புதன், டிசம்பர் 11, 2013

உடல் - சிறுகதை


துரோணா   
1.
நான் எவ்வளவு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இதைவிட அதிகமான வேகத்தில் என்னால் ஓட முடியாது என்கிற அளவுக்கு என் சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி ஓடிக்கொண்டிருக்கிறேன். எங்கு போவது என்ன செய்வது என்பதுக் குறித்து எந்த எண்ணமும் இல்லை.கால்கள் மரத்துப் போய் எங்கேயாவது சரிந்து விழுந்து சாகிற வரைக்கும் ஓட வேண்டும் என்பது மட்டுமே இப்பொழுதிற்கு என்னுள்ளிருக்கும் ஒரே சிந்தனை.

2.
டெய்லர் கடையின் அகன்ற வெளிப்புறத்துக் கண்ணாடியில் பிரதிபலித்த எனது பிம்பம் நல்ல நிறத்தில் தாட்டியில்லாத தேகத்தோடும் நீளமான தலை முடியோடுமிருந்தது. சில நிமிடங்களுக்கு அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.பிசிரற்ற வடிவிலிருந்த முகத்தில் அதன் நேர்த்தியை துருத்தாத மூன்று நாள் தாடி பாந்தமாய் பொருந்தியிருந்தது.ஆனால் நான் நேற்றுதான் சவரம் செய்திருந்தேன்.கைகள் அநிச்சையாக மோவாயை தடவிப் பார்த்தன. என்னை தொடுவது போன்ற உணர்ச்சியே ஏற்படவில்லை. சடுதியில் கைகளை முகத்திலிருந்து விலக்கிக் கொண்டேன்.இது நான் இல்லை.மிகத் தெளிவாகத் தெரிகிறது.இந்த உடலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கை விரல்களை நீட்டி அவற்றை திருப்பியும் மடித்தும் ஒரு முறை உற்று நோக்கினேன். மெல்லிய நீளமான விரல்கள். என்னுடையவைக்கும் இவற்றுக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. எனது கருத்த கைவிரல்கள் தடிமன் ஆனவை. மனதுக்குள் பேயலைகள் அதிர்ந்தெழுந்தன.வேறு யாரோ ஒருவரின் உடலை பார்ப்பதுப்போல் நான் என்னுடலையே அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.சிறிய காதுகள்,சீராய் வெட்டப்பட்ட கால்நகங்கள், முடியடர்ந்த மணிக்கட்டு-இவை எதுவுமே என்னுடையவை அல்ல.தலை கிறுகிறுத்து சுற்றிலும் உலகம் வேகமாய் சுழலுவதாய் தோன்றியது. இந்த உடல் என்னுடையதில்லை .எனில் என்னுடைய உடல் எங்கே போனது?
இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் நான் திக்பிரமைக் கொண்டவனைப் போலாகியிருந்தேன். வீட்டிற்குப் போவது மட்டுமே எனக்கு தெரிந்த ஒரே முடிவாகவும் தேர்வாகவும் இருந்தது. ஆனால் வீட்டில் யாருக்கும் வேறு உடலில் இருக்கும் என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. ஒருவேளை என் உடல்க் கொண்ட வேறு யாராவது ஒருவன் அங்கிருக்கவும் சாத்தியமிருக்கிறது. இதற்கு மேல் என் மனம் அதிகம் சிந்திக்க பிரயாசைக் கொள்ளவில்லை. அது பாட்டிற்கு வீட்டிற்கு போகும் பாதையில் உடலை செலுத்த தொடங்கியது.
வெவ்வேறு திசைகளில் கிளைவிடும் எண்ணவோட்டங்களை தாங்கும் தெம்பை இழந்துக் கொண்டிருந்த எனது மனம் மிகவும் பலவீனமாகிக் கொண்டிருப்பதை நான் வலியுடன் புரிந்துக் கொண்டேன். வழியெங்கும் அது ஓயாது அரற்றிக் கொண்டேயிருந்தது. நேற்றிரவு படுக்கப் போனது வரையிலான எனது பழைய ஞாபகங்கள் மிகவும் தெளிவாக மனதில் பதிந்திருந்தன. ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது என்று எதுவும் சுத்தமாக நினைவில்லை.
இந்த உலகில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட மாதிரியான பதைபதைப்பில் நான் துடித்துக் கொண்டிருக்க எனக்கு பின்னால் உச்சி வெயில் நிழல்களோடு மனிதர்கள் கடந்துப் போய்க் கொண்டிருந்தார்கள் . வழக்கமாக இந்த பாதைகளில் நடக்க எனது கால்களுக்கு பிரக்ஞையின் துணையே தேவைப்படாது. மனம் வேறெதையோ சிந்தித்துக் கொண்டிருக்கையில் உடல் மாத்திரம் அதன் போக்கில் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கும். ஆனால் இப்பொழுது உடலும் மனதும் அந்நியப்பட்டுப் போனதில் ஒவ்வொரு அடிக்கும் இந்த உடலை பழக்க வேண்டி வந்தது.
தெருமுக்கை வந்தடைந்த போதே தூரத்தில் எனது வீட்டிற்கு முன்னே ஷாமியானா பந்தல் போடப்பட்டிருப்பதையும் சுற்றிலும் ஒரே கூட்டமாயிருப்பதையும் கவனித்து தடுமாறி நின்றேன்.மனதுக்குள் வெவ்வேறு சாத்தியங்களையுடைய துர்நினைவுகள் தோன்றியபடி இருந்தன.ஆனால் எதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ அல்லது மறுத்து விலகவோ என்னால் முடியவில்லை.மூச்சுத் திணறலோடு மிகுந்த சிரமப்பட்டு உடலின் ஒவ்வொரு செல்களையும் உந்தித் தள்ளி நடக்க ஆரம்பித்தேன்.

