திங்கள், ஆகஸ்ட் 15, 2016

கவிதையும் ஸ்டேற்மென்டும்.

2015 - 04 - 11 அன்று எழுதியது.  மீள் பகிர்வு.

கவிதை மற்றும் ஸ்டேட்மென்ற் இரண்டுக்குமிடையில் என்ன வித்தியாசம்?
வாக்குமூலம்
எழுதிக் கொள் இதனை
நான் ஓர் அரேபியன்
எனது அட்டையின் இலக்கம் 50,000.
எட்டு குழந்தைகள் உள்ளனர் எனக்கு
ஒன்பதாவது அடுத்த கோடையில்
கோபமா உனக்கு?
எழுதிக் கொள் இதனை
நான் ஓர் அரேபியன்
தொழிலாளருடன் கற்கள் உடைக்கிறேன்
கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன்
எனது எட்டு குழந்தைகளுக்கும்
ரொட்டித் துண்டினைப் பெறுவதற்காக
புத்தகம் ஒன்றைப் பெறுவதற்காக
ஆயினும்
கருணை கேட்டு நான் இரந்திட மாட்டேன்
உன் அதிகாரத்தின் ஆளுகையின் கீழ்
முழந்தாள் இட்டு நான் பணிந்திட மாட்டேன்
கோபமா உனக்கு?
எழுதிக் கொள் இதனை
நான் ஓர் அரேபியன்
பேர்புகழ் அற்ற ஒருவனே நான்
மூர்க்க உலகில் நிலைபேறுடையவன்
கோபச் சூழலில் அனைத்தும் இயங்கும்
ஒரு நாட்டின் புதல்வன்
காலம் பிறக்கும் முன்
யுகங்கள் உதயமாகும் முன்
சைப்ரஸ் மரங்களுக்கும் ஆலிவ் மரங்களுக்கும் முன்
களைகள் முதிர்ச்சியடையும் முன்
ஆழச் சென்றன எனது வேர்கள்
எனது தகப்பன் ஓர் எளிய உழவன்
குலவழி அற்ற உழவன் என் பாட்டன்
எனது வீடு ஓர் வைக்கோல் குடிசை
பட்டங்கள் அற்ற வெறும் பெயர் எனது
எழுதிக் கொள் இதனை
நான் ஓர் அரேபியன்
எனது தலைமுடி மிகவும் கருப்பு
எனது கண்கள் மண்ணிறமானவை
எனது அரபுத் தலையணி:
அதை தொடுவோரின் கைகளைப் பிராண்டும்
எனது விலாசம்:
மறக்கப்பட்ட ஓர் தூர்த்துக் கிராமம்
அதன் தெருக்களுக்குப் பெயரில்லை
அதன் மக்கள் வயல்களில் உழுவோர்
கல் உடைக்கும் இடத்திலும் உழல்வோர்
எழுதிக் கொள் இதனை
நான் ஓர் அரேபியன்
என் முன்னோரின் திராட்சை வனத்தை
திருடிக்கொண்டவன் நீ
நான் உழுத நிலத்தை
என் குழந்தைகளை திருடிக் கொண்டவன் நீ
எனக்கும் எனது பேரர்களுக்கும்
நீ விட்டு வைத்தவை இப்பாறைகள் மட்டுமே
அனைத்துக்கும் மேலாக
இதனையும் எழுது
யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல
ஆயினும்
பட்டினி வருத்தும் போதிலோ என்னைக்
கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்
கவனம்
எனது பசியை அஞ்சிக்
கவனமாய் இருங்கள்
எனது சினத்தை அஞ்சிக் கவனமாய் இருங்கள்.
கவிதை:மெஹ்மூத் தர்வீஷ்
மொழியாக்கம்: எம்.ஏ.நுஃமான்
மேலுள்ள கவிதையின் கடைசிக்கு முந்திய பத்தியை கவிஞர் வெயில் தனது முகநுாலில் பதிந்திருந்தார். அதன் கீழே ,கவிஞர் நரன் இது ஒரு ஸ்டேட்மென்ட் என பின்னுாட்டம் இட்டிருந்தார். இதிலிருந்துதான் அந்த விவாதம் எனக்கருதத் தக்க உரையாடல் தொடங்கியது. ”நீ கவிஞனா? கவிதை எழுதியிருக்கிறாயா? கவிதை எழுதக் கற்றுத்தரவா? போன்ற கேள்விகள் தொடங்கி.. கவிதை என்றால் என்ன? என்ற கேள்விவரை நீண்டிருந்தது. மிகச் சில பின்னுாட்டங்கள் கூட, இந்தப் பிரச்சினை தொடர்பில் விவாதிக்கப்பட்டதாக இல்லை. அங்கு சென்று பார்வையிட்டால் உங்களுக்கே புரியும். கடைசியில் அது ஒரு உச்சாப்பு வாக்குவாதம் (குழாயடிச் சண்டை - ஆரம்பத்தில் இச்தச் சொல்லைத்தான் பாவித்திருந்தேன் இப்போது அது திருத்தப்பட்டுள்டுள்ளது)போல நிறைவடைந்திருந்தது.
