சனி, ஜனவரி 09, 2016

நவீன கவிதை மனம் - 09

நவீன கவிதை மனம் - 09
”நவீன கவிதையை கடந்து அப்பால் தனது செயற்பாட்டை புதுப்பிக்கும் கவிதைச் செயலுக்கு “ மாற்றுப்பிரதி” என்பதே பெயர்”.
நவீன கவிதை என்று இன்று அழைக்கப்படும் இலக்கியத்துக்குள்ளாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு வகையினம், ஒரு நுாற்றாண்டுக்கு முன் தமிழில் இருந்திருக்கவில்லை. உலகளவிலேயே கூட, சுமாராக ஒரு நுாற்றாண்டுக்குட்பட்ட ஒன்றுதான்.
இலக்கியத்துக்குள் இருக்கும் மிக இளமையான வடிவமாக, Short fiction என்பதைக் கருதினால், அதற்கு சற்று முன்னையது இந்த நவீன கவிதை என அழைக்கப்படும் ஒரு இலக்கிய வடிவம்தான்.
கவிதை என உலகளவில் பயிலப்பட்டு வந்த இலக்கிய வடிவத்திற்கு, அனேக கட்டுப்பாடுகள் இருந்தன. அதில் பிரதானமானது, வடிவம்தான். உள்ளடக்கம் மற்றும் எடுத்துரைப்பு போன்றவைகளில் அதிக சிக்கல்கள் அப்போது இருக்கவில்லை. அல்லது அவை பிரச்சினைகளாக கருதப்படவில்லை. ( எடுத்துரைப்பு என நான் பயன்படுத்துவது, ”நடை” என கருதப்படும் ஸ்டைல் மற்றும் உத்தி இரண்டையும் சேர்த்துத்தான். இந்த ”உத்தி” என்பதில் இரு முக்கிய தருணங்கள் உண்டு. 1. சொல் தேர்வு, வாக்கிய அமைப்பு, அவைகளை இணைத்து உருவாக்கும் கூற்றின் அமைப்பு 2. வடிவத்தில் நிகழ்த்தப்படும் மாற்றங்கள். இதில் முதலாவதையே எடுத்துரைப்புக்குள் கொண்டு வருகிறேன்.)
நான் வடிவம் எனப் பயன்படுத்துவது வெளிப்படையான ஒன்றைத்தான். அதற்கு மாறாக ஒருவிசயம் இருக்கிறது. அது இங்கு தேவையில்லை. அதன்மீது எனக்கு அதிக விமர்சனங்களும், பன்மையான புரிதல்களும் உண்டு. ”ஒரு பிரதியின் அனைத்துக் கூறுகளையும் ஒன்றிணைப்பதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிற ஒரு தன்மையை உருவம் அல்லது வடிவம் என புரிந்துகொள்ளப்பட்டிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆக, இந்த வடிவம் என்பது அருவமான பண்பைக்கொண்டது. விளக்க முடியாத அளவில் நழுவிச்செல்வது போன்ற கருத்துக்கள் நிலவுகின்றன. அவை குறித்தும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.
நிற்க, கவிதைக்கு முக்கிய பிரச்சினையாக அமைந்தது இந்த வடிவம்தான். அதற்கு அளவுகள் இருந்தன. ஒரு சட்டகத்தில் சொற்களைப் கொண்டுபோய் பொருத்தி வைக்க வேண்டும் என்பதுபோல, இன்றியமையாததும், இறுக்கமானதுமான கட்டுப்பாடுகள் இருந்தன. ( ஒரு கவிதைப் பிரதி குறித்த இதைத்தான் பாடவேண்டும் என்பதும், குறித்த ”இந்த” விசயங்களை பாடினால்தான் அது கவிதை என இன்று தரப்படுத்தும் விமர்சனத் தேர்வுகளும் கட்டுப்பாடுகள்தான் அது இன்றையப் பிரச்சினை)
முதலில், இந்த வரையறைகளையும், இலக்கணக் கட்டுப்பாடுகளையும் மீறி உதறிவிட்டு ”சுதந்திரமாக கவிதை” யை வெளியே கொண்டு வரவேண்டும் என்பதாகவே இருந்தது.