3.
கிட்டத்தட்ட சுயநினைவேயில்லாது என்ன செய்வதென்ற தெளிவுமற்று பேருந்து நிலையத்தை அடுத்த புளிய மரத்திற்கருகே அமர்ந்திருந்த என்னை அச்சத்தின் இருட்சுவர்கள் சூழ்ந்து அழுத்தின.தலைவிரிக் கோலமாய் சுவரருகே மயங்கி கிடந்த அம்மாவின் முகம் நினைவில் மோதி மோதி அறைந்தது. அப்பாவை தேடிப் பார்க்க அவரது அண்மையை உணர எவ்வளவோ விரும்பினேன். ஆனால் அந்த சமயத்தில் எதுவுமே சாத்தியப்படவில்லை. என்னுடன் கல்லூரியில் படிப்பவர்கள் பலரும் மாடிப் படியை ஒட்டி அமைதியாய் நின்றிருப்பது தெரிந்தது. அவர்களிடம் போய் பேச வேண்டும் என உள்ளூர விருப்பமாயிருந்தது. ஆனால் அவர்களால் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மெதுவாய் நடந்து பிணத்தை கிடத்தியிருந்த குளிர்ந்த பெட்டிக்கு அண்டையாய் வந்து சேர்ந்தபோது என்னுடல் சமநிலையிழந்து நடுக்கம் கண்டிருந்தது.கண்ணாடித் திரையில் உதிரியாய் இருந்த ரோஜா இதழ்களை விலக்கி  உள்ளே சவமாயிருந்த என்னை பார்வைக்குள் பதித்தேன்.சற்றைக்குள் தாரையாக கண்ணீர் கன்னங்களை நனைத்து வழிய,எனது மேலுதட்டில் மரணத்தின் கரிப்புத் தடம் பரவியது.மின்னதிர்ச்சியில் தாக்குண்டவனாய் சட்டென்று அங்கிருந்து நகர்ந்து படு வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்தேன். ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தபோது மூச்சு சப்தத்தை தலைக்குள் பாரமாய் உணர முடிந்தது.

4.
அதற்கு பிறகு எவ்வளவு நேரம் அங்கிருந்தேன் என்று தெரியவில்லை. வெயில் போய் சாயுங்காலம் வந்துவிட்டிருந்தது.என்னென்னவோ நினைப்புகள் எப்படி எப்படியோ மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.கடலிலிருந்து புதிது புதிதாய் கிளம்பும் அலைகளைப் போல் நினைவுகளில் தொடங்கும் குழப்பங்கள் ஒவ்வொருமுறையும் முடிவேயில்லாமல் வளர்ந்து நுரைகளாகி காணாமல் போய் திரும்பவும் நினைவுகளிலிருந்தே புதிதாய் வேறு ஒரு வடிவத்தில் உயிர்த்தெழுகிற வண்ணமிருந்தன. திடீரென்று அதிர்ந்தொலித்த தப்பட்டை சத்தத்தை கேட்டு நான் எனது கவனத்தை யோசனைகளின் சுழலிலிருந்து விடுவித்தேன். எதிர்புறத்து சாலையில் ஒரு சவ ஊர்வலம் நகர்ந்துக் கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தில் முதலாவதாக பானையை கையில் பிடித்தப்படி நடப்பது யார்?? அது....அது எனது அப்பா.........கண்களை இறுக பொத்திக்கொண்டு தலையை கால்களுக்கிடயே கவிழ்த்திக் கொண்டேன். தப்பட்டையொலி நகர்ந்து நகர்ந்து தொலைவுக்கு போனதை மனதளவில் உறுதி செய்துக்கொண்டு தலையை மேலுயர்த்தி பார்த்தபோது வழியெங்கும் சிந்திக்கிடந்த பூக்கள் நிறமிழந்து கருத்துப் போவதைப் போலொரு நினைப்புத் தட்டியது. 

