ஞாயிறு, ஜூன் 19, 2016

நவீன கவிதை மனம்.-01

நவீன கவிதை மனம்.
நண்பர் ஒருவர் உரையாடலின்போது, இந்தக் கேள்வியை முன்வைத்தார். அதன் பிறகே, பல விசயங்கள் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் என்ற எனது எடுகோள் செயலற்றுப் போனது. நாம், பேச முற்படும் போதும், ஒரு கருத்தாக்கத்தை புளக்கத்திற்கு விடும்போதும் சில தீர்மானங்களை எட்டுகிறோம். இந்த இடத்திலிருந்து பேசினால் போதும் என குறைந்த பட்சம் அறிகிறோம். ஆனால், விசயங்கள் அப்படி இருப்பதில்லை.
அனுபவத்தை பிரிபலித்தல், யாதார்த்தங்களை மீள நடித்துக்காட்டுதல், உண்மையை பிரதியாக மாற்றுதல் போன்ற அம்சங்கள் இலக்கியத்தின் சமூகச் செயல்பாடுகள் என கருதப்படுவதிலிருந்து விலகி அல்லது மறுத்து சிந்திக்கும் கற்பனையான வழிமுறைகளே நவீனம் கடந்த இலக்கியம் என பேசவேண்டியிருக்கும். அப்படி ஒருவகை கதையாடலின் பாதை என ஒரு விவாதத்தை கிளப்பியிருந்தேன்.
அவை குறித்து எனது பக்கத்திலிருந்து சிந்தித்துமிருந்தேன். அதாவது, புதிய அனுபவத்தை உருவாக்குதல், உண்மைகளை கற்பனை செய்தல், பல யதார்த்தங்களை கண்டுபிடித்தல் என சுருக்கமாக இவைகளை தொட்டுக்காட்டலாம். ஆனால், நண்பர் கேட்ட கேள்வி இதுதான். கவிதை மனம் என்று ஒன்று இருக்கிறதே, அது பிரதியில் வெளிப்பட்டால் நல்ல கவிதைதானே?
இப்படியான கேள்விகள் பலரிடம் இருக்க முடியும். இதை நெருக்கமுறும் கேள்விகளை உண்டுபண்ண நாம் பழகிவிட்டோம். அல்லது, கவிதை குறித்த பேச்சுக்கள் இப்படியான கேள்விகளை கேட்கும் சிந்தனையைத் துாண்டுகின்றன. மனம் என்பதற்கு அகராதியில் இருக்கும் அர்தத்திற்கும் இங்கே ”கவிதை மனம்” என இணைந்துவரும்போது ”மனம்” என்பதற்கும் இருக்கும் பொருளாக்கத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு என்பதை நான் சொல்லாமலே நீங்கள் புரிந்திருப்பீர்கள்.
சுயம், அகமி,நான், மனம் என பல வகைகளில் அழைக்கப்பட்ட இந்தக் கருத்துநிலை, நவீன கவிதையின் தொடக்கத்திலிருந்து பின்தொடர்ந்து வருகிறது. இதை கவிதைப் பிரதிகளில் கண்டெடுக்கும் போது அது கவிதை மனமாக பரிமாணம் அடைகிறது. தனித்த சுயம், குறிப்பான அடையாளங்களை தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் கவிதை மனம் என்பதினுாடாக, கவிஞருக்கான தனித்தன்மையாக பேசப்பட்டதையும் நாமறிவோம்.
அதாவது, கவிதை மனம் உருப்பெறும் தன்னிலையாக்கத்தை முதன்மைப்படுத்தி, ஏனைய பிரதிச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரதியின் மய்யமாக கவிதை மனமும், அந்த மனதின் தேவைகளை நிறைவேற்றிக் காட்டுவதற்கான உப பகுதிகளாக சம்பவங்களும் மாற்றப்பட்டன.
பிரதிக்குள்ளாக ஒரு விளிம்புநிலை கதை உருவாக்கப்பட்டது. இந்தக் கவிதை மனம் , கவிதைக்கான சம்பவங்களை மற்றைமைகளாக பார்த்தன.
நவீன கவிதை மனம் என்பது மற்றமைகளை புரிந்துகொள்ளாத, ஏற்றுக்கொள்ளாத, அவைகளை விளிம்புநிலையிலே பேண முற்பட்ட ஒரு கற்பனைச் செயற்பாடு என சொல்லி முடிக்க வேண்டிய ஒன்றைத்தான் நான் இதுவரை விபரித்துக் கொண்டிருந்தேன்.
சரி ஒரு உதாரணத்துடன் பார்க்கலாம். நண்பர் இப்படியான வியாக்கியானங்கள் தனக்கு விளங்கவில்லை என்றதும், ஒரு கவிதைப் பிரதியை எடுத்து விளங்கப்படுத்தியதும், அப்பாடா! என மூச்சுவிட்டார். புரிந்ததாக சொன்னார். அதன் பிறகே, நான் வியாக்கியானம் செய்வதைவிட உதாரணங்களுடன் சிறிதாக பேச விரும்பினேன்.
