வெள்ளி, ஜனவரி 18, 2013

தனி மனிதருக்கு உணவில்லை எனில்


புது எழுத்து இதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதை.

றியாஸ் குரானா

நேரம் அதிகாலை 6.30
இதற்குப் பிறகு
யாரும் அவளைச் சந்தித்திருக்கவில்லை

காணாமல் போய்விட்டதாக
இப்போது அறிவித்திருக்கிறார்கள்

வயது ஐம்பது

காணாமல் போன அன்று
நீல நிறச் சேலை அணிந்திருந்தாள்
இப்படி,இன்னும் சில அடையாளங்கள்
அறிவிக்கப்பட்டிருக்கின்றன

ஐந்து மணியளவில்,
பூமரங்களுக்கிடையே
பாதையொன்றை உருவாக்கி
அவள் நடந்து வந்ததாகவும்

நான்கு மணியளவில்,
சப்தமற்றுக் கிடந்த ஆற்றில்
கால்களை அடித்து கடந்து வந்ததாகவும்

மூன்று மணியளவில்,
கிடுகு மற்றும் முள்வேலியை விலக்கி
வாசலைக் கடந்துவிட்டதாகவும்

ஒரு மணியளவில்,
அவளது அறையில்
குறட்டைவிட்டு நிம்மதியாக
தூங்கிக் கொண்டிருந்ததாகவும்

தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இரண்டு மணியளவில்
நடந்தது பற்றிய தகவல்கள்
கிடைக்காமையினால்,
அப்போதுதான்
வீட்டைவிட்டு வெளியேறிவிட
அவள் முடிவெடுத்திருக்கலாம் எனச் சிலரும்

பேய் பிசாசு
கூட்டிப்போயிருக்கலாம் எனச் சிலரும்
சந்தேகிக்கின்றனர்.

நள்ளிரவு 12 மணியளவில்
முதலாவது சொல்லை நான் எழுதும்போது
என் நினைவின் வழியே
அவள் பயணிக்கத் தொடங்கினாள்

இறுதிச் சொல்லை
சாதாரணமான புன்னகையோடு கடந்த பிறகு
நான் அவளைப் பின்தொடரவில்லை

காணாமல் போய்விடுவாள் என்பதும்
அப்போது எனக்குத் தெரியாது
இதுதான் எனது நீதிமன்ற சாட்சியமாகும்

அவளின் குடும்பநிலை பொறுக்காமல்
வெளியூர்களுக்குச் சென்று
பிச்சை எடுக்கும்படி
நான் ஆலோசனை வழங்கியிருக்கிறேன் என
தேர்ந்த வாசகர்களுக்கு
இந்நேரம் விளங்கியிருக்கக் கூடும்.

எப்படித் தலைகீழாக வாசித்தாலும்
என்னைக் காட்டிக்கொடுக்க நினைப்பவர்களுக்கு
இது ஒரு போதும் புரிந்துவிடாது.

தகல்களை வைத்து
துப்பறிந்து செல்பவர்களுக்கு
தொடர்ந்து நகரமுடியாமல் இருப்பது,
ஒரு கட்டத்திற்குமேல்
அவள் ஆணாக மாறுவதுதான்.