செவ்வாய், அக்டோபர் 29, 2013

முன்னய பறவை

 அகமது ஃபைசல்

வரலாற்றின் மேல்

பறந்துகொண்டிருந்த முன்னய பறவை
வந்தமரப்போகும் இடத்தை
வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
அங்கு
நல்லாட்சி செய்த ஒரு அரசன்
தன் காதலியுடன்
குதிரையில் சென்றுகொண்டிருக்கும்போது
பறவையை கொன்றுவிட்டான்.
கொல்லப்பட்டுக் கிடந்த முன்னய பறவையை
எடுத்து வெளியே போட்டுவிட்டு
தொடர்ந்து வரலாற்றைப் புரட்டிப் படிக்கின்றேன்.


சிவப்பு நிற வாலை அசைத்துக்கொண்டு
என் தங்கையின் அறையிலிருந்த
சுவர்க் கண்ணாடியில் பறந்துகொண்டிருக்கின்றது.
கண்ணாடி
அறையைவிட்டு வெளியே செல்லவில்லை.

பறந்து பறந்து
வெகு தூரம் சென்ற முன்னய பறவை
அரசனின் தோட்டத்து மரமொன்றில் தங்கிற்று.

வரலாற்றின் அடுத்தடுத்த பக்கங்களை
நாளை படிக்கலாம் என்று
புத்தகத்தை மூடிவிட்டு
தங்கையின் அறையிலிருந்து வெளியேறுகிறேன்.
மறு நாள்
கண்ணாடியின்
இடது பக்க மேல் மூலையில்
கத்திக் கொண்டு நின்றது
அந்த முன்னய பறவை.
அறையை
கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும்போது
புத்தகத்தை
எரித்துவிட்டதாக சொன்னாள்
அன்புத் தங்கை.