பெண்கள் வெளியேற்றப்பட்ட கதைப்பிரதிகள்
வாசிப்பு பிரதி
றியாஸ் குரானா
இலக்கியம் என்பது ஒரு நிறுவனம். எழுத்துக்களில் ஒரு பகுதியை இலக்கியம் என விளிக்கும்போது இதற்குப்பின்னே ஒரு அரசியல் செயற்பாடு வந்துவிடுகிறது. இலக்கியம் அல்இலக்கியம் என்ற வகைப்படுத்தல்கள் தனிநபர்,நிறுவனங்கள்,கலாச்சாரங் கள் போன்றவற்றுக்களால் வௌ;வேறு தன்மைகளில் பிரித்துக் கருதப்படுகிறது. சிலரால் இலக்கியம் எனக்கருதப்படுவது பிறரால் அல்இலக்கியமாக கருதப்படுகிறது. குறித்த செயற்பாட்டை செய்வதுதான் இலக்கியம் என பாவிக்கும்போது வேறொரு வேலையைச் செய்வதுதான் இலக்கியமென மறுபுறத்தில் பாவிக்கப்படுகிறது.
நிலவுகிற மரபை போற்றவும் அதன் அரசியலை பரிந்துரைக்கவும் பிரதிபலிக்கவும் இலக்கியம் உதவுவதாக கருதும் அதேநேரத்தில், அந்த மரபை உடைக்கவும்,மீறவும் பயன்படும் எழுத்துச்செயற்பாடுகளும் இலக்கியம் என்றே பயிலப்படுகிறது. இலக்கியம் ஒரு முரண்பாடான நிறுவனம். இலக்கியத்தன்மை என வரையறுக்க முயற்ச்சிக்கும் எழுத்துக்கள் இலக்கியமற்றது என்ற வகைகளுக்குள்ளும் இருப்பதாக பின்நவீன வாசிப்புக்கள் அறிவித்ததிலிருந்து இலக்கியம் என்ற கருத்தாக்கம் பெரும் சிக்கல் நிறைந்த ஒரு இடத்தை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது.
இலக்கியம் என்பது குறிப்பிட்ட ஒரு சமூகம் அல்லது குழுக்கள் எதை இலக்கியம் என்று பாவிக்கிறதோ அதுதான், அதாவது இலக்கியச் செயற்பாட்டாளர்களாக தம்மை கருதும் குழுவினர் எதை இலக்கியம் என்று பரிந்துரைக்கின்றனரோ அதுதான் இலக்கியம் என்று சொல்லலாம். இந்தப் பதில் இலக்கியம் பற்றிய புரிதலை வழங்கிவிடாது என்றுதான் தெரிகிறது.
எழுத்துக்களில் ஒரு குறித்த வகையினத்தை மாத்திரம் இலக்கியம் என்று நம்மை கருத உதவுவது எது என்றுகூட யோசித்துப்பார்க்கலாம். எப்படிப்பார்த்தாலும் இலக்கியம் என்பதை அறுதியிட்டு கூற முடியாது என்பதால், அது ஒரு நிறுவனம். குறித்த காரணங்களுக்காக,குறித்த வேலையை செய்வதற்காக எழுத்தவகையில் சிலவற்றை இலக்கியமாக பாவிக்கிறோம்.
இலக்கியம்,இலக்கியத் தன்மை என்றால் இன்னதுதான் என்ற நம்மால் பொதுவாக ஏற்றுக்கொண்ட ஒரு அம்சம் இருக்கிறது.அது தொடர்பில் எல்லோரும் ஒரேவகையான புரிதலை கொண்டிருக்கிறோம்.ஆகையினால், இலக்கியம் அல்இலக்கியம் என்ற வகைப்படுத்தம் நிறவனச் செயற்பாட்டிற்கும் அதன் வன்முறைக்கும் ஆதரவாக செயற்படுகிறோம்.அதுமட்டுமல்லா மல் இலக்கியம் அல்இலக்கியம் போன்ற வகையினங்களை பிரிக்கும் அரசியல் செயற்பாடுகுறித்து பெரிதும் அக்கரையில்லாதவர்களாகவே தமிழ்சூழல் செயற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள்.
