திங்கள், ஜனவரி 14, 2013

கதை என்பது, காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கும் இடம்.


தோழர் கோணங்கி அவர்கள் நடத்தும் கல்குதிரை 21ம் இதழில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை.


ஹஸீனின் கதைகள் பற்றி ஒரு வாசிப்பு.
றியாஸ் குரானா

ஈழத்தில் ஒரு துயரம் என்னவென்றால், இலக்கியப் பிரதி என்பது அரசியலை ஏற்றி வாசிப்பதற்கு இடந்தர வேண்டும் என்ற ஒரு பார்வை நிலவுவதுதான்.அதுவும் குறித்த ஒரு வகை அரசியல் சார்புடைய வாசிப்பிற்கே வாய்ப்பளிக்க வேண்டும். இந்த எதிர்பார்ப்பை முற்றாக மறுக்கும் பிரதிகளின் நிலை என்ன வென்று நீங்கள் இகுவாக புரிந்து கொள்ள முடியும்.

அதற்காக,அரசியலை ஏற்றி வாசிப்பதற்கு இலக்கியப் பிரதி இடந்தரக்கூடாது என்று கருதுவதாக இந்தக் கூற்று அமைந்துவிடாது.அதே நேரம்,அரசியல் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு ஏதுவான வகையில்  இலக்கியப் பிரதிகள் உதவி செய்யக்கூடாது என்றும் அர்த்தம் அல்ல.குறிப்பான ஒரு வாசிப்பிற்கு மாத்திரம் இடந்தருவதாக கருதத்தக்க வகையில் இலக்கியப் பிரதி இருந்துவிடக்கூடாது. குறிப்பான ஒரு கருத்தை அறிவிப்புச் செய்யும் இலக்கியச் செயலை முதன்மைப்படுத்தி, பிரதி உருவாக்கங்கள் அக்கறை கொள்ளப்படத் தோதான சூழலை பரிந்துரைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இதைச் சொல்கிறேன்.

