திங்கள், டிசம்பர் 09, 2013

மரம் பற்றி எழுதிய கட்டுரை

இந்தா படீய்...ஹா படீய்....

எழும்புதில்ல

எழும்ப முடியிதில்ல

புல்லுக் கட்டு வெட்டி வெச்சன்

தவுடு கொழச்சி தண்ணி வெச்சன்

தல தடவி புண்ணாக்கு இட்டன்

இந்த மாடு எழும்புதில்ல

நெடுந்துாரம் போகனும்

மெல்ல எழும்பி நடக்க தொடங்கிற்று

இந்தா படீய்ய்...ஹா..படீய்ய்ய்...

உள்ளூர சந்தோசம்

இந்த மாட்டச் கஷ்ரப்பட்டு

சாய்க்க ஒரு காரணம்தான்

மரம் பற்றி ஒரு கட்டுரை எழுதனும்

எனச் சொன்னார்கள்

ஆனால், மாடு பற்றி எழுதவே

நான் தயாரிப்பிலிருந்தேன்.

இதை எப்படி சமாளிப்பது.

அதற்காகத்தான் வெகு துாரத்திலிருந்து

சிரமப்பட்டு,

மாட்டை அழைத்து வருகிறேன்.

மாட்டை எப்படியாவது முயற்ச்சித்து

மரத்தில் கட்டிவிட்டால்,

மாடு பற்றி எழுதினாலும்

மரம்பற்றியாகிவிடுமே.

மரத்தில் மாட்டைக் கட்டினேன்.

பசிக்கும்போது, கிளை வளைந்து

இலைகளை உண்ணக் கொடுத்தது.

மலர்கள் விழுந்து

உறங்க மெத்தையாகின.

இத்தனை நாளாய்

மாட்டைப் பிடிக்க காத்திருந்ததுபோல

மரத்தின் நடவடிக்கைகள் இருந்தன.

மாடு வெளியேற விரும்பியது

மரமோ, நெடிய கயிற்றில் விட்டது.

போகப்போக நீளும் கயிறு.

ஒரு நொடியில்

அரும்பி,மலராகி,பிஞ்சாகி,காயாகி,கனிந்து

மரத்திலிருந்து கீழே விழுந்த

பழமொன்றை சுவைத்தபடி

நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருக்கிறேன்

என கட்டுரை முடிவடைந்தது.