திங்கள், நவம்பர் 11, 2013

ரீமேக் - நல்ல கத நெடுப்பமில்ல

 றியாஸ் குரானா

இது புண்படுத்தும் நோக்கத்திலானதுஅல்ல என்றும் யாருடைய கவிதையையும் எடிட் செய்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலானது அல்லஎன்றும் இத்தால் தெரிவித்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன். அதேநேரம், இதை ஒரு பயிற்சியாக நானே என்னிடம் செய்துபார்க்கிறேன் என்றும்தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு கவிதைப் பிரதிக்கான பல்வகையான வாசிப்புக்கள்சாத்தியம் என்று நினைக்கிறேன். அந்த வாசிப்புக்களில் ஏதாவதொன்று மாத்திரமே சரியானது என்ற நம்பிக்கை என்னிடமில்லை.பல வகைகளில் வாசித்துப் பார்க்கிறென். இப்படியான வாசிப்புக்கள் அவசியம்தானா என நீங்கள் கேட்டால்தெரியாது. வாசித்துப்பார்ப்போம்என்று மட்டுமே பதில் சொல்ல விரும்புகிறேன். வாசிப்பு என்பது, பிரதியோடு சாத்தியமான அனைத்து வழிகளிலும்வினையாற்றுதல். இரக்கமற்றதும், நெகிழ்ச்சியற்றதுமானஒரு நிலவரத்தை தொடர்ந்து பேணியபடி பிரதியை அனுகுவதே என்றும் நம்புகிறேன். இந்தநம்பிக்கைகள் மற்றும் புரிதல்கள் அப்பிரதியோடு உறவைப்பேண உதவவேண்டும் என்றும்கருதுகிறேன். இதுபோலமற்றவர்களின் வாசிப்புப் பிரதிகளில் நிகழ்வது என்ன என்பதையும் கவனித்து பிரதிக்கானஎனது அர்த்தத்தை பெருகச் செய்கிறேன்.

அதற்கு எப்படி செயற்படுகிறேன் என்பதன் கதைகளையேஉங்களோடு பகிரந்து கொள்கிறேன். ஆசிரியனால் இறுதிசெய்யப்பட்ட பிரதியைத்தான் அனுகுகிறேன்என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அதுவாசகனால் இறுதிசெய்யப்பட்ட வடிவமல்ல என்பது வாசிப்பை கட்டுப்படுத்தாத ஒரு புலத்திலிருந்துவருவதாகும். இதுவரை, கவிதைப் பிரதி என நம்பப்படும்ஒன்றை அனுகும் வாசகர்கள்(பார்வையாளர்கள்) பிரதியினுள் கட்டமைக்கப்பட்டிருக்கும்கதையாடலையோ, அதன் உள்ளீடுகளையோ கருத்திற்கொண்டு தமதுவாசிப்புப்பிரதியை (விமர்சனத்தை) முன்வைத்ததால், பிரதி குறித்த வாசிப்பு என்பது கருத்துநிலைகளுக்கிடையிலான முரண் மற்றும் இணைவு பற்றிய விசயமாக மேலெந்து வந்திருக்கிறது. ஆனால்,நான் முன்வைத்த வாசிப்புப்பிரதி இதிலிருந்து முற்றிலும்வேறானது. ஆசிரியனால் முன்வைக்கப்பட்ட கவிதைப் பிரதியின் வெளியே தெரிகின்ற பகுதியானதும், எளிதில் அறிந்துவிடக்கூடடிய கவிதையின் எடுத்துரைப்புபகுதியில் கைவைத்ததாகும். அதுவும், நீக்கவும் இணைக்கவும் முயற்சித்ததாகும்.

இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக எனது தரப்பைமுன்வைப்பதானால், சம்பவங்களை கவிதைச் சம்பவங்களாகமாற்றும் வழிமுறைகளை வாசிப்புச் செய்ததாகும். (விமர்சித்ததாகும்.) இது இரண்டுவகையான சிக்கல்களைதரக்கூடியது என்று நான் அறிந்தே செய்தேன். கவிதைகளை எடிட் செய்கிறேன் என்றஒருவகைப் பதட்டத்தை தரக்கூடியது என்ற ஒன்றும், முக்கியகவிஞர்களாக நம்பப்படும் பலர் தமது கவிதைச் செயலின் அம்சங்களை வெளிப்படுத்தி கவிதைகுறித்தகதைகளை பேசுவர் என்று நினைத்திராததுமாகும். இந்தவகைச் சிக்கல்களினால், எனது ரீமேக் செயலை நிராகரிக்கவும் கூடும். ஆயினும், அவர்களின் நிராகரிப்பு ஒரு உரையாடலாக மாறுமெனில், அதிலிருந்து கற்றுக்கொள்ள அதிகமிருக்கும் என்றேநான் கருதுகிறேன்.

ஆசிரியர் பலசம்பவங்களை, தனது எடுத்துரைப்பினுாடாக ஒரு கவிதைச் சம்பவமாகமாற்றுகிறார். அந்த எடுத்துரைப்பு பல வழிமுறைகளை பிரதிக்குள் இயங்கவைக்கிறது. அந்த எடுத்துரைப்பையும்,எடுத்துரைப்பு மேற்கொள்ளும்வழிமுறைகளுக்கும் உதவுதாக சொற்கள் பயன்படக்கூடியது. அவருடைய வழிமுறை முற்றிலும்ஒரு கதையை நம்மோடு வினையாற்ற வைப்பதுதான். அந்தக் கதையை பிரதிக்குள் உருவாக்க பயன்படுத்தும் சொற்கள் பலஇருக்கமுடியும். அது தனது கவிதைப்பிரதி எப்படி இருக்கவேண்டும் என்பது தொடர்பானது.ஆனால், பார்வையாளனோபிரதியிலிருக்கும் அனைத்து அம்சங்களையும் (சொற்கள் உட்பட) கொண்டுதான் குறித்தபிரதியின் கதையாடலை பெற்றுக்கொள்கிறான் என்றில்லை. அது அவசியமும் இல்லை. கட்டாயமான விதியுமல்ல. அவனுக்கு பிரதியில்இருக்கும் சிலவிசயங்கள் நீக்கப்பட்டாலும் அதன் கதையாடலை பெற்றுக்கொள்ள முடியும். அப்படிஎந்தவொரு வாசகனால் முடியுமானதாக இருக்குமோ, அந்த வாசகனுக்கு குறித்த பிரதியில் மேதிகமாக சில அம்சங்கள் இருப்பதாகதே படும்.இதுபோல, பல வாசகர்களுக்குஆசிரியன் தந்திருக்கும் பிரதி அதனுள்ளிருக்கும் கதையாடலை பெற்றுக்கொள்ள போதுமானதாகஇருக்காது. இன்னும் மேலதிகமான விசயங்கள் தேவைப்படலாம். ஆக, வாசகன் தனக்கு குறித்த பிரதியில் இருந்து கதையாடலைப்பெற என்னவெல்லாம் செய்கிறானோஅவைகள்தான் வாசிப்பிற்கான அடிப்படையுமாகும். கதை இப்படி இருக்கையில், பிரதியை சிதைத்தல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.

பிரதி ஒன்று இப்படியான பல அம்சங்களால்தாக்கமுறுகிறது என்பதுதான் வாசிப்பை நிகழ்த்துகிறவிசயம். அதேநேரம், பிரதி சிதைக்கப்படுகிறது என ஒரு குரல் வெளிப்பட்டால்,அந்தப் பக்கத்திலிருந்து வரும் கதைகளை, வாசிப்புப்பிரதியை முன்வைத்த பார்வையாளன் எதிர்கொள்ள வேண்டும்.தான் எப்படி இந்தப் பிரதியை வாசித்தேன் என்ற கதைகளை முன்வைக்க வேண்டும் அதுதான் நியாயமானது. வாசிப்புஎப்படியுமிருக்கலாம்.

எனவே, மதிப்புக்குரிய சுகுமாரன் ஐயா அவர்களின் கவிதையை நான்வாசித்த கதையை பேசுவதுதான் இங்கு நியாயமானது. அவர் குறிப்பிடுவதுபோன்று நான் நீக்கிய”அந்தக் கவிதையின் ” பகுதிகளால், கவிதை கொண்டிருப்பதாக சுகுமாரன் சொல்லும் கதையாடல் சிதைவடைகிறதாஎன பார்க்கலாம்,..


