புதன், டிசம்பர் 19, 2012

அவன் கூறியதாவது

றியாஸ் குரானா

தினமும் சந்தித்தபோதும்,
அவளுடைய கண்களுக்குள்ளிருந்து
வெளியேறியது குறித்து விசாரித்ததில்லை
இன்று கேட்டுவிட்டேன்

அவன் கூறியதாவது,

அவளுடைய கண்களுக்குள்
ஆசையோடு குடியேறினேன்
உறங்கும்போது
இருண்ட சிறையில் மாட்டிக்கொண்டதாக
நினைத்தேன்
அன்றிலிருந்து வெளியேறுவதற்கான
தருணத்திற்காக காத்திருந்தேன்

பார்வையினுாடாக பயணித்துதான்
தப்பிக்க வேண்டும்
வேறு எந்த வழிகளுமில்லை

மரமொன்றில் அவளின் பார்வை விழுந்தது
வெளியேற எத்தணிக்கையில்
அதனருகே இருந்த மலைக்குத் தாவியது
மலையிலிருந்து இறங்கத் தெரியாது
ஆகவே, அப்போது வெளியேறுவதைத்
தவிர்த்துக் கொண்டேன்.
பின் மேகங்களின் மீதும்
வானத்தின் மீதும்
பார்வை கிடந்தது
வெளியேறும் முயற்சி கைவிடப்பட்டது
திடீரென ஒரு நாள்
கடலின் நடுவே கப்பல் ஒன்று தென்பட்டது
அவளின் பார்வையினுாடே நடந்து சென்று
கப்பலில் இறங்குவது பிறகு வீட்டுக்கு வருவது
தயார் நிலையிலிருந்த நான்
பயணத்திற்கு தேவையான பொருட்களோடு
கிளம்பிவிட்டேன்.

கப்பலை அடையும் வரை
அவள் இமைக்கக்கூடாது என பிராத்திக்கத் தொடங்கினேன்.
அவள் இமைத்துவிட்டாள்
கரைக்கும் கப்பலுக்கும் இடையில்
கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கையில்
மீண்டும் அவள் பார்வை என்மீது விழுந்தது
அதனுாடே கண்களுக்குள் திரும்பிச்
சென்றுவிட்டேன்.

இன்னும் நீ தப்பிக்கவில்லையா?

இல்லை, அவள் பார்வை
அடிக்கடி உங்கள் மீது விழுவதால்
நாம் சந்திக்க நேர்கிறது அவ்வளவுதான்

ம்..ம்..
என்னைப் பார்த்தபடி இருக்கிறாள்

அவனைக் காப்பாற்ற வேண்டும்

தனது கண்களுக்குள் சிக்கியிருப்பவனின்
கதைகள் எதுவும் அவளுக்கு தெரியாது