5.
வெறுப்பில் தகித்தும் அயர்ச்சியில் சோர்ந்தும் தவித்துக் கொண்டிருந்தது எனது மனம். ஏதோவொரு வகையில் இந்த இக்கட்டிலிருந்து தப்பித்து செல்ல விரும்பியவனாய் சட்டையையும் கால்சராயையும் தேடித் துளாவினேன்.கால்சராயில் புலிப்படம் போட்டவொரு கைக்குட்டையும் கருப்பு நிற மணி பர்சும் கூடவே ஒரு செல்போனும் இருந்தன.செல்போன் மின்னாற்றல் இல்லாது உயிர்ப்பற்றிருக்க,பர்சில் நூற்றி சொச்சம் பணத்துடன் ஒரு ஓட்டுநர் உரிமும் இருந்தது. ஓட்டுநர் உரிமத்திலிருந்த கருப்பு நிழல் படிந்த புகைப்படத்தில்- கண்ணாடியில் நான் பார்த்த அதே உருவம். பெயரை வாசித்துப் பார்த்தேன். ‘சத்யவிரத் என்றிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு அந்த ஓட்டுநர் உரிமத்திலிருந்த தகவல்களையே அசிரத்தையாக படித்துக் கொண்டிருந்தேன்.
மணி என்ன இருக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இருள் பெருகி நிறைய தெருவிளக்குகளும் சாலையில் விரையும் வாகனங்களும் மஞ்சள் ஒளியைத் தெளித்தப்படி இருந்தன. பக்கத்திலிருந்த பெட்டிக் கடையில் குளிர்ச்சியான தண்ணீர் பாக்கெட் வாங்கி முகத்தை கழுவிக் கொண்டேன்.சில்லென்று முகமெங்கும் பதிந்த குளுமை இதமாகவும் மனதை சற்று தணிக்கச் செய்வதாகவும் இருந்தது.
டேய்...சத்யா..
பலமாய் கேட்டக் குரலை உள்வாங்கிக் கொண்டு திரும்பிய போது எனக்கருகாமையில் யாரோ ஒருவன் என்னையே கூர்மையாக பார்த்தப்படி பைக்கில் நின்றுக் கொண்டிருந்தான். ஓட்டுநர் உரிமத்தில் பொடி எழுத்துக்களில் மின்னியசத்யவிரத் என்ற பெயர் ஞாபகத்தில் இடறியது.
டேய் இங்க என்னடா பண்றே?.ஃபோன் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வருது.சரி வண்டில ஏறு போலாம்
அந்த சமயம் எனக்கு எதுக் குறித்தும் தெளிவான சிந்தனை இல்லை.என்ன செய்கிறேன் என்கிற நினைப்பே இல்லாமல் அவன் சொன்ன மாதிரி பைக்கில் பின்னாடி ஏறியமர்ந்துக் கொண்டேன். லஷ்மி தியேட்டர் தாண்டி பெரியப்பாளையம் போகும் சாலையில் வண்டி போய்க் கொண்டிருந்தது. வியர்வையில் நனைந்த முதுகை தீண்டிய ஈரக்காற்று நினைவுகளை லேசாக்கியது. தொடர்ந்து வண்டியோட்டிக் கொண்டிருந்தவன் என்னிடம் என்னென்னவோ கேள்விகள் கேட்டப்படியிருந்தான். ஆனால் அதற்கு நான் என்ன பதில் சொன்னேன் என்பதெதுவும் சரியாய் தெரியவில்லை.அவனது குரலே ஒரு மாதிரி அலையலையாய்தான் என்னுள் பதிந்தது. பொதுவாய் உச்சிக் கொட்டியும் தலையாட்டியும் வந்தேன்.

6.
பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து இளம்பச்சை நிற வீட்டின் முன்னால் வண்டி நின்றபோது, நான் அடித்து போட்ட மாதிரியான அசதியிலும் அலுப்பிலும் இருந்தேன்.முழுநிலவு தினத்தின் இரவு தண்ணீரில் மிதப்பதைப் போல் என் முன் அசைந்துக் கொண்டிருந்தது.
சரி மச்சான் நான் வர்றேன்.நாளைக்கு பார்க்கலாம் என்றபடி அவன் அங்கிருந்து பைக்கைத் திருப்பிக் கொண்டு கிளம்பிப் போனான்.
சடுதியில் எந்த யோசனைக்கும் இடம் கொடுக்காது நானாக அந்த வீட்டிற்குள் சென்றதை நிச்சயமாக தற்செயல் நிகழ்வு என்றே சொல்லவேண்டும்.வீட்டிற்குள் நுழைந்ததும் அந்த புகைப்படம்தான் முதலில் கண்களில் தட்டுப்பட்டது.வாசலுக்கு நேராக பெரிதாய் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில் சத்யா தனது பெற்றோருக்கு நடுவே சிரித்தப்படி நின்றிருந்தான்.தலையை குனிந்து நான் அணிந்திருந்த சட்டையை பார்த்தேன். புகைப்படத்தில் அவன் அணிந்திருக்கும் அதே சட்டை.  
சந்தடி கேட்டு அடுக்களையிலிருந்து சத்யாவின் அம்மா சாயுங்காலம் வரன்னு சொல்லிட்டு போனவனுக்கு இதுதான் வர்ற நேரமா என்றபடி என்னை நோக்கி நடந்து வந்தார். லேசான உராயல் சத்தத்தோடு சுழன்ற மின்விசிறிக்கு கீழே பதட்டத்தை மறைத்தப்படி கைகளை கால்சராயுக்குள் புகுத்தி நான் காற்று வாங்குவதுப் போல் நின்றுக் கொண்டிருந்தேன். அருகே வந்த சத்யாவின் அம்மா எனது தலை முடியைப் பிடித்துஇந்த முடிய வெட்டித் தொலைச்சா என்ன..எத்தன வாட்டி சொல்றது.. என்று பொய்க் கோபத்தோடு நாக்கை கடித்து பேசினார். எனக்குள் கூச்சமும் எரிச்சலும் ஒரே கணத்தில் தோன்றின. மெலிதாய் நெளிந்து அவரிடமிருந்து விலகினேன். அவர்எங்க சொல்லு பேச்சு கேக்குறான் என்று அங்கலாய்த்தபடி திரும்பவும் அடுக்களைக்கே போனார்.
அவர் போனப்பிறகே கூடத்தில் சத்யாவின் அப்பா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன்.என் வரவை உணர்ந்து சில நொடிகளுக்கு மெல்லிய புன்முறுவலுடன் என்னை எதிர்நோக்கியவர் திரும்பவும் தொலைக்காட்சியில் தன் கவனத்தை செலுத்த தொடங்கினார்.அடுத்து என்ன என்கிற தவிப்பு மறுபடியும் என்னை முழுமையாக சூழ்ந்துக் கொண்டது. ஈரக்கையை முந்தானையில் துடைத்தபடி வந்த சத்யாவின் அம்மா என்னிடம்ரூம்ல சாப்பாடு வச்சிருக்கேன்.நீ சாப்பிட்டுக்கோ..நாங்க தூங்கப் போறோம் என்று கனிவாய் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
நான் சத்யாவின் அறை எங்கிருக்கக்கூடும் என்கிற யூகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது,அவனது அப்பா தொலைக்காட்சியை அணைத்துவிட்டு என்னை பார்த்துநாளைக்கு நானும் உங்க அம்மாவும் முருகன் மாமா வீட்டுக் கல்யாணத்துக்கு போறோம்.சார் என்ன ப்ளான்ல இருக்கீங்க? என்று சிநேகமாய் கேட்டார்.நான் அமைதியாய் பதிலுரைக்காது நிற்க அவரே தொடர்ந்துசரி...எங்கப் போனாலும் சீக்கிரம் வந்திரு...நாங்க வர்றதுக்கு லேட்டாவும்.. என்று சொன்னபடி வலதுப்பக்கம் இருந்த அறைக்குள் சென்று மறைந்தார்.
இடதுப்பக்கம் அடுக்களையைத் தாண்டி நீண்ட பாதை சத்யாவின் அறையில் முடிந்தது. அறைக்குள் போனதுமே அடிவயிற்றில் கனத்துப் போயிருந்த சிறுநீர் கடுகடுவென்று எரிச்சல் உண்டுப் பண்ணத் தொடங்கியது.அறையோடு சேர்ந்திருந்த கழிவறைக்குள் நுழைந்தபோது இன்னொருத்தனின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதுப் போல் அருவெறுப்பாகவும் ஆபாசமாகவும் உணர்ந்தேன்.அந்த உணர்வு அட்டையென உடலெங்கும் ஊர்ந்து ரத்தம் உறிஞ்சியது.தொடர்ந்து கசகசவென்றிருக்கவே குளிக்காமல் முடியாது போலிருந்தது. கீறல் கீறலாக ரணங்கள் உண்டாகியிருந்த மனதோடு ஆடைகளை கழற்றினேன்.