இதன் அடிப்படையை இப்படிப் புரிந்துகொள்ளலாம். அதாவது, கவிதை குறித்த ஒரு வகை வடிவத்திற்குள் சி்குண்டுவிடாமல் இருப்பதை இது வலியுறுத்துகிறது என்பதுதான். இலக்கண விதி முறைகளை மீறினாலும், ஒரே வகைத் தன்மை, ஒரே வகை எடுத்துரைப்பு போன்றவைகளே தொடருமானால், எதிரிடையாக அதுவே, எழுதப்படாத இலக்கணமாக மாறிவிடும் என்பதை நாம் அறிந்ததுதான்.
அதே நேரம், இலக்கண அமைப்பில் கவிதையின் மீது திணிக்கப்பட்ட வடிவ முறையையும், கட்டுப்பாடுகளையும் உதறி வெளியே வந்தால், தான் விரும்பிய எந்த வடிவங்களையும் கவிதை எடுத்துக்கொள்ள முடியும் என்பதுதானே அதன் பொருள். அப்படி எனில், இன்று நவீன கவிதை எனச் சொல்லப்படும் ஒன்று எத்தனையோ வடிவங்களை முன்வைத்திருக்க வேண்டும். அப்படி நடந்திருக்கிறதா?
கவிதை .லக்கணக்கட்டுப் பாட்டுக்குள் சிக்கியிருந்த காலகட்டத்தில் கூட, அதற்கு எண்ணற்ற வடிவங்கள் இருந்தன. உதாரணத்திற்கு, குறள், வெண்பா , இப்படி பல. ஆனால், நவீன கவிதை என அழைக்கப்படும் இன்றைய கவிதைக்கு இப்படியான எத்தனை வடிவங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன?
விரும்பிய வடிவங்களிலும், விரும்பிய அமைப்புக்களிலு்ம் தன்னை நிகழ்த்திக்காட்டுவதற்கான சுதந்திரத்தை எடுத்துக்கொண்ட கவிதை, குறிப்பான ஒரே ”வடிவத்” தன்மையை மட்டுமே தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. இதை இப்படிச் சொல்லலாம், பலவகையான வடிவங்களில் தன்னை நிகழ்த்திக்காட்டுவதற்கான சந்தர்ப்பம் இருந்தபோது, அவை கட்டுப்பாடுகள் என உதறி வெளியேறிய கவிதை, ஒரே தன்மைகொண்ட அதுவும் ஒரே ஒரு வடிவத்தை மாத்திரமே தேர்வு செய்திருப்பதென்பது, தற்செயலான ஒன்றாக இருக்க முடியாது.
எடுத்துரைப்பு முறைமைகளில் பல வேறுபாடுகளை உருவாக்கி இருக்கிறது. உள்ளடக்கங்களில் பல வேறுபாடுகளை உள்ளெடுத்திருக்கிறது. இப்படியான மாறுதல்கள் இலக்கணத்தின் கட்டுப்பாட்டுக்குள் கவிதை இருந்தபோதுகூட நிகழ்ந்திருக்கிறது என்பதை நான் சொல்லாமலே நீங்கள் அறிவீர்கள்.உலகளவில் பார்த்தால் கூட, கொங்கிறீற் கவிதை, பின்னைய மொழிக் கவிதை என சில வடிவங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும், அவை படிமம் சார்ந்த ஒரு பொருள் செயலாக அமைந்திருக்கிறது. அதாவது, சித்திரத்தையும் கவிதையையும் இணைத்து ஒருவகைப் பிரதியாக உருவாக்கிப் பார்த்திருக்கிறார்கள். கூகுளில் தேடிப்பார்த்தால் நீங்கள் அறியலாம்.
ஆனால், மொழியை மட்டுமே வைத்து, இந்த வடிவ உருவாக்கம் நிகழ்த்தப்படவில்லை.
வரிவடிவமாக உடைத்து உடைத்து அமைக்கப்பட்ட கூற்றுக்களை, பத்தியமைப்பிலும், சித்திர உருவ அமைப்பிலும் முயற்சித்திருக்கிறார். அதையும் தாண்டி, உதாரணமாக, ”படிக்கட்டுகள்” என்றால் அதை படிபோல அமைத்துப் பார்த்திருக்கிறார்கள். கியூ என்றால், எழுத்துக்களை இடைவெளிவிட்டு ஒன்றன் பின் ஒன்றாக அமைத்து கியூவாக ஆக்கிக் காட்டியிருக்கிறார்கள். அவ்வளவுதான். இவை எவைகளையும் வடிவங்களாக கருத முடியாது. அனேகமாக உத்தியாகவே கருத இடமுண்டு.