இலக்கியம் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரிந்த பொதுவான ஒரு நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற எடுகோளை முன்வைத்தே பெரும்பாலும் இலக்கியவகைகள் பற்றி பரிந்துகொண்டும் செயலாற்றியும் வருகிறோம். பிரதி என்ற சொல்லாக்கம் உண்மையில் எந்த அர்த்தத்தில் தமிழ்ச்சூழலில் புரிந்துகொள்ளப்படுகிறதோ,புரிந் துகொள்ளும்படி கட்டமைக்கப்படுகிறதோ அதற்க்கு மாற்றமான ஒரு இடத்தில் வைத்துப்பேசவே நான் அதிகம் அக்கரைகொள்கிறேன். இலக்கியம் இலக்கியமற்றது என விளிக்கப்படும் எல்லாவகை எழுத்துக்களையும் பிரதி என்றளவில் வாசிப்பதே எனக்கு உவப்பானதாக தெரிகிறது. இப்போது பெரும் சிக்கலை எதிர்கொள்ளவேண்டியவர்களாகவம், பிறிதொரு புரிதலை அவாவி நிற்பவர்களாகவும் தோண்றுகிறது. இலக்கியம் என்று வகைப்படுத்தப்படும் பகுதிக்குள் இருக்கும் கதைகள் என்று கருதப்படும் வகை எழுத்துக்கள் பற்றி ஒரு வாசிப்புப் பிரதியை முன்வைக்க விரும்புகிறேன்.
பிரதிகள் அனைத்தும் கதைகள்தான்.வேறு வேறான கதைகளை ஒவ்வொரு கதைகளும் கொண்டிருக்கலாம். வெவ்வேறு வடிவங்களில் கதைகள் சொல்லப்படலாம். கவிதை என்று பாவிக்கும் எழுத்தக்கள்கூட கதைகள்தான்.ஒருவகை கதைசொல்லலைத்தான் செய்கிறது. நாம் கதைகளுக்குள்ளே வசிக்கிறோம்.கதைகளாகவே வசிக்கிறோம்.கதைகளாலே சிந்திக்கிறோம். அறிவு,வரலாறு,தத்துவம்,விஞ்ஞா னம் எதுவாக இருந்தாலும் அவைகள் கதைகளின் பின்னே அலைகின்ற ஒரு விசயம்தான். கதை சொல்லவும் கேட்கவுமான புரிதல் செயற்பாடுதான் நமது சிந்தனையை உருவாக்கிறது.மொழியின் அடிப்படையே கதையின் வழியாக கட்டமைக்கப்பட்டதுதான்.கதைகளின் பின்னணியில் சிந்திக்கிறோம் என்பதுமட்டுமல்ல அந்த சிந்தனையே பின் கதைகளாகவும் மாறிவிடுகின்றன.
கதைகள் என்ன செய்கின்றன. அறிவையும்,அடையாளங்களையும்,அதி காரங்களையும் கட்டமைக்கின்ற அரசியலை தன்னோடு கொன்டிருக்கின்றன. அவசியமான அல்லது சிறந்த கதைகள் என்ற ஒருபகுதியை உருவாக்கி முதன்மைப்படுத்தி வந்திருக்கிறது.அதேபோல் எதிர் நிலையில் அவசியமற்ற தீங்கான கதைகள் என்ற என்ற பிரிவையும் உருவாக்கிவந்திருக்கிறது.
ஆண்களின் நலனை முன்னிறுத்திய புரிதலை பரிந்துரைக்கும் அரசியல்பாரம்பரியத்தை சிறந்தது என்ற பொதுப்பத்தியாக வளர்த்து வந்திருக்கிறது. இற்றைவரையான பிரதிகள் தம்மிடம் வைத்திருக்கும் கதைகளில், ஆண்வாசகனை முதன்மைப்படுத்திய பேசும் குரலையே உருவாக்கியுள்ளது. பெண்களை வாசகப்புரிதல் நிலையில் உருவாக்கும் பேசும்குரல்களைக் கொண்ட பிரதிகளை கதைகள் கொண்டிருக்கவில்லை. தமிழில் இன்றுள்ள அதிகம் பிரதிகள் ஏன் ஒரு தினசரிப்பத்திரிகையின் செய்திகூட ஆண்வாசகனுக்காகவே தயாரிக்கப்படுகிறது.
நவீனத்துவ,பின்நவீனத்துவ இலக்கிய,அரசியல் செயற்பாடுகளைக் கதையாடுவதாக தம்மை அறிவித்து செயற்படும் பிரதிகள்கூட ஆண்வாசகனுக்காகவே உருவாக்கப்படுகிறது.அதுபோலதான் விஜய் மகேந்திரனின் கதைப்பிரதிகளும் ஆண்வாசகனுக்காகவே தயாரிக்கப்பட்ட கதைகள். ஆண் வாசகனுக்காக கட்டப்படும் கதைகள் இலக்கியமாக பாவிக்கப்படும்போது பெண்கள்,விளிம்பு நிலையினர் போன்றவர்களுக்காக உருவாக்கப்படும் பிரதிகளும் இலக்கியமாகவே பாவிக்கப்படுகிறது. இது இலக்கியம் ஒரு முரண்பாடான நிறுவனம் என்பதையே மேலும் பேசவைக்கிறது.