7.
கனினி மேஜைக்கருகே நாற்காலியில் மூடி வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுத் தட்டைப் பார்த்ததும்தான் எனக்குள் ரொம்ப நேரமாய் உணவு பற்றிய எண்ணமே தோன்றாமல் இருந்தது உரைத்தது. அதுவரை இல்லாத கோரப்பசி என்னை அசுரத்தனமாய் தொற்றிக் கொண்டு குடல்களைச் சுருக்க படு வேகமாய் மேஜையிலிருந்து தட்டை எடுத்து உன்மத்தம் வந்தவன் மாதிரி சாப்பிட ஆரம்பித்தேன்.சாப்பிட்டு முடித்ததுமே அசதியில் உடம்பு தூக்கத்திற்கு ஏங்க ஆரம்பித்தது. கட்டிலில் தலை சாய்த்ததும் கை கால்களில் உளைச்சலெடுத்து இமைகளுக்குள் வண்ணச் சுருள்கள் நீண்டும் மடிந்தும் அலைவுற்றன.
செவிகளுக்கு வெகு அருகே பெரிய பெரியக் கண்ணாடி சிலைகள் சரிந்து விழுந்து சில்லுகளாகும் இரைச்சலான ஓசைக் கேட்டதில் அதிர்ந்துப்போய் கண் விழித்தேன். இருட்டில் தனிமையின் சிரிப்பு நான்கு பக்கங்களிலும் பைசாசமென எதிரொலித்தது. நிதானித்து மின்விளக்கை போட்டப்போது சட்டென்று மின்னிய வெளிச்சத்தில் கண்கள் கூச இமைகளை மூடிக்கொண்டேன். கொஞ்சம் ஆசுவாசம் அடையவும்,மதியத்திலிருந்து நிகழ்ந்துக் கொண்டிருப்பவை யாவும் கோர்வையான காட்சிகளாய் மனதில் தோன்ற ஆரம்பித்தன. பைத்தியக்காரனின் குழப்பமான நினைவு அடுக்குகளைப் போன்ற காட்சிகள்.
தலையனைக்கு பக்கத்தில் இருந்த அலைபேசியில் மெல்லியப் பெண் குரலில் ஒரு இந்திப் பாடல் ஒலிக்கவும் வெட்டுண்டு அறுந்த ஞாபகச் சரடிலிருந்து விலகி அலைபேசியை கைகளில் எடுத்துப் பார்த்தேன். அலைப்பேசித் திரையில் பவதாரினியின் முகம் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. 

