ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

ஈழம் - இலக்கியம் - அரசியல் - பிரதிபலிப்பு

றியாஸ் குரானா

இலக்கியம் அரசியலை தனது இயங்கு பரப்பிற்குள் எடுக்கமுடியும். அது இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும், அணுகும் முறைகளைக் கடந்து, அதன் எல்லைகளை மீறி வெளிப்படும்போதும் இலக்கியத்தை புரிந்துகொள்ளும் வழிகளைக் கைவிட்டு அரசியலை வாசிக்க முற்படும்போதும், இலக்கியத்தை வியாக்கியானம் செய்யும் பொருளாக்கத்தை தவிர்த்துவிடுகிறது. அதுமாத்திரமின்றி, இலக்கியத்திற்கு வெளியிலான ஒரு அக்கறையையோ அல்லது இலக்கியப் புரிதலைப் புறந்தள்ளிய நிலையிலோ பொருட்படுத்தத்தக்க வேறொன்றை முதன்மைப்படுத்திவிடுகிறது. அதாவது, இலக்கியத்தைப் புரிந்துகொள்வதென்பது, இலக்கியத்திற்கு புறம்பான ஒன்றை நோக்கி நகர்த்திவிடக்கூடியதாக மாறிவிடுகிறது.

அரசியல் பிரச்சினைகள், ஒரு செய்தியாகவோ, வரலாறாகவோ அல்லது இவைகளுடன் கூடிய ஒரு துயராக(பார்வையாளர்களை மனவெழுச்சி கொள்ளும்படி தூண்டும் நிலையிலான) இலக்கியத்தினுள் நுழைந்திருப்பதையே சுட்டுகிறேன்.ஆனால், அரசியல் என்பது இலக்கியத்திற்கான வழிமுறைகளாகவும், இலக்கியம் செயற்படும் பொருளை மறைத்து வைக்க உதவும் இடமாகவும், பல்பொருள் அர்த்தங்களை தடங்காட்டுகிற விதமாகவும் மாறவேண்டும். அல்லது மாற்றப்பட வேண்டும். செய்திகள், வரலாறுகள் உருவாக்கும் தற்காலிக மற்றும் நீண்டகால நேரடி உணர்வெழுச்சியைக் கடந்து, அவை செய்கிற வேகைளை உதறிவிட்டு முற்றிலும் புதிய பரிமாணத்தில் அமைக்கப்பட வேண்டும்.

ஒரு இலக்கிப் பிரதி தனக்குள் கொண்டிருக்கின்ற அம்சங்களைக் கொண்டும் தான் உருவாக்குகின்ற வழிமுறைகளைக்கொண்டும் மாத்திரமே அர்த்தங்களை உருவாக்குவதற்காக வழிநடாத்தப்பட வேண்டும். அதற்கு மாற்றமாக, பிரதிக்கு வெளியிலுள்ள கதைகளினாலோ அல்லது அரசியல் புரிந்துகொள்ளலினாலோ குறித்த இலக்கியப் பிரதியை புரிந்துகொள்ளக் கட்டாப்படுத்தக்கூடாது. இலக்கியப் (குறித்த) பிரதிக்கு வெளியே புளக்கத்திலுள்ள அரசியல் நிலவரத்தை உறுதிப்படுத்தவோ அல்லது புறக்கணிக்கவோ பயன்படுகின்ற ஆவணமாக இலக்கிப் பிரதியை அனுகமுடியாது. அனுகவும்கூடாது. பிரதி தனக்கென்று அக்கறை கொள்ளும் அரசியலையும் அதை இலக்கியமாக மாற்றுவதற்கு என்ன வகையான புனைவு வழிமுறைகளையும் உத்திகளையும் பயன்படுத்துகிறது என்றே அக்கறை கொள்ள வேண்டும்.

