புதன், டிசம்பர் 19, 2012

நம்பிக்கை

றியாஸ் குரானா

காற்றை நெடுநாளாய் அறிவேன்
தொட்டுத் தடவிக் கடந்து செல்கையிலும்,
துாரத்தே மரங்களை அசைத்து
தனது வருகையை அறிவிக்கையிலும்
பார்த்தும் பாராமலும்
இவ்வளவு காலங்களும் கடந்துவிட்டது
என்று இன்று சொன்னாள்.
தான் காற்றாக மாற
என்றும் ஆசைப்பட்டதில்லை
இதையே அவளும் சொன்னாள்
நெடுந்துாரம் போக நினைப்பதை
கண்டுபிடிக்கும் தருணங்களில்,
காற்றினுள் சென்று ரகசியமாக
இருப்பதாகவும்,
கடைசியாக எனது வீட்டுக்கூரையை
பிய்த்துச் செல்லும்போதும்
உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும்
சொன்னாள்.
அப்படிச் செய்யும்படி தான் சொல்லவில்லை
என்றும் சொன்னாள்.
இவ்வளவையும் நம்பும் நீ
இதையும் நம்பு எனச்சொல்லி
கடைசியாகப் பிரிந்தாள்.