8.
அன்பின் பவதாரினி,
             
இங்கு எதுவுமே சரியாக இல்லை. எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை மீதும் என்னுடல் மீதும் எனது ஞாபகங்கள் மீதும் எனக்கு அதிருப்தியும் ஏமாற்றமுமே இருக்கின்றன.வெற்று ஏக்கம் என்னை துடிக்க வைத்தப்படியே இருக்கிறது. இவைக் குறித்தெல்லாம் உனக்கெதுவுமே தெரியாது. உண்மையில் உனக்கும் எனக்கும் எந்த பரிச்சயமும் கிடையாது. நீ என்னை பார்த்திருக்கக்கூட மாட்டாய். இத்தனைக்கும் நானும் நீயும் ஒரே கல்லூரியில்தான் படிக்கிறோம்.இருந்தாலும் நான் யாரென்பதைக்கூட நீ அறிந்த்திருக்க வாய்ப்பில்லை. நான் அதிகம் வெளியில் சுற்றுவதில்லை. ஆனால் அடிக்கடி உன் கண்களில் தட்டுப்படும் வண்ணம் நீ பயணிக்கும் இடங்களில் எல்லாம் நான் காத்து நிற்கிறேன். உன் கவனத்தை எந்த வகையிலும் ஈர்க்கும் திராணி எனக்கு கிடையாது. வெறுமனே உன்னை பார்த்தப்படி என்றைக்கேனும் உன் பரிசுத்தமான அன்பில் திளைக்க முடியும் என்கிற விருப்பத்தில் மூழ்கியபடி நான் காத்து நிற்கிறேன். எனக்கு அதிகம் நண்பர்கள் இல்லை. பெரும்பாலும் தனிமையிலேயே கழியும் எனது பொழுதுகள் அடிப்பட்டு துடிக்கும் பறவையின் கடைசி சிறகசைப்புகளை போலிருக்கின்றன. சமயங்களில் என் வகுப்பை சேர்ந்தவர்கள் கூட்டமாய் நிற்கும் இடங்களில் நானும் நின்று பார்ப்பதுண்டு. அவர்கள் சொல்வதைக் கேட்டு சிரித்துக் கொண்டும்; வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் நானும் அவர்களைப் போல் பேசிக் கொண்டும்.எனினும் அந்த நேரங்களில்கூட நான் தனித்திருப்பதைப் போன்ற உணர்வையே பெறுகிறேன்.பிறரையும் என்னையும் பிரிக்கும் ஒரு அரூப வளையத்தில் நெருப்பு எரிந்தபடியே இருக்கிறது. உன்னை காண்கிற சமயங்களில் மட்டுமே எனக்குள் எந்த பொருளற்ற வெறுமையும் இருப்பதில்லை.ஆனால் உன்னை நான் அடைய முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீ வேறு யாரையோ காதலிக்கிறாய் என்பதை கொஞ்ச நாட்களுக்கு முந்திதான் தெரிந்துக்கொண்டேன்.எனக்கு முன்னரேத் தெரியும் இப்படி ஏதாவதொன்று நடக்கும் என்று.சொல்லப்போனால் இது மாதிரி நடந்திருக்காவிட்டால்தான் நான் ஆச்சரியமடைந்திருப்பேன். இருந்தும் என் அன்பின் தேவதையாகிய உன்மேல் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. என் விதியைத்தான் சொல்லவேண்டும். விஷநோய்க் கண்டு சதை அழுகி கிழிய உஷ்ணமாக கடைசி மூச்சினை விடுவித்துக் கொண்டிருக்கும் ஒரு தெரு நாயைப்போல் இருக்கிறது என் தலைவிதி. 
பெருங்காதலின் ப்ரியங்களுடன்
ராஜா      
12-11-2012