கன்னியாகுமரியில்….
இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்
மிகப்பெரிய சூரியன்
ஒரே ரத்தக் கலங்கல்
எங்கிருந்தோ வந்து
சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது
இந்த ஆட்டுக்குட்டி
அசடு
அபோதம்
தன்னிலை அறியாதது
இடம்பெயர்வதா நான்
அல்லது
நின்ற நிலையில் நிற்பதா?
மூளையின் தர்க்கம்
அறுபட்டு விழித்ததும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி
சூரியனைக் காணோம் .
-பசுவய்யா- (சுந்தர ராமசாமி)
இது அந்திப் பொழுதை ரசிக்க நினைக்கும் ஒருவரின் கதை. இப்படியான ஒரு தன்னிலையை இந்தக் கவிதையில் சுரா கண்டுபிடிக்கிறார். கன்னியாகுமரியில் அந்திப் பொழுது விசேசமாக இருக்குமோ என்னவோ... தலைப்பை அப்படி வைத்திருக்கிறார். அந்திப் பொழுதை கன்னியாகுமரியில் பார்ப்பது சிறப்பு என்பது போன்ற ஒரு தொனி மேலோங்க வாய்ப்பை இந்தத் தலைப்பு தந்துவிடுகிறது.
இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்
”இன்று” என்ற சொல் வருவதினுாடாக, ஒவ்வொரு நாளும் இங்கே அந்திப்பொழுதை காணவருபவர் என்றோ இதற்கு முன் பலதடவை காணவருபவர் என்றோ ஒரு கதை உருவாக்கப்படுகிறது. முன்பு மேகம் நிறைந்த வானத்தை தான் கண்டிருக்கிறார் என்பதினுாடாக இந்தக் கதை தொடருகிறது.
மிகப்பெரிய சூரியன்
ஒரே ரத்தக் கலங்கல்
அந்திச் சூரியனைப்பற்றி இவ்வளவுதான் சொல்கிறார். மேலும் விபரிக்கவில்லை. அதற்கான காரணத்தை அடுத்து முன்வைக்கிறார். காரணத்தை முன்வைக்க வேண்டிய தேவை ஏதுமில்லை. அதிகமாக விபரிக்க முடியாதுபோன தனது கற்பனைக் குறையை மறைப்பதற்குக்கூட இப்படியான காரணத்தை உருவாக்கியிருக்க வாய்ப்பிருக்கிறது.
எங்கிருந்தோ வந்து
சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது
இந்த ஆட்டுக்குட்டி
அசடு
அபோதம்
தன்னிலை அறியாதது
ஆட்டுக் குட்டி ஒன்று அந்தச் சூரியனை மறைத்துச் செல்கிறது. அதைத் திட்டத் தொடங்குகிறார். நான் ரசித்துக் கொண்டிருக்கும் அந்தியை எப்படி இந்த ஆட்டுக்குட்டி மறைக்கும் என்பதுபோன்று கோபங்கொள்கிறார். ”தன்னிலை அறியாதது” என அதன் மீது குற்றம் சுமத்துகிறார். அதாவது, நவீன கவிதை மனதின் தீராக்குணமான - இயற்கையுடன் பேசுதல் என்ற புரிதலின் மறுபகுதிதான் இது. மலர்களுடனும்,மலைகளுடனும் , மிருகங்களுடனும் பேசும் கவிதை மனம். எனவே, அவைகளும் கவிதை மனதின் நிலையை அறிந்து நடந்துகொள்ள வேண்டும். என்பதுபோன்ற ஒரு நிலை.
இக்கவிதையில் உருவாக்கப்பட்டிருக்கும் நபர் - அந்திப் பொழுதை ரசிக்கவிடாமல் ஆட்டுக்குட்டி தடுத்துவிட்டதாக சினம் கொள்கிறார். அவருக்கு, அந்த ஆட்டுக்குட்டியின் இயல்பான செயல் இரண்டாம் பட்சமானது. ரசிக்க வேண்டும் என்பது மட்டுமே முதன்மையானது. சூரியனை மறைப்பதற்காக எங்கிருந்தோ அது வரவில்லை. மேய்சலில் இருந்து தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது அவ்வளவுதான்.மற்றமையை ஏற்க மறுக்கும் கவிதைமனம் இங்கே வெளிப்பட்டு நிற்கிறது.
இடம்பெயர்வதா நான்
அல்லது
நின்ற நிலையில் நிற்பதா?
மூளையின் தர்க்கம்
அறுபட்டு விழித்ததும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி
சூரியனைக் காணோம் .
கடைசியில், ஆட்டுக்குட்டியின் மீது குற்றம் சுமத்திவிடுகிறது நவீன கவிதை மனம். அது மற்றமைகளை ஏற்பதே இல்லை. தன்னை மய்யமாக வைத்து மட்டுமே சிந்திக்கிறது.