திங்கள், ஜனவரி 07, 2013

உயர்திரு சண்முகசுந்தரம்


சபரிநாதன்

ஷ்…..சத்தம் போடாதீர்கள்
சண்முகசுந்தரம் தூங்கிக்கொண்டிருக்கிறார்
எதையோ சொல்ல வந்து மறந்தது போல ஏறியிறங்குகிற தொப்பை சீராக
கரைவேட்டி தொடைகளுக்கிடையே கசங்கியிருக்க
மயிரடர்ந்த வலதுகை ஆட்காட்டிவிரல் நகம் பிட்டத்தை சொறிகிறது
மீசை மறைவில் அவரது வாய் மூடியுள்ளதைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு
சண்முகசுந்தரம் தனது இருபத்தியோராவது வயதில் அரசியலில் குதித்தார்
மொட்டைமாடிலிருந்து தவறி விழுந்த ரப்பர் பந்தைப் போல 
பந்து கணந்தோறும் அதிகரிக்கும் வேகத்துடன் பாய்கிறது
துமிகள் தெறிக்க ஈரத்தரையில் மோதி எழும்புகிறது அப்படியே 
ஒரு கண்ணாடி சன்னலை உடைத்துவிட்டு சில்லுகளோடு மீண்டும்
குதிக்கிறது நடுரோட்டிலிருந்து
காற்றில் எம்புகிறது தூக்கியெறிந்து விளையாடப்படும் குழந்தையென
சண்முகசுந்தரம் பதறியடித்து எழுந்துகொண்டார்
வேலைக்காரனின் தாயாரை ஒரு கெட்டவார்த்தையால் திட்டியபின்
மினுங்கும் சந்தனநிறச் சட்டையின் கைப்பட்டையை மடித்துக்
கொண்டே படியிறங்குகிறார்
வாசலையொட்டியோடும் மூடப்பட்ட சாக்கடையின் முனையில்
வாளித்தண்ணீரை இறைத்தபடியிருந்தனர் குட்டித் தம்பிகள் சிலர்
எண்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றவரின் கார்
புறப்பட்டுவிட்டது
முக்குத் திரும்பும்போதுதான் கைக்குட்டையை எடுக்க மறந்து போனது
ஞாபகம் வந்தது
உயர்திரு சண்முகசுந்தரத்துக்கு
ஒரு பலத்த கைதட்டல்