வியாழன், ஜனவரி 14, 2016

எச்.எம்.பாறுாக் கவிதைகள்

ஈழத்தின் பேசப்படாமல் மறக்கடிக்கப்பட்ட கவிஞன். 
எச்.எம்.பாறுக் அவர்களின் இருகவிதைகள்.

சல்லாபம்.
அலையோடு செல்லம் பொழியும்
சிறு மழை விட்டுவிட்டு
அலையின் கன்னத்தை கிள்ளி விளையாடும்
அலை எழுந்து மழைத் துளியை அணைக்கும்
மாலை நேரம்.
அற்புதம் அற்புதம் என வியந்து
அனைத்தையும் மறந்தேன்
யார் இவள் சற்றுதள்ளி
உற்றுப்பார்த்தே கடலை இவளும் உள்ளாள்.
என்னைப்போல்தான் இவளும்
முணுமுணுக்கத் தெரிந்தவளோ
நாகமும் சாரையும் புணர்வது போல
காட்சியை இவளும் கண்டாள்
யார் இவள்
என் முணுமுணுப்புகளை மொழி பெயர்க்கக் கூடியவளோ
இது சிறு மழை
இதமான மழை
முற்றாக ஆளை நனைக்காது
ஆனாலும் உள்ளம் முழுதும் நனைக்க வைக்கும்.
இக்கணத்தை நாம் மறக்க முடியாது.
மெய்தான் இக்கணத்தில் நாம்; வாழ்ந்துள்ளோம்
என்கின்ற உணர்வொன்றே போதும்
ஒரு நூற்றாண்டை நாம் கடத்த
மெய்தான் யார் இவள்
என்னைப்போல்தான் இவளுமா
ஒன்றுக்குப்போய் வந்த அவள் கணவன்
கூப்பிட்டான் அவளை
அவள் அசையவில்லை.
மழை பெருக்கும் இனி கிடுகிடுக்கும் என்ற அவசரத்தில்
ஆனாலும் அவள் அசையவில்லை
இன்னும் இன்னும் புள்ளே புள்ளே என்று அவன் கூப்பிட்டான்
ஆனாலும் அவள் அசையவில்லை
பின் திரும்பி கையைக் காட்டி ;பொறு' என்றாள்
கடலும் அவளும்;
நானும் கடலும்
அலையும் மழையும் மகிழ்வும்
உற்றுப் பார்த்தலில் நாணமும் கோபமும் வந்ததோ
பெரு மழையாய் கிடு கிடுத்தது.
அலையும் மழையும்
நாகமும் சாரையுமாய்
நம்மைத் துரத்தும்.

வாசற்படி

நடப்பதும்
சில நேரங்களில் சும்மா நிற்பதும்
செருப்பைக் கழட்டிப்போட்டு
நின்று
பின்னால் சும்மா பார்ப்பதோடு
எனக்கும் அந்த வாசற்படிக்கும்
சத்தியமாய்
உறவு ஒன்றுமில்லை
தங்கையென்றால்
சில நேரங்களில்
வாழைக்காய் அவரைக்காய்
எந்தக் காயாவது
அரிவதற்கும்
இல்லையென்றால் ....
முருங்கை இலையை
' சுபு சுபு ' என்று மந்திரம் சொல்லி
புழுக்கள் அகற்றுவதாக
உதறுவதற்கும்
ஆன அது
அவளுடைய சிம்மாசனம்
என்பேன்
உம்மா சும்மா
உறங்குவதற்கும்
அரிசியில் நெல்லு
கந்தப்பார்ப்பதற்கும்
அருமையான வாசற்படி
அது
சும்மா
எதையோ யோசித்தபடி
போய் இருந்தேன்
இன்று
புன்முறுவலுடன்
புதிய உறவு ஆயிற்று
ஒருக்கால்
எனை மறந்து மகிழ்ந்து கொண்டேன்
இருந்தநான் திரும்பிப்பார்த்தேன்
அரிசி அரித்த தண்ணி
ஈரமாகி
கோழிகிளறி
ஒரு மாதிரியாக இருந்தது.
எரிச்சலைக்காட்டிக்கொள்ளாதவாறு
எழும்பிக்கொண்டேன்
எனக்கு
வேறு வேலை உண்டு என்று
நினைக்கட்டும் வாசற்படி
என்பதாய் 06.06.1981