விஜய் மகேந்திரனுடைய கதைப்பிரதிகள் நகரத்தின் வாதைகளையும், உள்ளியக்கங்களையும் அதிகமாக அக்கரைகொண்டிருப்பதாக வாசிக்கப்பட்டது. இது நகரம் என்ற பொதுப்புத்தியை முன்னிறுத்திய கூற்று என்பதை இலகுவில் புரிந்துகொள்ளமுடியும். அந்த வகையான வாசிப்பக்கள் காலாவதியாகிப்போன ஒன்று. நகரங்கள் எல்லாம் ஒரேமாதிரி இருப்பதில்லை. என்பது அடி;படையான ஒரு புரிதல் என்றவகையில் இவரின் கதைப்பிரதிகளை நகரம் சார்ந்த புரிதல்களை ஏற்றி வாசிப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
இவரின் கதைசொல்லலில் பயன்படுத்தப்படும் மொழி மிக எளிமையானது. நாம் ஏலவே புரிந்துகொண்ட ஒன்றை நினைவூட்டவது போன்ற உயர்வை உடனடியாக பிறப்பிக்கக்கூடியது. ஒரு நதி இடைநடுவே தேங்கிவிடாமல் நகர்ந்து செல்லுவதைப்போன்ற உணர்வை ஏற்படுத்தும் எடுத்துரைப்பு. அடுத்தடுத்து கதைச்சம்பவங்களை உருவாக்கும் விதத்தில் அமையும் நேர்த்தியும், அதைக் கதையாடுவதில் உருவாகும் நேர்த்தியும் அலாதியான இன்பத்தை பிறப்பித்துக்கொண்டே செல்கிறது. கதை மனிதர்களை அதிகம் உரையாட வைக்காமலும், அவர்களுக்குள் உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் வாசகர்களை முன்னிலையில் எதிர்கொள்வது போன்ற கதைசொல்லிகளையே இவரதுகதைகள் உருவாக்குகின்றன. அதனூடு கதை சொல்லிக்கான அடையாளம் துல்லியமாக கட்டமைக்கப்படுவதும், கதைமனிதர்கள் சில சொற்களாலும், சில சம்பவங்களாலும் மாத்திரமே அவர்களுக்கான அடையாளங்களை உருவாக்கும்படியான கதைச் சூழலை முன்வைப்பவை இவரின் கதைகள்.
இவரின் அதிகமான கதைகள் மரபான கதைசொல்லல் என்ற முறையில் பேசும் குரல்களைக் கொண்டிருக்கின்றன. மரபான கதைசொல்லல் உத்திகளால் கதைக்குள் மிக இலகுவாக நுழைந்துவிடும் வழிகளை உருவாக்க முயற்ச்சித்திருப்பது இவரின் கதைசொல்லல் தனித்துவத்தை முன்வைக்கிறது. அதேநேரம் கதைவரைதல் முறைமையில் கட்டமைக்கப்பட்ட கதைப்பிரதி ஒன்றும் இருக்கிறது.அந்தப்பிரதி இவரின் கதைசொல்லலின் அசாத்தியங்களை முயற்ச்சிக்கும் அவாவுதலையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதாவது (ழெn கiஉவழைn) புனைவற்ற எழுத்து என நம்பப்படும் கடிதம் என்ற வடிவத்தில் புனைவுத்திகளை உருவாக்கி கதையை நிகழ்த்திக் காட்டும் செயற்பாட்டை கவனிக்கலாம்.தமிழில் கதைவரைபவர்கள் குறைவு என்பதால், கதைவரைதல் பரீட்ச்சயம் தமிழில் கவனத்தை பெறவில்லை.
கதைப்பிரதிகளுக்கு பலவகை வாசிப்புக்கள் சாத்தியம் என்பதாலும், குறித்த வாசிப்பு ஒன்றே பிரதியை அமைதிப்படுத்திவிடும் என்பதாலும் இவரின் கதைப்பிரதிகள் உருவாக்கும் பல இலக்கிய அரசியல் கதையாடல்களில் ஒன்றை மட்டும் வாசிப்பச்செய்ய விரும்புகிறேன்.