9.
அவளிடம் நான் கொடுக்காத அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு சொல்லும் எனது நினைவில் ரொம்பவே ஆழமாய் பதிந்து விட்டிருக்கிறது. அலைபேசியின் தொடுதிரையில் விரலை வைத்து அழுத்தினேன்.
ஏய்...என்ன தூங்கலயா...?ரூம்ல லைட்டு எரிஞ்சிக்கிட்டிருக்கு
ஒரு விநாடி சுற்றும் முற்றும் கண்களை அலைய விட்டேன்.என் அறையிலிருந்து ஜன்னல் வழியே பார்த்தபோது பக்கத்து வீட்டில் ஒரு அறையில் மட்டும் விளக்கு எரிந்துக் கொண்டிருப்பதும் அங்கிருந்த ஜன்னலுக்கு அண்டையாய் ஒரு பெண்ணுரு அசைவதும் தெரிந்தது.
இல்ல...தூக்கம் வரல
தட்டுத் தடுமாறியே பேசினேன். அப்பொழுதுதான் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. இந்த உடலிலிருந்து நான் பேசும் முதல் வாக்கியம் இது.சத்யாவின் குரலையே நான் இப்பொழுதுதான் முதல் முறையாக கேட்கிறேன். நான் பேசுகிற வார்த்தைகளை வேறொருத்தனுடைய குரலில் கேட்பது ஒரே நேரத்தில் இரண்டு உடல்களில் வாழ்வதைப் போலிருந்தது. இதில் எது நான்?
ப்ச்...ஊரிலிருந்தே நாங்க அரைமணி நேரம் முன்னாடிதான் வந்தோம். படுக்குறதுக்கு முந்தி சும்மா திரும்பி பார்த்தா உன் ரூம்ல லைட் எரிஞ்சிட்டிருந்துச்சு.அதான் என்னன்னு கேட்கலாம்னு கூப்பிட்டேன்.சரி நீ ஏன் இன்னும் தூங்காம இருக்க?
இல்ல சும்மாதான் பெரிசா ஒன்னுமில்ல.
எனக்கும்கூட தூக்கம் வரலப்பா.வண்டில வரும்போதே பயங்கரமா தூங்கிட்டு வந்தேன்னா அதான் இப்ப தூக்கமே வரல.உன்கிட்ட நேர்ல பேசி வேற நாலு நாள் ஆயிடுச்சுல.எங்க வீட்டுக்கு மாடிப் பக்கம் வந்துரேன்.கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்
என் பதிலுக்கு காத்திராமல் அவள் அழைப்பைத் துண்டித்தாள்.அடிவயிற்றை யாரோ அழுத்துவது மாதிரியிருந்தது எனக்கு.
இந்த வீட்டிற்கும் பவதாரினியின் வீட்டிற்குமிடையே ஒரே தடுப்புச் சுவர்தான்.ஒரு தாவில் எகிறிக் குதித்தால் போதும் அவள் வீட்டிற்குள் போய்விடலாம். என்னறையிலிருந்து வெளியேறி பின் கட்டிற்கு வந்தபோது வாசற் கதவு பூட்டியிருப்பது தெரிந்தது.மெதுவாக நடந்து கூடத்திற்கு வந்து சாவிகள் தொங்கியிருந்த சட்டத்திலிருந்த ஒரு கொத்துச் சாவியை எடுத்துக் கொண்டேன்.நான்காவது சாவியில் பின் கட்டின் பூட்டு திறந்துக்கொண்டது.பின்னாலிருந்த காலி இடத்தில் வாழை மரமும் பப்பாளி மரமும் நட்டு வைத்திருந்தார்கள்.உடன் சின்னச் சின்னதாய் சில செடிகளுமிருந்தன.புல் தரையில் சலசலப்பு எழும்பாத மாதிரி நடந்து கிணற்றிற்கு பக்கத்திலிருந்த துவைக்கல்லின் மீதேறி தடுப்புச் சுவரை அழுத்தி பிடித்து எம்பி அவள் வீட்டிற்குள் குதித்தேன்.அவள் அப்பொழுதுதான் அந்த வீட்டின் பின்வாசற் கதவை திறந்து மாடிப்படி நோக்கி போய்க் கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு என்னைத் திரும்பி பார்த்தவள் ஆள்காட்டி விரலை தன் உதட்டகருகே வைத்து சத்தமில்லாமல் என்று சைகை காட்டினாள். அவளை பின்தொடர்ந்து நானும் மாடிப் படியேறினேன். மாடியின் கடைசி ஓரத்தில் பாதி கட்டி முடிக்கப்பட்ட சிமென்ட் பூசாத அறையொன்று இருந்தது.அவள் முன்னால் போய் அறைக்குள் நுழைந்து குண்டு பல்பை போட்டு விட்டு எனக்காக வாசலில் காத்து நின்றாள். சில நொடி தயக்கங்களுக்குப் பிறகு நானும் அந்த அறைக்குள் சென்றேன். நான் உள்ளே வந்ததும் அறையின் தகரக் கதவை பாதி மூடினாற்போல் அவள் சாத்தினாள்.அவ்வறையின் பாதி பகுதியை உதவாத பழைய ஜாமான்கள் அடைத்துக் கொண்டிருந்தன.ஒரு மூலையில் ஓரங்களில் எல்லாம் கிழிந்து போயிருந்த பாயொன்றை விரித்து சுவரில் சாய்ந்த மாதிரி பவதாரினி அமர்ந்துக் கொள்ள நானும் அவளுக்கு பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்திற்கு இரண்டு பேருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தோம். அதற்கு பிறகு அவளாகவே பேச ஆரம்பித்தாள். தான் குடும்பத்துடன் மதுரைக்குப் போனது, வழியில் வண்டி பழுதானது, தொடர்ந்து வரிசையில் நின்று சாமியைப் பார்த்தது, கோயில் சிற்பங்களின் அழகில் லயித்தது என அவளது பேச்சு நீண்டுக் கொண்டேப் போனது.
நான் அவள் பேசுவதையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தேன்.நிறைந்து ததும்பும் அழகு. எந்த கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் என்னால் தூய்மையை மட்டுமே உணர முடிந்தது. வெளிர் நீல நிறத்தில் அவள் இரவு உடை அணிந்திருந்தாள். தாளமாட்டாத உணர்ச்சி வேகத்தில் இயங்கிய எனது இதயத்தின் துடிப்பு சப்தம் அறைக்குள்ளாக எதிரொலிப்பது தெளிவாக கேட்டது.அவள் தனது கைகளை அசைத்து என்னவோ சொல்ல,அவளது வலது கை பெருவிரல் நகக்கண்ணுக்கடியே சின்னதாய் ஒரு வெட்டுத் தழும்பு இருப்பதை பார்த்தேன். 