உண்மையில், அந்தப் பின்னுாட்டப் போரில், விவாதத்திற்கான அடிச்சரடு ஆங்காங்கே தென்பட்டாலும் அவைகளைக் கவனத்திற் கொள்ளாமல் கைவிடப்பட்டிருந்தது.
கவிதை குறித்த அனுகுமுறையில் உலகத்திற்கு பொதுவான ”ஒருவகைப் பிரதி” கவிதையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.ஒவ்வொரு சமூகமும், நாடுகளும், இனக்குழுமங்களும், மொழிகளும், வெவ்வேறு வகையான பிரதிகளைத்தான் கவிதையாக பாவித்து வந்திருக்கின்றன. இப்போதும் அப்படித்தான். இதில் மேலதிகமாக, காலகட்டங்களையும் இணைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு காலகட்டமும் வெவ்வேறு வகையான பிரதிகளையே கவிதையாக பாவிக்க முற்பட்டிருக்கின்றன. ஆக, இதுதான் கவிதை என்ற ஒரு பொது அபிப்பிராயத்தை இங்கு யாரும் முன்வைக்க முடியாது.
எனினும், குறித்த பிரதி கவிதையாக ஏன் கருதப்படுகிறது என்ற கதைகளை, அந்தக் கவிதைகளை முன்னிறுத்தி புரிந்துகொள்ள முயற்சிக்கும் பணியில் பெரும் பங்களிப்பாக கருதமுடியும். அதே போல, கவிதை என நம்பப்படுவதற்கு பிரத்தியேகமான காரணங்கள் என்ன இருக்கிறது என்பதையும் விவாதிக்க முடியும். அதனுாடாக ஒரு பிரதி தன்னை எப்படி கவிதையாக நிகழ்த்திக் காட்டுகிறது என்ற ஒரு கதையாடலையும் எழுப்பிப் பார்க்க முடியும். இப்படி எழுப்பிப் பார்ப்பது என்பது, கவிதை குறித்த புரிதலைப் பெருக்குவதாக அமையுமே ஒழிய, குறித்த வகையில் இருந்தால் மாத்திரமே கவிதை என்ற தீர்மானத்திற்கு இட்டுச் செல்லாது.
இறுதி முடிவான ஒரு தீர்மானத்திற்கு இட்டுச் செல்லும் வாசிப்பு முறை நிச்சயமாக, கவிதையை வரையறுக்கும் நடைமுறையை விரும்புகிறது என்றுதான் அர்த்தமாகிறது. எனவே, ஒருவர் கவிதைதான் இது என அடம்பிடிப்பதற்கும், மற்றவர் இது கவிதையல்ல ஸ்டேட்மென்ர் என அடப்பிடிப்பதற்கும் பதிலாக, குறித்த பிரதியை முன்வைத்து, தமது பக்க கருத்துக்களை வெளிப்படுத்துவதினுாடாக இந்தப் பிரதியை புரிந்து கொள்வதற்கு பங்களிப்புச் செய்யலாம்.
வாசிப்பு என்பதே அர்தத்தை கண்டடைவதில் பங்களிப்புச் செய்யும் ஒரு நடைமுறைதான். இதில் யாருடைய வாசிப்பு சரியானது என்பது முக்கியமல்ல. ஒரு பிரதியின் அர்த்தத்தை கண்டடைவதில் பன்மையான வாசிப்பு முறைகள் கிடைக்கிறது என்பதுதான் முக்கியம்.
மேலுள்ள தர்வீசின் கவிதை என்னளவில் ஒரு பின்தங்கிய கவிதைச் செயலைக்கொண்டு தன்னைக் கவிதையாக நிகழ்த்திக்காட்ட முற்படும் பிரதிதான். அதை எப்படி என்று நான் விவாதித்துக் காட்ட தயாராகவே இருக்கிறேன்.
முதலில் நான் இதைக் கவிதை என ஏற்றுக்கொண்டுதான் பேச முற்படுகிறேன். ஆனால் ஒரு சிறிய மாற்றம். எனது குறிப்பீடாக, ”கவிதைப் பிரதி” என்று இதை பேச விரும்புகிறேன். இது கவிதை என்பதற்கும் ஸ்டேட்மென்ற் என்பதற்கும் வேறுபட்ட நிலையிலான ஒரு சொல் என்று இப்போது நீங்கள் எடுத்துக்கொண்டால் போதும்.