கடந்த காலங்களில் இலக்கியப் பிரதியை அனுகுவதில் கடைப்பிடிக்கப்பட்ட நிலவரம் இதற்கு மாறானது. குறிப்பான ஒருவகை அரசியல் பிரச்சினை மாத்திரமே அரசியல் தன்மை கொண்டது என பரப்புவதாகவே ஈழத்து இலக்கிய வெளியும் செயற்பட்டுக்கொண்டிருந்தது. அங்கு இலக்கியத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த பெரும்பான்மை விமர்சகர்களும்,எழுத்தாளர்களும் அதில் மிகக் கவனமாக இருந்தனர்.வாழ்வின் அனைத்துத் தருணங்களும் குறித்த ஒருவகை அரசியலை கவனம் கொள்ள வேண்டும். அதற்காகவே சேவை செய்ய வேண்டும் என்ற வகையில் கவன ஈர்ப்பைச் செய்து கொண்டிருந்தனர். உண்மை என்னவெனில், அதற்கு வெளியிலும் எஞ்சியிருந்தது வாழ்வின் அதிகமான தருணங்கள். பலவகையான அரசியல் நெருக்கடி, வாழ்வை அனுகும் முறைமை என ஒரு பன்மையான சூழல்தான் எங்கும்போல் ஈழத்திலும் நிலவிக்கொண்டிருந்தது. அதில், குறித்த ஒருவகைப் பார்வை அல்லது புரிதல் முதன்மைப் படுத்தப்பட்டபோது ஏனைய வாழ்வின் மறுக்க முடியாத தருணங்களும், அவை பற்றிய புரிதல்களும் முக்கிய மற்றதாக பின்தள்ளப்பட்டது.
இந்த நிலையில், இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கு தமது பிரதிகளுக்குள் நிலவுகிறதும், பொதுப்பரப்பில் கவன ஈர்ப்புச் செய்யப்படுவதுமான குறிப்பான அரசியல் நெருக்கடியை உள்ளெடுக்க வேண்டிய ஒரு கட்டாயம் உருவானது.அதை மறுக்கும்போது, தமது பிரதிகள் அமைதிப்படுத்தப் பட்டுவிடும். சூழலில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும் என்ற அச்சமும் உருப்பெறத் தொடங்கியது.ஆகவே, பிரதிகளினுள் அரசியல் நெருக்கடியை எப்பாடுபட்டாவது கொண்டுவருவது என்ற முனைப்பில் தீவிரமாக இயங்கத் தொடங்கினர்.அது மிகமோசமான ஒரு இலக்கியச் செயலை அறிமுகப்படுத்தியது.அதுவே, வெறும் பத்திரிகைச் செய்திகளில் இருப்பதைப்போன்ற அறிவிப்புக்களையும், அதனை நிறைவேற்ற மேலெழுந்த நேரடித் தன்மைகளையும் பிரதிகளினுள் உட்செருகுவதினூடாக சம காலத்தின் முக்கிய இலக்கியப் பிரதியாக மாற்றிவிட முடியும் என்ற ஒரு இலக்கிய மனம் உருக்கொண்டது. இலக்கியப் பிரதிகளும், மிக வெளிப்படையான பிரச்சாரம் மற்றும் செய்தி ஊடகம்போல் மாற்றமடையத் தொடங்கியது. செய்திகளுக்கும் அனேக இலக்கியப் பிரதிகளுக்குமிடையில் ஒற்றுமையே அதிகமிருந்தன. செய்திகளைக் கூட இலக்கியப் பிரதிபோல் மாற்றிக் காட்டும் உழைப்பு அப்பிரதிகளில் இல்லாமலே போய்விட்டது. ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள செய்திகளைவிட இலக்கியப் பிரதியையே அதிகம் நம்பியிருப்பதுபோல் ஒரு தோற்றம் பார்வையாளர்களிடையே புழக்கத்திற்கு வந்தது. செய்தியைப்போல, குறித்த காலத்தில், குறித்த சூழலில் மட்டுமே உயிர்வாழும் நிலைக்கு இலக்கியப் பிரதிகளும் தள்ளப்பட்டது. ஈழத்தின் அதிகமான இலக்கியப் பிரதிகளை வாசிக்கும்போது இதைப் புரிந்து கொள்ள முடியும்.
முக்கியமானது என, பொதுவாக நம்பப்படுகிற அரசியல் இலக்கியச் செயலை ஒரு பேஷனுக்காக பின் தொடர்ந்து செல்லாமல், இலக்கியப் பிரதியே தனக்கான அரசியலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கருதிச் செயற்பட்ட பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிச் செயற்பட்டவர்களில் ஒருவராகவே நான் ஹஸீனைப் பார்க்கிறேன்.ஹஸீனுடைய கதைகள், தமக்கான அரசியலையும்,அழகியலையும் ஒருங்கே கொண்டிருப்பன.ஆனால், இவர் அக்கறை கொள்ளும் அரசியல் பிரதியின் ஆழத்தில் செயற்படக்கூடியது. பிரதியைப் பிதுக்கிக் கொண்டு வெளியே தனது கோரத்தை காட்சிக்கு வைப்பதில்லை. அன்றாட வாழ்வின், மிக எளிமையானது எனக் கருதத் தக்க பல தருணங்களை, நட்பை, காதலை என பலவற்றை அனுகத்தக்கதாக அதுவும் மிக நுணுக்கமாக ஒரு அரசியலை புனைந்து கொள்கின்றன.

