சனி, ஆகஸ்ட் 24, 2013

கற்பனைச் செயல் என்பது மேலதிகச் சிந்தனை

றியாஸ் குரானா

இலக்கியம் குறித்து இன்று அதிகம் உரையாடப்படுவதில்லை.ஆனால்,இலக்கியப் பிரதிகளுக்கான விமர்சனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிந்து கொண்டுதானிருக்கின்றன.எதிரும் புதிருமான பல் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.பேசப்படுகின்றன.ஒவ்வொருவரும் தனது கருத்துக்களே சரியானது என்பதுபோல ஒரு புரிதலை கடைப்பிடிக்கின்றனர்.கருத்துச் சுதந்திரம் என்பதன் உதவியோடு அவரவர் கருத்தே இறுதியான முடிவு என நம்பவும்,பின்பற்றவும் வசதியாக இருக்கிறது. இலக்கியம் என்றால் இன்னதுதான் என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள மறைமுகமான ஏதோ ஒரு முக்கியமான விசயம் நம்பப்பட்டிருப்பதுபோல ஒரு நிலை தென்படுகிறது.அதனூடாக கருத்து நிலைகளுக்கிடையிலான உரையாடல் தவிர்க்கப்பட்டபடியே வருகிறது.ஆகவே,அவரவர் நம்பும் பிரதிகளை இலக்கியமாகப் பாவிப்பதற்கு இது ஏதுவான நிலையாகும்..இப்படி பாவிப்பதில் எந்தச் சங்கடமும் இல்லை.ஆனால்,அதைக் காரணமாக வைத்துக்கொண்டு உரையாடலைத் தவிர்க்க முயற்சிப்பதுதான் அபாயகரமான நிலவரமாகும்.

இலக்கியப் பிரதிகள் புறச்சூழலை சரிபார்ப்பதற்கான ஆவணங்களாக மாறிப்போயிருப்பதே மிக நீண்ட விமர்சனப் புரிதலாக நிலைத்திருக்கிறது.அல்லது இலக்கியம் மனதின் தனித்த செயல் என்ற எல்லையைத் தாண்டமுடியாதளவில் குறுக்கி புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அகம் புறம் என்ற நமது பழைய கதையை இங்கு நான் தொடங்கவில்லை.ஆயினும்,அதன் தாக்கமும் இங்கே இன்னும் அதிகமிருப்பதை உணரலாம்.
 

புறச்சூழலை யதார்த்தமானது என நம்பப்படும் நிலவரத்தை இலக்கியப் பிரதிகளில் தேடுவது, அல்லது கண்டுபிடிப்பது இவை இரண்டிற்குள்ளும் அனேகமான இலக்கியப் பிரதிகளுக்கான வாசிப்பை அடக்கிவிடலாம்.
இலக்கியப் பிரதி தனக்குள் கொண்டிருக்கும் உண்மையும், யதார்த்தம் என நம்பப்படும் கதையாடலும், புறச்சூழலின் நேரடியான தூயவடிவத்தைக் கொண்டிருப்பதில்லை.அதற்கு மாறாக, அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில், பிரதியின் மீது வாசகர்கள்(விமர்சகர்கள்) அதிக அழுத்தம் கொடுப்பதும், அந்த அழுத்தத்திற்கு பணிந்து,அதற்கு அமைவாக ஆசிரியர்கள் பிரதியை உருவாக்குவதும் என்னைப் பொறுத்தளவில் இலக்கியப் பிரதியாக இருப்பதற்கு உரியவை அல்ல.

புறச்சூழலின் நேரடி பிரசன்னத்தை, இலக்கியப் பிரதி என கருதப்பட அவாவும் ஒன்று தன்னிடம் கொண்டிருக்க முடியாது. இலக்கியப் பிரதி தனக்குள் கொண்டிருக்கும் கதையாடலையும், அது இயங்கும் வழிமுறைகளையும் கனவிப்பதனூடக புறச்சூழலின் யதார்த்தத்தை அனுக முடியும். அல்லது, அனுக வசதியாக இருக்கும்.தவிர, புறச்சூழலை புறச்சூழலை சரிபார்ப்பதற்கான ஆவணமாக அதுவும் நம்பத்தகுந்த ஆவணமாக இலக்கியப் பிரதியை இன்று பாவிக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை என்றே நினைக்கிறேன். அப்படியான ஒரு ஆய்வுக்கு இலக்கியப் பிரதிகள் இடந்தரக்கூடியவையும் அல்ல.

புறநிலையில் பன்மையான யதார்த்தங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் இன்றையப் புரிதல், இலக்கியப் பிரதியை ஏதாவதொரு யதார்த்தத்தின் பிரதிநிதியாக கண்டடைவதற்கும் தோதான வாசிப்புக்கள் மாத்திரமே பெருகிக்கொண்டிருக்கின்றன. எனவே, இலக்கியப் பிரதியை இதுவரை எப்படியானது என நம்பிக்கொண்டிருக்கிறோமோ அதில் மாற்றங்கள் தேவை. அதற்கான விமரச்சன வாசிப்புக்களை நோக்கி சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தேவையும் அதிகரித்திருக்கிறது.

