வியாழன், பிப்ரவரி 04, 2010

கதைகளாகவும் செய்திகளாகவும் மாறிமாறி உருக்கொள்ளும் எழுத்துக்கள்


உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி:
செய்திகளாகவும் கதைகளாகவும்; உரு மாறி மாறி பெருக்கெடுப்பவை.

நூல் அறிமுகம்                                        
றியாஸ் குரானா

கதைகள் சொல்லவும்,கேட்கவுமான சூழலில் இருக்கிறோம்.ஏதோ ஒருவகையில் ஒழுங்கு படுத்தி அல்லது ஒழுங்கின்மையை உருவாக்கி எழுதப்படுபவைகளை மாத்திரமே கதைகளாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.எழுத்துக்கு வராதவைகள் கதைகள் என்ற பேச்சுக்குள் தவிர்க்கப்படுகின்றன.பல பிரிவுகளில் கதைகளை வைத்து வாசிப்புச் செய்வதும் பேசுவதுமான ஒரு மன அமைப்பை வரித்துக்கொண்டிருக்கிறோம்.அவைபற்றிய பேச்சுக்களை இங்கு அவசியப்படுத்த விரும்பவில்லை.
அறிவியல் வெளி மற்றும் பிற சமூகவெளி எல்லாமே கதைகளால் நிரம்பியவைகளே.கதைகளால் உருப்பெற்றும் கதைகளால் அழிந்தும் பெருகிவரும் நினைவுகளின் நீட்சியில் மனிதனுக்கான இருப்பு அமையப்பெறுகிறது என்பது நாமறிந்ததே.
கதைகளை உண்மையின் இடத்தில் வைத்து வாசிக்கப்படும் ஒரு சிந்தனை அமைப்பு இன்றும் தமிழில் கவன ஈர்ப்பை பெற்றுக்கொண்டுதானிருக்கின்றது.அல்லது உண்மையை எள்ளளவும் குறைவின்றி பிரதிபலிக்கும் ஆற்றல் கதைகளுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது.ஒரு அனுபவத்தின் சாரமாக தாங்கிச் செயற்படும் திறன் கதைகளிடம் இருக்கின்றன என்று நம்பும் எழுத்துச் செயற்பாட்டாளர்கள் அதிகரித்தபடிதான் இருக்கிறார்கள்.
90களுக்குப்பின் ஈழத்து இலக்கியப்பரப்பில் கதை சொல்லத்தொடங்கியவர் ஓட்டமாவடி அறபாத். பலமுனைகளிலுமிருந்து முஸ்லிம்கள் நெருக்குவாரத்திற்குள் உட்படும்போது,அதன் எதிர்க்குரலாக உரத்து ஒலிக்கத்தக்க கதைகளை அதிகம் எழுதியவர்.
நேரடி நிகழ்வின் அவதானங்களையும்,துயரச் சம்பவங்களையும் கொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்திவிடுபவைதான் இவரது கதைகளின் பணி.ஏதோ ஒரு உண்மையை சொல்லுவதாக உணர்த்தும் தன்மையில் பேசிக்கொண்டிருப்பவை இவரின் கதைகள்.
இவருடைய கதைகளில் வசிக்கும் மனிதர்கள் பெரும்பாலும் ஒழுக்கத்தை நம்புபவர்களாகவும், அதன் பிரதிநிதிகளாகவும் தம்மை அடையாளப்படுத்த எத்தனிப்பவர்கள்.ஒழுக்கத்திற்கு எதிரானவற்றை புறமொதுக்கும் மனிதர்களும் அவர்களுக்கிடையிலான உறவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட உலகம் இவருடைய கதைகள்.
தினசரிப் பத்திரிகையின் செய்தி போன்று நேரடித்தன்மையும் எளிமையும் நிரம்பிய மொழியை கொண்டு கதைகளை பேசுவன.இந்த மொழியமைப்பைக் கொண்டு கதை சொல்லுதலை சாத்தியப்படுத்தியிருப்பதே இவரின் உழைப்பும் அதன் வெற்றியுமாகும்.புனைவுகளின் பல்வகைச் சாத்தியங்களை இவர் முயற்ச்சிக்கவில்லை.
அவலங்களும்,அச்சங்களும்,துயரங்களும் நிரம்பிய சமூகப்பரப்பில்,புனைவுச் சாத்தியங்களை முயற்ச்சிப்பதைவிட ஒரு களப்பணியாளரின் வேலையைச் செய்வதே உசிதம் என தனது செய்தியை தெளிவாக வெளிப்படுத்துகிறது இவருடையகதைகள்.
போர்க்காலங்களில் ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் மிகப் பிரதானமான போராயுதமாகவும்,தற்காப்பு உத்தியாகவும்,மக்களை விழிப்பூட்டும் பணியாளாகவும் செயற்பட்டது- துண்டுப்பிரசுரங்களும்,சுவர்ப்பத்திரிகைகளும்தான்.இவை உடனடி உணர்வூட்டலையும்,இதனால் நிகழக்கூடிய விளைவுகளையும் கோருபவையாக இருந்தன.துண்டுப்பிரசுரங்களின் இவ்வகைப் பணியை மிக நேர்த்தியாக கதை சொல்லலின் உத்தியாக மாற்றியிருப்பது,இவருடைய கதைகளுக்கென்று ஒரு தனித்த வெளியை உருவாக்கித்தந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
எதிர்பாராமல் பெய்த மழையால் பெருக்கெடுக்கும் வெள்ளம் மிக மெதுவாக வடிந்து செல்லுவதைப்போன்ற ஒரு வேலையை வாசிக்கும் கணங்களில் ஏற்படுத்தும் தனித்த வெளியை உருவாக்கியிருக்கிறது இவருடைய கதைகள்.
எளிமை ததும்பும் நேரடியான மொழி,கதைகளை சிலநேரங்களில் செய்திகளைப்போன்று உருமாற்றியும் விடுகின்றன.அதற்கு உதவியாக இவருடைய கதைக்குள் அறிவுரை கூறும் ஒரு குரல் மறைந்திருந்து கதைநெடுகிலும் ஓயாமல் பேசியபடியே இருக்கின்றது.
உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி: செய்திகளாகவும் கதைகளாகவும்; உரு மாறி மாறி பெருக்கெடுப்பவை.

உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி
சிறுகதைத் தொகுப்பு
ஓட்டமாவடி அறபாத்
வெளியீடு:அடையாளம் பதிப்பகம்.