இந்தப் பிரதி, தன்னை எப்படி வெளிப்படுத்துகிறது என்றால், ஏதோ ஒன்றின் பிரதிநிதி நான் எனச் சொல்ல முற்படுகிறது. அல்லது அப்படியே அழைக்கிறது. ஒன்றின் பிரதிநிதியாக தன்னை இலக்கியப் பிரதி வெளிப்படையாக அழைப்பது என்பது காலங்காலமாக நடந்தேறிவருகின்ற ஒரு விசயம்தான். நான் அதற்கு முரண்பட்டவன் என்பதால், முதலாவதாக இப்பிரதியோடு முரண்படுகிறேன். காலங்காலமாக நிகழ்தப்பட்டு வருகின்ற ஒரு கவிதை பற்றிய மனநிலையை நான் நிராகரிக்கிறேன் என்பது இதன் பொருள். அதனால், பிரதிநிதியாக ஒரு இலக்கியப் பிரதி இருக்கக்கூடாதா? எனக்கேட்டால் அதற்கான எனது பதில் உங்கள் விருப்பம் என்பதுதான்.
ஏனென்றால், ஒரு இலக்கியப் பிரதி ஒன்றின் பிரதிநிதியாக இருப்பதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், அது ஒரு பழமையான மனோபாவம். நான் பதிதாக எனது கவிதையை உருவாக்க விரும்புவதால் இது எனக்கு உவப்பானதல்ல என்பதுதான். அதே நேரம் என்னிடம் மிக அதிகமான கேள்விகளும் விவாதங்களும் இருக்கின்றன. எந்தப் பிசகும் இல்லாமல் மிகத் துல்லியமாக ஒன்றின் பிரதிநிதியாக ஒரு இலக்கியப் பிரதி இருக்க முடியுமா என்பதும் அந்தக் கேள்விகளினுள் அடங்கும்.
முதலாவது முரண்பாடு அது. சரி இரண்டாவது, என்ன?
இந்தக் கவிதை, பிரதியின் எல்லைக்குள்ளாக தன்னை கவிதையாக நிகழ்த்தவில்லை என்பதுதான். இந்தக் கவிதைப் பிரதி தன்னைக் கவிதையாக நிகழ்த்திக் காட்டுவதற்கு, கவிதையின் எல்லைக்குள்ளாக எடுத்துரைக்கும் சம்பவங்களைக் கடந்து, வேறு ஒரு விசயத்தையும் துணைக்கு நம்பியிருக்கிறது. அந்த விசயம் என்பது, ஒரு அரசியல் சிக்கல். அதாவது ஒரு அரசியல் கதையாடல். பலஸ்தீன் மக்களின் அரசியல் பிரச்சினையை, அங்கு அரசியல் நிறுவனங்களாக இருப்பவர்கள் உருவாக்கியிருக்கும் புரிதலை அறிந்துகொள்வதினுாடாகத்தான், மேலுள்ள கவிதைப் பிரதி தன்னை கவிதையாக நிறைவடையச் செய்யும் அளவில் இருக்கிறது.
மேலுள்ள கவிதைப் பிரதி தன்னை கவிதையாக நிறைவடையச் செய்வதற்கு பலஸ்தீன மக்களின் குறித்த அரசியல் பிரச்சினையின் உதவி தேவைப்படுகிறது, இப்பிரதி தன்னை தனது எல்லைக்கள்ளாக கவிதையை நிறைவடையச் செய்வதற்கு பதிலாக, வேறொருன்றின் உதவியை வெளிப்படையாக எதிர்பார்த்திருக்கிறது. அல்லது வேண்டி நிற்கிறது. அனேகமாக, இது ஒப்பந்தங்களுக்கு நிகரான ஒரு பிரதிபோல தன்னை காட்டிக்கொள்கிறது. ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால், அதைப் புரிந்து கொள்வதற்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களின் செயற்பாட்டைக் கொண்டே அதன் உயிர்த்தன்மையை அறிந்துகொள்வோம்.அப்படித்தான் இது.
குறித்த அந்த அரசியல் சிக்கலை அது சொல்லும் வழிமுறைக்கு சாய்வாக புரிந்துகொள்ளாமல் விட்டுவிடும்போது, இந்தப் பிரதி வெறும் ஸ்டேட்மென்ராக மாறிவிடும். அதுபோல், சாய்வாக புரிந்துகொண்டால் அது கவிதைப் பிரதியாக மாறிவிடும். ஆகவே, தன்னை கவிதையாக நிகழ்த்திக் காட்டுவதற்கு இந்தப் பிரதி, பிரதிக்கு புறத்திலுள்ள பிறிதொரு கதையாடலை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.
அதிலும் நான் முரண்படுகிற மூன்றாவதும் முக்கியமானதுமான ஒரு விசயம் என்ன வென்றால், இப்பிரதி, பலஸ்தீன மக்களின் பிரச்சினைகளையும், அதிகாரத்திற்கெதிரான துணிச்சலையும் கொண்டிருக்கிறது என்கின்ற இடத்தில்தான்.
