திங்கள், பிப்ரவரி 15, 2010

சொல்லித்தானே ஆகவும் வேண்டும்


மஜீத்

சொல்ல வேண்டியதை முழுமையாக
உன்னிடமும் நான்,
சொல்லித்தானே ஆகவும் வேண்டும்.


கொலை வெறிகொண்டு அடங்காத அவன்
என்னையும் ஒரு சில பொழுதுகளில்
கொன்றே போடுவான்.
இன்னும் வெளிப்படையாகச் சொல்லின்
துப்பாக்கிகளும்,
அவனது படைகளும்
அதிகம் அதிகமாக ரத்தவாந்தியே போடுகின்றன.


எனக்கு நன்கு தெரியும்
நடந்தவைகள் பற்றி
நீ இன்னும் உயிரோடுமில்லை.
இருப்பினும்,
சொல்ல வேண்டியதை அவகாசமின்றி
சொல்லித்தானே ஆகவேண்டும்.


இழக்கவிருக்கும் உயிர்பற்றி
சற்றும் கலங்கிக் கொள்ளவில்லை.
எல்லாவற்றிற்கும் காலமே போதுமானது.


அகவெளியின் மகிழ்வில் கொடிய தனிமையும்
இறுகியுறைந்த இருள் குமுறும்
வேற்று நிகழ் துயரும்
மீள......
நான் இதிலிருந்து மீள்வதாயில்லை.
ஒரு தடவை உயிர் மனப்பாறையில்
வீழ்ந்து துயருடன் மிதக்கத்தான் போகிறது.


இன்று
திடீர் சிதைவில் மிதக்கும் கனவின் ஓசை
சிற்றோடையாக வளர்ந்து
ஓவியக்கீற்றுமாக மாறலாம்.
இனியென் கனவின் வெளிப்பாட்டிற்கு
உருவமில்லையே என்செய்ய.