செவ்வாய், டிசம்பர் 18, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 6

51
காதலர்களைக் கடந்து செல்லும்போது ஒளி தனது வேகத்தை இழந்துவிடுகிறது
போகவேண்டிய இடத்தை தாமதமாக சென்றடைந்தாலும் ஒளியின் வேகம் மாறுவதில்லை.

52
சத்தமிட்டுக் கொண்டு வெளியேறியது கனவு
என்னுடைய வாழ்வை
மற்றவர்கள் வாழ்வதாக ஓலமிட்டது
என்னுடைய நிழல்களில் முக்கியமான ஒன்று
கனவை சமாதானப்படுத்திவிட்டு
தனியே புறப்பட்டுச் சென்றது
வரும் வழியில் யாரும் கண்டீரோ?

53
ஒரு காலத்தில் ஒரு கடலிருந்தது
அதன் காவலுக்கு குரங்கொன்றை வைத்திருந்தேன்
அலைகளோடு விளையாடும் ஆசையில்
சம்மதித்தது.
கடலை இழுத்துக்கொண்டு விரும்பிய இடமெல்லாம் சென்றது.
மரமொன்றில் இரு அலைகள் துள்ளுவதைப் பார்த்த பிறகே 
இதைச் சொல்ல வேண்டி வந்தது.

54
யாரோ ஒருவரினால் திறக்கப்பட்டது கதவு.
அதனுாடாக கடந்த காலத்தை எட்டிப் பார்த்தேன்
எதிர்காலேமே தெரிந்தது.
யாரோ ஒருவர் மூடிவிட கடந்த காலம் வந்தது.

56
தற்போது மனம் காட்டில் உள்ளது
நானிருக்குமிடத்திலிருந்து வெகுதுாரம்
அருகில் அவள் சாப்பிடுவதற்காக 
கைகளைக் கழுவுகிறாள்
காட்டில் அது நீர் வீழ்ச்சியாகிறது
நிகழ்ச்சிகளை துார நோக்குடன்
பின்பற்றும் போது இப்படித் தோன்றுமென்றாள்.
பழங்களைச் சாப்பிடுகிறாள்
காட்டிலிருக்கும் மரங்கள்
தங்களு்க்கு எதிர்காலமில்லை என்கின்றன.

57
பேசுவதற்காக நெடு நேரம் காத்திருக்கிறோம்
அறையைவிட்டு மெனத்தை வெளியேறச் சொல்லுங்கள்.

58
இரவை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்.
பலுானைப் போல வானில் மிதக்கிறது
எங்கு கொண்டு விடுமென்று தெரியாத அச்சத்தில்
நடுங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில்
அவள் (அவன்) பார்வை பட்டு உடைந்து விடக்கூடாதென்று
எனக்காக நீங்களும் கொஞ்சம் பிராத்தியுங்கள்.

59
இருட்டில் உதவி செய்ய எனது பார்வை விரும்புகிறது. வெளிச்சத்தில் எதுவும் அதற்கு தெரிவதில்லை.

60

வயது ஒரு புதிய நிலப்பரப்பை உருவாக்குகிறது.