செவ்வாய், ஜனவரி 01, 2013

மிகுதியை எங்கு வாசிக்கலாம் -16


151
ஜோசியம்

ஒரு மலரை நினை

ம்..ம்..ம்...

என்ன மலர்

மல்லிகை

ஆஹா...மல்லிகை மல்லிகை என்றால் வெள்ளை
வெள்ளை என்றால் கொக்கு
கொக்கு என்றால் பறக்கும்
ம்..ம்...ம்...
நீ விரைவில் வெளிநாடு போகப்போகிறாய்..
விரைவில் அகதியாகப் போகிறாய்....
(ஆளைப்பார்த்து முடிவு மாறும்)

-சிந்தா பாவா-

152
நரைத்த பனியினால் நகரம் குறைந்து கொண்டு போகிறது.ஒரு கட்டத்தில் முழுவதுமாக நகரம் மறைந்துவிடுகிறது.திடுக்கிட்டெழுந்து கதவைத் திறந்து பார்க்கிறோம்.பதட்டத்தோடு நிற்கிறோம்.நாங்கள் வசிக்கும் நகரம் பனியில் புதைகிறது.

153
கடைசிக் கோடையில் தனியாக நின்றவளைப் பின் தொடர்ந்து சென்ற நான்
இந்த மார்கழியில் தனித்துவிட்டேன்.காட்சி வேறு வேறு ஆயினும், இருவருக்கும் பொதுவில் இருப்பது தனிமை.

154
மழை பெய்தால் தவளைகள் கத்தும்
என நீங்கள் அறிவித்திருக்க வேண்டும்
அது மட்டுமே உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது
மற்றப்படி,
உங்கள் வானிலை அறிக்கையை
நான் நம்பப்போவதில்லை.
உங்கள் எந்த அறிக்கையையும்
நம்பப்போவதில்லை என்று சொல்ல
இப்போது முடியவில்லை.

155
சுருக்கமாகச் செய்து முடிப்பதென
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது
எனவே, கடலை கோப்பையில்
சுருக்கிக் கொடுத்தேன்.
விளக்கிச் சொல்லும்போது
ஒரு முனையிலிருந்து விரிந்து செல்லும் கடல்
உள்ளே மலைகளும் மீன்களும் விரிய
கப்பல்கள் மிதக்கும்.
அலை தவறிக்குதிக்காத இந்தக் கோப்பையினுள்
அதை சுருக்கி வைத்திருக்கிறேன்.

156
கற்பனை செய்யும்போது
முதலில் வந்து அமர்ந்து
கத்துவது அதுதான்,
அதை விரட்டி விட்டுத்தான்
வேலையைத் தொடருவேன்
எனினும், நிஜத்தில்
இதுவரை காகங்கள்
என்னை நெருங்கி வந்ததில்லை.

157
உடையாமல் திறக்க வேண்டும்
தனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம்
காட்டுகின்றனர்
மந்திரங்களை ஓதி அடிக்கின்றனர்
தானாக யாரும் முட்டையை திறந்ததில்லை
என எழுதிவைத்தேன்.
முட்டைக்கு கதவு இருப்பதாகவும்
அதை திறந்து வெளிவரமுடியுமெனவும்
முன்பு எழுதியதும் நான்தான்
அவர்களுக்கு அது தெரியாது.

158
இந்த மிகச் சிறிய உடலுக்குள் வெகுநாட்களாக இருக்கிறேன்.சிரமத்திற்கு மத்தியில் வெளியேறிச் செல்ல விருப்பம் உள்ளது.அப்படி ஏதும் நடந்தால் பாவம் அவன் தற்கொலை செய்துவிட்டதாக சொல்லுவர்.

159
இப்போது வெளியேறிவிட்டது
எங்கு போனதென்று தெரியவில்லை
எப்போது வருமென்றும் தெரியவில்லை
வரும்வைரை காத்திருக்க வேண்டும்
அந்தப் பிரதியை வாசிப்பதென்றால்,
ஆம் நாயைப்பற்றித்தான்
எழுதியிருந்தேன்.
இப்போது எப்படியிருக்கிறதோ தெரியவில்லை.
எப்படியாவது ஒரு முறை
வாசிக்க வேண்டுமென்று தோண்றுகிறது.

160
கனியைப் பறித்துக் கேட்கவில்லை
பறித்துச் சாப்பிடவுமில்லை
அங்கிருந்து வெளியேற்றப்படவுமில்லை
ஒருவரை ஒருவர் ரசித்தபடி
ஆதாமும் ஏவாளும்
ஓய்விலிருக்கிறார்கள்
சற்று முன்னர்தான் பார்த்துவிட்டு வந்தேன்.