ஹஸீன் சொல்வதுபோல், யுத்தம் எனக்கு விசித்திரமாகத் தோன்றவில்லை.அதுவே எனது அன்றாட வாழ்வாக இருந்தது.அதனால்தான், சாதாரண நிகழ்வாக தோன்றிய யுத்த நெருக்கடியை விட்டு விச்திரமான நிகழ்வுகளின் பக்கம் கவனத்தைத் திருப்பிக்கொண்டார்.அரசியல் நெருக்கடியிலே பிறந்து அதற்குள்ளே தனது பால்ய காலத்தைக் கடத்துபவருக்கு – அரசியல் நெருக்கடி என்பது வழமையான ஒரு சம்பவமாகத்தானே இருக்கமுடியும். அரசியல் நெருக்கடியும், அதன் சலசலப்புக்களும் பழகிப்போன ஒரு வாழ்வில், காதலும், நட்பும்,இதுபோன்ற ஏனைய வாழ்வின் பிற தருணங்கள்தான் முக்கியமானதாக மாறக்கூடியது. அப்படியே, ஹஸீனுக்கும் மாறியிருக்கிறது.இயல்பான வாழ்வு யுத்தமும்,அரசியல் நெருக்கடியுமெனில், அதிலிருந்து கடந்து செல்லவோ அல்லது தப்பிச் செல்லவோதான், ஹஸீனுடைய இலக்கியப் பிரதிகள் முனைந்தன.அபூர்வமானக கிடைக்கக்கூடிய யுத்த நெருக்கடி நிறைந்த வாழ்வு அவருக்கு இருக்கவில்லை.ஆக, அவர் அபூர்வமான வாழ்வின் தருணங்களில் கவரப்பட்டார். (ஆனால், யுத்த நெருக்கடிகளுக்கு அப்பால் உள்ள பார்வையாளர்களுக்கு இவருடைய கதைகள் சாதாரண நிகழ்வுபோல தோன்றக்கூடும்.)இதை அவரின் 'பூனை அனைத்தும் உண்ணும்' என்ற சிறுகதைத் தொகுதியில் சந்திக்கலாம். மிக நுண்ணிய விசயங்களையே தனது மனதுக்குள்ளும் கற்பனைக்குள்ளும் வர அனுமதித்திருக்கிறார். அதையே கதைகளிலும் நடமாடவிட்டிருக்கிறார்.
ஹஸீனுடைய கதைகளில் இருக்கின்ற கதைச் சம்பவங்கள் மற்றும் கதை மனிதர்கள் கதையாடல்களினூடாக உருப்பெறுபவர்கள் அல்ல.அது மட்டுமன்றி கதைகள் கருத்துக்களைப் பரிந்துரைப்பனவும் அல்ல. கதை என்றால் இவைகள் மிகவும் அவசியமானது என நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு ஹஸீனின் கதைகள் மிகுந்த ஏமாற்றத்தை தரக்கூடியது. ஹஸீனின் கதைகள் இவற்றுக்கு புறம்பான ஒரு வேலையை செய்ய முற்படுகின்றது.

ஹஸீன் உருவாக்கும் கதைசொல்லி, ஒரு போதும் கதையைச் சொல்லுவதில்லை. அதாவது கதையோடு எந்தவொரு செய்தியையும் இணைத்துக்கொண்டு பேசுவதில்லை.பார்வையாளர்களையே கதையைக் கண்டுபிடிக்கச் செய்பவர்.அதற்காக உதவும், தடங்காட்டும் ஒரு பணியைச் செய்பவர் மாத்திரமே.கதை சொல்லிக்கென்று இருக்கும் வேலையைவிடுத்து, வேறொரு வேலையை பிரதியினூடாக செய்ய முற்படுபவர்.ஆம், காட்சிகளை மாத்திரம் உருவாக்கிக் கொண்டிருப்பவர்.மொழியையும், எடுத்துரைப்பையும் காடசி உருவாக்கும் செயலில் கடுமையாக உழகை;கும்படி சொல்லிக்கொண்டிருப்பவர். ஒரு வழிகாட்டி போல பிரதியெங்கும் உலவித்திரிபவர்.கதைப்பிரதிகளில், காட்சி உருவாக்கம் என்பது ஏலவே இருக்கின்ற ஒரு உத்திதான்.எனினும், அதிலிருந்து ஹஸீனுடைய கதைசொல்லி விலகிச் செயற்படும் புள்ளிகள் மிக முக்கியமானது.