இது சுகுமாரன் அவர்களின் ஒரிஜினல்(கவிதையைின் பகுதி)


நீ தாகபூமியும்
நான் நீர்மேகமுமாய் இருந்தோம்
பிணக்குக்கு முன்பு.

உன் விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்

பிணங்கிக் குமுறிய பூமி
மேல்நோக்கி உருண்டது
நின்று தயங்கிய மேகம்
தழைந்திறங்கி மல்லாந்தது

இந்த உடற்பெயர்ச்சியில்
இப்போது
பூமி நான்
மேகம் நீ.



இது எனது ரீமேக் வடிவம்.



தாகபூமியும்
நீர்மேகமுமாய் இருந்தோம்
பிணக்குக்கு முன்பு.

விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்

பிணங்கிக் குமுறிய பூமி
மேல்நோக்கி உருண்டது
நின்று தயங்கிய மேகம்
தழைந்திறங்கி மல்லாந்தது

இந்த உடற்பெயர்ச்சியில்
இப்போது
பூமி நான்
மேகம் நீ.


,,,,இது சுகுமாரன் ஐயா எனது ரீமேக்கைமுன்வைத்து பேசியவைகள்.



/ நீ தாகபூமியும்
நான் நீர்மேகமுமாய் இருந்தோம்
பிணக்குக்கு முன்பு./
இவை என் வரிகள். யார் பூமி, யார் மேகம் என்று திட்டமாகச் சொல்லவே அந்தநீயும் நானும்.

/தாகபூமியும்
நீர்மேகமுமாய் இருந்தோம்
பிணக்குக்கு முன்பு/

இவை நீங்கள் ரீமேக் செய்தவரிகள். இதில்யார் பூமி, யார் மேகம் என்றநிர்ணயம் இல்லை. அப்படியான தெளிவின்மை எனது கவிதையின் கூறல்ல.

• தவிர நீங்கள் அநாவசியம் என்று தூக்கிய’நானும் நீயும்’ இரண்டாவது முறை வேறு தளத்தில் வருகிறது. இந்த juxtapositionக்கு முன் சொன்ன ’அநாவசிய’ நீயும் நானும் தேவை.

இது சும்மா சுட்டிக் காட்டல் மட்டுமே.

/உன் விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்/இது மேக்.

/விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்/இது ரீமேக்.

இரண்டுக்கும் சொல்லும் தொனியில் வேறுபாடேஇல்லையா?

முதலாவதில் உன் விடாய் என்பது பெண்ணின்விடாய் என்று தொனிக்க வில்லையா? பெண்ணேவலிந்து தனது தாபத்தைச் சொன்ன பின்னும் ஆண் தயங்கியதுதானே பிணக்கின் காரணம்? அது உங்கள் ரீமேக்கில் தெரிகிறதா?


இப்போது எனது மறுபேச்சு.அடைப்புக்குறிக்குள் இருப்பவை எனது.


தாகபூமியும்
நீர்மேகமுமாய் இருந்தோம்
பிணக்குக்கு முன்பு.

(யார் பூமி யார் மேகம் என்பது வெளிப்படையாக இதில்இல்லை. ஆனால், ”இருந்தோம்”என்பது இருவர் என்பதை குறைந்தபட்சம்குறிக்கிறது. யார் எது என குறித்துக்காட்ட ”நீ” ”நான்”என்பது பயன்படுத்தப்பட்டது என்பது வெளிப்படையான செய்தி.அந்த இரண்டு சொற்களும் இல்லாது யார் எது எனக்காட்டும் வழி இங்கு இருக்கிறது.அதை பிறகு பார்ப்போம்.பிணக்குக்கு முன்பு, பூமியும்,மேகமாயும் இருந்தது உறுதிப்படுகிறது.)

விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்

(யாருடைய விடாய் தணி்க்க தயங்கியது என்பது இங்குமறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பிணக்கின்காரணம் சொல்லப்படுகிறது. அதுவும் விடாய் தணிக்க தயங்கியது என்பதும் உறுதியாகிறது.இங்கு இன்னுமொரு விசயம்தெளிவாகிறது. அதாவது, மேகம் பொழியத்தயங்கியதுஎன்பதுதான் அது. ஆக, மேகத்தின்செயல்காரணமாக பிணக்கு உருவானது என்பதை ஊகிக்க முடிகிறது. இப்போது பிரச்சினைஎன்னவென்றால், மேகம் யார் என்பதுதான்?அதைக் கண்டுபிடித்தால் பூமி யார் என்பதுதெரிந்துவிடும் அல்லவா?)

பிணங்கிக் குமுறிய பூமி
மேல்நோக்கி உருண்டது

(மேகம் பொழியத் தயங்கியதால் குமுறியபூமி, மேல் நோக்கி உருள்கிறது.அதாவது, மேகம் இருந்த இடத்திற்குபூமி மாறுகிறது)

நின்றுதயங்கிய மேகம்
தழைந்திறங்கி மல்லாந்தது
(மேகம் கீழே பூமி இருந்த இடத்திற்கு வருகிறது.)


இந்த உடற்பெயர்ச்சியில்
இப்போது
பூமி நான்
மேகம் நீ.

(மேகம் பூமியிருந்த இடத்திற்கும், பூமி மேகம் இருந்த இடத்திற்கும் வருகிறது.”உடற்பெயர்ச்சி” என்ற சொல்லே. இவை மேகமுமல்ல.பூமியுமல்ல. ஒரு குறியீடு என்பதைஉணர்த்திவிடுகிறது. ” இப்போதுபூமி நான், மேகம் நீ” என்பதினுாடாக முன்பு நான் பூமி அல்ல. என்றும், நீ மேகம் அல்ல என்றும் தெளிவாகிறது. அதுபோல, முன்பு நீ பூமி நான் மேகம் என்றும்சொல்லிவிடுகிறது. ஆகவே, சுகுமாரன்சொல்லும் நீ, நான் என்பது தேவையற்றதே.அவை மேலதிக விளக்கம்தான். )

இன்னும் ஒரு விசயத்தை சுகுமாரன்சுட்டிக்காட்டியிருப்பார்.

அதுதான் எனக்கு பெரும் சந்தேகத்தைஉருவாக்கிய ஒன்று. அவரின் கவிதைச் செயலில் இவ்வளவு போதாமைகள் இருக்கிறதா எனகவலைப்பட வைத்ததும்கூட.

கீழே அது.


””/உன் விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்/இது மேக்.

/விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்/இது ரீமேக்.

இரண்டுக்கும் சொல்லும் தொனியில் வேறுபாடேஇல்லையா?

முதலாவதில் உன் விடாய் என்பது பெண்ணின்விடாய் என்று தொனிக்க வில்லையா? பெண்ணேவலிந்து தனது தாபத்தைச் சொன்ன பின்னும் ஆண் தயங்கியதுதானே பிணக்கின் காரணம்? அது உங்கள் ரீமேக்கில் தெரிகிறதா?”

”உன்” போட்டதால் பெண்ணின் விடாய் என தொனிக்கிறதாம்.

இந்தக் கவிதையைப் பார்த்தால் மேகம்என்பது ஆண் என்றும், பூமி என்பதுபெண் என்றும் விளங்கவில்லையா...? என்பதேஎனது சிறிய கேள்வி.

இத்தோடு முடித்துக்கொள்கிறேன். 30 நிமிடங்களின் முன்தான் வீடுவந்தேன். அவசர அவசரமாக தட்டச்சினேன்.சாப்பிடப்போகிறேன். சாப்பிட்டுவிட்டு வந்து உங்களை சந்திக்கிறேன்.

குறிப்பு. சுகுமாரன் இதுதவிர பல விமர்சனங்களையும் கருத்துக்களையும்அவரின் முகநுாலில்நிலைத்தகவலாக இட்டிருக்கிறார். அவைகளை இதனோடு இணைத்து பேச விரும்பவில்லை. அவரை மதிக்கிறேன்.நேசிக்கிறேன். அவர்மீது மரியாதை இருக்கிறது. மரியாதைவேறு, விமர்சனம் வேறு. மிக்க அன்பு.