ஞாயிறு, ஜூன் 19, 2016

கவிதைக்கான மாற்று

கவிதைக்கான மாற்று
.......................................
அதிகாலையை முற்றிலும் அகப்படுத்த கவிதையிடம் வசதியிருப்பதாக தோன்றவில்லை. உண்மையில் அதன் ஒரு அற்புதமான கோணத்தைக்கூட வெளிப்படுத்தாது. அதைக் கடக்க ஒரு வழியுமில்லை. ஆனால், அதிகாலை பற்றி முன்பிருந்த கருத்துகளையும், உணர்ந்த தோற்றவியலையும் இழக்கச் செய்யும். அப்படிச் செய்வதே கவிதையின் முக்கிய வேலை. குறிப்பிட்ட வழிகளில் உணரச்செய்வதற்காக (முன்பில்லாத) சொற்காளல் தயாரிக்கப்படும் ஒருபிரதியாக கவிதை இருக்கும். அதிகாலையின் முழுப்பரிமாணங்களையும் மீள நடித்துக்காட்டாது. அனுபவங்களை உணர்த்துவதற்கு சைகைசெய்யும் விருந்தினர்களைப்போலவே - கவிதையில் சொற்கள் இடம்பெறுகின்றன.
கவிதைச் சம்பவங்கள் பிறப்பிக்கும் சைகைகளுக்கும் வாசகர்களுக்குமிடையிலான துாரம் மிகப்பலமானது. பாரதுாரமானதும்கூட. அந்த இடைவெளி புனைவுரீதியானது. அதாவது, புனைவின் விதிகளால் காப்பாற்றி வழிநடத்துவது. இந்த இடைவெளி அகலும்போது, கவிதையும் நீங்கி சம்பவங்கள் மட்டுமே எஞ்சுகின்றன. உண்மையில் அந்த இடைவெளிதான் நாம் கவிதை என கருதுவதாகும். புனைவுரீதியான விதிமுறைகளால் பார்வையாளர்களுக்கும் பிரதிக்கும் நடுவில் ஒரு இடைவெளி உருவானால் - அங்கு கவிதை வெளிப்பட்டுவிடுகிறது. இந்த இடைவெளி ஏதொன்றுக்கும் வாசகருக்கிடையில் உருவானபோதும்கூட.
வாசகருக்கும் பிரதிக்குமிடையிலான இடைவெளியை அகற்றும்போது, அல்லது அகலும்போது கவிதைக்கு ஒரு நெடிய மரணம் கிட்டுகிறது. பின்னர் அந்தப் பிரதி சாதாரணமான ஒன்றைப்போல கிடந்துவிடுகிறது.
நான் நினைக்கிறேன். கவிதை எழுதுவதின் கலையை நாம் வெகுவாகச் சுருக்கிவிட்டோம். கவிதை குறித்த ஒரு பொதுவான புரிதலை வலுப்படுத்தவும் நம்பவும் முயற்சிக்கிறொம் என நினைக்கிறேன். கவிதை என்றால் என்ன? என்று பல கற்பனையான அர்த்தங்களை பெருக்க முயற்சிக்கப்படவில்லை. இந்தக் கேள்வி இப்போது எந்தப் பெறுமானமுமற்ற ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. அது குறித்து சிந்திப்பது சாதவாக இல்லை. அதற்கான பதில், அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றும், உள்ளார்ந்தரீதியாக, ரகசியமாக ஏதோவொன்றை கவிதையென அனைவரும் ஏற்றுக்கொண்டிருப்பது மாதிரி ஒரு தோற்றப்பாடு இங்கு இருக்கிறது. ஆக, அந்தக் கேள்வியில் எந்தப் பிரச்சினையுமில்லை. சிறந்த கவிதையா? முக்கிய கவிதையா? அவையில்லையா? என்பது மட்டுமெ இங்கு பிரச்சினையாக மாறியிருக்கிறது.
எல்லாம் அழகாக இருக்கிறது. உலகம் அற்புதமானது. அனைத்திலும் கவிதை இருக்கிறது. என இப்படி ஒரு இலக்கணத்தை விரிவுபடுத்த முயற்சிக்கிறோம். அதாவது கவிதை நம்மைச் சூழ்த்திருக்கிறது என்பதுபோல. நான் கவிதை ஒரு குறியீடு என்பதை ஏற்க்கவில்லை. இது சலிப்பைத் தருகிறது. அதை ஏற்கச் செய்வதினுாடாக கற்பனையை தடுக்க முயற்சிக்கிறது.
கவிஞர்கள் எதையோ அகப்படுத்த முனைகிறார்கள். அது ஒரு உணர்வாக இருக்கலாம். ஒரு அனுபவமாக இருக்கலாம். அல்லது ஒரு காட்சியாக இருக்கலாம். ஆனால், அவர்கள் நினைப்பது வேறு. அவர்களின் உணர்வை அதைப் பெற்றவழிகளிலே உருப்பெறச் செய்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படி நம்பவைக்கப் பட்டிருக்கிறார்கள். அதிகாலையை எப்படிப் பார்த்தார்களொ அப்படியே செய்து காட்டியிருப்பதாக கருதகிறார்கள். அதன் அனைத்துப் பரிமாணங்களையும் வெளிப்படுத்திவிட்டதாகவும். அல்லது அவர்கள் வெளிப்படுத்தியதே அதிகாலையின் யதார்த்தம் என்றும்.
இங்கே முக்கியமானது, ஏதாவதொன்றை மீள நடித்துக் காட்டியிருப்பதாகவும், அது குறித்த ஒன்றுக்கு சாட்சியமாக பாவிக்கப்படக்கூடிய அரசியல் அர்த்தம் கொண்டது என்றும் நிறுவுவதல்ல. அப்படிச் சாத்தியமானதும் அல்ல. பிரதிக்கும் வாசகர்களுக்கும் இடையில் கானல்போல் இருப்பதும் இல்லாததுபோல் தோன்றும் ஒரு இடைவெளியை உருவாக்க கற்பனைகளை பெருகச் செய்வது, கற்பனைகளாலும், புனைவின் அசாத்தியங்களாலும் அனுபவத்தை பழக்கமற்றதாக மாற்றுவதே கவிதை என நினைக்கிறேன். இது அறுதியான முடிவுஅல்ல. ஆனால், இந்தப் பக்கத்திலிருந்து விவாதிக்கவும் கற்பனை செய்துபார்க்கவுமான ஒரு செயலைச் செய்கிறேன்.
எங்கும் கவிதை சூழ்ந்திருக்கிறது. என்ற இந்த யொசனை எனக்கு பிடிக்கவில்லை. அது சலிப்பைத் தருகிறது. கவிதை என்றால் என்ன என சிந்திப்பதற்கு இது மழுப்பலான ஒரு இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.