இவரின் கதைப்பிரதிகளினுள் நம்மை சந்திக்கும் மனிதர்களில் ஆண்கள் மிக முக்கியமானவர்களாக இருத்திவைக்கப்பட்டுள்ளார்கள். கதைப்பிரதி கொண்டிருக்கும் இந்த அரசியல் விமர்சனத்தக்குரியது. பெண்கள் கதைப்பிரதி எங்கும் இரண்டாம் நிலையிலே நிறத்தப்படுகிறார்கள்.
சனிப்பெயர்ச்சி என்ற கதைப்பிரதியில், படித்த குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் விரிவுரையாளர் கதைசொல்லியாக உருவாக்கப்படுகிறார். அவர் குடும்பம் என்ற நிறுவனத்தை அனுசரித்து வாழ முயற்சிப்பவர். இது ஒரு உறவின் அடையாளம் தொடர்பான கதையாடலை முன்வைக்கும் பிரதி.நண்பனின் காதலிகள். கதைசொல்லியின் மனைவி,அம்மா போன்ற பெண்கள் கதையின் ஏதோ ஒரு வெளியில் நம்மை சந்திக்கிரார்கள். அம்மா என்ற பெண் பிற்போக்கானவளாகவும்,மனைவி என்ற பெண் சந்தேகம் நிறைந்தவளாகவும்,சில காதலிகள் என்ற பெண்கள் இன்னொருவரின் கணவனைக்கவரும் செயற்பாடுடையவர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளார்கள். பெண் என்பது இப்படியான அடையளத்தை கொண்டவளாகவே இவரின் பிரதிகள் கதையாடலை முன்வைக்கின்றன.
இவரின் இருத்தலின் விதிகள் என்ற கதைப்பிரதியில், குறைந்த சம்பளத்தில் தொழில் புரிபவர் என்பதால் குடும்பம் என்ற நிறுவனம் தூரப்படுத்தும் ஒரு ஆண் கதைசொல்லியாக உருவாக்கப்படுகிறார். பொருளாதாரத்தை மய்யப்படுத்தி ஆண்களுடனான உறவை உருவாக்கும் ஒரு மோசமான பெண்ணை மனைவியாக உருவாக்குகிறது. சீரியல் பார்க்கும் கீழ்த்தரமான ரசனை அவருக்கு வழங்கப்படுகிறது. இப்படித்திணிக்கப்படும் அடையாளங்கள் நிரம்பிய கதை இது. இலக்கியச் செயற்பாட்டிற்கு எதிரான பெண்ணடையாளமும் அவளுக்கு வழங்கப்படுகிறது.
// நேரத்தோடு வீட்டுக்கு வாங்க// என்ற அழைப்பு எச்சரிக்கை செய்வதான கதையடலாக பிரதியில் செயற்படும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிறு பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கதைசொல்லியை ஏமாத்துகிறார்.அதற்க்கான காரணத்தை ஆசிரியரின் மனைவி என்ற பெண்ணின்மீது திணிக்கிறது இந்தப்பிரதி.///நவீன இலக்கியப் புத்தகங்கள்// என்ற கருத்தாக்கம் இந்தப்பிரதியில் பேசும் குரல் இலக்கியம் ஒரு நிறுவனம் என்பதை பரிந்துரைக்கும் கதைச் சம்பவம்.
இவரின் சிரிப்பு என்ற கதைப்பிரதியில், தகுதி இருந்தும் வேலையின்றி அலையும் இளைஞன் கதை சொல்லியாக கட்டமைக்கப்படுகிறான்.கஞ்சா குடிப்பவர்களை ஒரு கேஸாக புரிந்துகொள்கிறான். தொழில் மற்றும் வசதிவாய்ப்பு இல்லாமையால் தன்னைப்பார்த்து முகத்தை சுழிக்கும் பக்கத்துவீட்டு பெண் உருவாக்கப்படுகிறாள். வசைபாடும் அம்மாவாக ஒரு பெண் வந்து போகிறாள். பலாத்காரமாக ஒரு பெண்ணை தனது ஆசைக்கிழத்தியாக்க அவாவும் கதைசொல்லி அப்பா என்ற ஆணை இரக்கமுள்ளவராகவும், புரிந்துகொள்ளக்கூடியவராகவும் உருவாக்கப்படுகிறார்.