புறநிலை யதார்த்தங்களும், உண்மைகளும் இலக்கியப் பிரதிக்குள் நுழையும்போது புதிதாக பிறப்பது போன்ற ஒரு மாற்றத்திற்குட்பட்டே ஆகிறது. மொழியினதும், பிரதியின் எல்லைக்குட்பட்ட வழிமுறைகளினூடாகவும் யதார்த்தத்திற்கு முற்றிலும் வேறுபட்ட கதைகளினூடாக பயணிக்க ஆர்வங்கொள்ளுகிறது. புற நிலையில் யாதாவதொன்றுக்கு அர்த்தம் உருவாக்கப்படுவதற்கும், பிரதியினுள் செயற்படும் அர்த்த உருவாக்கத்திற்கும் வழிமுறைகளில் அதிக முரண்பாடு வெளிப்படாது போய்விட்டாலும், அர்த்த உருவாக்கத்திற்கு பயன்படுத்தும் நேர்வுகள் முற்றிலும் எதிரானதும் வேறுபட்டதுமாகும்.
புறநிலை யதார்த்ததில், அர்த்த உருவாக்கத்திற்கு பயன்படக்கூடியதல்ல என ஒதுக்கிவைத்திருக்கும் பொய்கள், கற்பனையான செய்திகள், வினோதமான கூற்றுக்கள், மாயச் செய்திகள் போன்றவற்றை- பிரதி தனக்குள்ளாக அர்த்த உருவாக்கத்திற்கு மிக அதிகம் பயன்படுத்துகிறது. சொல்லப்போனால், புறநிலையில் அர்த்த உருவாக்கத்திற்கு அபத்தமானது என ஒதுக்கிவைத்த அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தி பிரதி தனக்குள்ளாக அர்த்தங்களை உருவாக்கிக்காட்டுகிறது. அதனூடாக, பிரதி தனக்குள் ஒரு யாதார்தத்தை பிறப்பிக்கிறது. இது பிரதிக்குள் நிலவும் யதார்த்தமாகும். புறநிலை எதார்தத்திற்கும், பிரதிக்குள் நிலவும் யதாத்ரத்திற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உண்டு. அதுபோல, அர்த்த உருவாக்கத்திற்கு பிரதியும், புறநிலையும் முற்றிலும் வேறுபட்ட நேர்வுகளையே துணைக்கழைக்கின்றன. ஆனால், அர்த்தத்தை உருவாக்கும் வழிமுறைகளில் மாத்திரமே நெருக்கங்களை இடையிடையே கண்டுபிடிக்க முடியும்.


சிந்தனையின் வினோதச் செயல்களும்,மனதின்(சிந்தனை) மாயவிளையாட்டுக்களும் கலந்த பெரும் கற்பனையான அல்லது, கற்பனையின் நடைமுறையை, இலக்கியப் பிரதிக்குள் இருக்கும் கதையாடல்களுக்கு வழங்கிவிடுகின்றன.கற்பனையின் விதிகளால் (முறைமைகளால், கற்பனை விதி என்ற ஒன்று இருக்கிறதா என்ன? கட்டுரைப் போக்கிற்கும், அதைப்புரிந்து கொள்வதற்குமாக பாவிக்கிறென்.)வழி நடாத்தப்படுகின்ற கதையாடலாக இலக்கியப் பிரதி மாற்றம் கொண்டுவிடுகின்றது. ஆக, இலக்கியப் பிரதி என்பது முற்றிலும் கனவைப் போன்ற ஒன்றாக மாறிவிடவே அதிக சாத்தியம் கொண்டிருக்கிறது. கனவை அனுகுவதைப் போன்றும், கனவு காண்பதைப் போன்றும், கனவுக்கு பொருள் சொல்லுவதைப் போன்றுமே, இலக்கியப் பிரதியுடன் வினையாற்ற முடியும்.
புறச்சூழலின் நடைமுறைகளுக்கு முற்றிலும் மாற்றமான வினோதங்களாலும், மாயவித்தைகளாலும் தமது கதையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. புறச்சூழலை குறியீடு செய்வதாக இலக்கியப் பிரதியை அனுகும் செயலையும் அறிந்திருப்பீர்கள். மொழி என்பது, குறியீடு செய்வதாகும். அந்த மொழியாலான ஒரு வினோத நிகழ்வான இலக்கியத்தையும் குறியீடு செய்யும் ஒன்றாக வாசிப்பது இலகுவானதே. ஏனெனில், அது மொழியாலே ஆகியிருக்கிறது. நான் அந்த அடிப்படையை மறுக்கிறென். மொழிக்கிருக்கின்ற ஒரு பண்மை மொழியாலான ஒரு நிகழ்வு தன்னிடம் கொண்டிருக்கும் என்பது, ஒரு அபூர்வமான கண்டுபிடிப்பல்ல. இலக்கியப் பிரதி குறியீடு செய்யவில்லை.அந்தப் பிரதி கொண்டிருக்கும் மொழி குறியீடு செய்வதாக தனது பண்பை வெளிப்படுத்துகிறது. ஆனால், இலக்கியப் பிரதியோ தனது எல்லைக்குட்பட்டதாக ஒரு யாதர்தத்தை உருவாக்குவதோடு, வௌ;வேறு அம்சங்களைக் கொண்டு, புதிய வழிகளில் அர்த்தங்களை உருவாக்கிக் காட்டுகிறது. இலக்கியப் பிரதி உருவாக்கும் அர்த்தங்களுக்கும், புறச்சூழலில் யதார்த்தமாக நிலவும் அர்த்தங்களுக்குமிடையிலான ஒரு இணைப்பை உருவாக்குவதே, இன்றையத் தேவையாக இருக்க முடியாது. அதன் வித்தியாசங்களை அனுகுவதே இலக்கிய விமர்சனத்தின் செயலாக அமையமுடியும்.
இலக்கியப் பிரதி சொல்லுகின்ற அடிப்படையான செய்தி, புறக்கணிப்புக்களால் யதார்தத்தை உருவாக்க முடியாது என்பதாகும். ஆனால், புறச்சூழலில் ஒரு கதையாடல் உருவாகி எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்பதற்கும், இலக்கியப் பிரதியில் உருவாகி எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்பதற்குமான வழிமுறை மாத்திரமே நெருக்கமுடையதாக இருக்கும். இரண்டின் செயற்பாடுகளும், நடைமுறைகளும் முற்றிலும் வேறுபட்டதாகும்.அதே நேரம் பொருந்தாததாகவும், வினோதமானவைகளாகவுமே இருக்கும்.