10.
அவளது வலதுக் கையைப் பற்றிக் கொண்டு இதமாய் அந்த தழும்பை வருட ஆரம்பித்தேன்.மயிர்க் கூசும் வெதுவெதுப்பான ஸ்பரிசம் அவளுக்கு.குண்டு பல்பின் சாயம் போன மஞ்சள் ஒளி எங்களைச் சுற்றி திட்டு திட்டாய் படிந்திருந்தது.அவளது கண்கள் மெல்ல தாழ்ந்து மலர்ந்தன. எதுவோ சொல்ல எத்தனித்து பின் சொற்கள் என்னை கைவிட்ட நொடியில் என்னையும் மீறி இமையோரங்களிலிருந்து கண்ணீர் துளித்துளியாய் சிந்த ஆரம்பித்தது.தனது பாதம் தொட்ட கண்ணீரின் வெம்மையுணர்ந்து எனது தோள்களை அவள் இறுக பிடித்துக் கொண்டாள். அவளுடைய இதழ்களை நோக்கினேன். ஆழ்க் கடலின் பரிசுத்தம் அவற்றிலிருந்தது. என்னை மீட்கப்போகும் பரிசுத்தம்.அவளது கேசத்திற்குள் விரல் நுழைத்து அவளை என் பக்கமாய் இழுத்துக் கொண்டேன். அவள் இன்னும் அதிகமாய் பிரகாசம் அடைந்துக் கொண்டிருந்தாள்.இருள் வானில் ஒரு நட்சத்திரம் வீழ்ந்து மறைந்த கணத்தில் எனது உதடுகளை தேவதையின் அன்பு பூர்ணமாய் ரட்சிக்கத் தொடங்கியது.என் இதழ்களில் ஜீவநதியின் ருசியை நான் உணர்ந்தேன்.சட்டென்று தாரை சத்தத்துடன் கூடிய ஒரு மின்னல் வெட்டு மனதை கிழித்துக் கொண்டு பாய,இந்த உடல் என்னுடையதல்ல என்கிற நினைப்பு பெருவலியில் நான் அலறி துடிக்கிற வண்ணம் என்னை செதில் செதிலாய் அறுத்துக் கூரிட்டது.ஞாபகங்களில் முழுக்க கசப்பேறிவிட அவளிடமிருந்து ஆவேசமாக பிரிந்து விலகினேன்.என் முகம் சுண்டிப்போய் ரத்தச் சிவப்பாய் ஆகியிருந்தது. அவள் ஏதும் புரியாதவளாய் என்னை ஏக்கமும் குழப்பமுமாய் பார்த்தாள். அவளது இதழ்களில் இன்னும் எச்சில் காயாதிருப்பதைப் பார்த்ததும், எனது இடதுக் கண் இமை வேகமாய் துடிக்கத் தொடங்கியது. ஆங்காரமும் கோபமும் என்னை முற்றிலுமாக வெறிபிடிக்கச் செய்திருந்தன. படுவிரைவாக அங்கிருந்து கிளம்பி மாடியிறங்கி வெளிச்சுவரை தாண்டி குதித்து சாலைக்கு வந்தபோது நான் முழுக்க முழுக்க வன்மத்தால் நிறைந்திருந்தேன்.

11.
எனக்கென்று ஒரு வாழ்க்கை இருந்தது.அதை நான் கொன்றுத் தீர்த்தேன்.இப்பொழுது எனக்கு இன்னொரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது.ஆனால் அதை என்னால் வாழ முடியாது.அது என்னுடைய வாழ்க்கையாக இல்லாதபோது நான் எப்படி அதை வாழ முடியும்? முன்னரிருந்த வாழ்க்கையின் மீது எனக்கு விருப்பமில்லை என்பது உண்மைதான்.நான் இன்னொரு வாழ்க்கைக்கு வேண்டியதும்கூட உண்மைதான்.என் விருப்பப்படியேதான் இப்பொழுது நடந்திருக்கிறது.எனினும் என்னுடைய நினைவுகளில் தெளிவாய் பதிந்துப் போயிருக்கும் பழைய வாழ்க்கையை என்ன செய்வது? உடன் இந்த புதிய வாழ்க்கைக்கும் எனக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா என்ன? நடக்க நடக்க என் கால்களின் வேகத்திற்கு மூளையிலும் சிந்தனைகள் ஓடியபடி இருந்தன.எனக்கு என்னுடைய பழைய உடல் பிடிக்கவில்லை.இப்பொழுது கிடைத்திருக்கும் உடலோ என்னை அசிங்கமாய் உணர வைக்கிறது. எனது சிந்தனைக்கு உடலில்லை.இந்த உடலுக்கோ தனியே சிந்தனை இல்லை. எனது சிந்தனையையும் இந்த உடலையும் கோர்க்கும்போது அவ்வளவு அபத்தமாய் இருக்கிறது. ஒன்று நான் எனது நினைவுகளை அழிக்க வேண்டும் இல்லை இந்த உடலை அழிக்க வேண்டும்.ஆனால் இந்த இரண்டுமே சாத்தியம் இல்லை.நான் இப்பொழுது என்னதான் செய்ய?
பைத்தியக்காரக் கடவுளே எனக்கு பதில் சொல்..............