உண்மையில் இது அதிகாரத்திற்கெதிரான துணிச்சலுள்ள பிரதிபோல தன்னைக் காட்டிக்கொண்டாலும், (அதுவும் உண்மைதான்) பலஸ்தீன மக்களின் ஏக பிரதிநிதி நான் என்பதுபோன்ற மறைமுகமான ஒரு அதிகாரத்தை தன்னிடம் தக்கவைத்துக்கொள்ள முற்படுகிறது. எங்களின் பிரதிநிதியாக நீங்கள் இருங்கள் என மக்கள் எப்போதும் கவிஞர்களுக்கும், கவிதைப் பிரதிகளுக்கும் அனுமதி வழங்குவதில்லை. ஆனால், இப்படியான கவிதைப் பிரதிகளை உருவாக்குவதினுாடாக, மக்களின் பிரதிநிதி நான் என்ற பிரத்தியேக அதிகாரத்தை எடுத்துக்கொள்வதுதான்.
அதாவது அகதிகாரத்திற்கெதிரான குரல்போல தன்னை முன்வைப்பதினுாடாக, தான் ஒரு அதிகாரத்தை விளைவதுதான். பிரதிநிதித்துவம் செய்ய முற்படும் இலக்கியங்கள் அனைத்தும் இந்தவகையினத்தை சார்ந்ததுதான்.
இந்த அதிகாரம், மிக வெளிப்படையாக இந்தப் பிரதியில் வெளிப்பட்டு நிற்பதை அறிந்துகொள்ளலாம். பலஸ்தீன மக்களின் பிரச்சினைகளின் பிரதிநிதியாக காட்ட முற்படுவதுபோல் தோன்றும் இந்தப் பிரதி தன்னை வேறுமாதிரியாக அழைத்துக்கொள்கிறது. இதை சற்று உற்றுக் கவனித்தால் புரிந்துவிடும்.
”நான் அராபியன்” என்று அடையாளமிட்டு அறிவிப்பதினுாடாக, பலஸதீனைத் தாண்டி அராபியர்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொள்ள முற்படுகிறது. இப்போது மேலுள்ள கவிதையை மீண்டும் வாசித்துப் பாருங்கள். பலஸ்தீன மக்கள் இப்படியான துயரத்தில் இருக்கிறார்கள் என்பதற்குப் பதிலாக, அராபியர்கள் எல்லாரையும் ஏதோவொரு அதிகாரமைய்யம் இப்படி மோசமான நிலையில் வைத்திருக்கிறது என்ற பொருளை இது தரமுற்படுகிறது. அதுவும் ”அராபியன்” என்பதினுாடாக பெண்களை நீக்கிவிடுகிறது. ஏன் இப்படி வாசிக்கிறேன் என்றால், இந்தப் பிரதி பலஸ்தீன மக்களின் துயரங்களை வெளிப்படுத்துவதாலும், மனிதநேயப் பார்வையோடு இணங்கிப்போவதாக பலர் சொல்லக்கூடும் என்பதால்தான்.
இப்போது, இந்தக் கவிதைப் பிரதி, ஒரு ஸ்டேட்மென்றாக சுருங்கிவிடுகிறது. ஒரு இயக்கம் சார்ந்த செயற்பாட்டாளன், தனக்கு ஆதரவாக மக்களை கவன ஈர்ப்புச் செய்வதற்காக செய்யப்பட்ட ஒரு அறிக்கைபோல இந்தக் கவிதைப் பிரதி மாறிவிடுகிறது. இதன், கடைசிப் பத்தியே அதன் உச்சபட்ச ஆதாரம்தான்.
ஆக, இலக்கியப் பிரதி ஒன்றின் பிரதிநிதியாக செயற்படும்போதும், தன்னை வேறொன்றின் துணையோடு (கதையாடலினுாடாக) இலக்கியமாக நிகழ்த்திக் காட்ட வேண்டிய தேவையிருக்கும்போதும், குறைந்தளவிலான இலக்கியத் தன்மையையெ தன்னிடம் கொண்டிருக்கிறது. தனது எல்லைக்குள்ளாக, தனது மொழிபுகளுக்குள்ளாக தன்னை இலக்கியப் பிரதியாக நிகழ்த்திக்காட்டுவதுதான், இலக்கியத்தின் உச்சபட்ச இயக்கமாகும். அதை இந்தப் பிரதி செய்யவில்லை என்பதனால், பாதி கவிதையாகவும், மீதி ஸடேட்மென்றாகவும் இருக்கிறது. ஆகவே, நரன் மற்றும் வெய்யில் உங்கள் சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரலாம்.