தனக்கென ஒரு அரசியலை உள்ளீடாக கதையாடாத பிரதி, அதாவது வெளியிலுள்ள அரசியல் நிலவரத்தை பாவனை செய்கின்ற இலக்கியப் பிரதி என்பது மிகப்பலவீனமானதே. அது வேறு ஒன்றுக்கு கடமைப்பட்டதாக ஆகிறது. ஒரு செய்தியோ,வரலாறோ பார்வையாளர்கள் பரப்பில் செய்ய முற்படும் பணியை இலக்கியப் பிரதியும் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது.அதிலிருந்து மாறுபட்ட வேலையையே இலக்கியப் பிரதி செய்யும். செய்யவும் வேண்டும்.

அரசியல் நிலவரத்தின் அறிவிப்பாளராக இலக்கியப் பிரதியை வாசிக்கவும் முடியாது.ஏனெனில், இலக்கியப் பிரதி குறிப்பான ஒரு செய்தியை மாத்திரம் சொல்வதற்கான ஒன்றல்ல.அது பூடகமான வழிகளில் அரசியலை தடங்காட்டக்கூடியது. அத்தோடு, தனக்கான இலக்கிய அரசியலையும் உருவாக்கக்கூடியது.

குறித்த ஒரு அரசியல் நிலவரத்தை, ஒரு பிரதி உரத்துப் பேசுகிறது என யாரும் முன்வைத்தால், அப்படி முன்வைப்பதற்கு வெளிப்படையாக அந்நதப் பிரதி உதவுகிறது என்றால் அது அதிகபட்சம் ஒரு சிறந்த பத்திரிகைச் செய்தி மாத்திரமே. அதைக் கடந்து இலக்கியப் பிரதியாக இருப்பதற்கு அதற்கு எந்த இடமும் இல்லை.

ஆக,பொதுவெளியில் புளங்கும் அரசியல் நிலவரம், முற்றிலும் ஒரு புதிய பண்பு மாற்றத்துடனும்,அர்த்த மாற்றத்துடனும் வேறொன்றாக இலக்கியப் பிரதியினுள் வந்துவிட வேண்டும். அல்லது வந்துவிடுகிறது. அப்படி இலக்கியப் பிரதிக்குள் வந்துவிடும்போது, பொது வெளியில் இருக்கும் அரசியல் கதையாக இருப்பதில்லை. அதுபோல அக்கதையை பிரதிபலிப்பதாகவும் இருப்பதுமில்லை. பொது வெளியில் இருக்கும் ஒரு அரசியல் நிவரத்திற்கு நிகரான ஒன்றையே இலக்கியப் பிரதி தனக்குள்ளும் உருவாக்கிக் காட்டுகிறது. அதாவது, இலக்கியப் பிரதி தனக்கள் ஒரு அரசியல் கதையாடலை உருவாக்கி அதன் தீவிரம் என்றைக்கும் குறையாதபடி பாதுகாக்கிறது. ஆனால், செய்திகளிலோ இந்தத் தீவிரம் குறித்த காலத்தில் மாத்திரம் துடிப்போடு இருந்து பின் வற்றிவிடுகிறது. இது மாத்திரமல்ல, பொதுவெளியில் நிலவும் அரசியலுக்கும், இலக்கியப் பிரதியில் இருக்கும் அரசியல் நிலவரத்திற்கும் மிகப் பெரிய வேறுபாடே இருக்கிறது.

இலக்கியப் பிரதி, தனக்குள் கொண்டிருக்கின்ற அறிகுறிகளைக்கொண்டு என்ன செய்ய மற்படுகிறது என்பதை ஊகிப்பதற்கான பரிந்துரைப்புக்களை மாத்திரமே செய்யும்.ஆனால், செய்தி உடனடி முடிவுகளை அறிவித்துவிடக்கூடியதாக அமைந்திருக்கும். ஆக, இலக்கியப் பிரதி என்பது எப்போதும் அரசியலைப் பிரதிபலிக்காது.பிரதிபலிக்கவும் முடியாது. குறித்த அரசியல் நிலவரத்தை அர்த்தப்படுத்துவதற்கு ஏதுவான ஒரு நிகழ்வை பிரதிக்குள் உருவாக்கிக்காட்டும் அவ்வளவே. ஆனால், கடந்தகால ஈழத்தில் இப்படியிருக்க எந்த இலக்கியப் பிரதியையும் விடவில்லை. அவைகளின் மீது மிகக் கடினமான பணி சுமத்தப்பட்டது. குறித்த அரசியல் நெருக்கடியை மாத்திரம்தான் இலக்கியப் பிரதிகள் பிரதிபலிக்க வேண்டும் என்ற ஒரு பெரும்கூச்சல் நடந்தது.