இதுபோல்தான் மழை புயல் சின்னம் என்ற கதைப்பிரதியிலும் ஜெனீலா என்ற கதைப்பெண் கதைசொல்லியை ஏமாற்றுவதும்,வேறொருவரின் காதலியாக இருந்த சர்மிளா என்ற கதைப்பெண் ஒரு சில நிமிடங்களில் எதுவித அறிவிப்புக்களுமின்றி கதைசொல்லி என்ற ஆணை கட்டிப்பிடிக்கும் (ஒழுக்கமற்ற அல்லது பெண்ணே முதலில் ஆரம்பிப்பவள் என்ற கதை) பெண்ணாக உருவாக்கப்படுவதும் நடந்தேறுகிறது. அவைகள் போலவேதான் கடத்தல், போன்ற சமூகவிரோத செயற்பாடுகளாக நம்பப்படும் பொதுப்புத்தியை முஸ்லிம்கள்மீது திணிக்கும் சினமாக்கள் போல விஜய் மகேந்திரனின் கதைப் பிரதிகளும் பாவிக்கின்றன.
விஜய் மகேந்திரனின் கதைப் பிரதிகள், தமிழின் பொதுப்புத்தியில் அறியப்படும் உளவியல் மரபுகளில் கொண்டாடப்படும் அரசியல் தன்மைகளைக் கையேற்று,கதைப்பிரதிகளும் தமது கதையாடலை நிகழ்த்துகின்றன. பொதுப்புத்தியை புரிந்துகொள்ளும் வாசகர்களையும், அந்தக் கதையாடல்களை ஏற்று இன்பங்கொள்ளும் வாசகர்களையும் கவனத்தில்கொண்டு தமது கதையாடலை நிகழ்த்துகின்றன. சற்று வெளிப்படையாகவே ஆண்வாசகர்களை (தமிழில் எழுதப்படும் எல்லா எழுத்துக்களும் ஆண் வாசகர்களை கவனத்தில் கொண்டே எழுதப்படுகின்றன.) தமக்கான வாசக எல்லைக்குள் அழைக்கும் கதைக்குரலை உரத்துப்பேசுகிறது என்றும் சொல்லலாம்.
பெண்கள். கஞ்சாக்குடிப்பவர்கள்,தாதாக்களி ன் உருவாக்கம், மஸ்லிம்களின்மீது கட்டமைக்கப்படும் அடையளம் போன்றவை தமிழ் மொழியின் பொதுப்புத்தியில் எந்தவகையான புரிதலோடு(இழிவான) பராமரிக்கப்படுகிறதோ அந்தவகைச் சிந்தனைகளையே இவருடைய கதைப்பிரதிகள் கொண்டாடுகின்றன. இந்தப் புரிதலை ஏற்கும் அறிவியல்வெளியில் பெரிதும் கவனிக்கப்படக்கூடிய கதைப்பிரதிகள் இவருடையது. இந்தவகையில் அதிக வாசகப்பரப்பை உருவாக்கும் ஆற்றல் இவருடைய கதைகளுக்கு இருக்கின்றன.
பொதுப்புத்தியைப் பரிந்துரைக்கும் கதைகளுக்கும் குறித்த சமூகச் செயற்பாடு இருக்கிறது. அந்தவகைச் சமூகச் செயற்பாடுகள் அவசியம் எனில், இவருடைய கதைகளும் தமிழ் பரப்பில் மிக அவசியமானவையே. அதற்க்கு ஆற்றல்மிக்க பங்களிப்புக்களைச் செய்யக்கூடியவையே.
ஆனாலும். இவருடைய கதைப்பிரதிகளில் தமிழ் நாட்டின் பொதுப்பத்தியில் அதிகம் மதிக்கப்படும் இந்துத்துவ அரசியலின்பக்கம் சாய்வுடைய கதைச் சம்பவங்களோ, கதையாடல்களோ பிரதிக்குள் இல்hமலிருப்பது மிக முக்கியமான ஒரு விசயமாகவே எனக்குப்படுகிறது. மரபான பொதுப்புத்திக்கு சாய்வாக கதையாடலை முன்வைப்பதும்,அதற்க்கு எதிரான கலகங்களை எழுதுவதும் என இரண்டும் இலக்கியம் என்றுதான் பாவிக்கப்படுகிறது. ஆம் இலக்கியம் ஒரு முரண்பாடான நிறுவனம். அது குறித்த ஒரு அரசியல் நோக்கத்தை பரிந்துரைக்கிறது. அந்த அரசியலின் பிரதிச் சாய்வுநிலையை வாசித்துக் காட்டுவதுதான் திறனாய்வு வாசிப்புப் பிரதி என்றால், இதுவும் கதைகள் பற்றிய ஒரு வாசிப்புப் பிரதிதான்.
நகரத்திற்கு வெளியே
சிறுகதை தொகுப்பு
விஜய் மகேந்திரன்
உயிர்மை பதிப்பகம்.