கதைகளால் உருவாக்கப்படும் காட்சிகள் குறைந்த பட்சம் சிறு செய்தியை பரிந்துரைப்பதாகவே இருக்கும். காட்சி தன்னுடன் செய்தியொன்றை கூட்டிக்கொண்டு அலையும். அப்படி உருவாக்கப்படும் காட்சிகள் கதையின் ஏதாவதொரு பகுதியில் அல்லது இடத்தில் அல்லது எதாவதொரு சந்தர்ப்பத்தில் தான் நிகழும்.ஆனால், இவரின் கதைசொல்p, முற்று முழுக்க காட்சிகளையே நம்மிடம் தருபவர். ஏதாவதொரு செய்திக்கு(கருத்திற்கு) சாய்வாக இவர் தரும் காட்சிகள் நகர்ந்து கொண்டிருப்பதில்லை. தமது போக்கிலே காட்சிகள் இயங்கிக் கொண்டிருப்பவை.காட்சிகள் எந்தத் சந்தர்பத்திலும் கருத்தை வெளிப்படுத்த எத்தனிப்பதில்லை.பார்வையாளர்களே, காட்சியிலிருந்து கதையை உருவாக்க வேண்டியிருக்கும். நாம் வாசிக்கும் பிரதியை கதையாக உருவகிப்பதற்கு ஏதுவான காட்சிகளை பிறப்பித்துக் கொண்டிருப்பவை. காட்சிகளிலிருந்து கதையை அனுமானிப்பதற்கு பல வழிகளை திறந்து விடுபவை. கதையை அனுமானிக்க முடியாத பார்வையாளர்களையும் இவருடைய காட்சிகள் கைவிட்டு விடுவதில்லை.ஏனெனில், ஒரு பிரமாண்டமான கண்காட்சி கூடத்தினுள் நுழைந்துவிட்டுத் திரும்பும் மனநிலையயை உருவாக்கத்தக்க உட்சரடுகளை, மொழியினூடாக பிறப்பித்துக் காட்டுபவை.

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மாத்திரமே இவருடைய கதைகளில் உடனடியாக அறிய முடியும்.ஏன் இப்படி நடக்க வேண்டி வந்தது என்ற பிரசங்கம் ஏதும், எப்போதும் இவரின் கதைகளில் தென்படுவதே இல்லை. அப்படியான எதிர்பார்ப்புக்களைக் கொண்ட பார்வையாளர்கள் தாங்களாகத்தான் ஏதாவதொன்றை கதையிலிருந்து அனுமானிக்க வேண்டும்.

ஒரு கண்காட்சி கூடத்தின் பிரதிச் செயற்பாட்டை மொழியின் உதவியோடு நிகழ்த்திக் கொண்டிருப்பவர் ஹஸீன்.அதுவே அவரின் தனித்துவம் என்றும் கருதுகிறேன்.சம்பவங்களிலிருந்து அனுமானிக்கப்பட்ட எந்தச் செய்தியினையும் தனது கதைகளில் படியவிடுவதில்லை.அதற்கு இடந்தருவதுமில்லை.அந்த வகையில் பன்மையான வாசிப்பிற்கு சௌகரியமான சமிக்ஞைகளை காட்டுபவை.
எழுமாறாக எடுக்கப்பட்ட தனித்தனிச் சித்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட காட்சிக்கூடம்போல் இவரின் கதைகள் தென்படுகின்றன.அதில் தொடர்ச்சியான சம்பவம் இருப்பதில்லை. அவ்வப்போது நினைவில் தோன்றும் சம்பவங்களை ஒரே பிரதியில் இணைத்ததுபோல தோன்றுவதுடன் அவைகளுக்கிடையில் மிக நெருக்கமான ஒரு உறவும் நிலவும்படி கதையாக மாறுபவை.

