
நாம் மிகப் பாதுகாப்பாக இருக்கிறோம்.
எதையும் ஆயுதமாக மாற்ற
நம்மால் முடியுமென்பதால் மாத்திரமே
அன்பினால் அல்ல.
என்ற செய்தியோடு
அன்பே உன்னை ஆழமாக
காதலிக்கிறேன்.

149
காதல் இன்றுவரை ஒரு போதனைக் கருவியாகத்தான் பயன்பாட்டிலுள்ளது.

150
விஷேட தள்ளுபடி
விலைக் கழிவு
இலவசம் , இவைகளுக்கப்பால்
அனைவருக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சோடித்த வசனங்களோ
அலங்கரிக்கப்பட்ட வாக்கியங்களோ
வழங்கப்படக்கூடாது.
போலியைக் கண்டுபிடிப்பதற்கான
சரியான விழிப்புணர்வு அவசியம்.
அவரவர் விருப்பங்களுக் கேற்ப
கற்பனை செய்து கையளிக்கப்பட வேண்டும்.
தரக் குறைவானவற்றை வழங்குபவர்களுக்கு
தண்டணை உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும்.
வசீகரம் குறையாமல்
வழங்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் கவிதை என்ற திட்டம்
இப்படி ஆரம்பித்து இப்படியே முடிவடையட்டும்.