புறச்சூழலில் அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கு நம்மால் முன்வைக்கப்படும் கேள்விகளும், ஆய்வுகளும் இலக்கியப் பிரதிகளுக்கு பொருந்தவே பொருந்தாது.யதார்த்தத்தில் பொய் என்றும் நடக்கச் சாத்தியமற்றது என தூக்கி வீசப்பட்ட அனைத்து அம்சங்களைக் கொண்டும், தனது உண்மைகளையும், யதார்த்தத்தையும் இலக்கியப் பிரதி உருவாக்கிவிடும். எனவே, இலக்கியப் பிரதியை சந்திக்கும்போது, அல்லது அதனுள் நுழையும்போது, இலக்கியப் பிரதி தனக்குள் கொண்டிருக்கும் வினோதங்களையும், மாயச் செயல்களையும், தனக்குள் உருவாக்கும் உண்மைகளையும், யதாதர்தங்களையும் ஏற்றுக்கொள்ளும் தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை கொண்டிருப்பவர்கள்தான் தம்மை வாசகர்களாகவும், விமர்சகர்களாகவும் அறிவித்துச் செயல்பட முடியுமென்று நினைக்கிறேன்.
கனவுக்கு பொருள் சொல்வதற்கு தெரிந்த அல்லது அதன் வழிமுறையை அறிந்தவர்களே, இலக்கியப் பிரதியை அதற்குரிய பொறுப்புள்ள வாசிப்பை முன்வைக்க முடியும். ஒருவகை வினோதங்கள் நிரம்பிய, சந்தேகங்களுடன்கூடிய ஊகமாகவே இலக்கியப் பிரதியை பாவிக்க வேண்டும்.புறச்சூழலின் யதார்த்தங்களுக்கு சக்கதியூட்டும் நம்பத்தகுந்த ஆவணங்களாக அல்ல. அப்போதுதான், முழச் சம்மதத்தோடு வாசிப்பதற்கான அனைத்துக் கதவுகளையும் இலக்கியப் பிரதி திறந்து தரும். ஒழிவு மறைவுகளின்றி பிரசன்னமாகும்.

இலக்கியப் பிரதி கற்பனையானது. எனவே, கற்பனைச் செயல் என்பது, ‘அது கற்பனைதானே’ என தூக்கி வீசத்தக்கதோ அல்லது ஏதோ பித்துப் பிடித்த சிலரின் உளறல்களோ அல்ல. சிலர், கற்பனைச் செயல் என்பது ஒரு வகைப் பித்துநிலை என்று ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு. நான் அந்த வகையினம் அல்ல. அவர்கள் பித்தர்களாகவும், பித்துகிகளாகவும் இருக்கட்டும். கற்பனைச் செயல் என்பது, மேலதிகச் சிந்தனை என நினைப்பவன். வினோதங்களும், மாயங்களும் நிரம்பியதுதான் சிந்தனை. அங்கிருந்தே தொடங்குவோம்.