புதன், ஜனவரி 23, 2013

ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை - மூன்று


நதிவாசிகளைப் புரிந்துகொள்ள சேர்க்கப்பட்டிருக்கும் உதவிக் குறிப்பு

நதிவாசிகளின் கூடாரங்கள்
வலிகளால் பின்னப்பட்டது
காலத்துக்கப்பாற்பட்ட ஒரு வேதனை
அதில் நிறைந்துள்ளது.
மெழுகப்பட்ட சுவர்களின் ஜன்னலாய் இருப்பது இமைகள்
மலைகளுக்குப் பின்னிருந்து எறியப்படும் குளிரை
தடுத்து மூடும் இமைகள்
மரணத்தில் காய்ச்சப்பட்டு வடிவமைத்த இமைகள்

நதிவாசிகளினதும்,
அவர்களின் கூடாரம் பற்றிய கதைகளையும்
அறிந்திருக்கவில்லை எனில்,
கேள்

மூதாதையர்களின்
முள்ளந்தண்டுகளால் செப்பனிட்ட
வாள்கள் அதற்குள் ஒழிந்திருக்கின்றன.
பறவைகளின் பெருமூச்சில் விழிக்கும்
குழந்தைகளின் பலத்தைச் சொல்வதானால்
இன்னுமொரு கதையிருக்கின்றது.
(அது இங்கு சொல்லப்படவில்லை)
பொம்மைகளைக் கேட்டால்
மலைகளைப் பிடுங்கி
விளையாடச் சொன்ன தாய்களின் பதுங்கு குழி

துரதிஷ;டவசமாக
நதிவாசிகளின் கூடாரத்திற்கும்
மூங்கில் வீட்டுக்கும் ஒரே பெயர்தான்
துரத்தினால் நதியோடு நகரும் மூங்கில் வீடு
கூடாரம் பறக்கவும் கூடியது.

தெற்கில் பிள்ளைகளுக்கு உணவூட்டும் நேரக்கதைகளில், கூடாரம் பற்றிய ஆதிச்சொற்கள் இல்லை.
சிறு தங்குமிடம் அல்லது மூங்கில் வீடு (அகதிகளுடையதைப் போன்று நிரந்தரமற்ற) என்றும் வலிதாய் சிறகடிக்கும் பறவை எழுப்பும் காற்றில் கலைந்து விடக்கூடியதென்றும் வருகின்றது.

காட்டுப் புயல் வருமென்ற வெற்றுச் செய்தி கிளப்பும் அச்சமே கூடாரத்தின் நிச்சயமற்ற தன்மையை விளக்கப்போதுமானது. இது போன்ற வாய்வழிக்கதைளினூடாகவே நதிவாசிகளின் கூடாரம் பற்றி அறியப்பட்டிருக்கிறது.

நதிவாசிகளினதும், அவர்களின் கூடாரம் பற்றிய தகவல்களும் எழுத்துக்கு முன்பானது என்பதனால், பரம்பரையாக அவர்கள் பாதுகாத்த உண்மைகள் அவர்களுக்கு மட்டுமே உரியது.சூரிய வெப்பத்தின் வயதை கணிப்பிடப் பயன்படும் கரிய நிறமே தொண்மையின் சாட்சி.

கூந்தல் மயிரினால்
வேயப்பட்டு விரிந்து கிடக்கும் கூடாரத்தில்
'ஓம்' என்ற தாய்ச்சொல் துயில்கிறது.

நிலத்தின் கொதிக்கும் சூட்டினால்
தோல்களில் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும் துணிவு
நீல வானத்தை அதிர்த்தக்கூடியது.
இது பொய் மாதிரி தெரிகிறதா?
இன்றைய தினத்தில்
உனக்கு அத்தாட்சி இருக்கிறது
நீ கவனிக்கத் தவறமுடியாதபடி

இழக்க முடியாத பலம்
முன்னோர்களின் திசையில்
மண்டியிட்டுக் கிடக்கும் எனது முற்றத்தில்
இன்னும்,அத்தாட்சிகள் இருக்கின்றன.

சிறு பூச்சிகள்
சிங்கப்படைகளைத் துரத்துவது தவிரவும்
இங்கே அத்தாட்சிகள் இருக்கின்றன.

தொடரும்..............