டி
க்

ட்
டு

ள் - இ்டியாக...
ஆனால், இல்ணத்திற்குள் சிக்கியிருந்த கவிதை அதை உதறிவிட்டு வெளியே வந்ததும், உரைநடை என நம்பப்படும் ஒன்றை தேர்வு செய்துகொண்டது. படிமம் என்பதெல்லாம் கவிதையை புரிந்துகொள்வதற்கு அதனுள்ளாக இயங்கும் ஒரு பண்பு மட்டுமே. படிமக் கவிதை என்பது ஒரு வடிவமல்ல.
அதுபோல, இன்னும் சில விசயங்கள் முக்கியமாகப்படுகிறது. அதாவது, சொல் தேர்வு, வரியமைப்பு, எடுத்துரைப்பு முறை, என்ன வகையான விசயங்களை தன்னுள்ளே கொண்டிருக்க வேண்டும், என்பதெல்லாம் நவீன கவிதை மீது தணிக்கப்பட்ட எழுதப்படாத இலக்கணமாகவே ஆகும். கவிதை தனது சுதந்திரத்தைக் கோரி, இலக்கணத்திற்குள்ளிருந்து வெளியேறியது என்றால், எதுவித கட்டுப்பாடுகளையும் வரித்துக்கொள்ளக்கூடாது.
எதைச் சொல்ல வருகிறேன் ஒரே வகையான பண்புகளை தொடர்ச்சியாக பேணி வரக்கூடாது. தொடர்ச்சியாகப் பேணப்படுமானால் அதுவே மறைமுகமாக அதற்கான இலக்கணமாக மாறிவிடுகிறது. ஆகவே, ஒன்றிலிருந்து மற்றயது முற்றிலும் வேறுட்டதாக தனது அமைப்பை உருவாக்க வேண்டும்.
துரதிஸ்டம் என்னவென்றால், எந்த வகையான , வரியமைப்பையும், சொல் தேர்வையும், எடுத்துரைப்பையும், உள்ளடக்கத்தையும் கொண்டிருப்பதை ” நவீன கவிதை” என அழைத்தார்களோ, அதே போல உருவாக்கினால்தான் நவீன கவிதை என்ற மனப்பதிவு இங்கு நிலை பெற்றுவிட்டது.
இது இன்றைய அபத்த நிலை.
நவீன கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான எீதப்படாத இலக்கணமாக அமைந்திருக்கும் மனப்பதிவு இதுதான். ஓரிடத்தில் தொடங்க வேண்டும். வரி வரியாக விபரித்துச் சென்று, கடைசியில் ஒரு அதிரடியான மாற்றத்தை தரவேண்டும் அவ்வளவுதான்.
இது, நாம் அதிகம் கவனிக்காத மிக இறுக்கமான அமைப்பு. அதுவும் கவிதையைத் தீர்மானிக்கின்ற முக்கிய அமைப்பு. கவிதையின் முடிவு, பிரதியின் எல்லையில் காத்திருக்கிறது. அந்த எல்லையை அடைவதற்கு வரிகளும், அதனால் உருவாக்கப்படும் கதைகளும் வாசகரை அழைத்துச் செல்ல வேண்டும். கண்தெரியாத ஒருவருக்கு வழிகாட்டுவதைப்போல. முடிவு என்பது, பிரதியின் பகுதிகளில் நிறைந்திருக்கிறது என்பதை மறுப்பதாக இது அமைகிறது. இதுதான் ஒரு தீர்க்கமான வடிவம்.
பிரதியின் முடிவு பிரதியின் எந்த இடத்திலும் இருக்கமுடியும். கவிதை எங்கிருந்தும் ஆரம்பிக்க முடியும். ஓரிடத்தில் தொடங்கி ஒரு ஒற்றையடி்பாதையைப்போல ஓரிடத்தில் முடிவடைய வேண்டும் என்பதெல்லாம் எழுதாத நவீன கவிதைகளின் விதியாக மாறியிருக்கின்றன.
தான் விரும்பிய மாதிரி தன்னை வெளிப்படுத்துவதற்கு இது முற்றிலும் எதிரானது. இதை ஒழுங்கமைப்பு முறை எனச் சொல்லலாம். ஆக, அமைப்பிலும், உள்ளக கட்டமைப்பிலும், எடுத்துரைப்பு முறைமைகளிலும் நான் லீனியரான பிரதியாக்க முறையை அக்கறைகொள்ள வேண்டும்.
அதுதான் கவிதை விரும்பிய சுதந்திரத்தின் இடம். கவிதையை ஒரே அமைப்பிற்குள் உறைய வைத்துவிட வேண்டாம்.
இப்படியான கவிதைகளைத்தான் நான் ”மாற்றுப்பிரதி” என பெயரிட்டு அழைக்கிறேன். அதாவது, வெண்பா, குறள், கவிதைக்குள் வடிவங்கள் இருப்பதைப்போல, வசன கவிதை, புதுக்கவிதை அல்லது நவீன கவிதை என்பதைப்போல, மாற்றுப்பிரதி என்பது, நவீன கவிதை என நம்பப்படும் கவிதையின் இயங்காக் கூறுகளை, அதன் உறை நிலையை கலைக்கும் கவிதையை இப்படி பெயரிட்டு அழைக்கிறேன்.
நவீன கவிதையை கடந்து அப்பால் தனது செயற்பாட்டை புதுப்பிக்கும் கவிதைச் செயலுக்கு “ மாற்றுப்பிரதி” என்பதே பெயர்.
மாற்றுப்பிரதி எப்படி தனது வடிவத்தை உருவாக்கலாம், எப்படி எப்படி எல்லாம் எடுத்துரைப்பை நிகழ்த்தலாம் போன்ற விவாதங்களை தொடர்ச்சியாக இங்கு பதிய இருக்கிறேன். வாருங்கள் அனைவரும் இணைந்து இதற்கு பங்களிப்புச் செய்யலாம். விவாதிக்கலாம். மாற்றுப்பிரதி இங்கு எழுதப்பட்டிருக்கிறதா? அதற்கான உதாரணங்களைத் தர முடியுமா? என கேட்பவர்களுக்கும் அவைகளை சுட்டிக்காட்ட இருக்கிறேன்.