செய்திகளையும், அறிக்கைகளையும் கடந்த நிலையில் மிகக்குறைவான இலக்கியப் பிரதிகள் வெளிவரக்காரணமாக இருந்ததும் இதனால்தான். செய்தியறிக்கைகளுக்கும் இலக்கியப் பிரதிகளுக்குமிடையிலான எல்லைக் கோடு இரக்கமற்ற முறையில் அழிக்கப்பட்டிருந்தது. பொதுவெளியை ஒரு அணிக்குள் கொண்டுவருவதற்கான பிரச்சாரங்களாகவே இலக்கியச் செயல்கள் இருந்தன. குறித்த ஒரு நிலப்பரப்பில் குறித்த ஒரு மொழியைப் பின்பற்றுகின்ற சனக்கூட்டம் மிகமோசமான நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கிறது என அர்த்தம் உருவாக்கும்படி, இலக்கியப் பிரதிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன. அது கடந்து சிறிதளவேனும் தமது எல்லைகளை இலக்கியம் அகல விரிக்கவே இல்லை. அதற்கு இடந்தரப்படவுமில்லை. கொஞ்சம் விலகி மலையக மக்கள், முஸ்லிம்கள்,தலித்கள்,பெண்கள் என இயங்கினாலும் பிரதானமாக தமிழை தமது மொழியாக கொண்டிருப்பவர்கள் என்ற பரப்பிற்கள் உள்ளடங்கிப் போகக்கூடிய ஒன்றாகக் கருதி அவைகளுக்கும் எதுவித முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை.(சிறு குழுவினர் கதை எனக் கருத்திற்கொண்டு செயலாற்றினர்) சுமார் முப்பதாண்டுகால தீவிர ஈழமொழிப்பரப்பின் இயங்குவெளியில் அரசியல் பிரதிகளை கணக்கிட்டுப் பார்த்தாலும் நமக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்.

மிகச் சொற்பமானவையே கிடைக்கிறத. அதுவும், பிரச்சாரமற்ற,செய்தியறிக்கை போலல்லாத, மக்களை அணிதிரட்டும் நோக்கத்தை தவிர்த்த அரசியலை உள்ளடக்கமாகக் கொண்ட இலக்கியப் பிரதிகள் எத்தனை இருக்கிறது என யோசித்துப் பார்த்தால் மாபெரும் வரலாற்று சோகமே நம்மிடம் எஞ்சிக்கிடக்கிறது. இதற்கு மிகப் பிரதானமான காரணம் என்னவெனில், அரசியல் நிலவரம் என்பது இலக்கியப் பிரதிக்கான பண்பு மாற்றத்தோடு நிகழ்த்தப்படாமல், செய்தியறிக்கையின் வேலையைச் செய்ய அனைத்துப் பிரதிகளையும் அதாவது குறித்த காலத்தின் தேவை என நம்பப்பட்ட ஒன்றை அக்கறை கொள்ளும் பிரதிகளை இலக்கியப் பிரதிகளாக பாவிப்பதற்கு வழிகாட்டியதுதான்.