'செங்கவெள்ளை' என்ற கதை தவிர ஏனையவை அதற்கச் சான்று.ஆனால், அக்கதை தொடர்ச்சியாக அசைந்துகொண்டிருக்கும் சித்திரம் என்றே சொல்லலாம். கீறப்பட்ட சித்திரத்திலுள்ளவை தனது விருப்பத்திற்கேற்ப அசைவது மாதிரி, மிகவும் அற்புதமான ஒன்று.ஹஸீனின் கதைசொல்லி வாழ்வை செய்திகளினூடாக அல்லது கருத்துக்களினூடாக புரிந்து கொண்ட ஒருவரைப்போல் nதிரியவில்லை. எந்த விசயத்தையும் காட்சியாக புரிந்துகொள்பராகவே தெரிகிறார்.அவை மீது எந்த விமர்சனங்களும் இருப்பதில்லை.அதுபோல, அதிலிருந்து எந்த முடிவுகளுக்கும் வந்தவிடுவதும் இல்லை.இதை இப்படித்தான் பெற்றுக்கொண்டேன் என்பதாக சொல்பவர்.கதை இதுதான் என்பதுபோல் நம்மிடம் சொல்ல முற்படுபவரில்லை.இந்த வகையில் நவீன கதைசொல்லல் முறையில் இவருடைய எடுத்துரைப்பு மிக முக்கியமானது என்றே கருதுகிறேன்.நான் சொல்லுவதை நம்பு என்றவகையில் பார்வையாளர்களை சங்கடப்படுத்தாத ஒரு கதைசொல்முறை இது.இந்த முறை இவருக்கு வாலாயப்பட்டிருக்கிறது.
அத்தோடு, இவரின் கதைமொழி மிக முக்கியமாகப் படுகின்றது.அதிகம் கவித்துவம் நிறைந்த மொழி என்று சொல்ல முடியாது.ஆனால், பெரும் கதைகளையே வசனங்களுக்குள் சுருக்கித்தருகின்ற மொழி இவருடையது. அந்த வசனத்தை விரித்தால் தனியே ஒரு கதையை உருவாக்கிவிடலாம். உதாரணமாக, காவல் துறையினர் ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த அனைத்தையும் சேதப்படுத்துகின்றனர்.சிலவற்றை எரிக்கின்றனர்.சிலவற்றை அழிக்கின்றனர்.ஒன்று விடாம் மிக மோசமாக சிதைக்கின்றனர்.அந்தக் காட்சியை,அதன் கதையை 'பொருட்கள் எல்லாம் கண்ணாடியாக மாறி உடைந்து கிடந்தன' என்ற ஒரு வரியிலே சொல்லி முடித்திருப்பார்.கவித்துவமான மொழிக்கும், அதிக விசயங்களை சுருக்கி தனக்குள் வைத்திருக்கும் மொழிக்கும் அதிக வேறுபாடு உண்டு.அதில் இரண்டாவது வகை மொழி அதிக உழைப்பைக் கோருபவை.அப்படியான மொழியை மிகச் சாதாரணமாக கையாண்டிருக்கிறார்.

கதைகள் என்ன செய்கின்றன..? ஒருவர் மற்றவரோடு சொல்லிக்கொள்ளும் கதைக்கும், தனக்குள்ளாகவே கதையாடலைக் கொண்டிருக்கும் இலக்கியம் சார்ந்த கதைகளுக்கும் இடையில், ஒரு உறவை ஏற்படுத்த முயற்சிக்கும் வழிகளில்தான் இதுவரை கதைசொல்லிகள் செயற்பட்டிருக்கிறார்கள். அந்தக் கதைச் செயலில், காட்சி,பிரசங்கம்,பிரதிபலித்தல் பல உத்திகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயினும், ஹஸீனுடைய கதைசொல்லி, சித்திரத்தை, அதிலுள்ளவற்றை அசையச் செய்வதினூடாக கதை ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்பவராக இருக்கிறார். நகர்ந்து கொண்டிருக்கும் காட்சிகளை அனுகுபவர்களாக பார்வையாளரை மாற்றியமைக்கிறார்.அதிலிருந்து கதையைக் கண்டடைவதற்கான சந்தர்பங்களை வழங்குகிறார்.இதனூடாக, பார்வையாளர்களையும் கதையுற்பத்தி செய்யும் வேலையில் பங்களிப்புச் செய்யத் தூண்டுகிறார்.ஆகையால்,தமிழின் கதைவெளியில் இவருக்கான இடம் தவிர்க்க முடியாமல் உருவாகிறது.