12.
அங்கிருந்து கிளம்பியதும் முதலில் வீட்டிற்கு போக வேண்டும் என்றுதான் எனக்கு தோன்றியது. வீட்டிற்கு கொஞ்சம் முன்னாடி வந்ததும் தயங்கி நின்று மூச்சு வாங்கிக் கொண்டேன்.வியர்வை காதுகளில் இருந்து சூடாக வழிய மூச்சிரைப்பில் இருமல் வந்தது. எனக்கு முன்னே எல்லாமுமே புகைப்படலம் போல் காட்சி தந்தன. மெதுவாய் முன் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். சுற்றியெங்கும் இருட்டாய் இருக்க எங்கள் வீட்டில் மட்டும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.
வாசலுக்கண்டையாய் வந்து வெளிக்கதவை பிடித்தபடி குழப்பமாய் நான் நின்றிருந்தேன். உள்ளே விசும்பல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அம்மாவின் குரலை மிகத் தெளிவாக நான் அடையாளம் கண்டுக் கொண்டேன். அப்பா வீட்டிற்குள் இருந்து வாசல் நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்தார்.சட்டென்று அந்த இடத்திலிருந்து அகன்று வீட்டிற்கு வெளியே இருந்த புதர்ச் செடிகளுக்கு பின்னே மறைவாய் பதுங்கினேன். வெளிக்கதவுக்கு பக்கமாயிருந்த சரிவில் நின்ற அப்பா தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டார். ரொம்ப நாட்களாக அவர் நிறுத்தி வைத்திருந்த பழக்கம் இது.கடைசியாக ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்புதான் அவர் சிகரெட் பிடித்து பார்த்த ஞாபகம்.அதற்கு பிறகு அவராகவே அந்த பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்து கொண்டார்.எனக்கு அதில் ரொம்பவே சந்தோஷம்.அவர் சிகரெட் பிடிக்கும் நேரங்களை நான் பயங்கரமாக வெறுத்தேன்.அப்பொழுது அப்பாவின் முகத்தில் ரௌத்திரம் ஏறிப்போயிருக்கும். அதிகமும் சாந்தமாகவே இருக்கக்கூடிய எனது அப்பா ரொம்பவும் அரிதாகவே கோபப்படுவார்.ஆனால் அவர் கோபப்படும் தருணங்களில் கட்டுக்கடங்காத உக்கிரத்தை உணர முடியும். அந்த மாதிரியான சமயங்களில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்வதற்கென்றே அவர் சிகரெட் பிடிப்பார்.
இன்றைக்கு அவரிடம் கோபம் இல்லை.வழக்கமாக புகையை ஆழமாய் உள்ளிழுத்து பொறுமையாக அதை வெளிவிடுபவர் இப்பொழுது வேக வேகமாய் புகையை வெளியேற்றிக் கொண்டிருந்தார். ஒரு நாளுக்குள்ளாகவே அவரது முகத்தில் ஏகத்திற்கும் சுருக்கங்கள் வந்துவிட்ட மாதிரியிருந்தது. கன்னங்கள் ஒடுங்கிப் போக அடிக்கடி நெற்றியை சுருக்கியபடி இருந்தார். எனக்குள் எதுவோ இடிந்து விழுந்து நொறுங்கியது. 
புதர் மறைவிலிருந்து வெளியேறி அப்பாவிடம் நெருங்கினேன். அவருக்கு நான் யாரென்று தெரியவில்லை.தெளிவற்ற பார்வையில் என்னை சந்தேகமாக பார்த்தார். அழுதழுது கணத்துப்போயிருந்த கண்களோடு ஓடிப்போய் அவரை இறுக்கமாய் அணைத்துக் கொண்டேன். கேவல்களோடு எனது குரல் ஹீனமாய் முனகியதுஎன்னால முடியலப்பா.
தன்னிடம் இருந்து என்னை விலக்கிவிட்டு சில நொடிகளுக்கு என் கண்களையே அவர் கூர்ந்து கவனித்தார். மெல்ல அவரது கை கால்கள் நடுங்குவது தெரிந்தது. உதறல்கள் எடுத்த கைகளில் என் முகத்தை தொட்டு தடவினார்.அவரது கண்களில் நீர்க் கட்டியிருந்ததைப் பார்த்தேன். தொண்டை அடைத்து கம்மியக் குரலில்ராஜா என்று என்னை அழைத்தார். அவரது குரலில் பயமும் ஆச்சர்யமும் கலந்திருந்தது. நான் ஆமாம் என்பதுப் போல் தலையசைத்தேன். சடுதியில் அவரது உடல் வலிப்பு வந்ததுப் போல் ஒரு பக்கமாய் இழுத்துக் கொண்டது. நான் பதறிப் போய் அவரை தாங்கி பிடிப்பதற்குள் வாயில் நுரைத் தள்ள மயக்கம் போட்டு தரையில் பொத்தென்று விழுந்தார். செங்கற்கள் சிதறியிருந்த மண் தரையில் அவர் வேகமாய் விழவும் தலையில் அடிப்பட்டு இரத்தம் வந்தது.அரவம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் ஒவ்வொருத்தராய் வெளியே வரத் தொடங்கினார்கள். எங்கிருந்தோ ஒரு கருப்புப் பூனை தாவி குதித்துமியாவ் என்று கத்தியபடி சாலையின் குறுக்காக ஓடியது. நிதானமிழந்த நான் பித்துப் பிடித்தவன் மாதிரி அங்கிருந்து ஓட்டம் பிடித்தேன்.

13.
நான் எவ்வளவு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இதைவிட அதிகமான வேகத்தில் என்னால் ஓட முடியாது என்கிற அளவுக்கு என் சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி ஓடிக்கொண்டிருக்கிறேன். எங்கு போவது என்ன செய்வது என்பதுக் குறித்து எந்த எண்ணமும் இல்லை.கால்கள் மரத்துப் போய் எங்கேயாவது சரிந்து விழுந்து சாகிற வரைக்கும் ஓட வேண்டும் என்பது மட்டுமே இப்பொழுதிற்கு என்னுள்ளிருக்கும் ஒரே சிந்தனை.