மஹ்மூத் தர்வீஸ் போன்றில்லாவிட்டாலும் அதற்கும் குறைவான ஒரு கவிஞரை உருவாக்கிவிடவில்லை.(தர்வீஸ் மிகவும் ஆற்றல் மிக்க அணிதிரட்டல் கவிஞர்தான்) மாறாக,சிறந்த செய்தியறிக் தயாரிப்பாளர்களை உருவாக்கியிருக்கிறது.
அரசியல் நிலவரத்திற்கும், இலக்கியப் பிரதி ஒன்றில் அதுபோல ஒரு கதையை நிகழ்த்திக் காட்டுவதற்கும் இடையிலான வேறுபாட்டை அடையாளம் கண்டு இலக்கியத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. இதைவிட இன்னும் மோசமான நிலவரம் என்னவெனில்,ஈழத்தில் அதிகம் பேர் இலக்கியத்தில் தொடர்சியாக இயங்கவில்லை என்பதும் ஒரு காரணம். ஒரே செய்தியை தொடர்ந்து செய்வதும், வாசிப்பதும் சலிப்பை ஏற்படுத்தி இலக்கியச் செயற்பாட்டாளர்களை ஒதுங்கவும் செய்துவிட்டது.


குறித்த ஒரு மொழியைப் பின்பற்றுகின்ற அல்லது,தங்களை சமூகமாக கருதுகின்ற சனக்கூட்டம் எப்போதும் பொதுவான ஒற்றை அம்சத்தினால் மாத்திரமே உள்ளீடுகளைக் கொண்டிருப்பதில்லை. அகத்தினுள் பன்மையான அம்சங்களைக் கொண்டிக்கின்ற ஒன்றுதான். அதில் அரசியல் என்ற குறித்த ஒரு அச்சத்தை மாத்திரமே முதன்மைப் படுத்தி அச்சனக்கூட்டத்தின் அனைத்து அனைத்து இயங்கு நிலைகளையும் சரிப்படுத்தவும் விமர்சிக்கவும் முயற்சிப்பது மிகவும் பின்தங்கிய நிலைப்பாடாகும். அரசியல் நிலவரத்தைச் சுற்றியே ஒரு சமூகத்தை இசையவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததும்கூட. அச் சமூகத்தில் எத்தனையோ நிலவரங்கள் இருக்க சாத்தியமுண்டு. அனைத்து அம்சங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அச்சமூகம் பிரச்சினையானதாக கருதும் அரசியல் நிலவரம் அதிலொன்றாக இருக்கமுடியும். பன்மையான தன்மைகளைக் கொண்டிருக்கவும், பலவகையான துறைகளில் அத்துறைக் கேற்ப பண்புமாற்றமடைந்து புதியதொன்றாக உருவாக வேண்டும்.

ஆனால், ஈழத்து தமிழப்பரப்பில் இவை நடந்தேறவில்லை. இலக்கியத்தில் செயற்படும் உள்ளடக்கமான பூடகத்தன்மை கவனத்திற் கொள்ளப்படவில்லை. அந்தப் பூடகத்தன்மை நீக்கப்பட்டு, உடனடியாக உணர்வூட்டக்கூடிய செய்தியாகவோ, ஏதோவொன்றை மக்கள் கட்டாயம் உணரவேண்டும் என்ற பிரச்சாரமாகவோதான் இலக்கியப் பிரதிகள் நடத்தப்பட்டது.
ஒரு சமூகத்தின் தேசிய உணர்வென்பது புரிதலாக மாற்றப்படாமல், தேசிய அரசியலை முன்வைப்பதாக கருதும் நிறுவனங்களின் மீதான அபிமானமாக சுருங்கிப்போனதும் இங்கு நினைவு கூரப்பட வேண்டியதே. இதே, தமிழை மொழியாகக்கொண்ட பிற சமூகங்களை உள்ளடக்கமற்ற ஒன்றாகவும், அரசியல் அர்த்தத்தில் குறைவான இடத்தை வழங்கி உட்பிரிவுகளாக கருதவும் இடந்தந்தது. மற்றமை என்பதை விரிவாக அனுகாமல், கடமைப்பட்ட ஒரு பகுதியாக கதையாடத் தொடங்கியதையும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.


இந்த வகையான அரசியல் புரிதல்தான் இலக்கியத்திற்கும் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது.